வாழ்நாள் முழுவதும் கடன்!

ஷாப்பிங் செய்வது எந்த நாட்டிலும் சுவாரசியமான விஷயம்தான். மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது எல்லாம் பெரும்பாலும் வால்மார்ட் போன்ற கடைகளில்தான். இவை தவிர இந்திய, தமிழ்க் கடைகளில் நம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவார்கள். எந்தக் கடையிலும் கொஞ்சமாக எதையுமே வாங்கவே முடியாது.

சில பொருட்களை அடிக்கடி உபயோகப்படுத்த மாட்டோம். அதிலும் வெள்ளை உணவுப் பொருட்கள் மீது ஏற்பட்ட அச்சம் காரணமாக மைதா, ஜீனி போன்றவற்றைத் தவிர்க்கவே நினைப்பேன். எப்பொழுதாவது தேவைப்படும் என்பதால் கொஞ்சமாக வாங்கி வைத்துக்கொள்ள நினைத்தால், அது முடியாது. இறைச்சியையும் கொஞ்சமாக வாங்கவே முடியாது. ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

நம் நாட்டு உணவுப் பொருட்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் காரணத்தால், கொஞ்சமாகக் கிடைக்காது. ஆனால், வீடு வாடகைக்கு எடுக்கச் சென்றால் ஒரு படுக்கையறை வீட்டில் ஒரு தம்பதியைத்தான் அனுமதிப்பார்கள். குழந்தைகள் இருந்தால் அதற்கு ஏற்ப பெரிய வீடு பார்க்க வேண்டும்.

ஆனால், இருவர் மட்டும் உள்ள குடும்பத்துக்கு எதை வாங்கச் சென்றாலும் தேவைக்கு அதிகமாகத்தான் வாங்க வேண்டி வரும். கொஞ்சமாக வாங்க அதிகம் விலையும் கொடுக்க வேண்டும். அதிலும் காஸ்ட்கோ போன்ற கடைகளில் விலை குறைவு என்று நினைத்து உறுப்பினராகிவிட்டால், இன்னும் மோசம். எல்லாமே இரண்டு மடங்கு அளவு வாங்குவதால் விலை குறைவாகக் கொடுப்பார்கள். உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் காலாவதி தேதிக்கு முன் காலி செய்ய வேண்டும் என்பதற்காக, அடிக்கடி செய்து, அந்த உணவே நமக்குச் சலித்துப் போய்விடும்.

Photo by Oleg Magni from Pexels

அடுத்து தள்ளுபடி! நம் ஊரைப் போல வருடம் முழுதும் பண்டிகைகள் இருப்பதில்லை. அதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தேங்க்ஸ் கிவிங், பிளாக் ஃப்ரைடே, பாக்ஸிங் டே போன்ற பிரத்யேக தினங்களில் sale, offer, discount என்று பரபரப்பாக விற்பனைகள் நடைபெறும். அப்போது உங்களுக்குத் தேவைப்படும் பொருளை, குறைந்த விலையில் வாங்க முடிந்தால் நீங்கள் கில்லாடிகள்தாம். பெரும்பாலும் அந்த வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்படும் எலெக்ட்ரானிக், விலையுயர்ந்த பொருட்களுக்குத்தான் தள்ளுபடி கொடுப்பார்கள். வேறு எதுவும் வாங்குவதற்காகப் பெரிய வரிசையில் காத்திருந்தால், உங்களைக் கவனிக்க ஆள் கிடைப்பதே கஷ்டம். அதனால் பலரும் வாங்க முடியாமல் திரும்புவதும் உண்டு.

Black Friday Sale, The Fact Site

இந்தப் பிரச்சனை பொருட்களுக்கு மட்டும் இல்லை, இங்கே பெரும்பாலும் எந்த சர்வீஸாக இருந்தாலும் இதே நிலைதான். ஹோம் இன்டர்நெட் (WiFi), போஸ்ட்பெய்ட் மொபைல் பிளான்ஸ் எல்லாமே புதிதாக வாங்கும்போது ஒரு வருடத்திற்குச் சலுகை விலை கொடுப்பார்கள். அதற்கும் அந்த ஒரு சில தினங்களில், போய் முட்டி மோதி, பேரம் பேசி வாங்க வேண்டும். இல்லையென்றால் மற்ற தினங்களில், எத்தனை முறை கேட்டாலும் கிடைக்காது. தள்ளுபடிக்காக வாங்கி, பயன்படுத்தப்படாமல் பலப் பொருட்கள் கிடக்கும்.

இங்கே வாழ்க்கையைக் கடனில் அனுபவித்து விட்டு, பொறுமையாக வாழ்நாளெல்லாம் திருப்பிச் செலுத்திக்கொள்ளலாம். அதற்குக் கொடுக்கும் அதிக விலை பற்றி நினைத்து மனதை வருத்திக்கொள்ளக் கூடாது. குறைவான வருமானம் உள்ளவர்கள்கூட ஐபோன், பென்ஸ் கார் போன்ற ஆடம்பர விஷயங்களை வயது இருக்கும்போதே அனுபவிக்க இது ஒன்றுதானே வழி! ஆம், இங்கே சேமிப்பிற்குக் கொடுக்கப்படும் வட்டிகூட குறைவாகத்தான் இருக்கும்.

வெளிநாடுகளில் வேலை செய்ய வருபவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடுவதாகத் தோன்றுவது ஒரு மாயைதான். இங்கே வந்த புதிதில் வரவுக்கும் செலவுக்கும் கணக்கு போட்டுப் பார்த்து மலைத்துப் போனபோது, ’இங்கே நாம் சம்பாதிப்பதை, இங்கேயே செலவு செய்ய வைத்துவிடுவார்கள்’ என்று நண்பர் சொன்னது சரிதான். ஒரு பக்கம் 3 அல்லது 4இல் ஒரு பங்கு வருமான வரி, இன்னொரு பக்கம் அத்தியாவசிய விஷயங்களுக்குக் கொடுக்கும் அதிக விலை.

ஓரளவு நல்ல வேலையுடனும் சம்பளத்துடனும் வருபவர்களே, வந்த புதிதில் அடையும் கலவரத்தைப் பின்னாட்களில் நினைத்தால் சிரிப்பாக வரும். பொதுவாக வந்தவுடன் தேவைப்படும் வாடகை முன்பணம் போன்றவற்றிற்கு, இந்தியச் சேமிப்பை செலவு செய்ய யாரும் துணிய மாட்டார்கள். கையில் கொண்டு வரும் முன்பணத்தில், முதல் சம்பளம் வரும்வரை உள்ள செலவுகள் ஒரு மிரட்டு மிரட்டிவிடும்.

வாடகை மட்டுமே நாம் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கா என்று வாயை ஏன் பிளக்க வேண்டும், நம் நாட்டிலும் அப்படித்தானே என்றால், மீதி கையில் இருக்கும் பணம் 5 இலக்கத்தில் இல்லாமல் 4 இலக்கத்தில் இருப்பதால் வரும் கலக்கம் அது. மற்ற செலவுகளும் அதே விகிதத்திற்கு ஏற்பதான் இருக்கும் என்பது புரிய சில மாதங்களாகும். கடைசியில், கிட்டதட்ட அதே போன்ற ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு நாம் தயாராகிவிடுவோம். எப்படிப் பார்த்தாலும், சேமிப்பில் பணமதிப்பு வித்தியாசம், இந்தியாவில் நம் மதிப்பை காப்பாற்றிவிடுகிறதல்லவா!

மற்றபடி, வாடகைக்குப் பதில் வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது உள்பட அனைத்திலுமே பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. வாழ்வில் பெரும்பகுதி நாம் வாங்கும் சம்பளம் கடனுக்குக் கொடுக்கவே சரியாக இருக்கும். அதனால், பணிப்பாதுகாப்பு இங்கு மிக முக்கியம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அளவான ஆசைகளுடன், திட்டமிட்ட வாழ்க்கை வாழ முடிந்தால் எங்கும் நன்றாக வாழலாம்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.