பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அதே பள்ளியின் ஜூடோ மாஸ்டர் கெபிராஜ், மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆனந்த், தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் எனப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியபடி இருக்கிறது. இது புதிதன்று. ஒவ்வொரு காலத்திலும் பேரலைபோலெழுந்து பின் அப்படியே எழுந்த சுவடின்றிக் கலைந்து போகும் பட்டியல் இது.
மிகச் சாதாரணமாக இவர்கள் தப்புவார்கள். நாமும் நடந்ததை மறந்து அன்றாடங்களில் ஆழ்ந்து அடுத்த பிரச்சனைக்குள் போய் விடுவோம். இதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். ஏன் இப்படி நடக்கிறது? ராஜகோபாலன்கள் ஒவ்வொரு காலத்திலும் இருக்கிறார்கள். இந்த விஷச்சூழலைக் கவனித்து மாற்ற முயலும் அதே நேரத்தில் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பேசித் தெளிவதே பெண்குழந்தைகளுக்கு நன்மையாக இருக்கும்.
தில்லியில் ஒரு பெண் பாலியல் வன்முறையால் கொடூரமாக உயிரிழந்தபோது அவர் ஏன் அந்நேரத்தில் வெளியில் செல்ல வேண்டும் என்று தலையங்கம் எழுதப்பட்டது. பெண்கள் ஜீன்ஸ் அணிவதைப் பற்றிய கேவலமானவொரு கட்டுரைக்காக, மிக மோசமான கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பெண்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டன. நாம் இன்னமும் காந்தியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டிக் கட்டுரைகள் எழுதியபடியேயிருக்கிறோம். ஆபாசமாக உடையணிவதாக, பாலியல் குற்றங்களைத் தூண்டுவதாகப் பெண்கள் மீதே குற்றம் சாட்டப்படுகிறது. எத்தனை சட்டங்கள் போட்டுத் தடுத்தாலும் தொடர்ந்து குற்றங்களும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன.
குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும். பாலியல் குறித்துப் பேசுவதே குற்றம் என்று நமக்கு வீட்டில் போதிக்கப்படுகிறது. ஆனால் வீட்டின் நடுக்கூடத்தில்தான் ஆபாசமான அங்க அசைவுகளுடனான திரைப்பாடலை சகஜமாகக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கிறோம். திரைப்படங்களும் ஊடகங்களும் பாலியல் அத்துமீறலைத் தொடர்ந்து செய்கின்றன. அன்றாடத்தில் வீட்டிலும் வெளியிலும் தொடர்ந்து பெண்கள் இத்தகைய அத்துமீறல்களைக் கடக்கின்றனர். இவ்வளவும் வெகு இயல்பென்றே நாம் பழக்கப்படுத்தப் படுகின்றோம்.
‘மோதி மிதித்து விடு அவர் முகத்தில் உமிழ்ந்து விடு’ என்று பாப்பாவுக்குச் சொல்கிறான் பாரதி. ஆனால் நாம் சர்க்கஸில் குட்டியிலிருந்தே பழக்கப்படுத்தப்படும் விலங்குபோல் வன்முறை செய்யவும் அதை இயல்பென எடுக்கவும் குழந்தைகளைப் பழக்குகின்றோம். இந்த மனநிலை, இந்த இயல்பே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது. ஐந்தில் வளையாததைப் பின்னர் வளைப்பது கடினம். வீட்டிலிருந்தே இந்தப் பாடம் தொடங்க வேண்டும். ஆண் வேலை, பெண் வேலை என்று பிரிப்பதிலிருந்து அமர்வது, பேசுவது, படுப்பது, சிரிப்பது என்று எல்லாவற்றிலும் பெண் பயிற்சியளிக்கப்படுவது வரையிலும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
பள்ளித் தூய்மைப் பணியில் மாணவர்கள் துடைப்பம் பிடிக்கத் தயங்குவதும், மாணவிகள் தாங்களாகவே முன்வந்து ‘அவர்களைக் காப்பாற்றி’ அந்த வேலையைப் பெற்றுக் கொள்வதையும் கவனித்துக் கண்டித்திருக்கிறேன். இந்தப் பாகுபாட்டை அவர்களுடைய இளம்மண்டைக்குள் திணிக்கும் குடும்ப அமைப்பின் பால் ஏற்றத்தாழ்வுகளைப் பேச வேண்டும். பள்ளியில் பாலியல் கல்வியின் அவசியம் குறித்துப் பல்வேறு அமைப்புகள் எடுத்துச் சொல்லியும் ஓரடியேனும் எடுத்துவைக்காத நிலையில் இனியேனும் எந்த வயதிலிருந்து எப்படித் தொடங்குவது என்பது குறித்துக் கலந்துரையாடுதல் அவசியம்.
இங்குதான் நேப்கின்கள் தாள்கள் சுற்றப்பட்டு, கருப்பு உறையில் போட்டுத் தரப்படுகிறது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். ஆண் பெண் உடல் குறித்த விழிப்புணர்வு சார்ந்த உரையாடலைப் பள்ளிப்பருவத்திலேயே தொடங்கலாம். தங்களிடம் எதையும் மனம்விட்டுப் பேசலாம் என்ற நம்பிக்கையைப் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தர வேண்டும். ஆசிரியர் பயிற்சியிலேயே இதனைச் சேர்த்தல் நலம். பிரச்சனைகளைப் பக்குவமாக அணுகும் விதத்தில் அவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும். பாலினங்கள் குறித்து (ஆண், பெண், திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட) உரையாடல்கள் பள்ளியளவில் தொடங்க வேண்டும்.
ராஜகோபாலன்கள் இப்படித் தைரியமாகப் பேசுவதற்கு முதல் காரணம் பாலியல் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கவும், பேசவும், எதிர்கொள்ளவும் நம்மிடையே இருக்கும் தயக்கம். அதனால் என்ன விளைவுகள் ஏற்படுமோ என்னும் பயம். நமது அச்சமே அவர்களுக்கு வலிமை தருகிறது. கண்டிப்பாக ஒரு குழந்தையேனும் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ சொல்லியிருக்க வாய்ப்பிருக்கும் நிலையில் எந்த நடவடிக்கையும் ஏன் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி மிக முக்கியமானது. இந்தத் தயக்கத்தை, பயத்தை உடைக்க வேண்டுமெனில் நாம் உரக்கப் பேச வேண்டும். பேசுவதே முதல் படி.
எவற்றையெல்லாம் பேசக்கூடாதென்று விலக்கினார்களோ அவற்றையெல்லாம் துலக்கமாகவும் விரிவாகவும் தொடர்ந்தும் பேச வேண்டும். தொலைக்காட்சியில் நேப்கின்களுக்கான விளம்பரங்கள் காட்டப்பட்டபோது முதலில் அருவருப்பாக எதிர்கொண்டாலும் இன்றைக்கு அது இயல்பாகியிருக்கிறது. அதுபோலவே நாம் எவையெல்லாம் அத்துமீறல் என்பது குறித்து முதலில் நம் உரையாடலைத் தொடங்க வேண்டும். அத்துடன் தற்காப்புப் பயிற்சிகளைப் பள்ளியிலிருந்தே குழந்தைகளுக்கு வழங்குவது நம்பிக்கையை விதைப்பதோடு ஆளுமையையும் வளர்க்கும்.
பெண்ணுடல் குறித்த கற்பிதங்கள் பற்றி நிறையப் பேச வேண்டியிருக்கிறது. தானறியாது எடுக்கப்பட்ட ஆபாசப் படத்துக்காக, வீடியோவுக்காகத் தன்னையே மாய்த்துக்கொண்ட பெண்களின் கதைகள் ஏராளம். இப்படங்களை ஊடகங்களிலோ வலைத்தளங்களிலோ பகிர்வதன்மூலம் சார்ந்த பெண்களைப் பழிவாங்குவதாக, அவமானப்படுத்துவதாகச் சிலர் நினைக்கின்றனர். அதற்குப் பெண்களும் பலியாகின்றனர். பெண்ணுடல் என்பது புனிதமோ, அருவருக்கத்தக்கதோ அன்று. ஆனால் காலங்காலமாகப் பெண்ணுடல் திருவுருவாக்கப்பட்டுப் போற்றப்பட்டே வந்ததன் காரணமாகப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களே சமூகத்தால் மறைமுகமாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். அதனால் ஏற்படும் மன அழுத்தம் தாளாமல் தங்கள் வாழ்வை இழக்கவும் துணிகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில அரசின் சமூக மேம்பாட்டுத்துறையில் பணியாற்றிய பன்வாரி தேவி என்ற பெண்ணை உயர்சாதி இந்துக்கள் ஐவர் கூட்டு வன்புணர்வு செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றத்திலும் தகுந்த நீதி கிடைக்காத நிலையில் விசாகா உள்ளிட்ட சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள் உச்சநீதி மன்றத்தை நாடின. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் 1997இல் விசாகா நெறிமுறை வகுத்து உத்தரவிட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் விசாகா கமிட்டி ஏற்படுத்த வேண்டும். அந்தக் கமிட்டியின் உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டன.
இதனை மேலும் வலுப்படுத்த 2013இல் பணியிடத்தில் பாலியல் தொல்லைத் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு தீர்வுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்தகைய சட்டங்கள் குறித்துப் பள்ளியளவிலேயே கற்பிப்பதுடன் பள்ளிகளிலும் விசாகா கமிட்டியை அமைக்கலாம்.
குழந்தைகள் ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவைக்கான பணிகளும் நோக்கங்களும் விரிவான தளத்திலிருந்தாலும் நடைமுறையில் குற்றச்செயல்பாடுகளை விசாரிக்கும் பணியை மட்டுமே செய்கின்ற அளவில் சுருங்கியிருக்கின்றன. இத்தகைய ஆணையங்கள் பற்றியோ தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் குறித்தோ பெரும்பாலான பெண்கள் அறியாமலே இருக்கிறார்கள். பயிலரங்குகள், கருத்தரங்குகள் வாயிலாக இருபாலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும்கூட ஆணைய உறுப்பினர்கள் வருகை தர வேண்டும்.
சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் மிகுந்திருக்கும் இக்காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது. பால் சமத்துவ சமுதாயமே இன்றைய தேவை. அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.
கட்டுரையாளரின் முந்தைய படைப்பு:
படைப்பு:
தி. பரமேசுவரி
‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ‘ம.பொ.சி பார்வையில் பாரதி, சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள், மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்.