2011 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்த நோபல் பரிசினைப் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் பகிர்ந்து கொண்டார்கள். லைபீரிய உள்நாட்டுப் போரை 2003 இல் முடித்துவைத்தவரான லேமா கோபோவியுடன் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மற்றைய இரு பெண்களில் ஒருவர் எலன் ஜான்சன் சிர்லீஃப். இவரும் லைபிரியாவைச் சேர்ந்தவர். லேமாவுடன் சமாதானத்திற்கான செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்.
போரின் முடிவில் 2005 இல் லைபீரியாவில் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரியவர். மற்றயவர் தவக்குல் கார்மன். யெமன் நாட்டைச் சேர்ந்த இவருக்கு வெளிப்பாட்டு உரிமைக்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் யெமனில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்காகவும் அகிம்சை போராட்ட வடிவில் முழு பங்களிப்பு செய்ததற்கான பணியை அங்கீகரிப்பதற்காக இந்த அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஐரோப்பிய சக்திகளால் ஒருபோதும் காலனித்துவப்படுத்தப்படாத நாடுகள் என்று எத்தியோப்பியாவுடன், லைபீரியாவையும் சில வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன. லைபீரிய நாடு கருப்பு அமெரிக்க குடியேறியவர்களால் நிறுவப்பட்டதால் இது சர்ச்சைக்குரிய வரலாற்றுப் பதிவாகிறது. “ஆப்பிரிக்காவிற்கான போராட்டம்” என்று அழைக்கப்பட்ட 1880க்கும் 1900 க்குமிடைப்பட்ட காலத்தில் கண்டத்தின் 90 சதவிகிதம் ஐரோப்பியர்களால் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும், வரலாற்று அறிஞர்கள் எத்தியோப்பியாவை “ஒருபோதும் காலனித்துவப்படுத்தாத” பிரிவில் வைக்கின்றனர்.
1936-1941 வரை எத்தியோப்பியாவை இத்தாலி நாடு ஆக்கிரமித்திருந்தாலும், நீடித்த காலனித்துவ உள்கட்டமைப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. லைபீரியாவை இந்த வகைக்குள் கொண்டுவர முடியாது. லைபீரியாவின் அனைத்து அதிகாரமும் ஆப்பிரிக்க அமெரிக்க குடியேறிகளினதும் அவர்களின் சந்ததியினரினதும் கைகளிலேயே குவிந்திருந்தன. அவர்கள் அமெரிக்கோ-லைபீரியர்கள் என்று அறியப்பட்டனர். பூர்வீக ஆப்பிரிக்க சமூகங்களுக்கு பொருளாதார அல்லது அரசியல் அதிகாரம் குறைவாகவே இருந்தது.
ஜூலை 26, 1847 இல், லைபீரியா அமெரிக்க நிர்வாகத்திலிருந்து சுதந்திரத்தை அறிவித்தது. ஆனால், 1862 வரை லைபீரியாவின் சுதந்திரத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. 1820 முதல் 1989 வரை இந்நாடு அமெரிக்கோ-லைபீரியர்களால் ஆளப்பட்டது. 1990 கள் வரை இராணுவ சர்வாதிகாரத்தால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இரண்டு நீண்ட உள்நாட்டுப் போர்களை சந்தித்தது. பாசிஸ சக்திகளின் பிடியில் நீட்சியாக அகப்பட்டுக் கிடந்த லைபீரியா நாட்டுக்கான விடுதலை எழுச்சி 2003 இல் ஒரு மாபெரும் திருப்பத்தைக் கண்டது. வரலாற்றில் முதன் முறையாக அந்நாட்டில் ஒரு ஜனநாயக மக்கள் வாக்கெடுப்புக்கு மக்கள் தயாரானார்கள். ஆப்பிரிக்காவிலேயே முதன் முதலாக ஒரு பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாசிஸத்தின் கைகள் ஓங்கி மக்கள் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில் மரண அச்சுறுத்தலான பயங்கரவாத காலத்தில் லேமா கோபோவி லைபீரியப் பெண்களை ஒன்றிணைத்தார்.
அவர் யார்? லைபீரிய நாட்டில் நடடைபெற்றுக் கொண்டிருந்த மிருகத்தனமான மோதலால் உடைந்து போன ஒரு சராசரி இளம் பெண். எண்ணற்ற உறவினர்கள் நண்பர்களின் உயிர்களைக் காவு கொண்டதொரு பயங்கரவாத யுத்தத்தில் பாதிக்கப்பட்ட லைபீரிய நாட்டுப் பெண்களில் ஒருவர். லைபீரிய நாட்டில், மன்றோவியாவில் மிகவும் வறியவர்களான பெற்றோரினால் லேமா கோபோவியும் அவரது தங்கைகளும் வளர்க்கப்பட்டார்கள்.
1990 ஆம் ஆண்டில், போர்க்குணமிக்க சார்லஸ் டெய்லர் தலைமையிலான ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் லைபீரிய இராணுவத்திற்கும் நாட்டின் பழங்குடி மக்களுக்கும் இடையே அழிவுகரமான அதிகாரப் போராட்டத்தைத் தொடங்கியபோது, மருத்துவம் படிப்பதற்காகக் கல்லூரியில் சேர வேண்டும் என்றிருந்த லேமா கோபோவியின் கனவு நசுக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு, இரத்தக்களரி படுகொலைகளே கோபோவியின் இளம்பருவ நினைவுகளை ஆக்கிரமித்தன.
போரிலும் துஷ்பிரயோகங்களிலும் சிக்கியிருந்த ஒரு இளம் தாய், தனக்கு ஏற்பட்ட கசப்பு அனுபவங்களிலிருந்து தன்னை மீட்பதற்கான கனவை எல்லாப் பெண்களினதும் நனவாக மாற்றுவதற்குச் செயற்பட்டார். போரில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதையும், பெண்கள் ஒன்றிணையும் சக்தியை எதனாலும், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் உணர்ந்து துணிச்சலாகக் களமிறங்கினார்.
யுனிசெஃப் நிறுவனம் நடத்தும் ஒரு திட்டத்தைப் பற்றி அறிந்து சமூகப் பணியாளராகப் பெண்களைப் பயிற்றுவித்துப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு பயிற்சி நெறியில் லேமா இணைகிறார். அது மூன்று மாதகாலப் பயிற்சி. அந்த மூன்று மாதகாலப் பயிற்சியில் அவர் சுய பிரக்ஞையுள்ள பெண்ணாக மாறுவது நடக்கிறது. சுய பிரக்ஞை என்ற தன்னுணர்வு மாற்றம் கண்ட அவர் சமூகத்தை மீட்கும் பணியில் உடனே குதித்துவிடவில்லை. தனிப்பட்ட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து தன்னை விடுவிப்பதே ஒருவர் போராளியாவதற்கான அத்திபாரத்தின் முதல் தூண். சொந்த வாழ்வில் கணவனால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்த தனது மூன்று குழந்தைகளையும் மீட்டுக் கொண்டு வன்முறையான வாழ்வுச் சூழலிலிருந்து தப்பி ஓடுகிறார். ஒரு வாரத்திற்கும் மேலாக பஸ்ஸிலேயே சவாரி செய்து கொண்டிருந்தார். ஏனென்றால், அவருக்கு எங்கே இறங்கிப் போவது, என்ன செய்வது என்பதற்கான எந்தத் திட்டங்களும் இருக்கவில்லை. அவரிடம் ஒரு சதம்கூடப் பணமில்லை.
குழந்தைகளின் வாழ்வையும் அவர்களின் எதிர்காலத்தையும் சொந்த நிலத்தையும் பாதுகாக்க லைபீரிய தாய்மார்களும் பெண்களும் எழுந்து நிற்பது தார்மீகக் கடமையென லேமா கொபோவி எண்ணுகிறார். அவரிடம் பணமிருக்கவில்லை. புகழ், செல்வாக்கு எதுவுமிருக்கவில்லை. சுயபிரக்ஞையும் கௌரவமான வாழ்வுக்கான ஏக்கமும் எழுச்சிப் பெருக்கும் மட்டுமே இருந்தன. விடுதலைக்கான ஒரு போராட்டத்திற்கு வேறென்ன முதலீடுகள் தேவை? அவர் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விளைநிலமாகக் கொண்டு களமிறங்கினார். லைபீரியாவில் அமைதியைக் காண ஒரே வழி அகிம்சை நடவடிக்கைதான் என்ற தனது நம்பிக்கையுடன் பெண்களை ஒன்றுபடுத்தும் செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்தினார்.
”நாங்கள் ஒன்றுபட்டோம். நாங்கள் ஆயுதங்களை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, உடனடி போர்நிறுத்தத்தைக் கோரினோம். போராட்டக் குழுக்களுக்கிடையே உரையாடலுக்கான தலையீட்டு சக்தியை நிலைநிறுத்தக் கோரி தினசரி உள்ளிருப்பு, மறியல், விழிப்புணர்வு, வீதி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தோம். எங்கள் சமூகங்களில் உள்ள ஆண்கள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சமமாக உறுதி கொள்வதை உறுதிப்படுத்த எங்களுக்கு ஒரு வழி தேவைப்பட்டது. ஒருமித்த பாலியல் வேலைநிறுத்தம் எங்கள் காரணத்தை மேலும் தனிப்பட்டதாக்கியது. மேலும் போரிடும் குழுக்கள் மீதான எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தவும் எங்கள் ஊடக சுயவிவரத்தை உயர்த்தவும் உதவியது.”
இது லேமா கோபோவின் கூற்று. ”வலிமைமிக்கவராக இருங்கள்: சகோதரத்துவமும், பிரார்த்தனையும் பாலினமும் எவ்வாறு ஒரு தேசத்தை போரிலிருந்து மாற்றியது” (Mighty Be Our Powers: How Sisterhood, Prayer, and Sex Changed a Nation at War) என்ற தன்னனுபவ நூலிலும், ”பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபியுங்கள்” (Pray the Devil Back to Hell) என்ற ஆவணப்படத்திலும் இந்தக் கூற்றை லேமா கோபோவி வலியுறுத்தியுள்ளார். லேமா கோபோவியின் போராட்ட முறைமைகள் குறித்த பின்னணிகளுடன் தத்ரூபமாக இயற்றப்பட்ட இந்த ஆவணப்படம் 2008 ஆம் ஆண்டு கினி ரெட்டிகர் (Gini Reticker) இயக்கத்தில் அபிகெய்ல் டிஸ்னி (Abigail Disney) தயாரித்தது. அதே ஆண்டு டிரிபெகா திரைப்பட விழாவில் (Tribeca Film Festival) திரையிடப்பட்டதுடன் அங்கு சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்றதும் கவனிப்புக்குரியது.
மேற்சொல்லப்பட்ட லேமா கோபோவின் கூற்றில் அவரது நோக்கம் புதிய கண்ணாடியைப் போல அவ்வளவு தெளிவு. யாரை இணைத்துக் கொண்டால் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பதிலிருந்து அவர் முன்னெடுத்த எல்லாப் பணிகளிலும் அந்தத் தெளிவு பளிச்சென்று தெரிகிறது.
தலைநகரிலுள்ள பெண்கள் அனைவரும் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் செய்தால் அந்த நகரும் அந்த நகரிலுள்ள ஒவ்வொரு வீடுகளும் குடும்பங்களும் எப்படியான ஒரு நெருக்கடி நிலைக்கு உள்ளாகும்? ஆனால் அப்படியொரு அழுத்தம் தேவையாக இருக்கிறது. சிறந்த அழுத்தத்தினை தேர்வு செய்வதே சிக்கலான பணி. பல மாறிகளும் உணரிகளும் இருப்பினும் சூழலின் தேவையைப் பொறுத்து சிறந்த அழுத்த முறைகளைப் பிரயோகிக்கும் செயல்திறன் தான் ஒருவரின் தலைமைத்துவத்தை உறுதி செய்கிறது.
மூன்று வாரங்கள் நீடித்த வெகுஜன நடவடிக்கைகளால் லைபீரியாவின் தலைநகரம் பித்துமுற்றிய நோயாளியாகிவிடுகின்றது. லைபீரியாவின் ஜனாதிபதி சார்லஸ் டெய்லரின் வழக்கமான வன்முறை சிகிச்சை முறைகளால் இந்தப் பித்து நிலையைக் கையாள முடியவில்லை. மக்கள் அலை அவரை மூழ்கடித்துவிடும் அபாயத்தை உணர்ந்து போராட்டப் பெண்களைச் சந்திப்பதற்கு ஒப்புக்கொள்கிறார். 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஜனாதிபதி சார்லஸ் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு உடன்பட்டார்.
1989 – 2003 காலப்பகுதியில் இனக்குழுக்களிடையே நிலவும் பதட்டத்தைத் தூண்டி, அதிகாரப் பசியுள்ள தலைவர்களுடன் இராணுவப் பிரிவுகள் கசப்பான உள் மோதல்களினதும் சதித்திட்ட எழுச்சிகளினதும் சகாப்தத்தை கட்டவிழ்த்துவிட்டன. சுமார் 250,000 பேர் இறந்தனர். மேலும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். லைபீரியாவின் பொருளாதாரமும் அரசியல் அமைப்பும் பாழடைந்தன. இப்படியான பின்னணியில் பெண்களின் கூட்டுக்குரல்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டின் குடியாட்சிக்கு எதிரான கொள்கையுடைய ஒரு ஜனாதிபதியை உடன்படச் செய்தது மிகப்பெரிய முன்னுதாரணம்.
லேமா கோபோவியும் அவருடன் ஒன்றிணைந்து செயற்பட்ட பெண்களும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்ட ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் அதிலிருந்து வெளியேற முடியாத பொறிகளை மிக உறுதியாகக் கட்டமைத்தார்கள். 2003 ல் கானாவில் சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், முன்னரை விடவும் வலுவாகத் தொடர் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு நாளும் பெண்கள் குழுக்கள் பேச்சுவார்த்தை நடைபெறும் ஹோட்டலை முற்றுகையிட்டிருந்தார்கள்.
பேச்சுவார்த்தைகளைக் கவனிப்பதற்காகக் கூட்டங்களுக்கு பார்வையாளர்களை அனுப்பினார்கள். விடாது மக்களை அணிதிரட்டிக்கொண்டே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களையும் கிளர்ச்சியாளர்களையும் ”லாபி” செய்வதில் மாலைப் பொழுதுகளைச் செலவழித்தார்கள். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதிலும், லைபீரியாவில் கிறிஸ்தவ – முஸ்லீம் பெண்களை ஒன்றிணைக்கும் ஒரு இடைக்கால இயக்கத்தை நிறுவுவதிலும் பெண்கள் முறையான வகிபாகங்களை வகிக்க முடியும் என்பதை நிருபணம் செய்தார்கள். கானாவில் அகதிகளாக இருந்த லைபீரிய பெண்களுடன் கூட்டு சேர்ந்து, சமாதானப் பேச்சுவார்த்தைகளின் தார்மீகக் குரலாகவும் முகமாகவும், அதே நேரத்தில் மன்ரோவியாவில் போராட்டத்தைத் தொடர்வதன் மூலம் அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலும் பெண்கள் சக்தி வெற்றி கண்டது.
சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இப்போதும் தங்கள் பணி முடிந்துவிட்டதென்று பெண்கள் பின்வாங்கிவிடவில்லை. ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்க போராளிகளைப் பெறுவதற்கும், மத்தியஸ்தம் வகித்த ஐ.நா. சபையிடமிருந்தும் லைபீரியாவின் இடைக்கால அரசாங்கத்திடமிருந்தும் போராளிகளுக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதற்கான மத்தியஸ்தர்களாக லேமா கோபோவியும் பெண்களும் நுழைந்தார்கள்.
அமைதி, நீதி, சமத்துவம், அரசியல் அனைத்திலும் முடிவெடுப்பதற்கு பெண்களையும் உள்வாங்கவேண்டும் என்று கோருவதிலும் இவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டார்கள். துப்பாக்கிகளையும், பீரங்கிளைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது போதும், பசி, வறுமை, விரக்தி ஆகியவற்றால் உடைக்கப்பட்ட நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற பெண்களின் எழுச்சிக் குரல் நாடெங்கும் பரவியது.
லேமா கோபோவி, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய ”அமைதி போதாது” (The Peace is not enough – Sept. 16, 2018) என்ற கட்டுரையில், சமாதானத்திற்காகப் பெண்களை ஒன்றிணைக்கும் இந்தப் ”பைத்தியக்காரத்தனமான யோசனை” என்று குறிப்பிட்டிருந்தார்.
பெண்களை அணி திரட்டுவது அவ்வளவு எளிதான பணியில்லை. கந்தல் ஆடையாக போர் சிதைத்த ஒரு நாட்டில் பசியிலும், வறுமையிலும் அன்றாட வாழ்வுடன் போராடும் மக்களிடம் அரசியல் எழுச்சி பற்றி விதந்துரைத்தால் அது பைத்தியகாரத்தனமாகத்தான் தெரிந்திருக்கும். லேமா கோபோவி சாதுரியமாக முதன்மையான விடயங்களில் கவனஞ் செலுத்தினார். ஒவ்வொரு கிராமங்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றிப் பெண்களுடன் உரையாடினார். குழந்தைகளுக்கு உணவளிப்பது, உடை அணிவித்துப் பார்ப்பது, கல்வி கற்பிப்பதுபோன்ற சாதாரண தாய்மார்களுக்கு இருக்கும் ஆசைகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு அவற்றுக்காகச் செயற்பட்டார். இந்தச் செயற்பாட்டை யாரும் அரசியல் செயலாகப் பார்க்கவில்லை. இவற்றைச் செய்வதற்கு அரசியல் செயல்பாடு என்ற அடையாளம் தேவையாக இருக்கவுமில்லை.
அமைதியாகவும் கௌரவமாகவும் வாழ்தையே பெண்கள் விரும்பினார்கள். இந்த எளிய விருப்பங்களிலிருந்தே தேச விடுதலையின் தூண்களை எழுப்ப முடியும். தேசத்தைப் பிளவுபடுத்தும் இன, மத வேறுபாடுகளை இணக்கப்படுத்துவதில் விழுந்த கவனமும் லேமா கோபோவின் வெற்றிக்கான காரணங்களில் மிகவும் முக்கியமாகின்றது. தங்கள் நாட்டைப் பிடித்துக் கொண்டிருந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன மத வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணையவேண்டும் என்பதை லேமா கோபோவி உறுதியாக நம்பினார். சமாதானத்தை வலியுறுத்தி இடம்பெற்ற பேரணிகள், முற்றுகைகள் அனைத்திலும் மத, கலாசாரப் பாடல்களையும், பிரார்த்தனைகளையும் இணைத்துக் கொண்டார்.
ஒவ்வொரு சமயத்தினரும் சமாதானத்திற்கான பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்வதும் அந்த மதத்தைச் சாராத மற்றவர்கள் அதில் கலந்து கொள்வதையும் வழக்கமாக்கினார். இந்தச் செயற்பாடு இருவேறு மதத்தவர்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பியதுடன் இலக்கில் உறுதியாக பிணைந்திருக்கச் செய்தது.
பிரமிப்பூட்டும் இந்தப் பெண்கள் சக்தி மிக நுட்பமாகப் பல பணிகளை முன்னெடுத்து அந்நாட்டின் வரலாறு கண்டிராத அமைதியையும் குடியாட்சியையும் நிலைநிறுத்தியது. பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கும், கண்மூடித்தனமாகக் கொலை செய்வதற்கும் பெயர் பெற்ற இரண்டு குழுக்கள் இந்தப் பெண்களுக்குச் செவிசாய்த்து சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஒத்துழைத்தார்கள்.
இங்கே என்ன மாற்றப்பட்டது? லைபீரியா என்ற நாடு உருவான காலம் தொட்டே பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து, தொடர்ந்து வன்முறைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளான பெண்கள், சமாதான உடன்படிக்கைக்கு உடன்பட இந்தக் குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் கொண்ட இயக்கவியல் சக்தியாக எவ்வாறு மாற முடிந்தது? இனி அஞ்சுவதற்கோ, இழப்பதற்கோ ஒன்றுமில்லை என்கிற உண்மையினாலா? பெண்கள் ஒரு மனதுடன் ஒன்றுபட்டார்கள் என்பதாலா? முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட்டதனாலா? அவர்களின் நம்பிக்கையா? அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்க ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டினார்கள், இதனால் இனி புறக்கணிக்க முடியவில்லை என்பதா?
எல்லாவற்றினதும் ஒரு கலவையினால் தான் இந்த இயக்கவியலை மாற்ற முடிந்தது. முக்கியமாக, சமாதானத்தை அடைவது அவர்களின் மறுக்கமுடியாத, அசைக்க முடியாத தீர்மானமாக இருந்தது. இதனால் அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.
திமிறி எழுவோம்…
தொடரின் முந்தைய கட்டுரை:
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.