நிகழ்வு 1 : நடுத்தர வயதுப் பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவிடுகிறார். முதன்முதலில் பாக்கெட் மாவு வாங்கி அரைத்ததாகவும், நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார். நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகள். “பாக்கெட் மாவு வாங்கி சாப்பிடாதீங்க”, “வீட்டில் அரைப்பதுதான்நல்லது”, “இதைத் தொடர்ந்து செய்தால் ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்”, “ஃபுல்லா கெமிக்கல்ஸ் இருக்கும், வீட்டிலேயே அரைங்க” என்று அறிவுரை மழை.
சமூக ஊடக உளறல் என்று மட்டும் இதைக் கடந்துபோய்விட முடியாது. பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கிற எந்த ஒரு கண்டுபிடிப்பையும் சமூகத்தில் இப்படித்தான் பார்க்கிறார்கள். இது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அறிவுரை கொடுத்தவர்களில் முக்கால்வாசி ஆண்கள் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
நிகழ்வு 2 : தோழி ஒருவர் ஸ்கூட்டி வாங்கியிருக்கிறார். அவரது கல்லூரி நண்பனுக்கு சமீபத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. தாடையை மூடாத ஃபேன்சி ஹெல்மெட் அணிந்திருந்ததால் அந்த விபத்தில் அவன் தாடையில் அடிபட்டு பல நாட்கள் அவதிப்பட்டதை அவள் நேரடியாகப் பார்த்திருக்கிறார். ஆகவே, “தாடையை மூடுகிற தலைக்கவசம் வேண்டும்” என்று கேட்டதற்கு, “இல்லை, ஸ்கூட்டி வாங்குபவர்களுக்கு நாங்கள் இலவசமாக இந்த மாடல்தான் தருவோம், வேண்டுமென்றால் நீங்கள் கூடுதல் பணம் செலுத்தி தாடையை மூடக்கூடிய ‘ஜெண்ட்ஸ்” ஹெல்மெட் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்ல, “பாதுகாப்புக்குப் போடுற ஹெல்மெட்டுல என்ன ஜெண்ட்ஸ், லேடீஸ்?” என்று இவர் வாதிட, ஒரே குழப்பமாகிவிட்டது. ஸ்கூட்டியோடு சேர்த்து கொடுக்கப்பட்ட ஹெல்மெட்டை விற்று ‘ஜெண்ட்ஸ்’ ஹெல்மெட் வாங்க தோழி முடிவெடுத்திருக்கிறார். இணையத்தில் இதைப் பற்றித் தேடியபோது, ‘பெண்களின் தாடை உடைந்தால் பரவாயில்லையா?’ என்பது போன்ற ஆறுதல்கள் மட்டுமே கிடைத்தன. யாரும் பெரிதாக இதைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு பெண் மட்டும், “நானும் இதை நினைத்துதான் தாடையை மூடும் ஹெல்மெட்டை வாங்கினேன். என் ஸ்கூட்டியின் இருக்கைப் பெட்டிக்குள் அது அடங்கவில்லை. ஆகவே தனியாக ஹெல்மெட் பூட்டு ஒன்று வாங்கிவைத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தாராம்.

முதல் நிகழ்வு பெண்களுக்கு உதவுகிற கண்டுபிடிப்புகள், அதன்மீதான சமூக பயங்கள் பற்றியது. இரண்டாவது நிகழ்வு கண்டுபிடிப்புகளில் இருக்கும் ஆண்-பெண் பேதம் பற்றியது. கண்டுபிடிப்புகளில் இருக்கும் ஆண்-பெண் பேதம் பற்றி எவ்வளவோ விரிவான கட்டுரைகள் வந்துவிட்டன. கட்புலனாகாத பெண்கள் என்கிற நூலில் கேரலின் க்ரியாடோ பெரஸ் விரிவாக இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
பொதுவான கண்டுபிடிப்புகளில் இந்தப் பேதம் நிலவுவது ஒருபுறம் என்றால், பெண்கள் மட்டுமே சந்திக்கும் சில தனிப்பட்ட பிரச்னைகள் உண்டு. அவையும் போதுமான அளவில் கவனிக்கப்படுவதில்லை.
ஒரு சின்ன எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம் – மோட்டார் பைக்குகள்.
சமீபமாக சென்னையில் பைக் டாக்சி பரவலாகிவிட்ட பிறகு அந்தச் சேவையை நிறையவே பயன்படுத்தியிருக்கிறேன். இதில் மிக முக்கியமான பிரச்னை பைக்குகளின் வடிவமைப்பில்தான் வருகிறது. பகுதிநேரமாக பைக் டாக்சி ஓட்டுபவர்கள் பலரும் ஸ்போர்ட்ஸ் பைக் வகையறா பைக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்தவகை பைக்குகள் பின்னால் ஒருவரை ஏற்றிக்கொண்டு செல்ல ஏற்றவை அல்ல. வேகம், செயல்திறன் போன்வற்றுக்காக அறிவியல் முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த பைக்குகளில் பின்னால் ஒருவர் அமர்ந்து செல்வது மிகவும் கடினம். அதிலும் புடவை கட்டியிருக்கும் பெண்கள் ஒரே பக்கத்தில் கால்களைப் போட்டு பக்கவாட்டில் அமர்ந்திருக்கும்போது கூடுதலாக வழுக்கும். சில ஸ்கூட்டி வடிவமைப்புகளில்கூட இந்தப் பிரச்னை இருக்கிறது.
சமீபத்தில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது. ஸ்போர்ட்ஸ் வகை பைக்கை வாங்கி வந்து மகன் பெருமையுடன் அம்மாவுக்குக் காட்டுகிறார். அம்மா, “எல்லாம் சரிதான். இது என்னடா தக்காளிப்பை மாட்ட இடமே இல்லை?” என்கிறார். “ஏம்மா நான் தக்காளிப்பை மாட்டுறதுக்கா பைக் வாங்குனேன்?” என்று மகன் கேட்க, “அதுக்கும் உதவணும்லடா” என்று சிரிக்கிறார் அம்மா.
இளவயதினர், தனியர்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய பைக்குகளில் வீட்டுப் பெண்களால் உட்கார்ந்து சௌகரியமாகப் பயணிக்க முடியுமா? குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணால் வழுக்காமல் வர முடியுமா? வண்டி வாங்குவதற்கு முன்னால், “என் அம்மாவையோ அக்காவையோ வைத்து இதில் பத்திரமாகக் கூட்டி வரமுடியுமா?” என்று பயனர்கள் யோசிப்பதை நிறுவனங்கள் விரும்புகின்றனவா?

இப்போது சில தரவுகளைப் பார்க்கலாம். இந்த 2026ஆம் ஆண்டிலும், பெண்ணுடல் பற்றி நாம் அறியாதது எவ்வளவோ இருக்கிறது. எண்டோமெட்ரியோசிஸ், பி.எம்.ஓ.எஸ் (பி.சி.ஓ.டி நோயின் புதுப்பெயர்), மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்), பெரிமெனோபாஸ் போன்ற பல சிக்கல்களின் முழு நோய்க்கூறுகள், காரணிகள் நமக்கு இன்னும் தெரியாது. 2025இல் பிரிட்டனின் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவ அமைப்பு ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. இதில், “ஆய்வுக்குழுவினர் எதை ஆராய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று பெண்களிடமே கேட்டு, சில முக்கிய அம்சங்களைக் கண்டறிந்தார்கள். பல பெண்களின் கோரிக்கைகள் கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதில் கோருபவையாக இருந்தன:
- எண்டோமெட்ரியோசஸைக் குணப்படுத்த முடியுமா?
- உடலைப் பாதிக்காமல் எண்டோமெட்ரியோசிஸ் இருக்கிறதா என்று பரிசோதிக்க முடியுமா?
- மாதவிடாயின்போது புலனறிவு பாதிக்கப்படுமா? எப்படிப் பாதிக்கப்படும்?
- நம் உடலுக்குள் செல்லும் மருந்துகள் செயல்படும் விதத்தை ஹார்மோன்கள் மாற்றியமைக்குமா?
- குழந்தை பெற்றுக்கொள்வதால் உடலில் ஏற்படும் நீண்டகால மாற்றங்கள் என்ன?
- ஹார்மோன் சுழற்சிகள் மனநலத்தை எப்படிப் பாதிக்கின்றன?
இவை மிகவும் அடிப்படையான கேள்விகள். கிட்டத்தட்ட எல்லாப் பெண்களையுமே பாதிக்கக்கூடியவை. ஆனால் இவற்றுக்குக்கூட நம்மிடம் பதில் இல்லை. இதுபோன்ற மருத்துவக் கேள்விகள் ஒருபுறம் என்றால், அறிவியல் மற்றும் சமூகவியலில் நூற்றுக்கணக்கான விடையில்லாக் கேள்விகள் இருக்கின்றன. பெண்களின் வீட்டுவேலைச்சுமை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுவேலைகளின் பங்களிப்பு, சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு, மீன்பிடித் தொழிலில் பெண்களின் பங்களிப்புடைய மொத்த நிகர மதிப்பு, இனப்பெருக்க வேலையில் (Reproductive labour) பெண்கள் பங்களிப்பதன் பொருளாதாரக் கோணம் போன்றவை இன்னும் நமக்குத் தெரியாது. ஆனால், இந்தச் சூழலில் ஒரு துளி நம்பிக்கை வந்திருக்கிறது. 15 லட்சம் மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை ஆராய்ந்ததில், பெண்கள் ஆய்வுத்தலைவர்களாக இருக்கும்பட்சத்தில் பெண்களின் பிரச்னைகள் பேசப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவ ஆய்வுகளில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டுமானால் பெண் மருத்துவ ஆய்வாளர்கள் அதிகமாக வேண்டும்.

2009இல் உயிரியல் துறைகளை முன்வைத்து ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பத்தில் எட்டுத் துறைகளில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருந்ததாகத் தெரிய வந்தது. எடுத்துக்காட்டாக, முதனியியல் (Primatology) என்கிற துறையை எடுத்துக்கொள்வோம். வாலில்லாக் குரங்குகள், தேவாங்குகள், குரங்குகள் போன்ற முதனிகளை ஆராயும் அறிவியல் புலம் இது. இதில் 1950, 1960களில்தான் பெண் அறிவியலாளர்களின் வருகை அதிகரித்தது. ஜேன் குடால், டயான் ஃபாஸி, பிரூட் கால்டிகாஸ் போன்ற முன்னணி முதனியல் ஆய்வறிஞர்கள் துறைக்குள் வந்தனர்.

அதற்கு முன்புவரை, முதனிகளின் சமூக அமைப்புகள் பலவும் ஆண் அறிவியலாளர்களின் பாகுபாடு கொண்ட கோணத்தின்மூலம் மட்டுமே ஆராயப்பட்டன. ஆண் முதனிகள் மட்டுமே தலைமை வகித்து கூட்டத்தை வழிநடத்துகின்றன என்கிற பொது பிம்பம் இருந்தது. எல்லாப் பெண் முதனிகளும் வெட்கப்பட்டு சிணுங்கும் பண்பு கொண்டவை என்கிற எண்ணமும் இருந்தது. பெண் அறிவியலாளர்களின் வருகையால் இது சுக்குநூறாக உடைந்தது. முதனிகளின் சமூக அமைப்பில் இருந்த பாலின நுணுக்கங்கள் விரிவாகப் பேசப்பட்டன. இனப்பெருக்கம் செய்து அதிகாரத்தை நிலைநாட்ட, ஆண் முதனிகள் குட்டிகளைக் கொல்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறான இனப்பெருக்க ஆதிக்கத்துக்கு எதிராக, பெண் முதனிகள் பல ஆண் விலங்குகளுடன் இணைசேருகின்றன என்கிற தகவலும் வெளிவந்தது. மனித இனத்தைப் போன்றே ஆண்மைய சமூகமாக முதனிகளைச் சித்தரிக்கும் போக்கு மாறத் தொடங்கியது.
இந்த அதிர்ஷ்டம் எல்லாத் துறைகளுக்கும் வாய்க்கவில்லை. இன்றும் கண்டுபிடிப்பாளர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள், ஆகவே பெண்களுக்கேயுரிய தனித்துவமான பிரச்னைகள் கண்டுகொள்ளப்படுவது மிகவும் கடினம். இத்தனைக்கும் மீறி, தங்கள் வாழ்விலிருந்தே பிரச்னைகளை இனம்கண்டு, கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி சமூகத்துக்கு உதவிய பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்?
(தொடரும்)
படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!




