கடிதம் – 1

ஆகஸ்டு 22, 2016,

சிங்கப்பூர் விமான நிலையம்.

அன்பு அப்பாவுக்கு,

வணக்கம். வீட்டிற்கு வந்துவிட்டீர்களா?! சென்னையிலிருந்து புறப்பட்ட எங்கள் விமானம், இப்போது சற்று முன்புதான், சிங்கப்பூரில் தரையிறங்கியிருக்கிறது.

அப்பா, சென்னை விமான நிலையத்தில் கையசைத்து விடை கொடுக்கும் போது நீங்கள் அழத்தொடங்கியதும், என் மன தைரியத்தை உடைக்கிறீர்கள் என நான் அதற்குக் கோபப்பட்டதும், முள்ளாய் என் நெஞ்சைக் குத்தித்துளைக்கிறது.

அப்பா, நான் அந்நிலையில் வேறு என்ன சொல்லியிருக்கமுடியும்?!

‘Global Korea Scholarship’ கிடைத்து கொரிய அரசின் செலவில் விமானமேறி என் கனவுகளைக் கொரிய மண்ணில் தேட நான் புறப்பட்டிருந்தாலும், என் மனம் முழுமையும் அங்குதான்… நம் கள்ளிக்குப்பம் வீட்டிலும் பாட்டியின் மடியிலும் நம் மொட்டை மாடியிலும் கிணற்றின் பாசி வாசனையிலும் உங்களுடனும் நம் அம்மாவின் கைமணத்துடனும்தான் இருக்கிறது. இதில் எங்கு நீங்கள் அழுதால் நானும் உடைந்துவிடுவேனோ என்கிற பயத்தில்தான் உங்களிடம் கண்டிப்பு காட்டிவிட்டேன், மன்னித்து விடுங்கள் அப்பா.

அப்பா, விமானத்தில் நல்ல ஜன்னலோர இருக்கையே கிடைத்தது. சென்னையின் தரையிலிருந்து விடுபட்டு விமானம் மேல் எழுகையில் துக்கமும் கலக்கமும் தொண்டையை அடைத்து அமிழ்த்தியதப்பா. எப்படியோ ஒருவாறு என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு ஆசுவாசமடைந்தேன்.

விமானத்தில் நொறுக்குத் தீனியாக கிளம்பிய சற்று நேரத்திலெல்லாம் சிறு பாக்கெட்டில் உப்பும் எண்ணெய்யும்போட்டு வறுத்த வேர்க்கடலைத் தந்தார்கள். அப்பா. விமானத்தில் அது ஒரு கூத்து. ஒரு பாக்கெட்டில் எண்ணி ஏழு கடலைகள்தான் இருந்தன! கூடவே டிஷ்யூ பேப்பர் வேறு. இந்த ஏழு கடலைகளைச் சாப்பிடுவதற்கு கைகளை வேறு துடைத்துக்கொள்ள வேண்டுமா என்று எண்ணி சிரித்துக்கொண்டேன்.

அப்பா, அங்கு சினிமாவெல்லாம் பார்க்கமுடிந்தது. ஏர் இந்தியாவின் மதிய உணவில் பாயசம்போன்ற இனிப்பும் ஒன்றும் வழங்க, என்னருகே அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர் அவர் இனிப்பையும் எனக்குத் தந்துவிட்டார். எனதிந்த கனவுப்பயணத்திற்கு இந்த வாழ்க்கை இனிப்பு வழங்கித் தொடங்கிவைத்தது போன்றிருந்தது. நன்றியோடு அதனைப் பெற்றுக்கொண்டேன். இருக்கைக்கு முன் இருக்கும் திரையை எப்படி இயக்கிப் படம் பார்ப்பது என்று அவரே எனக்குக் கற்றுத்தந்தார்.

விமான உணவைப் பற்றிச் சொல்ல வேண்டும். நான் ஏற்கனவே சைவ உணவு இருக்குமோ, இல்லை அசைவம்தானோ என்று பயந்திருந்தேன். ஆனால், விமானத்தில் எனக்கு என்ன வேண்டுமென்று விசாரித்து சைவமே தந்த அந்த ஏர் ஹோஸ்டஸ் வாழ்க.

அப்பா சொல்ல மறந்தேனே. ‘ஏர் ஹோஸ்டஸ்’ என்றால் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் அந்தப் பணியைச் செய்கின்றனர். இப்போது அவர்களை கேபின் குரூ, ஃப்ளைட் அட்டெண்டன்ட் என்று சொல்கிறார்கள்.

மொத்தத்தில் மேகங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு, சென்னைக்கும் உங்கள் எல்லார்க்கும் மனதில் மானசீகமாய்ப் பிரியாவிடை கொடுத்திருந்தேன். பக்கத்துப் பயணியின் பாயசம் பகிர்ந்த கனிவைச் சுவைத்துக்கொண்டு, புதிய திரைப்படமொன்றை ரசித்துக்கொண்டு, தூங்கிக்கொண்டு, கொரிய வாழ்வைப் பற்றிய கற்பனைகளும் கலக்கங்களும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதைக் கட்டுப்படுத்திக் கொண்டு… அந்த மூன்றரை மணி நேர விமானப்பயணம் இனிதே நிறைவுற்றது.

சிங்கப்பூரில் இப்போதே இரவாகிவிட்டதப்பா. இந்திய நேரத்தை விடவும் இது இரண்டரை மணிநேரம் முந்தியிருக்கிறது. விமானம் தரையிறங்குகையில் ஒளி வெள்ளத்தில் மிதந்த சிங்கப்பூர் அழகு. இது இந்த ஆண்டுக்கான உலகின் முதல் உயர்தர விமானநிலையமாம். இங்கு இன்னும் நான்கைந்து மணிநேரத்திற்குப்பின் கொரியாவை நோக்கிப் புறப்படும் அடுத்த விமானத்தில் ஏறவேண்டும்.

சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே நம் ஊர் தோசையெல்லாம் விற்கிறார்கள். விலைதான் யானை விலை, குதிரை விலை சொன்னார்கள். நான் எதுவும் சாப்பிடப்போவதில்லை. அடுத்த விமானத்தில் பார்த்துக்கொள்ளலாமென்று இருக்கிறேன். அம்மாவும் பெரியம்மாவும் கொடுத்துனுப்பிய முறுக்கு மற்றும் நொறுக்குத் தீனிகளை எல்லாம் பெட்டியில் வைத்தது தவறாகிவிட்டது. அதை நம்மிடம் கொடுக்காமல் கொரியாவரை அவர்களே அனுப்பிவைத்துவிடுவார்களாம். அவையாவது இப்போது இருந்திருந்தால் கொஞ்சம் கொரித்திருக்கலாம்.

அப்பா… நான் கிடக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ‘நம் குடும்பத்தில் முதல் பாஸ்போர்ட் வாங்கி விமானம் பார்த்தவள்’ என்று என்னைக்குறித்து மாமாவிடம் நீங்கள் பெருமையடித்ததை நான் அப்போது கேட்டேன். கொரியா போனதும் நன்கு படித்து அங்கு அவர்கள் தரும் கல்வி உதவித்தொகையைச் சேர்த்துவைப்பேன். அதைக்கொண்டு எப்படியாவது உங்கள் இருவரையும் கூடிய விரைவில் கொரியா அழைத்துவந்து ஊர் சுற்றிக்காட்டுகிறேன் அப்பா. இது நான் உங்களுக்கும் அம்மாவிற்கும் தரும் சத்தியம்.

இந்த வாய்ப்பு வந்தபோது, ‘பெண்ணைத் தனியாக அவ்வளவு தூரம் அனுப்பாதே’ என்று யார் சொல்லியும் நீங்கள் கலங்கவில்லை. “கொரியாவா? அங்கே நாயெல்லாம் சாப்பிடுவார்கள், அங்கு வேண்டாம்”, என்று சிலர் அம்மாவின் மனதைக் கலைத்தனர். “என் மகளுக்கு அவள் படிப்பும் கனவும்தான் முக்கியம், அங்கு சைவமே கிடைக்காவிட்டால் அவள் அந்த நாய் பூனையையே சாப்பிடட்டும். அது பற்றி உங்களுக்கென்ன?”, என்று கேட்டுவிட்டு, தொலைபேசியைத் துண்டித்துவிட்டுக் கதறி அழுதாள் அம்மா. அன்று நான் அம்மாவிற்கு என் மனதிற்குள்ளே சத்தியம் ஒன்று செய்தேன். ‘அம்மா, எந்த நிலையிலும் நான் மாமிசம் சாப்பிடமாட்டேன். ஆனால், அத்தகைய நிலை வந்தேவிட்டால், மாமிசம் சாப்பிட்டேனும் உயிர் வாழ்வேன். வைராக்கியம் உயிரைவிட ஒன்றும் பெரியது இல்லையல்லவா? அதனால்தான்.’ எனக்குள்ளே இவ்வாறு சத்தியம் செய்தேன் அப்பா. இப்போது அந்நாளும் அந்த நிகழ்வுகளும் மனக்கண் முன் வந்துபோகின்றன. கொரியா எனக்கென்று எதை வைத்திருக்கிறதோ, அறியேன்.

அப்பா… சிறு வயதில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களின் மீது காகிதம் வைத்து அதன் மேல் பென்சிலால் கிறுகிறுவென்று சீராகக் கிறுக்கி நிரப்பினால், அந்த நாணயத்தின் அச்சு தாளில் விழும் விளையாட்டை விளையாடுவோமே… சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஓரிடத்தில் அதற்கென பெரிய மேஜைபோன்ற ஒன்றை கட்டியெழுப்பியிருக்கின்றனர். நம் வரவேற்பறை அளவுக்கு அகன்ற பெரிய மேஜையில் பல்வேறு வடிவ அச்சுகளைப் பொறித்து பக்கத்தில் தாள்களும் கிரேயான்களும் வைத்திருக்கின்றனர். அதைப் பயன்படுத்தி பல்வேறு அச்சுகள் எடுத்து ஓவியம்போன்று தாள்முழுதும் தீட்டியிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு நான் வரும்போது, இத்தாளை அக்காவிற்குப் பரிசளிப்பேன்.

அப்பா… இங்கேயிருந்து உங்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியவில்லை. அதற்குத் தனியாகப் பணம் செலுத்தி, ‘roaming pack’ எல்லாம் போட்டிருக்கவேண்டுமாம்.

அப்பா பத்திரமாக இருங்கள். அம்மாவையும் பாட்டியையும் நன்கு கவனித்துக்கொள்ளுங்கள். அக்காவையும் கேட்டேனென்று சொல்லுங்கள். கொரியா சென்றதும், அடுத்த கடிதம் போடுகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்,

ப. ஜெயஸ்ரீ.

அன்பு வாசகர்களுக்கு…

இந்த மடல்கள் எல்லாம் நான் கடந்து வந்த பாதையில் நான் சந்தித்த மனிதர்கள்; அவர்களின் மனிதம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலை என் அனுபவம் மற்றும் பார்வையின் துணைகொண்டு அலசும் முயற்சிகளே. என்னைத் தவிர மற்ற மனிதர்களின் பெயர்களையும் குறிப்புகளையும் சற்றே மாற்றி, அவர்தம் வாழ்வோடு குறிக்கிடாவண்ணம் தரமுயல்கிறேன். 

இக்கடிதங்களின் துணைகொண்டு என்னோடு கைகோத்து நாம் போகும் பயணங்களாக இவ்வெழுத்துகள் மிளிரட்டும். நல்ல வாய்ப்பை நல்கிய இப்பிரபஞ்சத்திற்கும், ஊக்குவித்து அழகுபார்க்கும் ஹெர் ஸ்டோரிஸுக்கும், வாசிக்கும் நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தொடரும்…

படைப்பாளர்

ஜெயஸ்ரீ பத்மநாபன்

தற்போது கொரியத் தலைநகர் சியோலில் உள்ள கொரியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D.) மாணவியாக இயற்பியலில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். வாசிப்பு, எழுத்தின்மீது பேரார்வம் கொண்டவர்.