“It does not require many words to speak the truth” – Sitting Bull (Lakota Leader) 

“உண்மையைப்பேச சொற்கள் அதிகம் தேவையில்லை.” — சிட்டிங் புல் (லக்கோட்டா தலைவர்) 

அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தின் வட பகுதியில், 60 அடி உயரத்தில் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் (George Washington, Thomas Jefferson, Theodore Roosevelt and Abraham Lincoln) ஆகிய நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்களின் பிரமாண்டமான முகங்கள் உங்களை மிரட்டலாக வரவேற்கும்.

மலையை உடலாக்கி, முகட்டை முகமாக்கி அமெரிக்காவின் பெருமைமிகு தேசிய வரலாற்றுச் சின்னமாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் அம்மலையை ‘மவுண்ட் ரஷ்மோர்’ (Mount Rushmore) என்கிறது. ஆனால், அங்கு முன்பு வாழ்ந்துவந்த ஸ்யு (Siouxe) மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த லக்கோட்டா பூர்வகுடிகளுக்கோ, இது ஈரம் காயாத இதயக்காயத்தின் குருதிப்புனல். அவர்களால் ‘பிளாக் ஹில்ஸ்’ (Black Hills) என அழைக்கப்படும் புனிதமான வழிபாட்டுத்தலம்.

வெள்ளையர்களின் பார்வையில் அதுவொரு வரலாற்றுச் சின்னமானது. ஆனால், பூர்வகுடிகளின் பார்வையில் இது விடுதலைக்கான அடையாளமல்ல; மாறாக, வஞ்சகப் பொய்களும் வன்முறையான இனப்படுகொலைகளும் நிறைந்த கொள்ளைக்கார வரலாறு. லக்கோட்டா பூர்வகுடிகள் அன்றும் சரி, இன்றும் சரி, அந்நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகையைப் பெறத்தயாராக இல்லை. அவர்கள் கேட்பதெல்லாம், ‘எங்களின் வழிபாட்டுத்தலமான புனித மலையை எங்களிடமே திருப்பித் தாருங்கள்’ என்பதே!

வட அமெரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பரந்த, புல்வெளி நிறைந்த ‘பெருஞ்சமவெளிப்பகுதி’ கிரேட் பிளெயின்ஸ் (Great Plains) என அழைக்கப்படுகிறது. இப்பகுதி கிழக்கில் மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கிலிருந்து மேற்கில் ராக்கி மலைத்தொடர் (Rocky Mountains) வரை பரவியுள்ளது. இது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் பல மாநிலங்களை உள்ளடக்கியது. டெக்சாஸ் (Texas) , ஒக்லஹாமா (Oklohoma), கன்சாஸ் (Kansas), நெப்ராஸ்கா (Nebraska), சவுத் டகோடா (South Dakota) போன்றவை இதில் அடங்கும். இப்பகுதி அமெரிக்காவின் பல்வேறு பூர்வகுடி நாடுகள் பலவற்றின் பாரம்பரிய வாழ்விடமாகவும், காட்டெருமைகளின் (Bison) பிரதான மேய்ச்சல் நிலமாகவும் விளங்கியது.

லக்கோட்டாக்கள் 1700-களில் தற்போதைய மினசோட்டா மாநிலத்தின் வனப்பகுதியில் விவசாயிகளாக வாழ்ந்துவந்தனர். ஒஜிப்வே பூர்வகுடி மக்களுடனான (Ojibway) போர், டக்கோடா மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்தது. அதில் மேற்கே பெருஞ்சமவெளிகளைநோக்கி நகர்ந்த குழுவே பிற்காலத்தில் ‘லக்கோட்டா’ என்று அழைக்கப்பட்டனர். அந்நிலப்பரப்பில் உலவிவந்த இலட்சக்கணக்கான காட்டெருமைகள் அவர்களின் வாழ்க்கையின் பெரும்பங்காக விளங்கின. உணவு, உடை, இருப்பிடம், ஆயுதங்கள், வீட்டு உபயோகப்பொருள்கள் என அனைத்திற்கும் அவர்கள் காட்டெருமைகளை நம்பியிருந்தனர். ஆண்டுதோறும் இடம்பெயரும் எருமைக்கூட்டங்களைப் பின்தொடர்ந்துசென்றனர். 

வடக்கு ஷெயேன் (Northern Cheyenne), வடக்கு அரபாஹோ (Northern Arapaho) போன்ற பிற பூர்வகுடிகளுடன் கூட்டணி அமைத்தபிறகு, லக்கோட்டா மக்கள் வடக்கு சமவெளியில் ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்தனர். லக்கோட்டா பூர்வகுடிகளின் வீரத்தலைவர்களான சிட்டிங் புல் (Sitting Bull), கிரேஸி ஹார்ஸ் (Crazy Horse), ரெட் கிளவுட் (Red Cloud) போன்றோர் அமெரிக்க அரசாங்கத்திற்கு நீண்டகாலம் சிம்மசொப்பனமாகவும் வெல்லமுடியாத சவாலாகவும் திகழ்ந்தனர். லக்கோட்டா இனம் அப்பகுதியில் வாழ்ந்த பிற பூர்வகுடி இனங்களிடமிருந்து திரை வசூலிக்கும் அளவிற்கு வணிகத்திலும் உயர்ந்திருந்தது. ஒரு காலகட்டத்தில், ஸ்பானியர்களும்கூட இவர்களுக்கு திரை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. 

அமெரிக்காவின் மேற்குப்பக்க விரிவாக்கத்தால் இவர்களின் வாழ்க்கை நிலை சரியத்தொடங்கியது. அட்லாண்டிக் கரையோரத்தில் 13 காலனிகளாகத்தொடங்கிய அமெரிக்கா, மேற்குப் பகுதியின் எல்லைகளை நகர்த்திய வண்ணமிருந்தது. அந்த எல்லைக்கோட்டின் நகர்வு இரத்தச் சாயம் பூசிக் கிடந்தது. 1804-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) மேற்கொண்ட பிரமாண்டமான வரலாற்று முயற்சி அமெரிக்காவை வல்லரசாக மாற்றுவதற்கான முதல் அடியென்றால், பழங்குடியினருக்கோ அது மரண அடியானது.

அதுதான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘தி லூயிஸ் அண்ட் கிளார்க் எக்ஸ்படிஷன்’ (The Lewis and Clark Expedition). மேற்கிலுள்ள பசிபிக் பெருங்கடலுக்குச் செல்லும் நீர் வழித்தடத்தை கண்டறியுமாறு லூயிஸ், கிளார்க் என்கிற முன்னாள் இராணுவ வீரர்களின் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. வழியிலுள்ள லக்கோட்டா மக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அம்முயற்சி சுமூகமாக அமையவில்லை. சிறு சலசலப்பு கைகலப்பாக மாறியது. லக்கோட்டா தலைவர் ‘பிளாக் பஃபலோ’-வின் (Chief Black Buffalo) குறுக்கீட்டால் அச்சந்திப்பு சமாதானமாக முடிந்தது. அதைத் தொடர்ந்து லூயிஸ்-கிளார்க் ஆய்வுப் பயணத்தில் மேற்குப்பகுதிகளுக்கு ‘வழி கண்டறியப்பட்டது’. அவர்களைப் பின்தொடர்ந்து தோல் வணிகர்கள் அந்தப் பகுதிக்கு வரத்தொடங்கினர். அவர்கள் மூலமாக புதிய நிலங்களைப் பற்றிய செய்திகள் கிழக்குப்பகுதி முழுவதும் பரவின.

 

1805–1811களில், லூயிஸ்-கிளார்க் பயணத்தால் கிடைத்த மேற்கு வழித்தடங்களும் வரைபடங்களும் தெற்கு டக்கோட்டாவை அடுத்துள்ள வடக்குப் பெருஞ்சமவெளியின் வணிக முகத்தை மாற்றத்தொடங்கின. பல்வேறு நாடுகளின், நிறுவனங்களின் ‘டிரேடிங் போஸ்ட்’ எனப்படும் பல வர்த்தக முகாம்கள் அங்கு நிறுவப்பட்டன. புதிய பூமியின் தோல் வர்த்தகம் ஐரோப்பியச்சந்தையால் பன்மடங்குப் பெருகத்தொடங்கியது. 

1840-ஆம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கும் பூர்வகுடிகளுக்குமிடையே உறவு ஓரளவு அமைதியாகச்சென்றது. அமெரிக்காவின் மேற்கு வழித்தடம் வரலாற்றுப் புகழ்பெற்ற ‘ஒரிகன் வழித்தடம்’ (Oregon Trail) என்றழைக்கப்பட்டது. மேற்கே செல்பவர்கள் லக்கோட்டா பழங்குடியினர் வாழும் கிரேட் பிளைன்ஸை கடந்துதான் அங்கு செல்லமுடியும். பல்லாயிரக்கணக்கான அமெரிக்க குடியேறிகள் தங்களின் வளமான எதிர்காலத்தை நோக்கி இப்பயணத்தை மேற்கொள்ளத்தொடங்கினர். ‘வேகன் டிரெயின்’ (The wagon train) என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டிகளும், குதிரை பூட்டப்பட்ட கூட்டுவண்டிகளும் லக்கோட்டா பகுதியை நிறைக்கத்தொடங்கின. 

அத்தொடர் போக்குவரத்தினால் அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த காட்டெருமைகள் வேறிடங்களுக்கு நகரத்தொடங்கின. பெருமளவு அப்பயணிகளுக்கு உணவாகவும் மாறின. காட்டெருமைகளை வேட்டையாட தங்களின் எல்லையைத் தாண்டிச்சென்றதால், லக்கோட்டாக்களுக்கு பிற பூர்வகுடிகளுடன் பெரும் மோதல்கள் ஏற்பட்டன. அதனால் பூர்வகுடிகள் மேற்கு நோக்கி வரும் முன்னோடிப் பயணிகளை (Pioneer) கொள்ளயடித்து, தாக்கி அச்சுறுத்தினர். ஆனால், அமெரிக்கர்களின் மேற்கத்திய பயணத்தை எதுவும் நிறுத்தமுடியவில்லை. 

அத்துடன், கலிஃபோர்னியாவின் தங்க வேட்டை (California Gold Rush) மேலும் மேற்கத்தியப் பயணத்தை பேராவலாக மாற்றியது. வெள்ளையரின் இடைவிடாத வரவால், பழங்குடியினரின் மோதல்கள் அதிகரித்தன. 

பெரும்பான்மையான பூர்வகுடிகள், தங்களின் முக்கிய வேட்டையான காட்டெருமைகளை இழந்துவிட்டதால் பட்டினியில் பரிதவித்தனர். அதனால், அவர்கள் அமெரிக்கர்களின் ஊடுருவலை விடாது தடுத்தனர். எனவே வடக்குப் பெருஞ்சமவெளியில் அமைதியைப் பேணி அமெரிக்க குடியேறிகளுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்க அரசாங்கம் முயன்றது.

இக்கொந்தளிப்பான சூழலைக் கையாளுவதற்காக முதல் ஃபோர்ட் லாரமி ஒப்பந்தம் (The First Fort Laramie Treaty-1851) மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி பூர்வகுடிகள் மேற்கே பயணிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டுமென்றும்; பூர்வகுடிகளின் நிலங்கள் வரையறுக்கப்பட்டு, அவர்களுக்கு அமெரிக்க அரசு ஐம்பது ஆண்டுகளுக்கு உணவுப்பொருள் வழங்குமெனவும் முடிவுசெய்யப்பட்டது. ஆனால் திடீரென உணவு வழங்கல் பத்தாண்டுகளாக மாற்றப்பட்டது. நிலங்கள் வரையறுக்கப்பட்டதால், உணவுத் தட்டுப்பாடும், அண்டை பூர்வகுடிகளுடன் மோதல்களும் பலமாக வெடித்தன. 

லக்கோட்டா பூர்வகுடியொருவர் பசிக்கொடுமையால் அமெரிக்கப் பயணிகளின் முடமான காளைமாடொன்றைக்கொன்றார். இச்சம்பவம் மிகப்பெரிய மோதலாக (Grattan Massacre) மாறியது. இராணுவத் தளபதியும் சில வீரர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய கிட்டத்தட்ட 1300 அமெரிக்கப் படைவீரர்கள், லக்கோட்டாக்கள் மீது திடீர்த்தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சுமார் 86 லக்கோட்டா மக்கள் (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) கொல்லப்பட்டனர். இந்த இரக்கமற்ற தாக்குதலே அமெரிக்கப் பழங்குடியினப் போர்களின் (American Indian Wars) போக்கைத் தீவிரப்படுத்திய முக்கியத் திருப்புமுனையென வரலாறு கூறுகிறது. 

 மனமுடைந்த ஆயிரக்கணக்கான லக்கோட்டாக்கள் 1857-ஆம் ஆண்டு தங்களின் புனித இடமான ‘பிளாக் ஹில்ஸ்’ பகுதியில் ஒன்றுகூடினர். அப்பகுதியை அமெரிக்கர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டுமென்று உறுதியெடுத்துக்கொண்டனர். 

1866–1868-களில் மொன்டானாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுரங்கத் தொழிலாளர்கள் விரைவாகச் செல்ல வசதியாக ‘போஸ்மேன் தடம்’ (Bozeman Trail) உருவாக்கப்பட்டது. இந்தப் பாதை லக்கோட்டா மக்களின் புனித வேட்டை நிலங்களின் நடுவே சென்றது. இதை எதிர்த்து புகழ்பெற்ற லக்கோட்டா தலைவரான ரெட் கிளவுட் (Red Cloud) தலைமையில் பழங்குடியினர் அமெரிக்க இராணுவத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அமெரிக்க வரலாற்றில் பழங்குடியினர் அமெரிக்க இராணுவத்தை வெற்றிகரமாக மண்டியிடச்செய்த மிகச் சில போர்களில் இதுவும் ஒன்று. போஸ்மேன் தடத்திலிருந்த அமெரிக்க இராணுவக் கோட்டைகளை மூடவேண்டும் என்கிற லக்கோட்டாக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1868ஆம் ஆண்டு இரண்டாம் ஃபோர்ட் லாரமி ஒப்பந்தம் (The Second Fort Laramie Treaty) வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. தலைவர் ரெட் கிளவுட் போரில் வெற்றிபெற்றதைத்தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கம் லக்கோடாக்களுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தற்போதைய தெற்கு டக்கோடாவில் உள்ள பிளாக் ஹில்ஸ் (Black Hills) உள்பட பெரும்பகுதிகள் லக்கோடாவிற்கும் ஏனைய ஸ்யு (Siouxe) மக்களுக்கும் சொந்தமானவை என்று அறிவித்தது. வெள்ளை அமெரிக்கர்கள் யாரும் அனுமதியின்றி அங்கு நுழையக்கூடாதென்றும் அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துத் தனது உரிமையை விட்டுக்கொடுத்தது. 

1874-இல் புனிதமான பிளாக் ஹில்ஸ் பகுதியில் தங்கம் இருப்பதாக செய்தி பரவியதால், கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கான வெள்ளையர்கள் அப்பகுதிக்குள் வெள்ளம்போல் குவிந்தனர். அமெரிக்க அரசாங்கம் அப்பகுதியை விலைக்குவாங்க முயற்சித்தது; ஆனால் பூர்வகுடி தலைவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். லக்கோட்டா மக்களின் நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பே அடுத்த சில ஆண்டுகளில் புகழ்பெற்ற ‘பெரும் ஸ்யு போர்’ (Great Sioux War of 1876) வெடிப்பதற்கான நேரடி விதையாக அமைந்தது.

கிரேஸி ஹார்ஸ் (Crazy Horse), சிட்டிங் புல் (Sitting Bull) முதலான லக்கோட்டா தலைவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். ‘இந்தப் புனித இடத்தை விட்டுத்தருவதைவிட போரை எதிர்கொள்ளவே விரும்புகிறோம்’ என்று தலைவர்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்தனர். இப்பூர்வகுடிகள் தங்களை விவசாயிகளாக மாற்றிக்கொண்டு இந்த ‘பிளாக் ஹில்ஸ்’ பகுதியை விட்டுத்தரவேண்டுமென அமெரிக்க இராணுவம் வலுக்கட்டாய நெருக்குதலைத் தந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ‘பிளாக் ஹில்ஸ் போர்’ அல்லது ‘சிட்டிங் புல் மற்றும் கிரேஸி ஹார்ஸ் போர்’ (Sitting Bull and Crazy Horse’s War) எனப்படும் கடுமையான போர் நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் இக்காலகட்டத்தில் நடைபெற்ற மிக முக்கியமான, புகழ்மிக்க தொடர் போர்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 

இந்தத் தொடர் போர்களில் தெற்கு டக்கோட்டாவிலுள்ள ரோஸ்பட் கிரீக் (Rosebud Creek), மன்டானாவிலுள்ள பவுடர் ரிவர் (Powder River), லிட்டில் பிக்ஹார்ன் பள்ளத்தாக்கு (the valley of the Little Bighorn River in Montana) முதலிய போர்களில் லக்கோட்டா தொடர்ந்து வெற்றிபெற்றுவந்தனர். வரலாற்றுப் புகழ்பெற்ற ‘லிட்டில் பிக்ஹார்ன் போரில்’ அமெரிக்க இராணுவ தளபதி ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டர் கொல்லப்பட்டார். கிரேட் பிளேன்ஸில் பூர்வகுடிகள் பெற்ற மகத்தான வெற்றிகளில் இதுவே கடைசியாகும். லக்கோட்டா மக்களை பிளாக் ஹில்ஸ் பகுதியிலிருந்து வெளியேறிச்செல்லுமாறு ஜனவரி 31,1876 அன்று, அமெரிக்கக் காங்கிரஸ் உத்தரவிட்டது. தெற்கு டகோடா மாநிலமாக உருவானபோது, அமெரிக்கர்கள் கூடுதல் நிலத்திற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். அதன் விளைவாகப் பூர்வகுடிகளின் நிலங்களிலிருந்து மேலும் பல பகுதிகள் பறிக்கப்பட்டு, அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டன. 

வெள்ளையர்களின் குடியேற்றம், ராணுவத் தாக்குதல்கள், தங்களது பாரம்பரிய வாழ்வாதாரமான காட்டெருமைகள் அழிப்பு முதலியவற்றால் பூர்வகுடிகள் நிலைகுலைந்துபோயிருந்தனர். அவர்களுக்கு ‘கோஸ்ட் டான்ஸ்’ (Ghost Dance) என்கிற இயக்கம் பெரும் நம்பிக்கையாக அமைந்தது. இந்தச் சடங்கு நடனத்தை முறைப்படி ஆடினால், இறந்த பூர்வகுடி முன்னோர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள் என்றும், வெள்ளையர்கள் இந்த நிலத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும், காட்டெருமைகளின் கூட்டங்கள் மீண்டும் பெருமளவில் திரும்பிவந்து தங்களின் முந்தைய சுதந்திரமான வாழ்க்கை முறை மீட்கப்படுமெனவும் அவர்கள் நம்பினர். இந்த ஆன்மீக நடனம் பழங்குடிகளை ஒன்றிணைத்து, மீண்டும் தங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கமும் ராணுவ அதிகாரிகளும் அஞ்சினர். இந்த நடனத்தை ஒடுக்க அரசாங்கம் தடை விதித்தது.

1890-ஆம் ஆண்டில் சிட்டிங் புல் கைது நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார். அதுவே இறுதியில் 1890 டிசம்பரில் நிகழ்ந்த துயரமான வூண்டட் நீ படுகொலைக்கு (Massacre at Wounded Knee) நேரடிக்காரணமாகவும் அமைந்தது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட லக்கோட்டா பூர்வகுடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கிரேஸி ஹார்ஸ், பிக் ஃபூட் (Big Foot) போன்ற வீரர்கள் பல்வேறு இராணுவ மோதல்களில் கொல்லப்பட்டனர். வூண்டட் நீ படுகொலை நிகழ்வு, அமெரிக்காவிற்கும் பூர்வகுடிகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்துவந்த ‘இந்தியப் போர்களின்’ (Indian Wars) இறுதிக் கட்டமானது. பூர்வகுடிகளின் ஆயுதம் தாங்கிய சுதந்திரப் போராட்டங்களின் முடிவையும் குறிக்கும் ஒரு துயரமான வரலாற்று அடையாளமாக நிலைபெற்றுவிட்டது.

அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பூர்வகுடிகளின் ஒதுக்கீட்டு நிலங்கள் துண்டாடப்பட்டதாலும் (allotment policy), அரசு உதவிகள் நிறுத்தப்பட்டதாலும், லக்கோட்டா மக்கள் நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர். அவர்களின் குழந்தைகள் உறைவிடப் பள்ளிகளுக்கு (Boarding Schools) அனுப்பப்பட்டதும், மதமாற்ற முயற்சிகளும் அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. 

இழந்த நிலத்தை மீட்கும் லக்கோட்டா மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான லக்கோட்டா மக்கள் தங்கள் இறையாண்மையுள்ள பழங்குடி அரசுகள், மொழி, கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிவருகின்றனர். சமீப காலங்களில் பூர்வகுடி அமெரிக்கர்களின் உரிமைகள் இயக்கத்தின் முன்னணியில் லக்கோட்டா மக்கள் இருந்துவருகின்றனர்.

பெட்டிச் செய்தி 

1862-ஆம் ஆண்டு மினசோட்டாவில் அமெரிக்க ராணுவத்திற்கு டக்கோட்டா மக்களுடன் ஸ்யு (Sioux wars) போர்கள் தொடங்கின. தப்பியோடியவர்கள் லக்கோட்டா பகுதியில் அடைக்கலம் புகுந்து, அங்கு அமெரிக்க வீரர்களுக்கு எதிரான போர்களில் இணைந்தனர். மேற்குப் பகுதி முழுவதும் பூர்வகுடிகள் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப்போராடினர். அமெரிக்க இராணுவத்திற்கு ‘பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆண்பிள்ளையையும் தாக்கிக்கொல்லுங்கள்’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெண்களும் குழந்தைகளும்கூட இதிலிருந்து தப்பவிடப்படவில்லை.

படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்) 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.