காலை எழுந்ததும் டெங்கிஆல் (Dengiall) தடுப்பூசியைப் பற்றிய அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டதாகச் செய்தி பார்த்தேன். உடனே 2017இல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வந்த தங்கைதான் நினைவுக்கு வந்தாள். அப்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65. மக்களிடையே அச்சமும் பதற்றமும் அதிகமாகவே இருந்தது. டெங்குவிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகளைச் சுகாதாரத் துறையினர் நேர்த்தியாக எடுத்துக்கூறி வந்தனர். 

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தின் போது டெங்கு பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில், 2023இல் உலக சுகாதார நிறுவனம் டெங்கு தொற்றைத் தரம் 3 (grade 3) அவசரநிலையாக அறிவித்தது. ஒரு நோய் பரவலோ அல்லது பேரழிவோ, உலகளாவிய அளவில் கடுமையான பொதுச் சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது இந்தத் தரம் 3 அவசரநிலை பிரகடனம் செய்யப்படும். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி உலக அளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 505430 ஆக இருந்த நிலையில், 2024இல் 1.46 கோடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.‌ ஆனால், இதற்கான பிரத்யேகமான சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. 

டெங்கு வைரஸால் ஏற்படும் இந்தத் தொற்று, ஒரு வைரஸ் காய்ச்சலுக்குண்டான, காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல்வலி உள்ளிட்ட அத்தனை அறிகுறிகளையும் கொண்டிருக்கும். தீவிர பாதிப்பின்போது அடிவயிற்றில் வலியும், ரத்த வாந்தியும்கூட ஏற்படலாம். டெங்கு தொற்றை உறுதி செய்வற்கான மருத்துவப் பரிசோதனை முறைகள்  இருந்தாலும் டெங்கு வைரஸை நேரடியாகக் குறிவைத்து தொற்றைக் குணப்படுத்தும் குறிப்பிட்ட antiviral சிகிச்சை தற்போது இல்லை. காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகளைக் குறைப்பதற்காக பாராசிட்டமால் போன்ற மருந்துகளும், உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்காக ORS கரைசல்களும் வழங்கப்படுகின்றன. தீவிர பாதிப்பின்போது தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம். 

ஆஸ்பிரின் போன்ற ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளையோ அல்லது இப்யூபுரூஃபன் போன்ற  வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளையோ டெங்கு காய்ச்சலின்போது பயன்படுத்துவது ஆபத்து. எந்தத் தொற்றுக்கு எந்த மருந்தை எடுக்க வேண்டும் என்கிற மருத்துவ வழிமுறைகளின்படி டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு நோய்க்கு எந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது மட்டுமே போதாது. ஒரு நோயைத் தடுக்கும் மருந்தோ குணப்படுத்தும் மருந்தோ எப்படி உருவாகிறது, என்னென்ன ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பற்றிய வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவதும் மிக முக்கியம். 

ஒரு மருந்து ஆய்வகத்திலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான ஆய்வு முறைகள் ஐந்து கட்டங்களாக நடைபெறுகின்றன. 

  1. இலக்கைக் கண்டறிதல் 
  2. மருந்துக்கான முன்னணி மூலக்கூறுகளைக் கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல்
  3. முன்மருத்துவ ஆய்வுகள் – ஆய்வக/விலங்கு சோதனைகள்
  4. மருத்துவப் பரிசோதனை – மனிதர்களில் மருத்துவ சோதனைகள் 
  5. ஒழுங்குமுறை ஒப்புதல் மற்றும் சந்தைக்குப் பிந்தைய கண்காணிப்பு

இலக்கை கண்டறிதல்:

ஒரு நோயோ அல்லது தொற்றோ உடலுக்குள் எப்படி ஏற்படுகிறது, என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது, அவற்றின் இலக்கு என்ன என்பது போன்றவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி உடலுக்குள் எப்படி நுழைகிறது, உடலின் எந்த உறுப்பைத் தாக்குகிறது, எந்தப் புரதங்கள் அல்லது மூலக்கூறுகள் அதன் பெருக்கத்துக்கும் நோய் ஏற்படுத்துவதற்கும் முக்கியமானவை, உடலின் செல்களுடன் அவை எவ்வாறு தொடர்பு கொள்கின்றன, நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்குதலை அவை எவ்வாறு எதிர்கொள்கின்றன ஆகியவற்றைப் புரிந்துகொள்வது மருந்துக்கான சரியான இலக்கைத் தேர்ந்தெடுக்க உதவும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில், எதிரி யார், அவன் என்ன மாதிரியான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறான், எவ்வழியாக நாட்டுக்குள் நுழைகிறான், அவன் உத்தி என்ன என்பது போன்றவற்றை அறிந்தால் மட்டுமே தாக்குதலில் இருந்து தப்பிக்கவோ பிழைக்கவோ முடியும் அல்லவா? இங்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை உடலின் எதிரிகளாக வைத்துக் கொள்வோம்.

ஓர் எதிரியிடமிருந்து நம்மை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம்? எதிராளியைக் கோட்டைக்குள் வராமல் தடுக்கலாம், அவர்களது ஆயுதங்களை முறியடிக்கலாம், எதிரிகளுக்கேற்ப தனது நாட்டுப்‌ படையை வலுவாக்கி அவர்களோடு நேருக்கு நேர்‌ சண்டையிடலாம்.‌ இப்படிப் பல வழிகள் உள்ளன. வழிமுறைகளுக்கேற்ப இலக்குகளும் மாறும். 

நோயுடன் தொடர்புடைய புரதத்தைக் கண்டறிவது மட்டுமே இலக்கை முடிவு செய்யாது‌. அந்த இலக்கின் செயல்பாட்டை மாற்றுவதன் மூலம் நோயின் போக்கில் பயனுள்ள மாற்றத்தையோ நிவாரணத்தையோ வழங்க முடியுமா என்பதை உறுதி செய்வது முக்கியம். அதே போல் ஒரு நோய்க்கே பல இலக்குகள் இருக்கலாம். நோய் உண்டாக்கும் புரதத்தைக் குறிவைத்து தாக்குவது ஓர் இலக்கு என்றால், அந்த நோய்க் காரணியைச் செயலிழக்கச் செய்து அதன் பெருக்கத்தைத் தடுப்பது மற்றோர் இலக்கு. இப்படி இலக்குகளுக்கேற்றவாறு மருந்தும் மாறுபடும். அதனால்தான் ஒரு நோய்க்குப் பல மருந்துகள் விநியோகத்தில் உள்ளன.‌

சரி, இப்போது தொற்றின் இலக்கும் செயல்முறையும் தெரிந்துவிட்டது அடுத்தது என்ன? உடலில் தொற்று ஏற்பட காரணமான நுண்ணுயிரியின் பெருக்கத்தையும் அதன் முக்கியச் செயல்பாடுகளையும் தடுப்பது.  இதுதான் இரண்டாவது கட்டம்.

மருந்துக்கான முன்னணி மூலக்கூறுகளைக் கண்டறிதல்.

இதில் பலவகை உண்டு. குறிப்பாக எந்த இலக்கு என்பதை தீர்மானிப்பதன் மூலம் மருந்துக்கான முன்னணி மூலக்கூறுகளைக் கண்டறியும் முறை மாறும். உரிய அனுமதி பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே மருந்து என்கிற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். அதுவரை ஆரம்பநிலை மூலக்கூறு (hits) எனவும் பிறகு முன்னணி மூலக்கூறுகள் (lead) எனவும் குறிப்பிட வேண்டும். இதுவே இறுதிக் கட்டங்களை நெருங்கும் போது மருந்தாக உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலக்கூறு (drug candidate) எனவும் குறிப்பிடலாம். 

நுண்ணுயிரியில் இருக்கும் நோய்க்குக் காரணமான புரதத்தையோ மூலக்கூறையோ குறிவைத்து தாக்குவது ஓர் அணுகுமுறை. எப்படிப் பூட்டுக்கு ஏற்ற சரியான சாவியைப் போட்டால் மட்டுமே பூட்டைத் திறக்க முடியுமோ அதுபோல நோய் காரணியோடு பொருந்தி அதை முறியடுக்கும் மூலக்கூறுகளைத் தேடி, அதில் சிறந்த மூலக்கூறுகளை எடுத்து மேம்படுத்த வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான மூலக்கூறுகளை ஆய்வகத்திலும், பின் விலங்குகளிலும் சோதித்துப் பார்க்க வேண்டும்.‌ இதுதான் மூன்றாவது கட்டம்.

முன்மருத்துவ ஆய்வுகள்: இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலக்கூறின் பாதுகாப்பு, நச்சுத்தன்மை, மருந்தியக்கம், செயல்திறன் முதலியவை பரிசோதிக்கப்படும். மருந்தியக்கம் (pharmacokinetics) என்பது ஒரு மருந்து உடலுக்குள் சென்ற பிறகு அது எவ்வாறு உறிஞ்சப்பட்டு, உடல் முழுவதும் பரவி, மாற்றமடைந்து, இறுதியில் வெளியேற்றப்படுகிறது என்பதைப் பற்றிய ஆய்வு. இதில் தேர்வான மூலக்கூறு அடுத்த கட்டத்திற்கு நகரும். 

மருத்துவப் பரிசோதனை:

மனிதர்களில் மூன்று நிலைகளில் செயல்படும் (Phase I, Phase II, Phase III). முதல் நிலையில் பாதுகாப்பு, சகிப்புத்தன்மை, மற்றும் மருந்தின் அளவு முதலியவை சோதிக்கப்படும். இரண்டாம் நிலையில், மனிதர்களில் அந்த மருந்தின் செயல்திறன், குறுகியகாலப் பாதுகாப்பு உள்ளிட்டவை உறுதி செய்யப்படும். மூன்றாம் நிலையில் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகளில் மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மதிப்பிடப்படும்.  இவற்றில் தேர்ச்சிப் பெற்ற மூலக்கூறு இறுதிக் கட்டத்திற்கு நகரும். 

ஒழுங்குமுறை ஒப்புதல் மற்றும் சந்தைக்குப் பிந்தைய கண்காணிப்பு:

மருந்தாகப் போகும் மூலக்கூறின் பாதுகாப்பு, தரம், செயல்திறன் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மதிப்பாய்வு செய்து, ஒப்புதல் கிடைத்த பின்னர் மருந்துப் பயன்பாட்டுக்கு வரும். மருந்துப் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் நான்காம் நிலை (Phase IV) ஆய்வுகளிலும் அதன் பாதுகாப்பும் செயல்திறனும் தொடர்ந்து மதிப்பிடப்படுகின்றன.

ஒவ்வொரு கட்டத்திற்கும் தனித்தனி கால அவகாசமும் பல்வேறு சோதனைகளும் தேவைப்படுகின்றன. அதனால்தான் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்பிலிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் வரை பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த முழுச் செயல்முறையும் ஏறக்குறைய 10லிருந்து 15 ஆண்டுகள்வரை ஆகிறது. தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்கூட டெங்கிஆல் தடுப்பூசி 2027இல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான ஆய்வு என்னவோ ஒரு தசாப்தத்திற்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்தையும் அவற்றுள் இருக்கும் சவால்களையும் அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.‌


(தொடரும்)

படைப்பாளர்

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகுக்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech, Genetic Engineering) பயின்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech, Computational Biology) பயின்று, தற்போது சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’, ‘அறிவதுவே’ ஆகிய தொடர்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பெண்ணெழுத்துப் போட்டியில் வென்ற ‘வாகை சூடிய விஞ்ஞானிகள்’ நூலாக வந்திருக்கிறது.