“சொல்லுங்கக்கா” என ரஞ்சனாவின் அழைப்பை ஏற்றாள் அமுதா.

“ஆங்… ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்னு கால் பண்ணேன்.”

“சொல்லுங்க அக்கா.”

“உங்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கா?”

“இல்லக்கா. இனிமேல்தான் ஓப்பன் பண்ணணும்.”

“ஏன் இன்னும் ஓப்பன் பண்ணாம இருக்கீங்க? முதல்ல அதைச் செஞ்சிருக்கலாமே?”

“சரிங்க அக்கா, ஓப்பன் பண்ணிடுறேன்.”

“சரி. பான் கார்டு, ஆதார் கார்டு எல்லாம் இருக்கா?”

“பான் கார்டு அப்படி எதுவும் இல்லக்கா. ஆனா ஆதார் கார்டு இருக்கு.”

“அடடா… சேனல் மானிட்டைஸ் ஆனா பான் கார்டு டீடைல்ஸ் எல்லாம் கேப்பாங்களே.”

“அப்படியா? அதை எப்படி அக்கா வாங்குறது?”

“பக்கத்துல ஏதாவது இ-சேவை மையம் இருந்தால் விசாரிச்சுப் பாருங்க.”

“அப்படியா…” என்று அவள் சங்கடமாக இழுக்க, “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு ஒரு பத்து மணி போல நம்ம ஆபீஸ்க்கு வந்துருங்க. இதெல்லாம் செஞ்சு கொடுக்கிற ஒரு ஃபிரெண்ட் இருக்காரு. அவரை நேரா அங்கே வரச்

 சொல்லிடுறேன். பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும்னாலும் அங்கே வந்து செஞ்சு கொடுப்பாங்க. எல்லாமே ஒரே இடத்தில் பட்டுப் பட்டுன்னு முடிச்சிட்டுப் போயிடலாம்” என்றாள் ரஞ்சனா.

ஒரு படிவம் நிரப்ப வேண்டும் என்றாலே தயக்கம். இதில் எங்கிருந்துபோய் வங்கிக் கணக்கைத் தொடங்குவாள்? இதில் இந்தப் பான் கார்டு எல்லாம் வேறு. ரஞ்சனா சொன்னது அவளுக்குச் சுலபமாக இருக்கவும், “சரி” என்று ஒப்புக்கொண்டாள்.

“நம்ம ஆபீஸ் எங்க இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டாள் ரஞ்சனா.

“தெரியாதே அக்கா. லொகேஷன் அனுப்புங்க.”

“சரி” என்று சொல்லி அழைப்பிலிருந்து விலகினாள் ரஞ்சனா.

சில நொடிகளிலேயே அலுவலகம் இருக்கும் லொகேஷன் அவளுடைய வாட்ஸ்அப்புக்கு வந்தது. அந்த அலுவலகமும் அவள் சென்று வந்த ரெசார்ட்டின் அருகில்தான் அமைந்திருந்தது. ஒருமுறை சென்று வந்த பகுதி என்பதால், அவளுக்கு அங்கு சென்றுவருவதிலும் சிக்கல் இல்லை.

மறுபடியும் மறுபடியும் அவளுடைய சேனலுக்கு வந்திருந்த கமெண்ட்களைப் படித்துப் பார்த்து சந்தோஷம் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி உறங்கிப் போனாள்.

ஜன்னல் வழியாக ஊடுருவிய சூரிய ஒளி முகத்தில் பட்டதும் உறக்கம் தெளிந்தது. அடுத்த நொடி கை செல்போனைத்தான் தேடியது. முதல் வேலையாக, யூடியூபில் வேறு ஏதும் புதிதாக கமெண்ட் வந்திருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டுத்தான் நேரத்தைப் பார்த்தாள். காலை 7:40.

“ஐயோ… அக்கா கடையை மூடிட்டு போயிடுச்சுன்னா சோறு கிடைக்காதே” என்று பதறி எழுந்தவள், போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள். கலைந்து கிடந்த தலைமுடியை அள்ளிக் கொண்டையாகப் போட்டுக்கொண்டு, கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு கீழே வந்தாள்.

தெருமுனையில் இருக்கும் அக்கா கடைக்குப் போய் இட்லியையும் பூரியையும் வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த தேநீர் விடுதியில் தேநீரையும் வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தாள். முதல் வேலையாகச் சிற்றுண்டியைப் பிரித்துவைத்துச் சாப்பிட்டு முடித்து, ஆறிப்போயிருந்த தேநீரைச் சூடு செய்து பருகினாள்.

ஒரு பக்கம் தோய்க்க வேண்டிய துணிகள் குவிந்து கிடந்தன. இன்றும் துவைக்காமல் விட்டால், போட உடை இருக்காது. வேறு வழியில்லாமல் அனைத்தையும் துவைத்துக் காயவைத்துவிட்டு, குளித்துத் தயாரானாள்.

அணிந்திருந்த உடை லேசாக நிறம் மங்கி, சற்றே பழசாக இருந்தது. அதை அணிய அவளுக்குப் பிடிக்கவே இல்லை என்றாலும் வேறு வழி இல்லை. நல்ல வருமானம் வரத் தொடங்கிய பிறகு நல்லதாக நான்கைந்து உடைகள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இப்படியாக மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பேக் பேக்கை எடுத்து மாட்டிக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கியவள், வீட்டு உரிமையாளர் சரஸ்வதியிடம் சாவியைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, வேலைக்கு விடுப்பு எடுத்ததற்காக அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையை இழுத்துப் பிடித்து பதில் சொல்லிவிட்டு, அங்கிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தாள்.

அதிக நேரம் காக்க வைக்காமல் பேருந்தும் வந்தது. ஆனால் கட்டணமில்லாப் பேருந்து இல்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிச் செல்ல மனம் வரவில்லை. அதை விட்டுவிட்டு மீண்டும் காத்திருப்பைத் தொடர்ந்தாள். அரை மணி நேரம் கழித்துத்தான் வேறு பேருந்து வந்தது. ஒரு வழியாக அங்கிருந்து வந்து சேருவதற்குள் மணி ஒன்றைக் கடந்து விட்டது.

பெயர் தாங்கிய அந்த அலுவலகக் கட்டிடத்தைப் பார்த்ததும் அரண்டு போனாள் அமுதா. அது ஓர் அலுவலகம் போல் இல்லை. கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் சொகுசு பங்களாவாக இருந்தது. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அதன் நுழைவாயிலிலேயே ஒரு காவலாளி அமர்ந்திருந்தார்.

அவரிடம் சென்று, “ரஞ்சனா என்று ஒருத்தங்க இருக்காங்க இல்ல… அவங்களைப் பார்க்கணும்” என்றாள்.

“சாப்பாட்டுக்குப் போயிருக்காங்கம்மா. கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க. உள்ள போய் உட்காருங்க” என்றார் அவர்.

உள்ளே சென்று பார்க்க, அங்கிருந்த வரவேற்பறையை ஒட்டி இருந்த ஒரு பெரிய அறை அலுவலகமாகச் செயல்படுவது தெரிந்தது. உள்ளே பேச்சுக் குரலும் கேட்டது. மற்றபடி அந்தப் பகுதியில் ஆள் அரவமே இல்லை எனலாம். கதவைத் தட்டிவிட்டு உள்ளே செல்லலாம் என்றாலும் தயக்கமும் பயமும் போட்டி போட்டன.

ரஞ்சனா வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்து, அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள்.

திறன்பேசியை எடுத்து திரையைத் தடவ ஆரம்பித்தாள்.

அவ்வளவுதான். நேரம் போனதே தெரியவில்லை. ரஞ்சனா அங்கே வந்து சேரும்போது ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

“வாம்மா… ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியாமே. செக்யூரிட்டி சொன்னாரு. உன்னைக் காலை 10 மணிக்குத்தானே வரச் சொன்னேன்?” என்று கேட்டாள் ரஞ்சனா.

“இல்லக்கா, பஸ் கிடைக்கல. அதான் லேட் ஆயிடுச்சு.”

“நல்ல வேள, இ-சேவை மையம் வெச்சிருக்கிற தம்பியையும் பேங்க் மார்க்கெட்டிங் எக்ஸிகியுடிவையும் போன் பண்ணதுக்கு அப்புறம் வரச் சொல்லி இருந்தேன். வெயிட் பண்ணு. போன் பண்றேன். கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த அலுவலகப் பகுதிக்குள் சென்று விட்டாள்.

போனைத் தள்ளி வைத்த பிறகுதான் பசி என்கிற உணர்வே தெரிந்தது. இவ்வளவு நேரம் வெட்டியாக அமர்ந்திருந்ததற்கு, சாப்பிட்டாவது வந்திருக்கலாம். அதைச் செய்யக்கூட மூளை அறிவுறுத்தவில்லை.

அலுவலகம் என்கிறார்கள், வந்தவர்களுக்கு ஒரு தேநீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை என்று அமர்ந்திருந்தாள்.

ரஞ்சனா சொன்ன இரண்டு பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர். இருவரும் நேரே அந்த அலுவலக அறைக்குள் சென்று விட்டனர். சில நிமிடங்களுக்கெல்லாம் ரஞ்சனா அவளை உள்ளே வருமாறு அழைத்தாள்.

வெளியில் இருந்த வெம்மைக்கும் உள்ளே நிலவும் குளிருக்கும் ஏதோ வேறு உலகத்துக்குள் நுழைந்தது போன்று இருந்தது. அந்த அறை சற்றுப் பெரியதுதான்.

மிகப்பெரிய திரையுடன் சில கணினிகள் இருந்தன. இதுபோன்ற உயர் ரகக் கணினிகளைச் சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள். ரஞ்சனாவையும் இப்போது புதிதாக வந்தவர்களையும் தவிர இரண்டே இரண்டு பேர் மட்டுமே அங்கு வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவளுக்கு வியப்பாக இருந்தது.

“இவர்தான் ரிஷப் சர்க்கார், ஆர்.எஸ்.கே.எஸ் பேங்க் எக்ஸிகியுடிவ். இவர் ஷியாம், இ-சேவை மையம் வெச்சிருக்காரு” என மற்ற இருவரையும் இவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ரஞ்சனா.

“ஹலோ” என்றாள்.

“நான் சொன்னேன் இல்ல, இவங்கதான் அமுதா. இவங்களுக்குத்தான் பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும், பான் கார்டு ரெடி பண்ணணும்” என்றாள்.

“ஆதார் கார்டு அண்ட் ரேஷன் கார்டு இருந்தா குடுங்க” எனக் கேட்டான் ரிஷப்.

“ஐயோ… என் கிட்ட ஆதார் மட்டும்தான் இருக்கு. அக்கா, நேத்து நீங்க ரேஷன் கார்டு சொல்லவே இல்லையே” எனப் பதறினாள்.

மறுபடியும் பள்ளியில் சேர்ந்த பிறகு ஆதார் அட்டையை  விண்ணப்பித்து வாங்கியிருந்தாள். ஆனால் ரேஷன் அட்டை இவளிடம் இல்லை.

“என்ன ரிஷப், என்ன பண்ணலாம்?” என்று கேட்டாள் ரஞ்சனா.

“பரவால்ல, போன்ல இருந்தாகூட போதும். இருக்கா?” என்று கேட்டான்.

“ஆங்… அது இருக்குன்னு நினைக்கறேன்” என்று திறன்பேசியில் தேடி எடுத்துக் காண்பித்தாள்.

“இது போதும்” என்று சொல்லவும், ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

சில படிவங்களையும் பேனாவையும் அவளிடம் நீட்டி, அவற்றை நிரப்பித் தரும்படி சொன்னான்.

பெயர் மற்றும் முகவரியை எழுதியவ, மேற்கொண்டு உள்ளதைப் பொறுமையாகப் படிக்கத் தொடங்கினாள்.

“பரவால்ல, இப்படியே போனா ரொம்ப டிலே ஆகும். ரிஷப், நீயே ஃபில் பண்ணிடு. அவங்க சைன் மட்டும் பண்ணட்டும்” என்று ரஞ்சனா சொல்லவும், அந்தப் படிவங்களை வாங்கி, தகவல்களை ஒவ்வொன்றாகக் கேட்டு அனைத்தையும் நிரப்பினான் ரிஷப்.

அடுத்து ஷியாம் அவன் பங்கிற்குச் சில படிவங்களில் கையெழுத்து வாங்கினான். அவளுடைய ஆதார் அட்டையை அங்கேயே இருந்த பிரிண்டரில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டனர். பின்பு ரேஷன் அட்டையையும் பிரிண்ட் எடுத்துவிட்டு, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து பத்திரமாக எடுத்து தம் பைக்குள் வைத்துக்கொண்டனர்.

“என்ன மேடம், ஒரு டீகூட சொல்ல மாட்டீங்களா?” என ஷியாம் கேட்க, “சாரி, வந்த உடனே சொல்லணும்னு நினைச்சேன். வேலைல மறந்துட்டேன். செக்யூரிட்டி அண்ணாகிட்ட சொல்லி, எல்லாருக்கும் டீயும் சமோசாவும் வாங்கிட்டு வரச் சொல்லு, பிரவீன்” என அங்கே வேலை செய்துகொண்டிருந்தவரைப் பணித்தாள் ரஞ்சனா.

அவர் சென்றதும் அமுதாவைச் சில ஒளிப்படங்கள் எடுத்தனர். ரிஷப் கொண்டு வந்திருந்த கருவியை இயக்கி கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

“உங்க போனுக்கு ஒரு ஓடிபி வரும். அதைக் கொஞ்சம் சொல்லுங்க” என்று ஷியாம் சொல்ல, சரியாகக் திறன்பேசிக்குக் குறுந்தகவல் வரவும் அந்த எண்களைச் சொன்னாள்.

இப்படியாக நேரம் செல்ல, டீயும் சமோசாவும் வந்தன.

“அவ்ளோதாம்மா, முடிஞ்சிருச்சு. சாப்டுட்டு நீ கிளம்பலாம்” என்றாள் ரஞ்சனா.

ஒரு நாசுக்காகக்கூட வேண்டாம் என்று மறுக்க இயலாமல், வயிற்றுப் பசி தன் இருப்பை படுமோசமாகக் காண்பிக்க, அவற்றை எடுத்து உள்ளே தள்ளினாள்.

மற்ற இருவரும் ரஞ்சனாவுடன் ஏதோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்க, “தேங்க்ஸ், போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

சற்றுத் தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து வந்தவள் பேருந்திற்காகக் காத்திருந்தாள்.

அப்பொழுது சரியாக அவளுக்கு அருகில் வந்து ஓர் இருசக்கர வாகனம் நிற்கவும் தூக்கிவாரிப் போட்டது. பிறகு அது கஜா என்பதை உணர்ந்து ஆசுவாசம் அடைந்தாலும், அவன் ஏதும் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்கிற பதற்றமும் உண்டானது.

அதற்கேற்றாற்போல, “என்ன அம்மு, இன்னைக்கு எதுக்கு இங்க வந்திருக்க?” என்று கேட்டான் கஜா, தலைக்கவசத்தின் கண்ணாடியைத் தூக்கிவிட்டபடி.

என்ன பதில் சொல்லுவாள் அமுதா?

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.