அந்தி நேரம்.

சூரியன் கடலின் ஓரத்தில் சோர்ந்து சாய்ந்துகொண்டிருந்தான். வானம் முழுவதும் மங்கலான சாம்பல் நிறம்.

கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்தாள் அருணா.

அவள் கையில் இருந்த கடிதம் காற்றில் படபடத்தது.

அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் தம்பி வினித்தின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி மீண்டும் நினைவுக்கு வந்தது.

“அக்கா… இவ்வளவு பணம் சேர்ந்துடுச்சா? இனிமே என் காலேஜ் கனவு நிஜமாகிடும் இல்ல?”

அவன் கண்களில் இருந்த நம்பிக்கையை நினைத்ததும் அவள் இதயம் வலித்தது.

கடிதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு மீண்டும் வாசித்தாள்.

“சாரிடா வினித்… நீ நினைக்கிற மாதிரி நான் சூப்பர் அக்கா இல்லை. உன் படிப்புக்காகச் சேர்த்த பணம்… எல்லாம் போயிடுச்சு. சீட்டுப் பணத்த எடுத்துட்டு அவங்க ஓடிட்டாங்க. நான் ரொம்பக் களைச்சுப் போயிட்டேன் டா… என்னால முடியல… உன்னையும் அம்மாவையும் பாதியில விட்டுட்டுப் போறதுக்காக என்னை மன்னிச்சிடு…”

அந்த வீட்டில் அவள் ஒரு சாதாரண மனிஷி இல்லை.

ஒரு நம்பிக்கை நட்சத்திரம். எந்தப் பிரச்னை வந்தாலும், “அருணா பார்த்துக்குவா” என்று எல்லாரும் நிம்மதியாகிவிடுவார்கள்.

அப்பா இறந்த பிறகு கிடைத்த வேலைக்குச் சென்று அந்த வீட்டையே சுமந்தாள். அம்மா, தம்பி , தங்கை என அவர்களுக்காக வாழ்வதே அவளுடைய வாழ்க்கையாகி விட்டது. அவள் தம்பி, தங்கைகளுக்கு அவளொரு சூப்பர் ஸ்டார்.

தங்கையைக் கல்லூரியில் சேர்க்க எத்தனை கடன் வாங்கினாள். எத்தனை இரவுகள் தூங்காமல் கணக்கு பார்த்தாள். ஆனால், ஒரு வருடம்கூட ஆகவில்லை.

ஒருநாள் காலை, காதலித்த பையனுடன் தங்கை சென்றுவிட்டாள்.

அந்த நாளுக்குப் பிறகு வீட்டில் யாரும் அவள் பெயரைக்கூடச் சொல்லவில்லை. ஆனால், தங்கைக்காக வாங்கிய கடன் மட்டும் இன்னும் அருணாவின் தோளில் இருந்தது. அதற்குப் பிறகும் அவள் நின்றுவிடவில்லை.

’தம்பியை நல்லா படிக்க வைக்கணும்.’ அதுதான் அவள் மூச்சைப் பிடித்துக் கொண்டு உழைக்கக் காரணம்.

தம்பிக்கு நல்ல சாப்பாடு வேண்டும் என்பதால், பல நாட்கள் அம்மாவும் மகளும் பழைய சோற்றைச் சாப்பிட்டு, புதிதாகச் சமைத்ததை அவனுக்கே வைத்தார்கள்.

அம்மா புடவையின் நிறமே மறந்துபோயிருந்தது. அவர்கள் கனவுகளை மட்டும் மங்க விடவில்லை.

வினித் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே, அவன் கல்லூரிச் செலவுக்காக அருணா சீட்டு கட்ட ஆரம்பித்தாள்.

மாதம் மாதம் பணம் சேரும்போது, அவள் மனதிலும் ஓர் எதிர்காலம் உருவானது.

’வினித்தை நல்ல காலேஜ்ல சேர்க்கணும்.. மீதம் கொஞ்சம் பணம் இருந்தா அம்மாவுக்கு இரண்டு நல்ல புடவை வாங்கணும்…’

எல்லாம் ஒரே நாளில் இடிந்துவிட்டது. சீட்டு நடத்தின பெண் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அந்தச் செய்தியைக் கேட்ட நொடியில், அருணாவுக்கு உயிரே போனது போலிருந்தது.

“இனி என்ன பண்ணுவேன்…?”

“இவ்வளவு பணம் நான் எங்க போய்ச் சம்பாதிப்பேன்?”

“என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்குற வினித்தை எப்படி நேர்ல பார்க்குறது?”

அந்தக் கேள்விகள் எல்லாம் சேர்ந்து அவளை மூச்சுத்திணறச் செய்தன. இனி எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். அமைதியாகக் கடலுக்குள் நடந்து போய்விட்டால்… எல்லாம் முடிந்துவிடும்.

அந்த எண்ணத்தோடு எழுந்து, கடலை நோக்கி நடந்தாள். அலைகள் வந்து அவள் கால்களைத் தொட்டு மீண்டும் திரும்பின.

அது அவளை அழைப்பதுபோலவும் தடுப்பதுபோலவும் தோன்றியது.

சில அடிகள் நடந்தவுடன் திடீரென நின்றாள்.

“அம்மா மருந்து சாப்பிட்டாரா?”

அந்த எண்ணம் உள்ளத்தைக் கிழித்தது. தான் இல்லாமல் போனால் அந்த அம்மா எப்படித் தாங்குவார்?

அவள் தடுமாறி நின்றாள், எந்தப் பக்கம் போவதென்கிற தடுமாற்றம். அப்போதுதான் அவள் கண்களில் பட்டார் அந்த முதியவர்.

ஒரு கையில் கட்டை. மற்றொரு கையில் சுண்டல் டப்பா. சுண்டல் விற்றுக்கொண்டிருந்தார்.

ஏதோ சாகும் முன் ஒரு நல்ல காரியம் செய்துவிடலாம் என்று நினைத்து அவரிடம் சென்றாள்.  “ தாத்தா… ஒரு சுண்டல்.”

“தரேன்மா… முறுக்கு, வேர்க்கடலைகூட இருக்கு… வேணுமா?”

“வேணாம் தாத்தா… சுண்டல் மட்டும் போதும்.”

சில நொடிகள் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவள்,  “இந்த வயசுல… இவ்வளவு கஷ்டப்படுறீங்களே தாத்தா…”

முதியவர் சிரித்தார், “இதுல என்னம்மா கஷ்டம்? காலு போயிடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு உட்கார்ந்தா வாழ்க்கையே போயிடும். நாம இன்னும் இருக்கோமேன்னு நினைச்சா… மனசுல தானா பலம் வரும்.”

அவர் சாதாரணமாக சொன்ன அந்த வார்த்தைகள், அருணாவின் உள்ளத்தில் உடைந்திருந்த இடத்தில் விழுந்தது.

மனதில் தேங்கியிருந்த இருள் மெதுவாக விலக ஆரம்பித்தது.

ஆமாம். உயிரோடு இருப்பதற்கே ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது முடியும்வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

அவள் எவ்வளவு பெரிய தவறு செய்யப் போனாள்? சூப்பர் அக்காவாக இருக்க முடியாமல் போனால் போகட்டும். சாதாரண அக்காவாக முடிந்ததைச் செய்வதே போதாதா?

கலங்கிய கண்களுடன், “தாத்தா…” என்று தொடங்கியவளுக்கு வார்த்தை வரவில்லை. “தேங்க்ஸ்…”

“பெருசா என்னம்மா சொல்லிட்டேன்” என்று சிரித்தார் அவர்.  

அருணா நீண்ட மூச்சு விட்டாள்.

கடலை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். சில நிமிடங்களுக்கு முன் அதே கடல் அவளை அழைத்ததுபோலத் தோன்றியது. இப்போது அதே அலைகள், ‘மறுபடியும் ஆரம்பிக்கலாம்..” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்லும் போலிருந்தது.

ஒரு வழியாகத் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள்.

அம்மாவையும் வினித்தையும் உட்கார வைத்து, சீட்டுப் பணம் ஏமாந்ததைச் சொன்னாள்.

வினித்தின் முகம் இருண்டது, “அக்கா…” அவன் குரல் நடுங்கியது.

காலை கனவால் பிரகாசித்த அந்த முகம், இப்போது அழுகையால் கரைந்தது. அதைப் பார்த்த அருணாவும் உடைந்து அழுதாள். ஆனால் சில நொடிகளில் வினித் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

“அக்கா… நீ அழாத. நாம மறுபடியும் பணம் சேர்ப்போம். நானும் வேலைக்குப் போறேன். சாயந்திரம் ட்யூஷன் எடுக்குறேன். அடுத்த வருஷம் காலேஜ் போகலாம்.”

அருணா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். “நிஜமாவா சொல்றே? நான் ரொம்ப பயந்தேன்டா… உன் நம்பிக்கையையே நான் உடைச்சுட்டேன்னு…”

வினித் அவள் கையை அழுத்தமாகப் பிடித்தான், “ஒரு விஷயம் தப்பா போச்சுன்னா உம்மேல வச்ச நம்பிக்கை போயிடுமா ? என்னக்கா நீ…”

அந்த நொடியில் அருணாவின் உள்ளத்தில் அமைதி நிரம்பியது.

ஆம். எல்லாம் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். அதுவே மீண்டும் ஆரம்பிக்கப் போதுமான காரணம்.

வாழ்க்கை அவளிடமிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் தொடங்கும் தைரியத்தை மட்டும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

வெளியில் இருள் முழுவதும் இறங்கவில்லை. ஆனால், அவள் உள்ளத்தில், நம்பிக்கை சிறு வெளிச்சமாக மீண்டும் எரிய ஆரம்பித்தது.

அடுத்த வருடம் தம்பியைக் கல்லூரியில் சேர்ப்பாள் என்கிற நம்பிக்கையோடு… அவளிடம் இருந்து நாமும் விடைபெறுவோம். இந்த முறை அவள் தனியாக அல்ல, குடும்பமாகவே சேர்ந்து சுமக்கப் போகிறது.

என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.