அறைக்குள் சோர்ந்து படுத்திருந்தாள் திரெளபதி. ஏனோ காலையில் இருந்தே துர் சகுனங்கள் தென்பட்டன. மனமும் சரியில்லை. மாதவிலக்காக வேறு இருக்கிறாள். குளித்து முடித்து ஒற்றையாடையை முழங்கால் வரை இடுப்பில் சுற்றி மீதமிருந்த ஆடையால் மார்பை மூடிக்கொண்டு அந்தச் சிறிய கட்டிலில் படுத்திருந்தாள் அவள்.

சேடிப் பெண்கள் அவளது ஈரக் கூந்தலைக் காயவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அகன்ற கிண்ணத்தில் எரிதழலை நிரப்பி எடுத்து வைத்தாள் ஒருத்தி. இன்னொரு பெண் குங்கிலியத்துடன் சிறிய அகிற்துண்டுகளையும் அதில் இட்டாள். நறுமணப்புகை கமழத் தொடங்கியது. இரண்டு பேர் திரவுபதியின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அவளது கரிய மேகம் போன்ற கூந்தலில் விரல்களால் அளைந்து புகையை ஏற்றினர். கூந்தலின் ஈரம் காயத் தொங்கியது.

தோழி ஒருத்தி வந்து நின்றாள். பணிவுடன் வணங்கி “பேரரசி… தங்களைக் காண துரியோதன மகாராஜாவின் தேரோட்டி பிரதிகாமி வந்திருக்கிறார்” என்றாள்.

திரௌபதி தலையசைத்து வரச்சொன்னதும் அந்த நிமிடத்தின் இறுதியில் வந்து வணங்கி நின்றான் பிரதிகாமி.

“என்ன காரியம்?” கூந்தலில் வலது கை விரல்களால் மயிரிழைகளை அளைந்து கொண்டே  கேட்டாள்.

“பேரரசி அவர்களே… நமது மகாராஜர் தருமராஜன்…” தரையைப் பார்த்துக் கொண்டே தயங்கினான் பிரதிகாமி.

“ம்… விரைவாகச் சொல்.” 

அவன் தனது உலர்ந்த உதடுகளை நாவால் நீவிக் கொண்டு, “வந்து… அதாவது… தர்மராஜா மன்னர் துரியோதனருடன் பகடை விளையாடி, தான் உட்பட, தனது தம்பிமார்கள், உடமைகள் எல்லாவற்றையும் பணயமாக வைத்திழந்தார். தங்களையும்…”‌ எச்சில் விழுங்கிக் கொண்டு, “தங்களையும் பணயமாக வைத்துத் தோற்றுவிட்டார். தங்களை அரசவைக்கு அழைக்கிறார்கள் அரசியாரே” என்று சொல்லி முடித்தான்.

அந்த அறைக்குள் இருந்தவர்கள் அனைவரும் அப்படியே உறைந்து போனார்கள். திரௌபதிக்குள் கனல் மூண்டது.

“பிரதிகாமி…” பலத்த சப்தத்துடன் கூப்பிட்டாள். “என் கேள்விக்குப் பதில் சொல். முன்னரே என்னைப் பணயமாக்கினாரா? அல்லது தன்னை இழந்த பின்னர் என்னைப் பணயம் வைத்தாரா?” பிரதிகாமி மௌனம் காத்தான்.

பதில் வராமல் போகவே ஆவேசமடைந்தாள். அவனை எரித்து விடுவதுபோல் பார்த்ததும் பிரதிகாமி வணங்கிக் கொண்டே நகர்ந்தான்.

தோழிமார்கள் அவசரமாக அவளது காய்ந்த கூந்தலை வாரி அள்ளி முடிந்துவிட்டனர்.

பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

சிறிது நேரம் கழித்து துச்சாதனன் உள்ளே வரும் அரவம் கேட்டது.

சேடி ஒருத்தி ஓடிவந்து,”பேரரசியார் ஓய்வில் இருக்கிறார். ஆண்கள் இங்கே வரலாகாது” என்று நயமாகச் சொன்னதும் துச்சாதனன் பலமாகச் சிரித்தான்.

“பேரரசியா? யார் இவளா? இப்போதிருந்து இவள் எங்கள் பணிப்பெண்” என்று அவளை அலட்சியமாக விலக்கிவிட்டு உள்ளே முன்னேறினான்.

திரௌபதியைச் சுற்றி சேடியர் வளைத்து நின்றுகொண்டனர். துச்சாதனன் அவர்களை அலட்சியமாக இடது கையால் தள்ளி விட்டு, திரௌபதியை நெருங்கினான்.

“நில் அங்கேயே…” என்று கையை உயர்த்தி ஆணையிட்டாள் திரௌபதி. “துச்சாதனா… இது என்ன முறையற்ற செயல்?” ஆவேசமாகக் கேட்டாள்.

“உன் கணவன்… இல்லையில்லை… உன் கணவர்களில் ஒருவனான தருமன் உன்னை வைத்து சூதாடித் தோற்று விட்டான். இனி நீ எங்கள் அடிமை. எங்கள் சொற்படி நடப்பது உன் கடமை. வா அரசவைக்கு… துரியோதனன் இப்பொழுதே உன்னைப் பார்க்க வேண்டுமாம்” என்று எக்காளமிட்டடவாறு அவளது கூந்தலைப் பற்றி இழுத்தான்.

சேடியரும் திரௌபதியும் கதறக் கதற அவளை இழுத்தவாறே நடக்கத் தொடங்கினான்.

“துச்சாதனா…நான் மாதவிலக்காயிருக்கிறேன். ஒற்றையாடை மாத்திரமே தரித்திருக்கிறேன். விடு என்னை” என அவன் கையை உதற முயன்று தோற்றாள்.

அவன் எதையும் காதில் வாங்காமல் அவளை இழுத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தான்.

திரௌபதி கால் இடறிக் கீழே விழுந்தாள். அப்போதும் அவன் பிடியை விடவில்லை. அவளது வட்ட முகத்தில் வியர்வையும் தாமரை இலை போன்ற அழகிய கண்களிலிருந்து கண்ணீரும் கலந்து வழிந்தது. 

துச்சாதனன் அவளது அடர்ந்த கூந்தலைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துப் போய் நடுச் சபையில் தள்ளினான். தடுமாறி வீழ்ந்தாள் அவள். மெல்ல எழுந்து நின்றாள். அவளது முகம் அவமானத்தில் சிவந்திருந்தது. தலைமுடி வியர்வையில் பிரிபிரியாகத் தொங்கியது. 

அரசவையில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

துரியோதனன் கண்களில் ஆசை பொங்க அவளைப் பார்த்தான். சகுனி நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தான். கர்ணனின் முகபாவனையிலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை. பீஷ்மர் தலை தாழ்ந்து அமர்ந்திருந்தார். விதுரரும் துரோணாச்சாரியாரும் அப்படியே.

பாண்டவர்களை நோக்கினாள். அவளது கண்களில் கனல் தெறித்தது.

“இங்கு கூடியிருக்கும் அனைவரும் சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்கள். பெரியவர்கள், குருக்கள் மற்றும் கற்றறிந்த ஆன்றோர் பெருமக்கள், வீரர்கள், என் கணவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் இப்போது அனைவரும் ஆண்களாக மட்டுமே இருக்கிறார்கள்” என்ற திரெளபதியின் குரலில் வெறுப்பு தொனித்தது.

துரியோதனன் எழுந்தான்.

“அடிமைகளுக்கும் தாசிகளுக்கும் பேச்சுரிமை கிடையாது திரௌபதி. தருமன் உன்னைப் பணயமாக வைத்துத் தோற்றான். இனி நீ எங்கள் அனைவருக்கும் தாசி” என்று எக்காளமிட்டான்.

விதுரர் கண்களில் இருந்து நீர்த்துளிகள் இரண்டு தரையில் சிதறின.

அவள் தருமனைப் பார்த்தாள். “முதலில் என்னைப் பணயமாக்கினீரா? அல்லது நீர் தோற்ற பின்னரா?” உறுமினாள்.

துரியோதனன் உரத்துச் சிரித்தான்.

“இதிலென்ன குழப்பம் உனக்கு? தருமன் முதலில் தனது உடைமைகளை எல்லாம் வைத்துச் சூதாடினான். பின்னர் தன்னை வைத்தும், தனது சகோதரர்களை வைத்தும் இழந்தான். உன்னை வைத்து ஆடினால் இழந்த அத்தனையையும் நான் திருப்பித் தருவதாகச் சொன்னதும் உன்னையும் வைத்து இழந்தான்” என்றான்.

“ஓ தருமரே… உமது உடமைகளும், ஆடு, மாடுகளும், ரத்தமும், சதையுமாக உணர்வுள்ள நானும் ஒன்றென்று எதை வைத்து முடிவு செய்தீர்? உமது மனைவி என்பதாலேயே என்னையும் பொருளாகக் கருதிவிட்டீரா? முதலில் உம்மை வைத்து சூதாடித் தோற்றதும் என்னை வைக்கும் உரிமையையும் சேர்ந்திழந்தீர் என்று தெரியாதா? நீர் முதலில் அடிமை. என்னைப் பணயம் வைக்க உமக்கேது அதிகாரம்?” என்று சீறினாள்.

தருமன் தலை கவிழ்ந்து நின்றிருந்தான். 

பீஷ்மரை நோக்கினாள். “கங்கை மைந்தரே! சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவர் நீங்கள். ஒரு பெண் கதறி அழுதபடி நீதியை வேண்டுகிறாள். இங்கே கூடியிருக்கும் மன்னர்கள் மௌனமாக இருக்கலாம், ஆனால் தருமத்தின் தூணாக இருக்கும் நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை?” என்று வினவினாள்.

“தருமத்தின் நுட்பம் மிகவும் தந்திரமானது. ஒருவன் தன்னைத் தோற்ற பிறகு மற்றவரைப் பந்தயம் வைக்க முடியாது என்பது ஒரு நீதி. ஆனால், கணவன் என்பவன் மனைவியைத் தோற்கலாம் என்பது மற்றொரு நீதி. மனைவியும் கணவனின் உடைமைப் பொருட்களில் ஒன்றுதானே? எனவே, எது சரி என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை…”அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. உதடுகள் காய்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டன.

“காலத்தின் சக்கரம் சுழல்கிறது. எது அறம், எது மறம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் கையில் சிக்கியுள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, எங்கே ஒரு பெண்ணின் கண்ணீர் விழுகிறதோ, அங்கே அந்தக் குலமே அழியும்.” கம்மிய குரலில் சொன்னார்.

“செஞ்சோற்றுக் கடன்பட்டது கர்ணன் மட்டுமல்ல மகளே!” அவரது குரல் தழுதழுத்தது.

“அறம், பொருள், இன்பம் அனைத்தையும் அறிந்த பெரியோர்கள் நிறைந்த இந்தச் சபையில், ஒரு பெண்ணுக்கு நடக்கும் இந்த அநீதி தருமம்தானா? வலிமை மிக்கவர்கள் செய்யும் செயலே தருமம் என்று ஆகிவிட்டதா? அல்லது மெய்யான தருமம் என்று ஒன்று இருக்கிறதா?” சுற்றிச் சுற்றி வந்து கேட்டாள்.

அர்ச்சுனனைப் பார்த்து, ” காண்டீபரே! உமது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டுமா பேசாமல் இருக்கிறீர்? மனையாளின் மானத்தைவிட தமையனின் தருமம் அவ்வளவு உயர்ந்ததுவிட்டதோ?” இதழோரம் எக்காளப் புன்னகை தெரிந்தது.

பீமனையும் நகுல சகாதேவர்களையும் பார்த்தாள். எல்லாரும் தலைகவிழ்ந்து கிடந்தனர். 

“அதுசரி, பரிசு என்னவென்று பார்க்காமல் ஐவரும் பொருளைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னவரின் மகன்கள் அல்லவா? அதுதான் என்னைப் பொருளாகக் கருதி அமைதி காக்கிறீர்கள் போல…” அவளை இடைமறித்தது விகர்ணனின் குரல்.

“தருமபுத்திரர் தன்னைத் தோற்ற பிறகு, அவருக்குத் திரௌபதியைத் தோற்கும் அதிகாரம் இல்லை. ஒரு அடிமைக்கு எதன் மீதும் உரிமை கிடையாது.” சபை ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தது. 

“திரௌபதி அனைவருக்கும் உடைமையானவள். ஒருவர் மட்டுமே அவளைத் தனிப்பட்ட முறையில் பணயம் வைக்க இயலாது. மேலும் இந்தச் சூதாட்டம் எமது மாமா சகுனியின் தூண்டுதலால் நடைபெற்றது. அவர் தாயக்கட்டைகள் மந்திர உருவேற்றப்பட்டவை. இந்த விளையாட்டில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது” என்று விகர்ணன் மூச்சு வாங்க இரைந்தான்.

கர்ணன் எழுந்தான். ” அடேய் விகர்ணா, உனக்கு அறிவேதும் மழுங்கி விட்டதா? பெரியோர் சபையில் அறியாச் சிறுவனான உன்னைப் பேசச் சொன்னது யார்? பேசாமல் உட்கார்ந்து நடப்பதைக் கவனி”  என்று அதட்டினான்.

“இந்த அக்கிரமத்தைக் காணச் சகிக்கவில்லை. அதர்மம் கோலோச்சும் இந்த இடத்தில் இருப்பது எனக்கு தர்மமல்ல. நீங்குகிறேன்” என்று விகர்ணன் மேலாடையை உதறிவிட்டு வேகமாக நடந்தான்.

துரியோதனன் திரௌபதியைப் பார்த்துச் சிரித்தான். தனது வலது தொடையைத் தட்டிவிட்டு, “வா பாஞ்சாலி! இங்கே வந்து உட்கார். மன்னனின் ஆணைக்கு இணங்குவது அடிமையின் வேலை”  என்று உத்தரவிட்டான்.

பாண்டவர்களின் முகம் இறுகியது. பீமன் கதையை வலுவாகப் பற்றினான். 

“அனைத்து சாத்திரங்களும் அறிந்த பெரியோர் நிறைந்த இந்த அவையில் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதுதான் உங்கள் தர்மமா? இதுதான் நீங்கள் கற்ற கல்வியா? அநீதி இழைப்பவர்கள் மாத்திரம் அல்ல. அதற்கு எதிராகக் குரல் கொடுக்காதவர்களும் குற்றவாளிகளே. அதிகாரத்தில் இருப்பதாலேயே ஒருவன் எந்தவித அநியாயமும் செய்யலாம் என்பதா தருமம்? அவ்வளவு வலுவற்றதா அது? பெண்ணின் மானத்தைவிட சூதாட்ட விதிகள் பெரிதா? தனிமனித கௌரவத்தைவிட உங்கள் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மேலானவையா?” அவளது கேள்விகள் அங்கிருந்தவர்களின் இதயத்தைப் பலமாகத் தாக்கின.

கர்ணன் எழுந்து,”திரௌபதி.. இப்போது உன் கணவர்கள் அடிமைகளானதால், உன்னைக் காக்கும் பொருட்டு கௌரவர்களில் எவரையேனும் கணவனாக வரித்துக்கொள்ளேன். ஐவரை மணந்த உனக்கு இது புதிதில்லையே. நீயும் ஒருவிதத்தில் விலைமகள்தானே?” என்றான் இகழ்ச்சியாக.

திரௌபதி அதிர்ந்தாள். துரோணர் கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

கர்ணன் நண்பன் துரியோதனனைப் பார்த்து, “அடிமைகள் மேலாடை தரிப்பது நமது நாட்டில் வழக்கமில்லையே துரியா. அவர்களது ஆபரணங்களுடன் மேலாடைகளையும் களையச் சொல்” என்றான்.

துரியோதனன் ஆணையிட்டதும் பாண்டவர்கள் தங்கள் ஆபரணங்களையும் மேல் உத்தரீயத்தையும் களைந்தனர்.

கர்ணன் மீண்டும் எழுந்து,” இது தாசி திரௌபதிக்கும் பொருந்தும்” என்றான். 

அவை அதிர்ச்சியின் உச்சத்துக்குப் போனது.

துரியோதனன் மீண்டும் சிரித்தான். தம்பியைப் பார்த்து,”அந்த அடிமையின் ஆடையை அவிழ்த்து எறி” என்று கட்டளையிட்டான்.

அஸ்தினாபுரத்தின் அரசவை ஒரு மயான அமைதியில் உறைந்திருந்தது. தர்மத்தின் காவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தலைகுனிந்து அமர்ந்திருக்க, துச்சாதனன் எழுந்து சென்று  வெறிகொண்ட நிலையில் திரௌபதியின் துகிலைப் பற்றினான்.

சபை முழுவதும் ஒரு பெண்ணின் கதறலை எதிர்பார்த்துக் காத்திருந்தது. துச்சாதனனின் கைகளில் வலம்வந்த ஆடையின் நுனி, அவள் மானத்தைக் காற்றில் பறக்கவிடும் என்று அவையில் இருந்த ஆண்கள் மனக்கணக்குப் போட்டனர். பீஷ்மர் தர்மத்தை எண்ணித் தவித்தார், விதுரர் நீதியை எண்ணி வருந்தினார். துரோணர் அறத்தை நினைத்துக் கலங்கினார். ஆனால் ஒருவரும் அந்த அநீதியைத் தடுக்க எழவில்லை. சகுனி இகழ்ச்சிப் புன்னகையுடன் இருந்தான்.

திரௌபதி மெல்லச் சிரித்தாள். அது துயரத்தின் சிரிப்பல்ல, இந்த உலகின் போலித்தனத்தைக் கண்டு எழுந்த எள்ளல் சிரிப்பு. ஆணாதிக்கத்தை எதிர்க்கத் துணிந்த எக்காளச் சிரிப்பு.

“நிறுத்து!” அவள் குரல் இடியாக முழங்கியது. 

துச்சாதனன் திடுக்கிட்டுப் பின்வாங்கினான்.

“நீ என் ஆடைகளை உருவி என்னை அவமானப்படுத்த எண்ணுகிறாய் துச்சாதனா. ஆனால், இந்த ஆடைதானா என் மானம்? இந்தச் சதையும் ரத்தமும்தான் உங்கள் வீரத்தின் எல்லையா?” என்று கேட்டாள்.

அவள் கண்கள் கண்ணனைத் தேடவில்லை. அவள் கைகள் ‘காப்பாற்று’ என்று மேலே எழவில்லை. மாறாக, அவள் தன் மேலாடையின் முடிச்சைத் தானே தளர்த்தினாள்.

அவை அதிர்ந்தது. “திரௌபதி, என்ன செய்கிறாய்?” என்று தர்மர் அலறினார்.

“தர்மரே, உங்கள் சூதாட்டத்தில் நான் ஒரு பொருளாகத் தோற்றுப் போனேன். இப்போது இந்தப் பொருளைப் பிரித்துப் பார்க்கத் துடிக்கும் இந்த ஆண்களுக்கு, நான் எதைப் பாதுகாக்கப் போராடுகிறேன் என்பதுதான் புரியவில்லை. என் மானம் என்பது என் ஆடையிலோ அல்லது என் உடலிலோ இல்லை. அது என் ஆன்மாவில் இருக்கிறது. அதை உங்களால் தொடக்கூட முடியாது.”

அவள் தன் சேலையின் முதல் சுருளைத் தானே அவிழ்த்துத் தரைக்குத் தள்ளினாள்.

“இந்தத் துணி வேண்டுமா உனக்கு? எடுத்துக்கொள். இது வெறும் நூல் இழைதான். உன் ஆணாதிக்க வெறிக்குத் தீனி போட இந்தத் துணி போதுமென்றால், இதை நானே தருகிறேன். ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளைத் தொடுவதைவிட, அவளே தன் ஆடைகளைக் களைந்து உங்களைப் போன்ற கோழைகளின் முகத்தில் எறிவது பெரிய அவமானம்!”

ஒவ்வொரு சுற்றாகச் சேலை கீழே விழுந்தது. அவளுடைய கம்பீரமும் ஆக்ரோஷமும் பெருகிக்கொண்டே போனது.

அவள் நிர்வாணமாக நின்றாள். ஒரு பெரும் நெருப்பாக நின்றாள். ஊழிப் பேரிரைச்சலாக நின்றாள். ஆழிப்பேரலையாக நின்றாள். பிரளயமாகப் பொங்கினாள். அவளுடைய அந்தத் துணிச்சல், அங்கிருந்த ஆண்களின் பார்வையைத் தரைநோக்கித் தள்ளியது. 

எவன் அவளை இச்சையுடன் பார்க்க நினைத்தானோ, அவன் கண்கள் கூசின. ஆண்கள் எவரும் தலை நிமிர்த்தவில்லை.

“பாருங்கள்!” என்று கத்தினாள் திரௌபதி. “பெண்ணின் உடலை ஆயுதமாகப் பயன்படுத்தி அவளை ஒடுக்க நினைக்கும் மூடர்களே, பெண்ணை வெறும் உடைமையாக, பொருளாகக் கருதும் உங்கள் தருமத்தை நான் மதிக்கவில்லை. இதோ என் உடல். இதில் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் என்று ஒவ்வொரு பெண்ணின் உடலும் இப்படித்தானே இருக்கிறது? நாகரிகம் தோன்றும் வரை ஆதிமனிதி ஆடையின்றித்தானே வாழ்ந்தாள்? புனிதத்தைப் பெண்ணின் உடலில் மட்டும் ஏற்றி வைக்காதீர்கள்.  ஒரு பெண்ணின் மானம் அவளது ஆடையின் நீளத்தில் இருப்பதாக நீங்களாகவே கற்பித்துக் கொண்டீர்கள். இன்று அந்த மாயையை நானே உடைக்கிறேன்.”

கடைசி இழை ஆடை நழுவியபோது, சபையில் இருந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டனர். ஒரு பெண்ணின் முழுமையான சுதந்திரத்தையும், துணிச்சலையும், நிர்வாணத்தையும் தாங்கும் சக்தி அந்த அவைக்கில்லை.

அவிழ்ந்து கிடந்த துணி இப்போது வெறும் குப்பையாகத் தெரிந்தது. திரௌபதி அங்கே நிர்வாணமாகத் தெரியவில்லை; அந்தச் சபையின் அநீதியைத் தோலுரித்துக் காட்டும் சாட்சியாக நின்றாள். அவளது கரிய அடர் கூந்தல் மேனியை முன்பின்னாகப் போர்த்தியிருந்தது.

அவள் அன்று ஆடைகளை அவிழ்க்கவில்லை; பல நூற்றாண்டுகளாகப் பெண்களின் மீது போர்த்தப்பட்டிருந்த அடிமைத்தனத்தின் போர்வையை அறுத்தெறிந்தாள். 

அவளது தொடைகள் வழியாகப் பெருகிய குருதியில் அஸ்தினாபுரத்தின் அஸ்தமனம் தெரிந்தது.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.