“தன்பால் ஈர்ப்பாளர்களை அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தத் தகவல் மட்டும் வெளியில் தெரிந்துவிட்டால் பிறகு உன்னால் வேலை செய்யவே முடியாது. கல்வி கற்பிக்கவும் முடியாது. நீ உருவாக்கிய அந்த உன்னதமான இயந்திரம்… அதைப் பார்க்கவே முடியாதபடி செய்வார்கள்.”

ஆலன் டியூரிங்கை நோக்கி அவரது நண்பர் சொல்வதாக இமிட்டேஷன் கேம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று கருதப்படும் ஆலன் டியூரிங் இல்லாவிட்டால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்திருக்காது. குறியீடுகளாகத் தகவல் அனுப்பிக்கொண்டிருந்த எனிக்மா என்கிற ஜெர்மானிய இயந்திரத்தின் புதிர்களை விடுவித்து, அதன் செய்திகளை எப்படிப் படிப்பது என்கிற செயல்முறையை உருவாக்கியவர் ஆலன் டியூரிங். செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படை சோதனை ஒன்றையும் அவர் வடிவமைத்திருக்கிறார். இன்றுவரை அவரது சோதனை  ‘டியூரிங் சோதனை’ என்கிற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தன்பாலீர்ப்பாளர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர் வாழ்நாளில் அனுபவித்த வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. 1952இல் ‘ஆபாச செயல்கள்’ புரிந்ததற்காக அவர்மீது விசாரணை நடந்தது. அவரைச் சிறைவைக்கப் போவதாக மிரட்டினார்கள். அவரது தன்பாலீர்ப்பு வழக்கத்தை மாற்றுவதற்காக ‘மருந்து’ கொடுத்தார்கள். காவல்துறை மூலம் அவரைக் கண்காணித்தார்கள். அதை டியூரிங் விளக்குவதாகவும் படத்தில் ஒரு வசனம் வரும்.

“கிட்டத்தட்ட அது வேதியியல் முறையிலான காயடிப்பு போலத்தான். ஆம், என் ஹார்மோன்களை மாற்றுவதற்காக அதைச் செய்யப் போகிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. சிறைக்குள் இருந்துகொண்டு என்னால் வேலை செய்ய முடியாது, இல்லையா?” என்று அவர் வருத்தத்துடன் கூறுவார்.

டியூரிங்

இறுதியில் டியூரிங் தற்கொலை செய்துகொண்டார். அது தற்கொலையா, இல்லையா என்பதில் சில கேள்விகள் நிலவுகின்றன. எப்படிப்  பார்த்தாலும் அவரது தன்பாலீர்ப்பு அவருக்கு ஆபத்தானதாக முடிந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு நாட்டின் போர்க் காலத்தின்போது அத்தியாவசியப் பணியில் இருந்தால்கூட ஒருவரது பாலீர்ப்பு காரணமாக அந்த அரசாங்கமே அவரை மிரட்டியிருக்கிறது. இதுதான் பால்புதுமையினரின் நிதர்சனம். வெளியில் வந்து ஏழு நிறங்களில் ஜொலிக்க வேண்டிய பல் வானவில்கள் பட்டகத்துக்குள்ளேயே ஒளிந்துகொள்வதற்கு இந்தப் பாரபட்சம்தான் காரணம்.

மேக்னஸ் ஹிர்ஷ்ஃபீல்ட் என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மருத்துவர், பாலியல்சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்த விஞ்ஞானி, பால்புதுமையினருக்கான களப்போராளி. தன்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும் திருநர்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தவர். பாலியல் அறிவியலுக்கான ஆராய்ச்சிக்கழகத்தையும் நிறுவியிருக்கிறார். 1920ல் இவரது ஆய்வுக்கூடம் நாஜிகளால் அடித்து உடைக்கப்பட்டது. தன்பாலீர்ப்பு என்கிற பண்பு இருக்கவே கூடாது என்கிற நாஜி கோஷத்தின்முன் இவரது முயற்சிகள் தோற்றுப்போயின. அடிப்படைவாதிகளால் இவர் தொடர்ந்து தாக்கப்பட்டார்.

காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன்மூலம் குணப்படுத்தும் விகிதம் அதிகரிக்கும் என்கிற அறிவியல் உண்மையை நிறுவி, பலரைக் காப்பாற்றிய ஆராய்ச்சியாளர் அலன் ஹார்ட்.  பெண்ணாகப் பிறந்த இவர், 1917இல் கருப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்துகொண்டார். இவ்வாறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமெரிக்காவின் முதல் திருநம்பி இவர்தான். தனது வாழ்வை அடிப்படையாக வைத்து The Undaunted என்கிற ஒரு புனைவையும் இவர் எழுதியிருக்கிறார். ஆரம்பகாலத்தில் இவரது பால்பண்புகளால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளானார்.

ஃப்ராங்க் கெமேனி

அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞரான ஃப்ராங்க் கெமேனி ஒரு மிகப்பெரிய வல்லுநர். ஏவுகணை ஆராய்ச்சியில் முக்கியப் பங்களிப்புகள் செய்தவர். தொலைநோக்கிகளின் வடிவமைப்பிலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியவர். அமெரிக்க ராணுவத்துக்காக அவர் பணிசெய்துகொண்டிருந்தார். ஆனால் அவர் தன்பாலீர்ப்பாளர் என்று தெரிந்ததும் 1952 அவரைப் பணிநீக்கம் செய்தார்கள். அது மட்டுமல்ல, அவர் இனிமேல் அமெரிக்க அரசுப் பணிகளில் வேலை செய்யவே கூடாது என்று நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது. இத்தனைக்கும் அமெரிக்காவுக்கு அது மிகவும் நெருக்கடியான காலக்கட்டம். ஸ்புட்னிக் விண்கலத்தை ரஷ்யா வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருந்தது. அடுத்தது விண்வெளியில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருந்தது. ஆனால், அந்தச் சாதனையைவிடவும் ஒரு தனிநபரின் தனிப்பட்ட பாலீர்ப்பைக் கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் என்பதாக அமெரிக்க அரசு நடந்துகொண்டது.

லின் கான்வே

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி ஆராய்ச்சியாளரும் மின் பொறியாளருமான லின் கான்வே, ஐ.பி.எம் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு பெண்ணாக மாற விரும்பி, பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறார் என்று தெரிந்த உடனே அந்த நிறுவனம் அவரைப் பணிநீக்கம் செய்தது. இது நடந்தது 1968இல். எதற்கும் தளராத லின், அடுத்தடுத்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். மைக்ரோசிப் வடிவமைப்பில் பெரிய புரட்சிகளை ஏற்படுத்தினார். பல தசாப்தங்கள் கழித்து சாவகாசமாக 2010இல் தனது தவறுக்காக ஐ.பி.எம் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே, அதிலும் குறிப்பாக, பால்பண்போ பாலீர்ப்போ வெளியில் தெரிந்த பின்பு பாதிக்கப்பட்ட அறிவியலாளர்களின் உதாரணங்கள். பாலீர்ப்பை வெளியில் சொல்லவே முடியாமல் நிரந்தரமாக வேறு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள், பாலீர்ப்பு காரணமாகவே ஸ்டெம் துறையைத் தேர்ந்தெடுக்காதவர்கள் என்று பலர் இருந்திருக்கலாம்.

“அட, இவை எல்லாம் எப்போதோ நடந்தவைதானே” என்கிற அலட்சியத்துடன் நாம் கடந்துபோக முடியாது. இப்போதும் ஸ்டெம் துறைகளில் பால்புதுமையினர் மிகவும் குறைவு. பிரிட்டனில் இருக்கும் ஸ்டெம் துறைகளில் ஏற்கெனவே பங்களித்துக்கொண்டிருக்கும் 50% பேர் வெளியேற விரும்புவதாகவும், அவர்கள் தொடந்து பாரபட்சத்தை எதிர்கொள்வதாகவும் ஓர்  அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்டெம் துறைகளில் எவ்வளவு பால்புதுமையினர் இருக்கிறார்கள் என்கிற அடிப்படைத் தரவுகூட நம்மிடம் இல்லை.

பல பால்புதுமையினர், தங்களது பாலீர்ப்பு மற்றும் பால்பண்பு பற்றிய விவரங்கள் வெளியில் தெரிந்தால் பாதிப்பு வருமோ என்கிற பயத்தில், அதை வெளியிலேயே சொல்வதில்லை. வேறு சிலரோ, யாராவது எப்போதாவது இதைக் கண்டறிந்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே இருக்கிறார்கள். பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட விவரங்களைவிட, பால்பண்பு பற்றிய விவரங்கள் உடல்மொழியிலோ ஏதோ ஒருவிதத்திலோ வெளிப்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களின் நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் மிகவும் கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் சிலருக்கு இருக்கிறது.

ஆலன் ஹார்ட்

ஸ்டெம் துறைகளில் பால்புதுமையினருக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஆல்ஃப்ரெடோ காப்ரெட்டி,  ‘தன்பாலீர்ப்பாளர் போல நடந்துகொள்ளாதீர்கள் என்று தனது மேலாளர் சொன்னதாக ஒருவர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். தன்பாலீர்ப்பாளர் போல நடந்துகொள்வது என்றால் என்ன? இந்த மனநிலை எங்கிருந்து வருகிறது? என்று கேள்வி எழுப்புகிறார். “நல்ல அறிவியலாளர், நல்ல தொழில்நுட்பவியலாளர் என்பவர், எதிர்பாலீர்ப்பு கொண்ட வெள்ளை இன ஆணாக இருப்பார் என்கிற பொதுவான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது அபத்தமானது” என்கிறார்.

ஸ்டெம் துறைக்குள் வரும் பல பால்புதுமையினர், அங்கு நிலவும் மோசமான சூழலாலேயே வெளியேறிவிடுகிறார்கள் என்று ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. “ஸ்டெம் துறைகளில் பெண் வெறுப்பு மற்றும் பாலின ஏற்றத்தாழ்வு கொண்ட, எதிர்பாலீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்கிற ஒரு மனநிலை இருக்கிறது. பாலினம் சார்ந்த ஸ்டீரியோடைப்புக்குள் வருபவர்கள் மட்டுமே இதில் சமாளிக்க முடியும்” என்கிறார் ஆய்வு நடத்திய ப்ரைஸ் ஹ்யூஸ். ஸ்டெம் துறைகளில் நிலவும் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்துகிறார். ஸ்டெம் துறைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளாவது ஓரளவு பேசப்படுகின்றன. ஆனால், பால்புதுமையினர் இந்தத் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவெளிக்கே வருவதில்லை.

இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலை நிலவுகிறது. பல ஆய்வாளர்கள் இதை ஆராய்ந்திருக்கிறார்கள். “தனிப்பட்ட வாழ்வில் எனது பால்புதுமையையும், கல்விப்புலத்தில் எனது ஆராய்ச்சியையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது, இது மிகவும் கொடுமையானது” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஓர் இந்திய ஆண் விஞ்ஞானி. இந்தியா முழுவதிலும் உள்ள பால்புதுமை ஸ்டெம் பங்களிப்பாளர்களிடம் ஆய்வு நடத்தியதில், பால்புதுமையினராக இருப்பதாலேயே ஸ்டெம் துறையில் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று 38% பேர் சொல்லியிருக்கிறார்கள். தேவையற்ற, தவறான கமெண்ட்டுகள், நகைச்சுவை என்கிற பெயரில் காயப்படுத்துவது, தேவையற்ற ஆலோசனை ஆகியவற்றை தினசரி எதிர்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். “என்னைப் பற்றிய விவரம் வெளியில் தெரிந்துவிட்டால் எனக்குத் திறமை போதாது என்று நினைப்பார்களோ என்று பயப்படுகிறேன்” என்று ஒருவரும், “என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது, தெரிந்துவிடுமோ என்றும் தினம் தினம் பயப்படுகிறேன்” என்று வேறு ஒருவரும் சொல்கிறார்கள். “ஸ்டெம் துறைகளில் இருக்கும் பாடத்திட்டங்களே பால்புதுமையினருக்கு எதிரானவை. குறிப்பாகத் தன்பாலீர்ப்பை இவை ஒரு பிறழ்வாகப் பார்க்கின்றன” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களான அகாஷாவும் ப்ரித்விஷும். ஸ்டெம் துறையில் பால்புதுமையினராக இருப்பதால் ஏற்படும் மன உளைச்சலுக்குப் போதுமான உதவி கிடைப்பதில்லை, குறிப்பாக மனநல மருத்துவத்துக்குப் பணம் இல்லை என இந்திய ஸ்டெம் துறைகளில் இருக்கும் பால்புதுமையினரில் 53% பேர் சொல்லியிருக்கிறார்கள்.

விஞ்ஞானியான கே.பிட்டூ ஒரு திருநர். இவர் தனது பணியிடத்தில் திருநர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்குப் பல முயற்சிகள் எடுத்துவருகிறார். பிட்டூ, ஏ. மணி போன்ற திருநர்கள் இந்திய ஸ்டெம் துறைகளில் இருப்பது சில பல்கலைக்கழகங்களில் திருநர் வேலைவாய்ப்புக்கான பெரிய கதவைத் திறந்து வைத்திருக்கிறது.

உண்மையில் வேறு எந்தத் துறையையும்விட, ஸ்டெம் துறையில்தான் பால்புதுமையினரை ஏற்றுக்கொள்வதும் அங்கீகரிப்பதும் அதிகமாக இருக்க வேண்டும். பால்புதுப் பண்பு இயற்கையானது என்பதை அறிவியலாளார்கள்தான் உலகுக்கே எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. “பார்ப்பதற்குக் கலைந்த தலையுடன், வெவ்வேறு நிறங்களில் சாக்ஸ் அணிந்துகொண்டிருக்கிறார் என்று அவரை ஏதோபோல் நினைத்துவிடாதீர்கள். க்வாண்டம் இயற்பியலில் அவர்தான் உச்ச விஞ்ஞானி, அவரை நாம் கொண்டாட வேண்டும்” என்று புறத்தோற்றத்தைக்கூட வெளியில் தள்ளிவிட்டு ஆராய்ச்சியைக் கொண்டாடும் ஸ்டெம் துறை, ஒருவரது தனிப்பட்ட வாழ்வின் தேர்வுகளை வைத்து அவரை ஒதுக்குவது மிகப்பெரிய நகைமுரண்.

திருநர்களை சமூகம் ஓரளவு ஏற்கத் தொடங்கியிருக்கிறது, பால்புதுமையினரில் அவர்களுக்குக் வேலைவாய்ப்பு சாத்தியங்கள் சற்றே அதிகம் என்பது உண்மை. ஆனால், அவர்களது சான்றிதழ்கள்/பெயர் அடையாளங்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கவும் எல்லா வழிகளும் சரியாக இருந்தால் மட்டுமே அவை அனைவருக்கும் பயன்படும். பால்மாற்றத்துக்கு முன்பான தன்னுடைய பெயரையே பல்கலைக்கழகம் பயன்படுத்தியது எனவும், தனது பால்பண்பை அது அங்கீகரிக்கவில்லை எனவும் தனது ஆரம்பகட்ட ஸ்டெம் வாழ்வைப் பற்றி கே.பிட்டூ வருத்தத்துடன் கூறியிருக்கிறார். இன்னும் பல பல்கலைக்கழக வளாகங்களில் பாலின சார்பற்ற கழிப்பறைகள் இல்லை. அப்படியானால் ஒருவர் என்ன கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நிர்வாகம்தான் சொல்லும். இவையெல்லாம் ஒருவரை வேலைக்கே வரவிடாமல் தடுக்கும் அளவுக்கு மன உளைச்சல் தருகிற மிகப்பெரிய தர்ம சங்கடங்கள்.

தன்பாலீர்ப்பாளர்களின் பிரச்னை வேறுவிதமானது. அவர்களது பாலீர்ப்பு பற்றிய விவரங்கள் வெளியில் தெரிந்த பின்பு ஸ்டெம் துறை அவர்களை நடத்தும் விதமே வேறு. தன்பாலீர்ப்பு கொண்ட பெண்களைவிடவும் தன்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் சமூகத்தில் மிக மோசமான பாரபட்சத்துக்கு ஆளாகிறார்கள். இது ஸ்டெம் துறைக்குள்ளும் தொடர்கிறது. தன்பாலீர்ப்பு கொண்டவர் என்று தெரிய வந்ததாலேயே அடுத்த நாள் மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு ஸ்டெம் மாணவனை எனக்குத் தெரியும். அதே விடுதியில் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறை யாருடனாவது சண்டையிட்டு அடிதடியில் ஈடுபடுகிற இன்னொருவர் இருந்தார். அவருக்கு அடிக்கடி எச்சரிக்கையும் சஸ்பென்ஷனும் மட்டும்தான் கிடைக்கும். அவரை வெளியேற்ற வேண்டும் என்று நிர்வாகம் ஒருபோதும் நினைக்கவில்லை.

இத்தனைக்கும் மத்தியில் சில நம்பிக்கைகள் துளிர்விட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த இரண்டு முக்கியமான அறிவியல் மாநாடுகளில் பால்புதுமையினருக்கான சிறப்பு சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல ஸ்டெம் துறைகளில் பால்புதுமையினருக்கான உதவிக்குழுக்களை யாராவது முன்னெடுத்து ஏற்பாடு செய்கிறார்கள், நேரடியாக இல்லாவிட்டாலும் திறன்பேசி மூலமாகக் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் ஆதரவையாவது பல பால்புதுமையினர் இதன்மூலம் பெறுகிறார்கள். திருநர் பற்றிய பழைமைவாதக் கருத்துகளை மாற்றுவதற்காகப் பல மருத்துவதுறை செயற்பாட்டாளர்கள் குரல் கொடுக்கிறார்கள். பாடத்திட்டத்திலும் இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன. இவையெல்லாம் இப்போதுதான் வருகிறது என்று வருத்தப்படுவதைவிட, இப்போதாவது வருகிறதே என்ற ஆறுதலுடன் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியதுதான். கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கழகங்களில் பாலினச் சார்பற்ற கழிப்பறைகளை நிறுவுவது, வழமையான குடும்ப அமைப்புகளுக்குள் இல்லாத பால்புதுமையினருக்கான திட்டங்களைக் கொண்டு வருவது, நிதி ஒதுக்கீடு, பாரபட்சங்களுக்கு அப்பாற்பட்ட பணித்தேர்வு ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.

கருப்பை இருப்பவர்களுக்கே உரிய தனிப்பட்ட அம்சம் மாதவிடாய். அது ஸ்டெம் துறையில் இருப்பவர்களை பாதிக்கிறதா? எந்த வகையில் பாதிக்கிறது?

தொடரும்

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!