
டாக்டர் சாவித்திரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அருணா பிலிம்ஸ் தயாரித்து, ஆச்சார்யா எழுதிய கதைக்கு அவரும் இளங்கோவனும் இணைந்து உரையாடல் எழுதியிருக்கின்றனர். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார்.
ஜி. ராமநாதன் அவர்களின் இசையில் உடுமலை நாராயண கவியும், மருத காசியும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து மாயூரம் வேதநாயகம் அவர்கள் எழுதிய ‘நாயகர் பக்ஷமடி எனக்கது ஆயிரம் லக்ஷமடி’ என்ற பாடல் P. A. பெரியநாயகி, A. P. கோமளா இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. இதற்கு முன் மாயூரம் வேதநாயகம் பாடல் வேறு ஏதாவது திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.

மாயூரம் வேதநாயகம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் 11 அக்டோபர் 1826 அன்று பிறந்தவர். திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளர், மொழிபெயர்ப்பாளர், பின் தரங்கம்பாடி முனிசீஃப், மாயவரம் மாவட்ட முனிசீப், மாயவர நகர் மன்ற தலைவர் எனப் பல பணிகளிலிருந்தவர். 1876-78 பஞ்சத்தின்போது கஞ்சித் தொட்டிகள் வைத்தார். பாப்பரசர் மூலமாக ஐரோப்பிய நாட்டு உதவியையும் பெற்று உதவினார். இதனைப் போற்றும் விதமாகக் கோபால கிருஷ்ண பாரதியார் ‘நீயே புருஷ மேரு’ என்ற பாடலை எழுதினார் என்றால், அவரது பணியை நாம் அறிந்து கொள்ளலாம். .
தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் இவரே. 56 ஆண்டுகளுக்கான தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தார். இப்படி அவரது இலக்கியப்பணியும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. எழுத்துக்களில் பெண் விடுதலையை அப்போதே பேசியவர்.
நாயகர் பக்ஷமடி எனக்கது ஆயிரம் லக்ஷமடி
நீயறியாயே அவர் குணமானே
நாயறியுமோ ஒரு சந்திப்பானை
பர்த்தாவின் பக்ஷம் உள்ளாள் மகராசி
பர்த்தாவின் பக்ஷம் இல்லாள் பரதேசி
வித்தாரமாகத் திரவிய ராசி
மேன்மேலிருந்தும் பலனென்ன சீ சீ
ஏழையானாலும் எனக்கெஜமானே
என்றும் அடிமை அவருக்கு நானே
கூழை உண்டாலும் எனக்கது தேனே
கொண்டவர் இருக்கக் குறைவென்ன மானே
மாலை பொன்னோலைகள் வண்ண முத்தாரம்
மற்ற நகைகளெல்லாம் பெரும் பாரம்
சீலமும் கற்புமே தேக சிங்காரம்
திவ்ய மாணிக்கத்துக்கேன் அலங்காரம்
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் நானே
ஐயர் க்ருபை உண்டானால் அஞ்சேனே
பாயேர் பிடித்தவன் என்ன செய்வானே
பானை பிடித்தவள் பாக்கியம் தானே
அஞ்சலிதேவி, டி. ஏ. மதுரம், எம். என். ராஜம், செல்லம், எஸ். பாலசந்தர், M N நம்பியார், N S கிருஷ்ணன், P R பந்துலு நடித்துள்ளனர். மேலும் D பாலசுப்பிரமணியம், செருகளத்தூர் சாமா, எஸ். டி. ஆர். சந்திரன், ஜி. வி. சர்மா, ராமராஜ், அசோகன், சி. பி. கிட்டன், சேதுராமன், சோபராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வரும் சம்பவங்கள் பெயர்கள் யாவும் கற்பனையே என்ற குறிப்புடன் திரைப்படம் தொடங்குகிறது.
சாவித்திரி (அஞ்சலி தேவி) மருத்துவர். அவரது கணவர் சோமசுந்தரம் (பி. ஆர். பந்துலு) வங்கி அதிகாரி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி (நம்பியார்) வேலை தேடும் தம்பி; ஓய்வூதியம் பெரும் காவல்துறை அதிகாரி அப்பா; இது தான் அவரின் குடும்பம்.
நம்பியார் வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும் போது வனஜாவைச் (எம். என். ராஜம்) சந்திக்கிறார். வனஜாவிற்கு வேலை கிடைக்கிறது. ஆனால் பெற்றோரின் கையெழுத்து வேண்டும் என்கிறார்கள். வனஜா பெற்றோரை இழந்தவர், அவரது பாதுகாப்பாளர் வழக்கறிஞர் நாகலிங்கம். இவர், வனஜாவை மணந்து, சொத்துக்களை அடைய நினைக்கிறார். இதனால் அவரை விட்டு வெளியேறும் நோக்கில் தான், வனஜா வேலை தேடி வந்திருக்கிறார். அதனால் அவர் கையெழுத்துப் போடும் வாய்ப்பு இல்லை. நாகலிங்கம் இங்கும் வந்து, வனஜாவை காரில் ஏற்றிச் செல்கிறார்.
வனஜா, வீட்டில் அடைக்கப் படுகிறார். வீட்டு வேலைக்காரர் முனியனின் மனைவி பணம் கேட்டு வர, இவர்கள் சண்டையில் முனியன், வனஜா அறை வாசலில் கிடந்த பூட்டைக் கழற்றி மனைவி இருந்த அறையைப் பூட்டுகிறார். இதனால், வீட்டிலிருந்து வனஜா தப்பி விடுகிறார்.
வரும் வழியில் சாவித்திரியும் அவரின் கணவரும் சென்ற காரின் முன் விழுகிறார். இருவரும் அவருக்கு உதவ முயல்கிறார்கள். அங்கு நாகலிங்கம் வர, வனஜா பயப்படுகிறார். நாளை காலை உங்களிடம் கொண்டு ஒப்படைக்கிறேன் எனச் சொல்லி வனஜாவை அழைத்து வருகிறார்கள். வனஜா நாகலிங்கத்தின் மனைவி கும்பகோணத்தில் இருப்பதாகவும், அங்குக் கொண்டு போய்த் தன்னை விட்டால் போதும் என்கிறார்.
நாகலிங்கம் வீட்டிற்கு அனைவரும் வருகிறார்கள். சொத்து முழுவதையும் மாலைக்குள் ஒப்படைப்பதாகவும் அதைப் பெற்றுக் கொண்டு கும்பகோணத்தில் கொண்டு விடுங்கள் என நாகலிங்கம் சொல்ல அனைவரும் சம்மதிக்கிறார்கள்.
நாகலிங்கம் அவரே பணத்தைக் கொடுத்துவிட்டு, திருட்டு எனப் புகார் கொடுக்க, சோமசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, வனஜா மூவரும் காவல் நிலையம் கொண்டு செல்லப் படுகிறார்கள். இதில் காவல் அதிகாரியாக சிறு வேடத்தில் அசோகன் வருகிறார்.

இந்த வேளை நாகலிங்கம் கொல்லப்பட்ட செய்தி வருகிறது. கணவரும் தம்பியும் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.
சாவித்திரி, நாகலிங்கம் மனைவியை, நாகலிங்காலத்தின் உறவினர் எனச் சொல்லிப் பாட்டி வேடத்தில் போய்ச் சந்திக்கிறார். அங்கு மரகதம் என்பவர் மண்ணை வாரித் தூற்றிச் சென்றார் என்பது தெரிகிறது. நாகலிங்கம் மனைவி வீட்டில் இல்லை என்பதனால் சந்திக்க இயலவில்லை.
இந்தக் காலகட்டத்தில், முனியன் கையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டு, காற்றில் பறந்து அங்கும் இங்கும் சென்று இறுதியில் சாவித்திரியின் மருத்துவமனைக்குள் விழுகிறது. இருவரும் அறிமுகம் செய்துகொள்ளும்போது, அவருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தெரிகிறது. அதற்கு மனைவிக்கு மருத்துவம் செய்ய வீடு சென்றால், அவர்களுக்குத் தொடர்பில்லாமல், வீடு செழிப்பாக இருக்கிறது. வீட்டின் விலை ரூபாய் 3,000. அவர்கள் நாகலிங்கத்திடம் வேலை செய்தவர்கள் என சாவித்திற்குத் தெரியவருகிறது. இவர் வேலையிலிருந்து வெளிவந்த அன்று தான் நாகலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நாகலிங்கத்தின் நண்பர்கள் உறவினர்கள் யார் என குடும்ப நண்பரான ஒரு காவலர் மூலம் அறியச் சாவித்திரியும் அவரது அப்பாவும் முயல்கிறார்கள். முனியன் ஒரு மருத்துவருடன் (எஸ். பாலசந்தர்) தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. இதனால், சாவித்திரி, மருத்துவரின் உதவியாளராக வேலையில் சேருகிறார். மருத்துவரின் வீட்டில் ஒரு புகைப்படம் இருக்கிறது. அதில் மரகதம் மற்றும் ஒருவர் இருக்கின்றார். அவர், இதே மருத்துவர் போல ஆனால் தாடி மீசையில்லாமல் இருக்கிறார்.

மருத்துவர், இப்போதும் ஏழைகளுக்கு உதவுபவராகவே இருக்கிறார். அதனால் சாவித்திரி சில கேள்விகள் கேட்கிறார். மருத்துவர் உண்மையை ஒப்புக் கொள்கிறார். மரகதம் இவரின் காதலி. மரகதத்தின் அப்பா நாகலிங்கத்தை அணுகுகிறார். நாகலிங்கத்தினால் மருத்துவர், சிறை அனுப்பப் படுகிறார். திரும்பி வந்தால், மரகதத்திற்குத் திருமணம் முடிந்துவிட்டது. இவரது மருத்துவர் உரிமம் பறிபோய்விட்டது. இதனால் இவர் சென்னை வந்து, வேறு வேடத்தில் மருத்துவராக பணிபுரிகிறார்.
இப்போது இங்கே வந்து தன் வேலையைத் தொடரும் நாகலிங்கம் மருத்துவரைப் பார்த்துப் பணம் பிடுங்குகிறார். வனஜாவிற்கு உளநலம் சரியில்லை என சான்றிதழ் கொடுக்கிறார். ஒரு காலகட்டத்தில் அதைத் திரும்பப் பெற முயலுகிறார். அதில் ஏற்பட்ட சிக்கலில் இவர் கொலை செய்ய வேண்டி நேருகிறது. அது தெரிந்த முனியன் வாயை அடைக்க அவருக்கு இவர் பணம் கொடுத்திருக்கிறார். உண்மை வெளிவந்ததால், சாவித்திரியின் கணவர் மீண்டு வருகிறார்.
வின்சென்ட் (சோடா?) என பெட்டிக்கடையில் பெயர் இருக்கிறது. சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற வின்சென்ட் சாமிக்கண்ணு அவர்களின் பெயரா எனத் தெரியவில்லை. அவரும் சோடா நிறுவனம் வைத்திருந்திருக்கிறார்.

N.S.கிருஷ்ணன், மதுரம் இருவரின் பாத்திரமும், பெரிய அறிவாளி எனக் காட்டப்படவில்லை. அவர்கள் இருவருக்கும் அறிவியல் கருத்துக்கள் கொண்ட பாடலைக் கொடுத்திருப்பது வலிந்து திணித்திருப்பது போன்றே தோன்றியது. அவர் தான் காசிக்குப் போவதற்குத் தான் அந்த ஆயிரம் ரூபாயை வைத்திருப்பதாகச் சொல்கிறார். அவரே தான், “காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற காலம் மாறிப்போச்சு” எனப் பாடுகிறார். அது அவரது தனிப்பட்ட கொள்கைப் பாடல் என்று தான் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

நாயகி என இருக்கும் சாவித்திரி பாத்திரம் கொஞ்சம் பிற்போக்குத்தனம் கொண்டதாக இருக்கிறது. “கணவன் தெய்வத்தை விட மேலானவன்” குழந்தை இல்லாத முனியனிடம் ‘மருந்து உனக்கில்லை உன் பொஞ்சாதிக்கு’ என சொல்வதாகட்டும் முரண்பட்ட படிப்பாகவே அவரது கல்வி இருக்கிறது போலத் தோன்றியது. ஆனாலும் ஒரு பெண்ணால் ஆணைத் தனது மதிநுட்பம் மூலம் காப்பாற்ற முடியும் எனவும் அவரது பாத்திரம் அமைக்கப் பட்டுள்ளது.
உடுமலை நாராயண கவி அவர்கள் இயற்றி N.S.கிருஷ்ணன், மதுரம் பாடிய பாடல் இது.
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப்போச்சு -இப்போ
ஊசியப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சி போச்சு
ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க – அதை
எண்ணாமே எவனோ சொன்னான்னு
கேட்டு ஏமாந்து போகாதீங்க
ஆகாரம் சமைக்க சூரியன் ஒளியால்
அடுப்பை மூட்டுறாங்க -இங்க
ஆள மாத்துறாங்க
அது ஆயிரம் காலத்துக்கு அப்பால நடக்குற
ஆராய்ச்சி விஷயமுங்க -மூளை
ஆராய்ச்சி விஷயமுங்க
நம்ம அறிவுக்கு பொருத்தம்
ஆறு கோவில் அரசமரம் தானுங்க
கோழி இல்லாமே தன்னாலே முட்டைகளில்
குஞ்சுகளை பொரிக்க வச்சான்
உங்கொப்பன் பாட்டன் காலத்திலே
யார் இந்த கோளாற கண்டுபிடிச்சான்
அந்த குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக்காரனை
முட்டை ஒண்ணு பண்ணச்சொல்லுங்க பாப்போம்
வாய் கூசாமே எதையும் யோசனை செய்யலாமே
பேசுவது தப்பித்தமுங்க
எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கையென்கிறாங்க
இனிமேல் இயற்கையும் கூட செயற்கையிலாகும்
முயற்சி பண்றங்க

உடுமலை நாராயண கவி அவர்கள் இயற்றி N.S.கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல் இது.
வாதம் வம்பு பண்ணக் கூடாது-பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது
பெண்கள் வகையில்லா பொருளை வேண்டி
புருசனிடம் எப்போதும்- வாதம்
வரவும் செலவை எண்ணிப் பார்க்கோணும்-வீட்டு
வாழ்வின் தேவை கண்டு கேக்கோணும்
போலி மரியாதை மதிப்புக்கான
அல்டாப்புகளை நீக்கோணும்
அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி
தினம் ஒன்பது தடவை காப்பி குடிப்பதநீதி
எண்பது ரூபா புடவை கேட்டா
குடும்பத்துக்கே விரோதி
வெள்ளிச் சரிகை வேட்டி சேலை கொடுத்து
எவர்சில்வர் வெங்கலப் பாத்திரம் வாங்குவதை தடுத்து
புருசன் விலை மதிப்பை எடுத்துச்
சொன்னா முகத்தை சுழித்து
போதும் என்ற அளவு கடந்து
தனக்கு பொருந்தும் பொருந்தாதென்பதை மறந்து
உன்னைக் காதல் கொண்டான்
தன்னைக் கசக்கி பிழிந்து
மருதகாசி அவர்கள் இயற்றி லீலா அவர்கள் பாடிய பாடல் இது.

தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும் மதுரச நாதம்
எழுவது விரலாலே
தேன் குழல் ஓசை போல காதிலே
விதவிதமாகிய நாத வெள்ளமே
பாய்ந்திடும் போதில் நெஞ்சில் இன்பமே
உறவாடுமே சுகம் கூடுமே
உல்லாசம் தன்னாலே உண்டாகுமே
கானசஞ்சாரம் காதல் சீர் தரும்
ஆனந்தகீதம் அமுதசாகரம்
மாநில உயிர்கள் மயக்கமே பெறும்
மனம் போலவே மணம் வீசுமே
மங்காத சிருங்கார சங்கீதமே
உடுமலை நாராயண கவி அவர்கள் இயற்றி T. M. சௌந்தரராஜன். A.G.ரத்தினமாலா பாடிய பாடல் இது.
மாயி மகமாயி மாயவனார் சோதரியே
தாயே துரந்தரியே சங்கரியே வாரும்மம்மா
சமயபுரத் தெல்லை விட்டு சடுதியிலே வாரும்மம்மா
கன்னபுரத்தை விட்டு கால்நடையா வாரும்மம்மா
ஆதி பரமேஸ்வரியே, ஈஸ்வரியே
ஆயிரங்கண் உடையவளே, உடையவளே
அட்டான தேசமெல்லாம், தேசமெல்லாம்
ஆதரிக்க வந்தவளே, வந்தவளே
முக்கோண சக்கரத்தால் மூவூலகை வென்றவளே
தெக்காண தேசம் விட்டு சீக்கிரத்தில் வாரும்மம்மா
கோழிமுட்டை கொச்சி மஞ்சள் கொட்டை
குங்குமம் சந்தனக் கட்டை
குருணாபட்டையாலே நெத்திப்பட்டை
அதோட காணிக்கைகள் வந்ததெல்லாம்
சரியா இருக்காண்ணு பாரு
இல்லாட்டி வேணுங்கிறத கேளு தாயே
அலகு குத்தி வந்தவரை ஆதரிக்கும் அங்கமுத்தே
மலையாள தேசம் விட்டு ஆமாம் தேசம் விட்டு
விளையாட வந்தவளே- அம்மா
தலைநோயி குன்மங்கள்
சளி இருமல் குளிர் காயச்சல்- அம்மா
தொலையாத நோய்களெல்லாம்
துரத்திவிட வந்தவளே
உடைக்காத தேங்காயும், சாமி
உரிக்காத வாழைப்பழம், சாமி
படி நிறைய பச்சரிசி, சாமி
பருப்பும் மிளகாயும், சாமி
காணிக்கைகள் தந்தவரை, சாமி
காப்பாத்த வந்தேண்டா, சாமி
கண்ணவிஞ்ச பேருக்கெல்லாம், சாமி
கண் கொடுக்க வந்தேண்டா, சாமி
ஆரு கடன் நின்னாலும், சாமி
மாரி கடன்ல் பொல்லாது,சாமி
ஆகையினால் எல்லோரும், சாமி
அன்புடனே தந்திடுங்க
தாயே பராசக்தி அண்டபகிரண்டமொடு
எண்திசை குலுங்கவே அம்மையே ஆடி வருக
ஆங்கார ஓங்கார ரீங்கார ரூபியாய் ஆடியே ஓடி வருக
மழைய பொழிய வைப்பா- மாரியாயி
*மலட்டுக்குப் புள்ளை தரும்
நிலத்தை விளைய வைப்பா
நினைச்தெல்லாம் கொடுப்பா
காணாமப் போனவரை
கண்டு பிடிச்சிக் கொடுப்பா
களவாணிப் பசங்களை
காட்டிக் கொடுத்துடுவா- மாரியாயி
டேய்…..
என்னைப் போல் பெண்ணொருத்தி எதுக்கே வந்து நிக்குதடா
புருஷனைக் காணாமின்னு புலம்பித் தவிக்குதடா
அடுப்பாங் கரையோரம் அழுது துடிக்குதடா
அடேய்…
உண்டுமா இல்லையான்னு கேளு
ஆமாம் தாயே
அவன் போறபக்கம் வாரபக்கம் எல்லாம்
மறைக்காம ஆத்தாகிட்ட சொல்லிடு
தாடிக்கார டாக்டர் வீட்டுக்கு போயிட்டு
வாரேன்னு சொல்லிட்டு போனாரு
அவ்வளவு தான் தெரியும்
ஆத்தா அருள் முகத்தோட வந்திடு
அடேய்..
அவன் நிறையா படிச்சவண்டா நெஜம் பேசமாட்டாண்டா
எத்தனையோ உசிரையெல்லாம் எமலோகம் சேர்த்தவண்டா, படுபாவி தன்னாலே பதுங்கிக் கிடக்கிறாண்டா
வருவானா இல்லையாண்ணு மங்கை நினைக்குதுடா
இந்தாத் திருநீறு எடுத்தெடுத்து வீசிவிட்டா
காற்றில் பறந்து சென்று கணவனையும் கூட்டி வரும்
ஆத்தா போறாடா எங்காத்தா போறே
மலை ஏறறாடா, ஏறிட்டாளா
தண்ணீர்
இந்தா தாயே இளநீர் சாப்பிடுங்க
* இந்த சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ பதிப்பகத்தாருக்கோ உடன்பாடு இல்லை. இருப்பதை அப்படியே கொடுத்திருக்கிறோம்.
டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல் இது.
தென் பழநி மலைமேல் வாசிப்பவனே
திருப்பதி மலைமேல் இருப்பவனே
அன்பர்களை ஏமாற்றி ஆகாரம் தின்பவனே
அயோத்தி ராமர் அடிதாங்க வந்தவனே
தென் இலங்கை சென்றவனே
சீதைய கண்டவனே சிரஞ்சீவி ஆனவனே
கர்ணம் போடுறா ராமா
கடலைத் தாண்டுரா ராமா
காவடி தூக்குடா ராமா
கைய நீட்டி ஐயா கிட்ட
காசை கேளடா ராமா
ராம ராம ராமாரே
நல்ல வழியிலே நடப்பவருக்கு காலமில்லை இது ராமா
நாகரிகமா வாழணும்னா நன்றி மறந்திடு ராமா
உள்ளத சொல்லி உத வாங்காதே உன்ன மாத்திக்க ராமா
யோக்கியம் பாத்தா பாக்கியம் ஏது?
யோசிச்சுப் பார்றா ராமா
பொண்டாட்டி கிட்ட வீரம் காட்டடா ராமா -வேறு
பொம்பள உதைச்சா பொறுமை காட்டடா ராமா
ஸலாம் போடு,
மாமியா வூட்டுக்கு தண்ணியெடு
பொண்டாட்டி வூட்டுக்கு தண்ணியெடு
வப்பாட்டி வூட்டுக்கு தண்ணியெடு
பட்டப்பகல் கொல்லைப்புறமா எட்டித் தாவுடா ராமா
எட்டித் தாவி உச்ச தானத்தில் ஒட்டிக்கொள்ளடா ராமா
ஒட்டிய தானம் ஒடிந்து விழுந்தா ஓட்டப்பிரிடா ராமா
ஓட்டப் பிரிச்சி குத்தாலத்தில் ஓய்வு கொள்ளடா ராமா
தீயவைகளைப் பேசாதே வாயை மூடு
தீயவைகளைப் பார்க்காதே கண்ணை மூடு
தீயவைகளை கேட்காதே காதை மூடு
வெள்ளை சட்டைக்கு சாயம் போட்டு
வேலையைப் பார்ரா ராமா
வேல முடிஞ்சா சலவைக்குப் போட்டு
வெளுத்து வாங்கிப் போ ராமா
வவ்வால் போலெ வலுத்த கொம்புக்கு தவ்வுடா
நீ தவ்வுடா -இந்த
வாழைப்பழத்த வாயில நல்லா கவ்வுடா
கண்ணாலே பாத்துக்கிட்டு காசு கொடுக்கலாமே
கம்பி நீட்டுகிற கனவான்களே
வெடிக்க பாத்துபுட்டு வெட்டிய உதறிக்கிட்டு
வெளியே போகின்ற சீமான்களே
முதுகு மேலே அடியுங்கோ
மொகத்து மேலே அடியுங்கோ
வவுத்து மேலே அடிக்காதீங்க- ஐயா மார்களே
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




