“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து, நெளிந்து வண்டி செல்ல, ஜன்னல் வழியே வழி நெடுக என்னுடன் துணைக்கு வரும் சிகரங்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஏன் எனக்கு இந்த மலைகளை இத்தனை பிடித்துப்போகிறது? வீட்டின்  பால்கனியில் ஏந்திருக்கையில் (Bean bag) அமர்ந்தபடி எதிரே தெரியும் மலைகளை ரசித்தபடி காலையில் குடிக்கும் அந்த காபி தான் எத்தனை சுவையாக இருக்கிறது? (தேனி மாவட்டத்திற்குள்) இருசக்கர வாகனம் ஓட்டும்போதெல்லாம் எதிரே வரும் வாகனத்தைக் கடந்து, பின்னால் தெரியும் மலைகள்தான் கண்களை ஈர்த்து, உள்ளுக்குள் ஊடுறுவி, நிலை தடுமாறச் செய்கின்றன. முதன்முதலாய் அரசுப்பணியேற்ற ஊரான திம்மரச நாயக்கனூர், மலைகளுக்கு நடுவில் பொதிந்து கிடந்ததைப் பார்க்கையில், அரசுப்பதிவேட்டில் கையெழுத்திட்ட அந்த நொடியே  மனதிற்கு நெருக்கமாகிப் போனது. வகுப்பறையிலிருந்து மலைகளை இரசித்துக்கொண்டே பாடமெடுப்பது பரமசுகமாய் இருந்தது. 

அரை நாளோ… ஒரு நாளோ… ஓய்வு கிடைத்தால் போதும், தேனியின் எந்தத் திசையிலும் பயணித்து ஏதோ ஒரு மலைப்பகுதிக்குள் அரைமணிக்குள் அடைக்கலமாகி விட முடியும். ஆற்றையோ, ஓடையையோ, குட்டி குட்டி நீர்வீழ்ச்சிகளையோ, தடுப்பணைகளையோ அடைந்துவிட முடியும். அப்படித்தான் இந்த ஞாயிறும், மதியத்திற்குப்பின் கிடைத்த மூன்றுமணி நேரத்திற்குள் எங்கு செல்லலாம் என யோசித்தத்தில், பளிச்சென குரங்கணி நினைவு வர குடும்பமாய் கிளம்பிவிட்டோம்.

தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் போடிநாயக்கனூரில் இருந்து 17.2 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கும் குரங்கணி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கொட்டக்குடி ஊராட்சியில் உள்ள ஒரு முக்கியமான மலைக்கிராமம். கொட்டக்குடி ஊராட்சியில் இருக்கும் குரங்கணி, முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப்ஸ்டேஷன், முட்டம், கொழுக்குமலை போன்ற மலைகிராமங்களில் மலைகளின் ஆதிக்குடிகளும், வயிற்றுப்பிழைப்பிற்காக வந்தகுடிகளுமாக மனிதத்திரள்கள் பரவிக்கிடக்கின்றன. பச்சைப் பசேல் காடுகள், ஒரே நாளில் பலவிதமாய் மாறிக்கொண்டேயிருக்கும் வானிலை, தொட்டுவிடும் தூரத்தில் தவழும் மேகங்கள், பகலில் மிதமான குளிரும் இரவில் தாங்க முடியா குளிருமாய்  சில்லென ஊடுறும் வலுவான காற்று என கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு இயற்கை ஓவியம்தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதறல்கள். ஆதிக்காடு என்ற செல்லப்பெயர் கொண்ட இந்தப்பகுதி மூணாறுக்கும் அகமலைக்கும் இடையில் பதவிசாய் பதுங்கிக் கிடக்கிறது.

எப்போதாவது ஊருக்குள் வரும் கூட்ட நெரிசலற்ற அரசுப் பேருந்து. போடியிலிருந்து குரங்கணிக்கு 15 ரூபாய் கட்டணம் என்கிறார்  பேருந்து நடத்துனர். போடிநாயக்கனூரைக் கடந்தால், முதலில் வருவது முந்தல். பெயரைக்கேட்டதும், ‘முந்தல் வனப்பகுதியிலிருந்து குரங்கணி மலைச்சாலைக்கு செல்லும் வழியில் அடவுப்பாறை வனப்பகுதியில் (‘அதிபரின்’) மலைமாடுகள் மேய்க்கும் போராட்டம்’  என்ற சமீபத்திய செய்தி  நினைவுக்கு வந்து (எரிச்சலூட்டினால்) கம்பெனி பொறுப்பல்ல, அதே முந்தல்தான் வாருங்கள், கடந்து செல்வோம். முந்தல் சோதனைச்சாவடியைக்  கடந்து இடதுபுறம் திரும்பினால் மூணாறு செல்லும் பாதை. அதனைத் தவிர்த்து நேராகச் செல்லும் உயரம் குறைந்த மலைச்சாலையில் மெதுவாக நகரும்போது,  மேற்குத் தொடர்ச்சி மலையின் உடலில் பயணிப்பது போலத் தோன்றுகிறது. காட்டு மேய்ச்சல் நிலங்கள், சோலைத் திட்டுக்கள், குட்டி குட்டி நீர்வீழ்ச்சிகள் என ஜன்னல் வழியே கண்கள் சலிப்பில்லாமல் மேய்கிறது.  காலையிலும் இரவிலும் காட்டு மாடுகளின் நடமாட்டம் இருப்பதாக வழியில் இருக்கும் வனத்துறை அறிவிப்புப் பலகை சொல்கிறது.

‘காட்டுமாடுகள் மிதித்து கால் உடைந்தது, ஆளை அடித்து தூக்கி வீசியதில் மண்டை உடைந்தது’ என்றெல்லாம்  அவ்வப்போது கேட்டிருந்த செய்திகள் மிகச்சரியாக நினைவுக்கு வர… புகைப்படம் எடுக்க கீழே இறங்கும் போதெல்லாம் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே…. கொஞ்சம் ‘திக் திக்’ தான்.   கொட்டக்குடி ஆறு நமக்கு எதிர்திசையில் சாலைக்கு இணையாகவே பயணித்துச் செல்கிறது.  குரங்கணியில் இருக்கும் ஆறுக்கும்(6) மேற்பட்ட சிற்றோடைகள் அனைத்தும் கொட்டக்குடி ஆற்றுடன் கலந்து வைகை அணையில் சேர்கின்றன. இலவம்  மரங்கள் வழி நெடுக தனது பஞ்சுப் பொதிகளை தூதனுப்பி நலம் விசாரிக்கின்றன.

மழைக்காலத்தில் சென்றால் வழியெங்கும் நீர் வடியும் பாறைகளைப் பார்க்க முடியும். இந்தக் கோடையிலும் மழைத்தூறல் எங்களை வரவேற்க, “சட்டென்று மாறுது வானிலை, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” என ரிவர்சில் பாடிக்கொண்டே குரங்கணி ஊருக்குள் இறங்குகிறோம். இனி அலைபேசிக்கு புகைப்படம் எடுப்பதைத் தவிர வேறு வேலையில்லை. குரங்கணிக்குள் நுழையும் போதே, நாம் இந்த உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவோம். “ஹல்லோ….ஹல்லோ…..கேக்குதா…கேக்குதா….?” என்ற குரல்களுடன் ஆங்காங்கே   கையில் அலைபேசியுடன் ஒற்றை ஒற்றையாக அமர்ந்திருக்கும்  மனிதர்கள். ஜியோ  டவர் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் கிடைக்குமாம். அவசரம் என்றால் மேட்டுப்பகுதி நோக்கி நகர்ந்து பேச முயற்சிக்க வேண்டும். பாவம்… தூரத்தில் இருக்கும் உறவுகளிடம் உரையாட, மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கீழே கொட்டக்குடி ஆறு சலசலக்க, ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அரசு தங்கும் விடுதியில், ‘குடும்ப ஒன்றுகூடலில்’ 120 பேர் இரவும் பகலுமாய் கூடிக்களித்த நாட்கள் நினைவுக்கு வர இதழோரத்தில் புன்னகை! ஆரம்ப சுகாதார நிலையமும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் அங்கன்வாடி கட்டிடமும் வரிசையாய் நிற்க, அங்கிருந்து வலதுபுறம் சென்றால் டாப்ஸ்டேஷன் மலையேற்றம் செல்லும் பாதை. அதைத் தவிர்த்து, இடதுபுறம் திரும்புகிறோம். கீழிருந்து மேடேறும் குறுகலான காங்கிரீட் ரோடு. ஆங்காங்கே சில வீடுகள். மழை வலுக்கத் தொடங்குகிறது. கான்கிரீட் சாலை முடிந்து, வனத்தின் ஒற்றையடிப்பாதை. வழியெங்கும் இலவம் பஞ்சு காலில் மெத் மெத்தென மிதிபடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு மிக உயரமான மரங்கள். அதே பாதையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர நடைபயணத்தில் அடைந்து விடலாம், அந்த மறைந்திருக்கும் சொர்க்கத்தை.

சுற்றிலும் பார்க்கிறேன்; நம்மைச்சுற்றி அத்தனை திசைகளிலும் மலைகள்… மலைகள்…மலைகள்… நடுவில் பள்ளத்தாக்கு போல கிராமமும் ஆறும் (சிறிய)  அருவியும். அது ஒரு அருவி நீரோடை. மலைகளைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வருகிறது மூலிகைத் தண்ணீர். கால் பட்டவுடன் ஜில்லென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவிப்பாய்கிறது.

குரங்கணி அருவி நீரோடை பார்க்க சாதுவாக இருந்தாலும்,  எதிர்பாராத நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு  ஏற்படும் என்பதால் குளிக்க நிரந்தரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் கேட்பது… நான் உள்பட? மொத்தக் குடும்பமாய் வந்து குதியாட்டம் போட்டிருக்கிறோம். அன்றொருநாள் ஆற்றுச்சுழலில் கழன்று விழுந்த தங்க மோதிரம் என்றோ,  யார் கைக்கோ கிடைத்திருக்கக்கூடும். ஏதேதோ யோசனையுடன் குளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு,  கால் நனைத்து மகிழ்கிறோம். அந்த அந்தி சாயும் நேரத்தில் எங்கள் மூவரைத்தவிர அந்த இடத்தில் ஒருவரும் இல்லை. மலைகளும் மரங்களும் சூழ்ந்த அந்த வனத்தின் அமைதியும் தனிமையும் சலசலக்கும் நீரின் ஓசையும் கலந்து, நிறைய அழகும் கொஞ்சம் அமானுஷ்யமுமாக இருக்கிறது.

சில நாள்கள் முன்னதாக (04/08/25) போடியைச் சேர்ந்த ஜஹாங்கீர் மற்றும் அவரது உறவினர் மஜீத் இருவரும் திடீரென உயர்ந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு நாள்கள் கழித்தே  உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற செய்தி குளிக்கும் ஆசையை ஓரங்கட்டியிருந்தது.   

“அம்மா… நாம் வந்ததை விட இப்போ தண்ணீர் அளவு கூடிருச்சு, வாங்க போகலாம்” என்று மகள் பூஷிதா அலற, கண்முன்னால் நீர்மட்டம் உயர்வதை உணர்ந்தேன். வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினோம்.

குரங்கணி என்ற சிறிய கிராமத்தின் உயிர்நாடிகளாக இருப்பது சுற்றுலாவும் சுற்றியிருக்கும் சிறிய எஸ்டேட்களும். குரங்கணி, முதுவாக்குடி, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் போன்ற கிராமப்புற பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி பயிரிடப்படுகிறது. மென்மையான சுவை கொண்ட அரபிக்கா, கொஞ்சம் கசப்பான வலுவான சுவை கொண்ட ரொபஸ்டா என இரண்டு வகை காபிகள் இந்த மலைகளில் பயிரிடப்படுகின்றன.  குளிர்ச்சியான வானிலையும் அதிக ஈரப்பதமும் காபி விதைகளுக்கு தனித்த மணத்தையும் சுவையையும் தருகிறதாம். குரங்கணி ஆற்று நீரின் சுவையே காபியின் சுவையைக் கூட்டுகிறது என்கிறார்கள். அருவியிலிருந்து மழையில் நனைந்து கொண்டே கால்களை எட்டி எட்டி வைத்து திரும்புகிறோம். (ஓடினால் வழுக்கி விழுந்து புதையல் எடுப்பது நிச்சயம்!) பேருந்து நிறுத்தத்தில் இருந்த தேநீர்க்கடை அக்கா கொடுத்த ஒரு கோப்பை காபியில் மலைக்காற்று, அருவி நீர், மழை, பனி அனைத்தும் சேர்ந்து சுவை கூடுதலாகத் தெரிந்தது.

 குரங்கணியிலிருந்து அருவிக்கு செல்லும் முன்னர் வலது பக்க பாதையைத் தவிர்த்தோமே, அந்த மலைப்பாதையில் 12 கி.மீ தூரம் நடந்து சென்றால் மூணாறு பாதையில் உள்ள டாப் ஸ்டேஷனுக்கு போய்விட முடியும். மிக அற்புதமான மலைப்பாதை இது.  இந்த வழித்தடத்தில் உள்ள பகுதிகளில்தான் அழகர்சாமியின் குதிரை, மைனா, கும்கி, மேற்குத் தொடர்ச்சி மலை என பல்வேறு தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. “இதோ இதுதான் கும்கி படத்துல ‘சொய்ங் சொய்ங்’ பாட்டு எடுத்த இடமுங்க, ஒரே யானையை வைச்சுதான் முழுப்படமும் எடுத்தாங்க. மற்றதெல்லாம் அட்டப்பெட்டிதான். நாங்கதான் தூக்கிட்டுப்போய் வைச்சோம். பூரா டூப்புங்க…” என சினிமா ரகசியங்களை விவரிக்கிறார் தேநீர்க்கடையிலிருந்த உள்ளூர்வாசி ஒருவர்.   “கும்கி படத்துல ஹீரோயின் இருந்த வீடுங்க” என தூரத்தில் தெரிந்த ஒரு கட்டடத்தைக் காட்டியவர், “சமீபத்தில் கருடன் படம்கூட இங்கதான் எடுத்தாங்க” என நாம் கேட்காமலேயே கொசுறுச் செய்தியும் கூறுகிறார்.

டாப் ஸ்டேஷன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் உள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் இந்த இடத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து செல்ல அனுமதியுமில்லை, சாலைவசதிகளுமில்லை. போடிமெட்டு வழியாக கேரளாவிற்குள் நுழைந்து  பூம்பாறை மற்றும் மூணாறு வழியாகத்தான் செல்ல முடியும் என்பது விநோதம். ஆனால் சாலைகளில்லா இந்தப் பாதைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதக் காலடிகளைக் கண்டிருக்கின்றன…  

எத்தனையெத்தனை தமிழர்கள் இங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிகளையும் புல்வெளிகளையும் கடந்து, நடந்தே டாப் ஸ்டேஷனுக்கும் மூணாறுக்கும் இன்னபிற எஸ்டேட்களுக்கும் சென்றிருக்கின்றனர்?  யார் அவர்கள்? இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர்களுக்கு என்ன வேலை? நூற்றாண்டுகளாக உழைக்கச்சென்ற பாதங்களையும் உழைத்துத்திரும்பிய பாதங்களையும் தாங்கி நிற்கும் அந்தப் பாதைகள் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.

போடிமெட்டு சாலை அமைக்கப்படும் வரை, சாமான்ய மக்கள் மட்டுமல்ல, ஆங்கில அரசும் அரசு அதிகாரிகளும் கேரளாவிற்குள் நுழைவதற்கு இந்தப்பாதையைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப்பாதை உருவானதற்கும் ஒரு வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் கண்ணீர் வரலாறு. 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகமெங்கும் நுளம்புகளினால் (கொசுக்கள்) மலேரியா பரவ, மருத்துவ வசதி அதிகமில்லாத காலகட்டத்தில் உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கிறது. மலேரியா பரவிய நாடுகளில் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து விழுந்தனர். தனது எல்கைக்குள் இருக்கும் நாடுகளில் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் கட்டாயத்திற்கு ஆங்கில அரசு தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில் இருந்து பெறப்பட்ட சின்கோனா என்கிற தாவரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்பட்ட குயினைன் (Quinine) என்னும் பொருள், மலேரியா நோய்க்கான சிறந்த தடுப்பு மருந்தாக பயன்படுத்தப் பட்டது.

அமெரிக்காவிலிருந்து இதனை வாங்குவது அதிக பொருட்செலவை ஏற்படுத்திய காரணத்தினால், தாங்கள் கைப்பற்றியிருக்கும் கீழை நாடுகளில் இதனை உற்பத்தி செய்ய ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். இதன் விளைவாக 1860-ம் ஆண்டு சின்கோனா விதைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பப்பட்டன. இலங்கை நுவரெலியாவில் ஜேம்ஸ் டெய்லரின் மேற்பார்வையில் சின்கோனா பயிரிடப்பட்டு, 1867-ல் முதல் அறுவடை பெறப்பட்டது. உற்பத்திச் செலவைவிட ஆறு மடங்கு அதிக வருமானத்தை அது பெற்றுத்தந்ததால், ஜேம்ஸ் டெய்லர் புகழ் உலகெங்கும் பரவியது. இன்றும் நுவரெலியா லூல்கந்துர தோட்டத்தில் அவருடைய சிலையைப் பார்க்க முடிகிறது.  

அமேசான் காடுகளிலிருந்த சின்கோனா இந்தியாவிற்கும் வந்து சேர்ந்தது.  இந்தியாவில், நீலகிரி மலைகள், டார்ஜிலிங், சிக்கிம் மலைப்பகுதிகள், கேரளாவின் தேவிகுளம், ஆனைமுடி, தேனி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் சின்கோனா பயிரிடத் திட்டமிடப்பட்டது. அது சரி… மலைகளின் மடியில் மறைந்திருந்த தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதிகள் எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்களால் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன? என்கிற கேள்வி மண்டையைக் குடைய… தேடினால் வரலாற்றுக்குள் சான்றுகளுடன் பதில் கிடைக்கிறது.

1790 – திப்பு சுல்தான் இந்தியாவில் உள்ள அத்தனை ஆங்கிலேயர்களையும் வேட்டையாடிய ஆண்டு. திப்புவின் படைகளைத் தோற்கடிக்க,  நடந்த மூன்றாம் ஆங்கில – மைசூர் போர் காலத்தில் இளம் அதிகாரியாக இருந்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesley) (இவர்தான் பின்னாட்களில் வெலிங்டன் பிரபு ஆனார்) மைசூரை நோக்கி முன்னேறிய போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பாதைகள் வழியாக குமுளிக்குச் சென்றார். ஏலக்காய் மலைகளின் முக்கிய நுழைவாயிலான குமுளி (kumuli gap)தான் திப்பு தப்பிக்க  ஒரே வழி என நினைத்து ஆங்கிலப்படை அங்கு முகாமிட்டிருக்க, திப்புவின் படை கம்பம் பள்ளத்தாக்கை அடைந்தவுடன் அங்கிருந்து வேறு மார்க்கமாக தப்பித்தது. ஆங்கிலேயர் படையோ, ஏலக்காய் மலைகளில் ஏறி வடக்கு நோக்கி நகர்ந்து போடி நாயக்கனூரை அடைந்தது.

அங்கிருந்து சூரிய நெல்லியை அடைய, கால்நடைகள் தேர்ந்தெடுத்த பாதையில் (கொட்டக்குடி – டாப் ஸ்டேஷன்  கழுதைப்பாதை) அவர்கள் சென்றனர். மறுநாள் அவர்கள் ஒரு அழகான சமவெளியை அடைந்தனர். நடுவில் தெளிவான அழகான குளத்துடன் இருந்த ஈரமான குளிர்நிலம் தான் அவர்கள் கண்டடைந்த இன்றைய தேவிக்குளம். இது ஒரு இராணுவ நடவடிக்கையாக இருந்தாலும், போடி – தேவிக்குளம் பகுதிக்கு வந்த முதல் ஆங்கிலேயர் வெல்லஸ்லி என்று வரலாற்றில் பதிவாகியது. இவ்வியற்கை அழகைக்கண்டு மயங்கியவர், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்காக இங்கு ஒரு கோட்டைகட்ட முடிவு செய்தார்.  தேவிமலை என்ற அழகிய பள்ளத்தாக்கில் கோட்டையின் கட்டுமானப்பகுதிகளைத் தொடங்கினாலும், முடிக்கமுடியாமல் திரும்பிச் சென்றார். அக்கோட்டையின் எச்சங்களை தேவிக்குளத்தில் இன்றும் நாம் காண முடியும்.

1817-ம் ஆண்டில் மெட்ராஸ் ராணுவத்தின் லெப்டினன்ட்கள் பெஞ்சமின் ஸ்வைன் வார்டு(Benjamin Swain Ward) மற்றும் பீட்டர் ஐர் கானர் (Peter Eyre Conner) இருவரும்   முக்கோணவியல் (Triangulation – சர்வே)  மற்றும் புவிசார் கணக்கெடுப்புக்காக  இப்பகுதிகளுக்குச் சென்றனர். லெப்டினன்ட் பிஎஸ் வார்டின் பதிவுதான் இம்மலைகள் சார்ந்த  முதல் அதிகாரப்பூர்வ பதிவாகும். அப்போது  முதுவர் இனப் பழங்குடியினர் தலைவர்களான கண்ணன் மற்றும்  தேவன் என்பவர்கள் ஆங்கிலேயர்களை  இம்மலைப்பகுதிகளுக்குள் வழிநடத்தினர். அதனாலேயே இம்மலைத்தொடர் (Kannan Devan Hills) கண்ணன் தேவன் மலைப்பகுதியாயிற்று என்று கூறப்படுகிறது.

1862 ல் பிரிட்டிஷ் இந்திய இராணுவ அதிகாரியான ஜெனரல் டக்ளஸ் ஹாமில்டன்(Colonel Douglas Hamilton)  கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக, மலைப்பகுதிகளில் நிலவரை அளவிடுதல், இயற்கை வளங்களைப் பதிவு செய்தல், வேட்டையாடும் இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் ட்ரெவல்யன் (Sir Charles Trevelyan) என்பவர், தென்னிந்தியா முழுவதுமுள்ள மலைப்பகுதிகளில், மருத்துவமனைகள் மற்றும்  ஐரோப்பிய படைகளுக்கான ஓய்விடங்கள் கட்டுவதற்குமான  இடங்களைக் கண்டறியும்  பணியை ஹாமில்டனுக்கு வழங்கினார். தனது பணியின்பொருட்டு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயணித்த ஹாமில்டன், அதன் மூச்சடைக்கக்கூடிய அழகை ரசித்து வியந்தார்.

இந்தப்பயணத்தில் அவர் நில வடிவம், ஆறுகள், விலங்குகள், தாவரங்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்தார். அவரது ஆய்வு வரைபடங்கள் இன்னும் பிரிட்டிஷ் நூலகத்தில் (British Library – முன்னர் India Office Library என்று அழைக்கப்பட்டது) பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஆங்கிலேயர்களுக்கும், தமிழ்நாடு – கேரள எல்லையில் இருந்த மலைத்தொடர்களுக்குமான பந்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

1870ளில் திருவிதாங்கூர் மற்றும் மதராஸ் மாகாணத்திற்கு இடையேயான எல்லைத் தகராறு தீர்வுக்காக பிரிட்டிஷ் அதிகாரியும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ரெசிடெண்டாக இருந்தவருமான ஜான் டேனியல் மன்றோ வருகை தருகிறார். அப்பகுதியின் வரலாறை மாற்றியமைத்தார்.

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.            

சான்றுகள்

கண்டி சீமையிலே -2  – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு தொடர்

Theplantersbbungalows.com – History of Munnar

The high ranges of Travancore – By J D Munro,  publication 1880

Tracing a New Era: History of Plantation in Munnar – Research Paper in Mahatma Gandhi University, Kottayam.

Vibemunnar.com

Geographical and statistical memoir of the survey of the Travancore and Cochin States