நெதர்லாந்தின் முக்கிய அடையாளமாக இருப்பது துலிப் மலர்கள். பதினாறாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த மலர்கள், ஐரோப்பா முழுவதுமே பரவி இருந்தாலும் நெதர்லாந்து அவற்றை முற்றிலுமாகத் தன் வசப்படுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட 15,000 ஹெக்டேர் பரப்பளவில் தூலிப்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இருபத்தைந்தாயிரம் கோடிகளுக்கான வருமானம் இந்த துலிப் மலர்களின் ஏற்றுமதியில் இருந்து கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல், வருடந்தோறும் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் இந்த துலிப் மலர்களைப் பார்வையிட வந்து குவியும் சுற்றுலாவாசிகளால் 18 ஆயிரம் கோடி வருமானம் பெறப்படுகிறது.
நான் ஜூன் மாதத்தில் சென்றதால் உலகிலேயே மிகப் பெரிய துலிப் மலர்களின் தோட்டமாகிய கேகேன்ஹாப் (Keukenhof) தோட்டத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘கண் கொள்ளா அழகு’ என்பார்களே அதை கேகேன்ஹாப் தோட்டத்தில்தான் உணர முடியும். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும் இந்தத் தோட்டத்தைப் பார்வையிடும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், ஒரு பத்து ஜிபிக்கு போட்டோ எடுத்துத் தள்ளுங்கள். முடியாதவர்கள் விஜயின் நண்பன் படத்தில் வரும் ’அஸ்கு லஸ்கா’ பாட்டில் கேகேன்ஹாப் தோட்டத்தின் அழகைக் கண்டு மகிழலாம். ஆனால், எப்படியும் அந்த மலர்களின் கொள்ளை அழகைக் கண்டுவிடவேண்டும் என்று ஒரு முடிவோடு சுற்றித் திரிந்த என் கண்களில் பட்டது ’துலிப் மியூசியம்.’ மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும் துலிப்களைப் பார்க்காமல் நெதர்லாந்தை விட்டுச் செல்வதா என்ற என்னுடைய கவலைக்குக் சிறிதளவு மருந்தாக இருந்தது. துலிப்கள் நெதர்லாந்தை வந்தடைந்த வரலாறு, மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏழு யூரோக்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வெளியே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மலர்களைப் பார்ப்பதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. நிறைய வகையிலான துலிப் செடிகளின் கிழங்குகள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையின் தட்பவெப்பநிலைக்கு துலிப்கள் தாக்குப் பிடிக்காது. மற்ற நாடுகளின் சுற்றுலாவாசிகள் துலிப் செடிகளின் கிழங்கை வாங்கிச் செல்கின்றனர். வெங்காயம், பூண்டு போன்று கிழங்குகளை வேர்களாகக் கொண்ட ஒரு செடி வகை. ஒரு கிழங்கு நட்டுவைத்தால் போதும், அது தன்னைச் சுற்றி பல கிழங்குகளை உண்டு பண்ணி ஒரு தோட்டத்தையே உருவாக்கும். இந்தக் கிழங்குகள் பல வருடங்கள் தாக்குப்பிடிக்கக் கூடியவை.

கேகேன்ஹாப் (Keukenhof) தோட்டத்தில் கோடைக் காலத்தில் கிழங்குகளைத் தோண்டி எடுத்துவிட்டு, மீண்டும் செப்டம்பர் மாதம் மத்தியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை விதைக்கிறார்கள். அதிலும் இலையுதிர் காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் முக்கியமான விதைப்பு மாதங்கள். ஆண்டுதோறும் 70 லட்சத்திற்கு மேற்பட்ட துலிப் கிழங்குகள் கையால் விதைக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் இந்தக் கிழங்குகள் நிலத்தில் உறைந்திருக்கும். தாவரத்தின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோன்களின் காலம் அது. வெளியே எந்த ஒரு மாற்றமும் தெரியாவிட்டாலும் உள்ளே அந்தக் கிழங்குகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். பின்னர் வசந்தகாலத்தின் தொடக்கமான மார்ச், ஏப்ரலில் கிழங்கு முளைத்து இலைகளும் தண்டுகளும் மேலே வரத் தொடங்குகின்றன. பசுமை விரிந்து பூமுகம் உருவாகத் தொடங்குகிறது. முழு வசந்தகாலமான ஏப்ரல், மே மாதங்களில்தான் துலிப் மலர்கள் முழுமையாக மலரத் தொடங்குகின்றன. எனவேதான் மார்ச் மத்தியில் இருந்து மே மாத முடிவு வரை கேகேன்ஹாப் (Keukenhof) தோட்டம் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்திருக்கும். ஆம்ஸ்டர்டாம்க்குச் செல்பவர்கள் இந்தத் தோட்டம் திறந்திருக்கும் நாட்களாகப் பார்த்து முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
துலிப் சார்ந்த பரிசுப் பொருட்கள் மியூசியத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த மியூசியமும் ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது. அதற்கு அருகிலேயே சீஸ் மியூசியமும் இருக்கிறது. இவை இரண்டும் ஆன் பிராங்க் ஹவுஸ்க்கு எதிர் தெருவிலேயே இருப்பதுதான் இன்னும் சிறப்பு. என்னை நகரத்தின் நடுவிலேயே தங்குவதற்கு அறிவுறுத்திய தோழமையை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். மிக முக்கியமாகப் பார்க்கவேண்டிய இடங்கள் எல்லாமே கைக்கெட்டும் தூரம் என்பது போல் என் கால்களுகெட்டும் தூரத்தில் இருந்தன. கால்கள் கெஞ்சினால் இருக்கவே இருக்கிறது டிராம். மிஞ்சிப்போனால் ஒன்று அல்லது இரண்டு டிராம் நிறுத்தங்களில் அடுத்த இடத்தைப் பார்வையிடச் சென்றுவிட முடியும்.

துலிப் மியூசியத்தைப் பார்வையிட்ட பிறகு அடுத்து நான் சென்ற இடம் ப்ளூமிங் மார்க்கெட். ஆம்ஸ்டர்டாமில் மலர்களைப் பார்த்து ரசிக்கக் கூடிய இன்னோர் இனிமையான இடம் ப்ளூமிங் மார்க்கெட்எனப்படும் மிதக்கும் மலர்ச் சந்தை. 1862ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்தச் சந்தை, மின்சாரம் இல்லாத காலத்தில் கப்பலில் கொண்டு வரப்படும் மலர்களுக்காக அமைக்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் சிங்கெல் கால்வாயின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தச் சந்தை, உலகின் ஒரே மிதக்கும் மலர்ச் சந்தை என்கிற சிறப்பைக் கொண்டுள்ளது. இங்கு துலிப் மலர்கள், கிழங்குகள், மலர் சார்ந்த பரிசுப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கேகேன்ஹாப் தோட்டத்திற்குச் செல்ல முடியாத நேரத்தில், இந்த வண்ண வண்ண மலர்களின் சந்தையைப் பார்த்தும் ஒளிப்படங்கள் எடுத்தும் மகிழலாம். அங்கிருந்த மலர்களுடன் நான் சுற்றிச் சுற்றி ஒளிப்படம் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தேன். எந்த மலரையும் விலை கொடுத்து வாங்கவில்லை என்றாலும் முக மலர்ச்சியுடன் என்னிடம் நடந்து கொண்டனர்.
அடுத்து மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது சைக்கிள் சவாரி. 35 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் சைக்கிள்களுக்கான தனிப் பாதையைக் கொண்டிருக்கும் நாடு நெதர்லாந்து. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் சைக்கிளையே உபயோகப்படுத்துகிறார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, அலுவலகத்துக்கும் சைக்கிள் சவாரிதான். சைக்கிள்களுடன் ரயிலிலும் பயணிக்கலாம். இதற்கான தனி டிக்கெட்டும் உண்டு. சைக்கிள்களுடன் பயணிப்பவர்களுக்காகச் சற்றே இட வசதி கொண்ட தனி இருக்கைகள் ரயில்களில் உள்ளன. நம் திரையரங்குகளில் காணப்படுவது போல மடக்கக்கூடிய இருக்கைகள் ரயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கையில் அமர்ந்துகொண்டு சைக்கிளையும் கையில் பிடித்துக் கொள்ளலாம். சைக்கிள் பயணம் இங்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய சைக்கிள் பார்க்கிங் நெதர்லாந்தின் உத்ரெக்ட் ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ளது. 2019இல் திறக்கப்பட்ட இது 12,500 சைக்கிள்கள் வரை நிறுத்தும் வசதியுடன் மூன்று மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம்க்குச் சுற்றுலா செல்பவர்கள் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து, நகரம் முழுவதும் சுற்றிப் பார்ப்பது வழக்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து யூரோக்கள் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சைக்கிளில் சிட்டென்றுப் பறக்கும் உள்ளூர்வாசிகளுக்குத் தொந்தரவு கொடுக்காமல் பயணித்தால் நல்லது. சைக்கிள்களுக்கென்று தனியே சிவப்பு நிறப் பாதை உள்ளது. தெரியாமல் அதில் நடக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். சைக்கிளுக்குக் கீழே நசுங்கிவிடும் வாய்ப்புகள் அதிகம். உஷாரு!.
வெளிநாட்டில் சைக்கிளா? அது பாட்டரி வைத்த, அதிநவீன சைக்கிளாக இருக்குமே என்று நினைக்க்காதீர்கள். அச்சு அசல் நம் ஊரில் நாற்பது வருடங்களுக்கு முன் ஓடிய முன்புறம் டைனமோ, பின்புறம் கேரியர் மற்றும் பாக்ஸ் வைத்த சைக்கிள். முன்புறத்தில் பெரிய பெட்டி அமைப்புடன் குழந்தைகள் உட்காரத் தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்ட ‘பக்பீட்ஸ்’ சைக்கிள்களும் உள்ளன. சில சுற்றுலாவாசிகள் ’றெக்கை கட்டி பறக்குதடா அண்ணாமலை சைக்கிளு’ என்கிற ரீதியில் தங்கள் துணையை முன்புறம் அமரவைத்து அழகாக ஓட்டிச்சென்றனர்.

நெதர்லாந்து கலாச்சாரம் பசுமைச் சிந்தனையிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் வேரூன்றியுள்ளது. சைக்கிள்கள், காற்றாலை, சூரிய சக்தி ஆகியவை இயற்கையோடு ஒத்துழைக்கும் வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. எளிமையான உணவும் மகிழ்ச்சியான மனநிலையும் அந்த நாட்டை மகிழ்ச்சிக் குறியீட்டில் முன்னணியில் கொண்டு செல்கின்றன.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.



