“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே… வீட்டில இருக்கிற பெரியவங்களுக்கு வாங்கிட்டுப் போங்கண்ணே… சுடச்சுட அல்வா. பல்லு முளைக்காத பச்சக் குழந்தைக்கு வாங்கிக்கொடுங்க; பல்லுப்போன தாத்தாவுக்கு வாங்கிட்டுப் போங்கண்ணே… பீமபுஷ்டி போல நீங்களும் ஆயிடலாம்ண்ணே” ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட குரலில் அழைத்துக்கொண்டிருந்த  கடையில், நிற்க முடியாத அளவுக்குக் கூட்டம். ஆள் உயரத்துக்கு கலர் கலரான பீமபுஷ்டி அல்வாக்களைப் பார்த்ததும் ‘வீரபாண்டி பீமபுஷ்டி அல்வா’ குறித்து ஒரு பெண் ‘நீயா நானா’ வில் கோபிநாத்திடம் பெருமை பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் நின்று பொறுமையாய் இரசிக்க முடியவில்லை.  

நான், மகள் பூஷிதா, தம்பி மகன் ரத்தீஷ் மூவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்தவாறு நடந்து… இல்லையில்லை; மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம். கட்டுக்கடங்காத  கூட்டம். 5 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல். கோவிலில் இருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரம் வரை தற்காலிக சாலையோரக் கடைகள்.  அதென்னமோ வருடா வருடம் இந்தக் கூட்டத்தில் சிக்கி, சின்னா பின்னாமாகினாலும், திருவிழாவிற்கு வரும் ஆசை மட்டும் ஒருபோதும் குறைவதில்லை.

தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி எனும் கிராமம்.  முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் கண்ணீசுவரமுடையாரும் சற்றே தள்ளி கௌமாரியம்மனும் தனித்தனி தலங்களில். சித்திரை மாதம், முதல் செவ்வாய்கிழமை, இந்தக் கோவிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டதும், தேனியும் அதன் சுற்று வட்டாரமும் பரபரப்பாகிவிடும். சொந்த பந்தங்களுக்கெல்லாம் அந்தக் காலத்தில் கடுதாசியும், இந்தக்காலத்தில் போனும் பறக்கும்.   பெரும்பாலும்  கொடியேற்றிய நாள் முதலே அனைவரும் விரதம் என்கிற பெயரில் ஆடு, கோழிகளின் ஆயுட்காலத்தை சற்றே நீட்டிக்கிறார்கள்.

திருவிழா 8 நாள்கள் தான் என்றாலும் கொடியேற்றத்திலிருந்து மொத்தம் 22 நாள்களும் திருவிழா மயக்கத்தில்தான் மாவட்டமே மயங்கிக் கொண்டிருக்கும். கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை, கம்பத்து கோவில் மண்டபத்தில் வைத்து இருக்கும் அத்தி மர முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை ஆற்றின் நீர் எடுத்து ஊற்றுவதற்காக சாரை சாரையாக மக்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். நேர்ச்சைகளும் நடக்கத் தொடங்கி விடும்.  முக்கிய ஊர்களிலிருந்து வீரபாண்டி வரை ஆங்காங்கே இலவச நீர் மோர் பந்தல்கள் நடந்து வரும் பயணிகளின் தாகத்தைத் தணித்துக்கொண்டிருக்கும். காரணமேயில்லாமல் அத்தனை வியாபாரமும் களைகட்டும், விலைகள் வானைத் தொடும்.  ஜவுளிக்கடைகள் நெரிசலில் பிதுங்கி வழியும். பாத்திரக்கடைகள் யானை புகுந்த வெங்கலக்கடை போல சத்தமிடும். பூவுக்கும் மாலைக்கும்  ஏகப்பட்ட கிராக்கி. வழக்கமாக ஜே ஜே என்றிருக்கும் இறைச்சிக்கடைகள் மட்டும் கொரோனா கால தெருக்கள் போல ஆளரவமற்றுக் கிடக்கும்.

சித்திரையின் கடைசி செவ்வாய்க்கிழமை முதல், வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை வரை 8 நாள்கள் திருவிழா. இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்திற்காக வருடம் முழுக்க ஏங்கிக் கொண்டிருப்போம் சிறு பிராயத்தில். விடிய விடிய கூத்து, பாட்டுக் கச்சேரி, நேர்த்திக்கடன், சாமி தரிசனம் எனச் சுற்றி, ராட்டினம் ஏறி கிறுகிறுத்து, சர்க்கஸ் பார்த்து வியந்து, மரணக்கிணறு பார்த்து சிலிர்த்து, கடல் கன்னி பார்த்து அதிசயித்து, கடைசியில் பரந்த வெளியில் விடிய விடிய பொரியும் கடலையும் தின்றுகொண்டே திரைப்படம் பார்ப்பதோடு முடியும் எங்களது திருவிழா நாள்கள். கீ செயினில் பெயர் எழுதித்தரும் ஆச்சர்யமும் அரிசியில் பெயர் எழுதும் அதிசயமும்  வீரபாண்டியில்தான் எங்களுக்கு அறிமுகமானது.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, அதே எள் போட்டால் எண்ணையாய் விழும் கூட்டம், பெரியவர்களின் குதூகலம், வயசுப் பையன்களின் உற்சாகக் கூக்குரல், விசில்கள், வயசுப் பெண்களின் அசத்தலான ஆடையலங்காரங்கள், குழந்தைகளின் ஆர்ப்பாட்ட அட்ரா சிட்டிகள், மேஜிக் ஷோ, பீமபுஷ்டி அல்வா, தலையில் கொம்பு லைட், கம்ப்யூட்டர் ஜோதிடம், மலைக்க வைக்கும் ராட்டினங்கள். “சிவப்பு சட்டையோட, மொட்டை போட்ட ரெண்டு வயசுப் பையன் அழுதிட்டு இருக்கான், பெத்த பிள்ளையை விட்டுட்டு எங்கம்மா போயிட்ட? சீக்கிரம் வாம்மா”, என்ற காவல் துறை அதிகாரிகளின் கலக்கல் அறிவிப்புகள், தேரோட்டம், தீச்சட்டி, மொட்டை, காதுகுத்து, கிடாவெட்டு என  எதிலும் குறைவில்லை. ஒரே வருத்தம், கடைத்தெருவில் நடுநாயகமாக இருக்கும்,  “நாடி நாடிப் போடுவது, போடப்போட நாடுவது…T.A.S.ரத்தினம்  பட்டணம் பொடி, காரம், மணம், குணம் நிறைந்தது T.A.S.ரத்தினம்  பட்டணம் பொடி, தரத்தில் சிறந்தது T.A.S. பட்டணம் பொடி” என பின்னணியில் கம்பீரமான குரலொலி கேட்க, முறுக்கு மீசை வைத்த ஒருவர் உட்கார்ந்தவாறே உரலில்  இடித்துக்கொண்டிருக்கும் பிரமாண்டமான பட்டணம்பொடி விளம்பரம்  மட்டும் இந்த ஆண்டு மிஸ்ஸிங்.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி நீந்தி பராக்குப் பார்த்தவாறே வீரபாண்டி ஊரை நெருங்கி விட்டோம். கோவிலுக்குள் போவதற்கெல்லாம் எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லாததால், எப்போதும் ஊர்சுற்றல் மட்டும்தான். வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் குறித்த தலபுராணங்கள் பல இருந்தாலும் வரலாற்றுச் செய்தியாக, சின்னமனூர் அரிகேசரி நல்லூர் பூலாநந்தீசுவரர் கோவிலின் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் (வீரபாண்டி படலம்) இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் வரலாற்றாளர்கள். இப்படலத்தில் வீரபாண்டி மன்னனின் பக்தி மற்றும் சைவ நெறியுடன்  வீரபாண்டி கோவில் குறித்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

விரிசடை முடியீர் கேண்மின் மீனவ

னிளவள் மௌலி

புரிதிறம் புகன்றா மந்தப் புரவலன்

வைகை மார்க்கம்

வருநெறி யிடையிற் கண்ட மாத்தலம்

வீரபாண்டி

யுரியதென் றங்கேதங்கு முண்மையை

யுரைக்க லுற்றோம்

மூத்திரா சேந்தி ரன்றான் முடிக்கவித்

திராச சிங்கன்

காத்திடக் கிடைத்த வெல்லாங்

கைக்கொண்டு சேனையோடு

பேர்த்தனன் மதுரைவிட்டுப் பெருகிய

வைகை மார்க்கம்

ஆத்திரத் துடன்வ ருங்கா லங்கொரு

கோயில் கண்டான்.

கண்டவிக் கோயிற் றன்மை சுழறுமி

னென வாங்கு

மிண்டினர் தம்மைக் கேட்டான்

விளம்புவா ரையா கேணீ

அண்டர்கள் போற்றுங் கன்னீ

சுரங்கண்ணீச் சுரம் தாங்காண்

பண்டொரு மன்னன்வீர பாண்டிய

நொப்பிலாதான்

என்று தொடங்கும் வீரபாண்டிப் படலம் 34 பாடல்களைக்கொண்டுள்ளது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய  மன்னன் வீரபாண்டியன் ஊழ்வினையின் பயனாக, தனது இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். பெரியோர்களின் அறிவுரைகளின்படி வீரபாண்டி கௌமாரியை வணங்கியதில் ஒரு கண்ணின் பார்வையும், முல்லையாற்றின் கரையில் இருந்த அவளது அண்ணன் ஈசுவரனை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையும் பெற்றான் என்ற  செய்தியும் மக்களால் நம்பப்படுகிறது.   

தனக்கு கண்பார்வையளித்த ஈசுவரனுக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோவில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்ததால், அந்த மன்னனின் பெயரால் இந்த தலமும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது என்கிறார்கள். வீரபாண்டி மன்னனால் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவிலைக் கண்டறிந்ததற்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு.  அளநாட்டின் ஒரு பகுதிதான் வீரபாண்டி. இராசசிங்கன் என்ற  பாண்டிய மன்னன் வைகை மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது, தனது மூதாதையர் கட்டிய கோவிலை கண்டு மகிழ்ந்து அதை சீர்படுத்தினார் என்பதுதான் வீரபாண்டி படலத்தில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறு. ராசசிங்கனின் ஆறாவது பாட்டனார்தான் வீரபாண்டிய மன்னன்.

யோசித்துக்கொண்டே வீரபாண்டி ஆற்றுப் பாலத்திற்கருகில் வந்து விட்டோம். ஆற்றுக்குள் எட்டிப்பார்க்கிறேன்… திருவிழாவையொட்டி எப்போதும் முல்லைப் பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், ஆறு சலசலத்துக் கொண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். அந்த நடு இரவிலும் மொட்டை போடுவதற்கும், குளிப்பதற்கும், தீச்சட்டிக்கு தீ வளர்ப்பதற்குமாய் நீர் தெரியாமல் மொய்த்துக் கொண்டிருக்கிறது கூட்டம்.

சிறு வயதில் வீரபாண்டி ஆற்றுக்குளியல் எத்தனை பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது? 6 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஊருக்குச் செல்ல மிகப்பெரிய மொத்தக் குடும்பமும் ஒரு வாரம் திட்டமிட்டு ஆளுக்கொரு உணவு தயாரித்து காலையில் கிளம்பினால், வீரபாண்டி செக் டேமில் அருவிபோல் வழியும் நீரில் ஒரு குளியல், கண்ணீஸ்வரமுடையார் கோவிலுக்குள் சென்று படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி, பின்புற ஆற்றில் ஒரு குளியல் என முடித்து, கோவில் போய் சாவகாசமாய் கட்டுச்சோறு சாப்பிட்டு ஒரு நாள் பொழுதை இந்த ஆற்றங்கரையில்  கழித்திருக்கிறோம் என்பதை நினைக்கையில் ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்று அமைதியாய் இருந்த கிராமம் இன்று சாதாரண நாட்களிலேயே கூட்டம், நெரிசல், கடைகள் என வியாபாரத் தலமாகி  விட்டது. மொட்டை போட்டு விட்டு  ஆற்று நீரில் குளிக்க ஓடிக்கொண்டிருந்த தனது மகனை, “நோ நோ தட் இஸ் டர்ட்டி வாட்டர். டோன்ட் டச் இட்” எனத் தடுத்து, ஐந்து லிட்டர் மினரல் வாட்டரில் குளிக்க வைக்க முயன்ற மருமகளைப் பார்த்து தாத்தாவும் பாட்டியும் பாய்ந்து வருகிறார்கள். “அதென்ன அப்படிச் சொல்ற… ஊருக்கெல்லாம் நோய் தீர்க்குற அம்மனுக்கே முல்லையாத்துத் தண்ணிதான் தீர்த்தம், அதெல்லாம் ஒண்ணும் செய்யாது, நீ போய் குளிடா” என ஆற்றை நோக்கி பேரனை இழுத்துக்கொண்டு போகிறார்கள். பாலம் கடந்து மேலும் ஊர்கிறோம்.

திருவிழா நடக்கும் எட்டு நாள்களும் கோவில் 24 மணி நேரமும் திறந்திருக்கும். தேனியிலிருந்து விடிய விடிய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் இரவு, பகல் என்பதெல்லாம் தேனி மாவட்டத்து மக்களுக்குக் கிடையாது. காந்தி கண்ட கனவு வீரபாண்டியில் நிறைவேறும் என்று காந்தியே  எதிர்பார்த்திருக்க மாட்டார்.  கனத்த பட்டுச்சேலையும் கழுத்து நிறைய நகைகளுமாய்  எந்தவித பயமுமின்றி இரவு முழுக்க  பெண்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுமணத் தம்பதிகள்   போல… மனைவி கேட்பதையெல்லாம் சிரித்த முகத்துடன் மறுக்காமல் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார் கணவர். தொடர்ச்சியாக முளைப்பாரிகளும் தீச்சட்டிகளும் வர இளந்தாரிகள் மேளத்திற்கேற்ப குத்து நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். ரப்பர் நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆறு அட்டைக் கைகள் ப்ளஸ் இரண்டு நிஜக்கைகளுடன் கடவுள் வேடமிட்டு நடனமாடிக்கொண்டே வந்த பக்தர் ஒருவர், டயர்டாகி விட்டார் போல, “ஒரு டீ போடுங்கண்ணே…” என்று கேட்டு வாங்கி ஓரமாய் நின்று அருந்துகிறார்.

80 வயது பாட்டி ஒருவர் தலையில் கொம்பு லைட் மாட்டிக்கொண்டு கணவரைப்பார்த்து வெட்கத்துடன் சிரிக்கிறார். தலையில் ரீத் போல ஒளிரும் விளக்குகள் இந்த வருட அறிமுகம் போல. சிறுவர் பெரியவர் என வயது வித்தியாசமில்லாமல் அனைவரின் தலையிலும் ஒளிவட்டம். தீச்சட்டி ஏந்தி வருபவர்கள் அனைவருக்கும் தவறாமல் அருள் வந்து விடுகிறது. அம்மன் முகம் பதித்த ஐந்தடி உயர முளைப்பாரியை ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடி வர, பயபக்தியுடன் வழிவிடுகிறார்கள் அனைவரும். அலகு குத்திக்கொண்டு, அக்கினிச்சட்டி ஏந்திக் கொண்டு, ஆயிரம்கண் பானை எடுத்துக்கொண்டு, முல்லையாற்றங்கரையில் சேற்று மண் எடுத்து உடலெங்கும் பூசிக்கொண்டு என அவரவர் விருப்பப்படி நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்திரை மாதம் கடும் வெயிலில் வெம்மை நோயால் அவதிப்படும் மக்கள், அந்தக்காலத்தில் வேப்பங்குச்சியை எரிய வைத்து அதை மண் சட்டியில் எடுத்து ஊரை வலம் வருவார்கள். அந்த வேப்பங்குச்சிப் புகை ஊர் முழுக்கப் பரவுவதால் நோய்த் தொற்று ஏற்படாது. அதுதான் அக்னிச்சட்டி நேர்ச்சையாக மாறியிருக்கிறது. மாவட்டத்தின் எந்த ஊரிலும் யாருக்கு அம்மை வந்து விட்டாலும், அம்மனிடம்தான் முதல் முறையீடு. அம்மை நோய் குணமானவர்கள் உடல் முழுக்க சேற்றைப் பூசி, ‘சேத்தாண்டி வேஷம்’ கட்டி ஊர்வலம் வருகிறார்கள். ‘மண்ணோடு மண்ணாப் போயிருக்க வேண்டிய உயிரை நோயிலிருந்து காப்பாத்திட்ட தாயே’ என்பதற்காகத்தான் சேற்று மண் நேர்ச்சையாம். ஒரு பெண் 10 அடி நீளமுள்ள அலகைக் குத்திக்கொண்டு அருளோடு ஆடிக்கொண்டிருக்க, இருபுறமும் அலகு தரையைத் தொடும் அளவிற்குத் தாழ்ந்து கிடக்கிறது. பார்க்கும் நமக்கு வாயெல்லாம் வலிப்பது போல இருக்கிறது.

அம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு அசைவ உணவு அன்னதானம் செய்யும்  வழக்கம்  இருக்கிறது.  நேர்ச்சையிடுவது என்னவோ அம்மனுக்காக இருந்தாலும், வாசலில் நிற்கும் காவல் தெய்வம் கருப்பசாமியின் பெயரைச் சொல்லி இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. வீரபாண்டி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று கிடாவெட்டுக்கு உறவுகளை அழைத்து, விருந்து வைத்து, மொய் வாங்குவது. இது ஒரு சமூக, கலாசார நிகழ்வாகவே மாறிவிட்டது. கொஞ்சம் உடல் பலவீனமானவர்கள் ஆயிரம் கண் பானை, பால்குடம், மாவிளக்கு என தங்களுக்கு எளிதான நேர்த்திக்கடனை வேண்டிக்கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான  திருநங்கைகள் அல்லிநகரத்திலிருந்து முளைப்பாரி எடுத்து கிட்டத்தட்ட 8 கி.மீ. நடந்தே வந்து திருவிழா கொண்டாடியிருக்கின்றனர்.

பக்தி, கலாசாரம் என்பதெல்லாம் கடந்து திருவிழாக்கள் வணிக நோக்கில் பெருநிறுவனங்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவருக்கும் பெரும் நம்பிக்கையையும், எளிய மனிதர்களுக்கு இடைக்கால வேலைவாய்ப்புகளையும், கரகாட்டம், தப்பாட்டம் என பாரம்பரிய கலைஞர்கள் வாழ்வில் சற்றேனும் வெளிச்சத்தையும் தருகின்றன. இந்த 22 நாள்களும் மேகமலை, கும்பக்கரை, சுருளி, வைகை அணை, மஞ்சளாறு, என திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம்தான் என்பதால், வணிகம் முதல் சுற்றுலா வளர்ச்சிவரை வீரபாண்டித் திருவிழாவின் தாக்கம் இருக்கிறது.

ஒரு வழியாக ஊர்சுற்றி, வேடிக்கை பார்த்து, பிடித்ததை வாங்கிக்கொண்டு கிளம்ப அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. மீண்டும் 3 கி.மீ. நடந்தே இரு சக்கர வாகனம் நிறுத்தியிருக்கும் இடத்திற்குத் திரும்புகிறோம். எங்களுக்கு எதிர்திசையில் இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 200 ஆண்டுகளாக இந்தக் கொண்டாட்டம் நடப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுவது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், எந்தவித மதவேறுபாடும் இல்லாமல் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ள ஒரு மாவட்டமே சேர்ந்து இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவதைப்போல இருக்கிறது.

இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்ததாகச் சொல்கின்றன நாளிதழ் செய்திகள். வருடந்தோறும் கேரளாவில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். சமீப வருடங்களில் வட மாநில முகங்களை அதிகம் காண முடிகிறது.

தென் தமிழகத்தின் மேற்கே அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்று, கொண்டாட்டம் என்பது தமிழர் வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. திருவிழாக்கள் வெறும் பொழுதுபோக்கு அல்ல,  நமது கலையை, கலாசாரத்தை, வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவை. வீரபாண்டித்திருவிழா என்பது தேனி மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்துவிட்ட ஒரு நிகழ்வு. எந்த வயதினரைக் கேட்டாலும், அவர்களிடமும் வீரபாண்டித் திருவிழா குறித்து சொல்வதற்கு ஒரு நினைவு கட்டாயம் இருக்கும்.   

“ஒண்ணும் கவலைப்படாத… இந்த வீரபாண்டி ஆத்தா எல்லாத்தையும் பாத்துக்குவா” மகனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு கிளம்பும் அந்த தாயின் சொற்களில் இருக்கும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கை தரும்  மனவலிமையும்தான், அடுத்த 11 மாதங்களுக்கு வாழ்க்கையோட்டத்தில் இலகுவாக பயணிக்க அவர்களுக்கு உதவும் பாய்மரக்கப்பலாக இருக்கப் போகிறது.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.