ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?

போன அத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்னும் சில எல்லைக்கோடு வகைகளைப் பார்ப்போம்.

மனம்: நம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கருத்துகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நமக்கெனத் தனிபட்ட தேர்வுகளை வைத்திருக்கும் உரிமை. அதில் மற்றவரின் தலையீட்டைத் தவிர்க்கும் உரிமை நமக்கு நிச்சயம் உண்டு.

அது எத்தனை நெருக்கமான உறவோ நட்போ அவர்களின் கருத்துகளை, நம்பிக்கைகளை நாம் மதிக்கும் அதே நேரம், அதிலிருந்து வேறுபடவும் நமக்கு முழு உரிமை உண்டு. நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்பதற்காக, நம் கருத்துகளை அவர்கள் மீது திணிப்பதும் தவறு.  அவர்கள் கருத்துகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பதும் தவறு.

உணர்வுகள்: இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம். நம் மிக நெருங்கிய உறவோ நட்போ ஒரு பிரச்னையில் அல்லது உணர்வுப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் போது, நம்மை அறியாமலேயே ஓடோடிச் சென்று உதவுவது இயல்பான ஒன்று. ஆனால், அப்படிச் செய்யும்போது நம்மை அறியாமலேயே நம் மனதும் அந்த உணர்வில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணி அவர்களிடம் பரிவாக இருப்பது எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் நாமும் அதே உணர்வில் சிக்கி நம் மன அமைதியை இழந்து விடாதிருப்பது. அது போன்ற ஒரு சூழ்நிலையில், நம் நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறும் உரிமையும் நமக்கு உண்டு.

பொருட்கள் : நமது பொருட்கள், உடமைகள் அனைத்திற்கும் பொருந்தும். கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு இது நன்றாகப் பொருந்தும், புரியும். விடுதியில் தன்னுடையது என்று தனியாகச் சொந்தம் கொண்டாடுவது கடினமான செயல். உள்ளாடைத் தவிர அனைத்தும் யார் வேண்டுமானாலும், யாருடையதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் அங்குண்டு.  விடுதி வாழ்க்கையில் அது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனாலும் ஒரு சில பொருட்கள் நமக்குத்  தனிப்பட்ட முறையில் கொஞ்சம் ஸ்பெஷல் எனும் போது அதைத்  தெளிவாக வரையருக்கும் உரிமையும் நமக்குண்டு.

பேச்சு : நாம் எப்போதும் எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லும் கந்தசாமி என்றால் பிரச்னையே இல்லை. நாமும் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவோம், மற்றவர் எதைப் பற்றிப் பேசினாலும் அதற்கும் பதிலளித்து, விவாதம் செய்து பொழுது போக்குவோம். ஆனால், சிலர் அநாவசியமாக எதிலும் தலையிடாமல் அமைதியாக இருக்க விரும்பலாம், அல்லது சில விஷயங்களைப் பற்றிப் பொது வெளியில் பேசத் தயங்கலாம், விருப்பமில்லாமல் இருக்கலாம். அது போன்ற நேரத்தில் நாம் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்பதை நாகரீகமாகச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு. சில நேரம் நமக்கு மிகவும் தனிப்பட்ட விஷயங்களைப் பேச விரும்பாவிட்டாலும், நாம் அதை தெரிவிக்கலாம். இத்தனை நெருக்கமான உறவிடம் எப்படிச் சொல்வது என்கிற தயக்கம் தேவையே இல்லை. நமக்கு எல்லாக் காலத்திலும் நெருக்கமான முதல் உறவு நாம் மட்டும்தான். நம்மைக் காயப்படுத்தி யாரையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயமே இல்லை.

சுய நேசம் என்பது நம் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல, தன் மனம் சார்ந்த விஷயங்களிலும் நம்மைக் காயப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே. நாம் எப்போதுமே, நம் நேசத்திற்கு உரியவர்களை, நம்மைவிட அதிகமாக நேசிப்போம். நம் குழந்தைகள், இணையர், காதலர் / காதலி, தோழமைகள், குடும்பத்தார்கள் இவர்களின் சிரிப்பில் நம் மகிழ்ச்சியைத் தேடுவோம். இது நேசத்தைத் தாண்டிய தியாக உணர்வு. சிறு வயதில் இருந்தே அப்படி பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஒரு நாள் சமையலில் ஏதோ ஒரு காய் சிறப்பாக அமைந்துவிட, குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்கும்போது, நமக்கில்லா விட்டாலும் பரவாயில்லை என்று கொடுத்து விடுவோம். அது ஒரு வகை அன்புதான் மறுப்பதற்கில்லை. ஆனால், மற்ற அனைவருக்கும் போதுமா என்று சீர்தூக்கிப் பார்க்கும் பண்பினை நாம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர மறந்து விடுகிறோம். அவர்கள் வளர்ந்த பின்பும் அதே குணத்தில்தானே வளர்வார்கள்? நீங்கள் ஒருவேளை,               “கண்ணா, இவ்வளவுதான் இருக்கு, உனக்குப் பிடிச்சதால இன்னும் கொஞ்சம் தரேன், இன்னும் நான் சாப்பிடவில்லை. எனக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்கிறேன்“ எனக் கூறிப் பாருங்கள். நீங்கள் குழந்தை கேட்டதை ஒரேடியாக மறுக்கவில்லை. அதே நேரம் மற்றவருக்கும் வேண்டுமென்பதை உணர்த்தி ஆயிற்று. அடுத்த முறை குழந்தையும் அந்தப் பாடத்தை நினைவில் வைத்திருக்கும். வளர்ந்த பின் எந்தக் குழந்தை மற்றவருடன் சிறப்பாக உறவாடும் என நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் சுய நேசம், உங்களை மட்டும் மகிழ்ச்சியாக்கவில்லை. உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் சிறப்பான மனிதர்களாக்கும்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.