பேருந்தில் திருச்சிக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் போனபோதே பேரனுபவம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து ஒரு விள்ளலை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

அன்று காலை 7 மணிக்குக் கிளம்பியவள், மாலை 5 மணிக்குத் திருச்சி சேர்ந்தேன். அரசுப்பேருந்தில் திண்டிவனம், விழுப்புரம் என்று எல்லா ஊரையும் குறைந்த செலவில் சுற்றிக் காட்டினார் நடத்துநர். அடுத்த நாள் மாலை, வந்த அனுபவம் போதும், நாம் சிறப்பாகக் கிளம்புவோம், சீக்கிரமாக வீட்டுக்குப் போகலாம்; அப்படியே ஒரு போர்வைக்குள் நம்மைச் சுருட்டிக்கொண்டு அந்தக் கதகதப்பில் உறங்கலாம் என்ற நப்பாசை. எதற்கும் இருக்கட்டுமென்று குளிர்சாதன வசதியுள்ள அரசுப்பேருந்தில் விசாரித்தபோது கிளாம்பாக்கத்துடன் சரியென்று வெட்டிச் சொன்னவரைப் புழுப்போலப் பார்த்துவிட்டு, தனியார்ப் பேருந்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் போர்வை, கதகதப்பு, நப்பாசை வேறு மனசுக்குள் திரும்பத்திரும்பச் சுற்றியது. அப்போது வந்தார் என் தேவதூதன்; அக்கா, உங்களை 11 மணிக்கெல்லாம் தாம்பரத்தில் விட்டுடுவோம், எங்க பேருந்துக்கு வாங்க என்று அழைத்தார்.

அப்போது மணி 4.30. அவருடன் பேசி, உறுதி செய்து, டிக்கெட் வாங்கி, நம்பிக்கையுடன் வண்டியில் ஏறி அமர்ந்தபோது மணி 5. பிறகு அந்த நல்லவர் அவ்வப்போது என்னைப் போன்ற ஆடுகளைப் பற்றிக்கொண்டு வந்து ஏற்றிக்கொண்டே இருந்தார். அக்கா, இப்போ எடுத்துடுவாங்க அக்கா, வண்டி நிறைஞ்சுடுச்சுன்னா எடுத்துடுவாங்க அக்கா என்று சொல்லிச்சொல்லி ஏறினார், இறங்கினார். வண்டி மெல்ல நிறைந்து எடுக்கும்போது 7.

அக்கா, 11 மணிக்குத் தாம்பரம் போயிடுவாருக்கா. ஏதாச்சும் பாத்துச் செய்யுங்க அக்கா என்று தலையைச் சொரிந்தபடியே நின்று, மீண்டும் மீண்டும் கெஞ்சி, என்னிடமிருந்து ஒரு தொகையையும் பெற்றுக்கொண்டு இறங்கி விட்டார் போல. அவர் தொடர்ந்து கேட்டபடி இருந்தது பெரும் தொந்தரவு; டிக்கெட்டுக்கு மேல் இவருக்கு எதற்குப் பணம் என்று மறுத்தபோது தொடர்ந்த அந்தக் குரல் மாபெரும் எரிச்சல்; அந்த நெகட்டிவ் பொய்யர் அருகில் நிற்கக்கூடாது என்பதற்காகவே காசைக் கொடுத்து அனுப்பி வைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மிக மோசமான அனுபவம்; பிறகு எத்தனை மணிக்குத்தான் சென்னை வந்தேன் என்று கேட்கிறீர்களா.. வழியில் டயர் பங்க்ச்சர், உணவுக்கு ஹோட்டல் எல்லாம் போய், தாம்பரத்தில் இறங்கும்போது இரவு 1.30. க்ளைமாக்ஸ் சீன் என்ன இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்று வருத்தத்துடன் ஓலா, ஊபர் என்று முயன்றபோது எதுவும் கிடைக்கவில்லை. போர்வை, கதகதப்பு எல்லாம் நினைவிலேயே இல்லை. ஆனால் மழை பெய்து ஓய்ந்து மெல்லிய குளிர்; அப்படியே ஒரு பேருந்தில் ஏறினேன்.

ஒருகணத்தில் எல்லாமும் மாறிப் போனது. மண்ணில் மலர்ந்ததொரு இரும்புப் பூவில் வேடிக்கை பார்த்தபடியே சில்லென்ற காற்றை அனுபவித்தேன். சுற்றிலும் போதிய அளவு மனிதர்கள்; தேவையான அளவு வெளிச்சம்; இரைச்சலற்ற அமைதி; வண்டி போய்க்கொண்டிருந்தது. இப்படியொரு இரவுப்பயணத்தை, எதிர்பார்க்காத அற்புதப்பரிசை மனம் கொண்டாடியபடியே இறங்கி, அடுத்த பேருந்தில் ஏறினேன். மீண்டுமொரு பயணம். தேநீர் குடிக்க வேண்டுமென்று தோன்றியபோது இறங்கித் தேநீர் பருகியபடி சாலையைப் பார்த்தால் கருந்தார்ச்சாலை ஒளியும் நீரும் முயங்கி மினிமினுத்துத் தகதகத்தது. பேரனுபவமடா இது என்று அதை உள்ளங்கையில் பொத்தி வைத்து இல்லம் சேர்ந்து போர்வையும் கதகதப்பையும் அனுபவித்தாயிற்று.

நப்பாசை நப்பாசையென்று ஒரு சொல் மனத்தில் வந்து விழுந்ததில்லையா; இதென்னடா நப்பாசை, ஆசை தெரியும்; அதென்ன நம்பு + ஆசையா என்று அங்கிருந்து சொல்லாராய்ச்சிக்குத் தாவியாயிற்று. நைப்பு + ஆசையோ ஒரு வேளை. நயப்பு என்பது இடைக்குறையாகப் பேச்சுவழக்கில் நப்பு என்று ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. நயத்தலென்றால் விரும்புதல். ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்று வள்ளுவர் கூடப் பயன்படுத்தியிருக்கிறாரே. நப்பாசை என்றால் நாம் வேண்டுமொன்று நிறைவேறுமென்று நம்புவது. நம்பு என்பதில் இருக்கும் மகர மெய்யெழுத்து கூட ஒருவேளை பகர மெய்யாகக் காலப்போக்கில் திரிந்திருக்கலாம். அகராதி, நாவின் தீராவாசை, வீணான ஆசை என்று சொல்கிறது. நப்பி என்றால் சொல்வழக்கில் கருமி, கஞ்சன் என்றொரு பொருளும் உண்டு. சரிதான், இதை இப்படியே வைப்போம்.

லப்பர் பந்து பார்த்தேன், எதிர்பார்க்கவேயில்லை. அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனளவில் முழுமையாக இருந்தது நேர்த்தி. அட்டகத்தி தினேஷ் அட்டகாசம் செய்திருக்கிறார்; ஹரீஷ் கல்யாண் போட்டி போட்டு நடித்திருக்கிறார், வெகு இயல்பான நடிப்பு. ஸ்வாசிகா, சஞ்சனா, பெண் கிரிக்கெட்டர் அகிலா, கீதா கைலாசம் என்று ஒவ்வொருவருமே உறுதியான பெண் கதாபாத்திரங்கள். உண்மையில் கெத்தையே மிரட்டும் யசோதை கெத்தா, அவளையும் உருட்டும் மகள் கெத்தா என்று யோசிக்க வைத்தார்கள். படம் பேசும் அரசியல் முக்கியமானது. வசனங்கள், எழுதியவர் யார் என்று தேட வைத்தது. காதல், ஈகோ, சாதிய வன்மம் இவையெல்லாவற்றையும் சரியான விகிதத்தில் கலந்த திரைக்கதையில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர்.

ஆண்களோடு பெண்களும் இணைந்த அணி என்பது எனக்குப் பிடித்திருந்தது. இறுதியில் அந்த அணிதானே வென்றிருக்க வேண்டும். அந்த முடிவு மட்டும் எனக்கு வருத்தம். மற்றபடி, எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்கத் தொடங்கி, கொஞ்சமும் நகரமுடியாதபடி செய்த படம் லப்பர் பந்து. மெல்லிய நகைச்சுவை, அழகியல் கூறுகள், சிறப்பான காட்சியமைப்பு, கூர்மையான வசனங்கள் என நல்லதொரு திரையனுபவம்.

சிறுவயதில் தாத்தாவுடன் கிரிக்கெட் பார்த்தது, அவரோடு அதைப் பற்றிப் பேசியது, நேரடியாக ஸ்டேடியத்தில் அவருடன் சென்று கிரிக்கெட் வீரர்களைப் பார்த்தது எல்லாமும் நினைவுக்கு வந்தது. அதுவொரு கனாக்காலம்!

படைப்பாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கிறார்.