தமிழ் இலக்கியத் தொண்டர்கள்

தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில தகவல்கள் கிடைத்தன.

சிறுகதையின் முன்னோடியாகத் திகழ்ந்த வ.வே.சு, பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம், அறிவியல் தமிழ் வளர்த்த பெ.நா. அப்புசாமி, நாடகத் தமிழ் வளர்த்த பம்மல் சம்பந்தம், மாயூரம் வேதநாயகம், தமிழின் சிறப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்த மு.சு. பூர்ணலிங்கம், தமிழ்வேள் உமாமகேசுவரனார், மொழியியலை வளர்த்த அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், சட்ட நூல்களைத் தமிழில் தந்த கா. சுப்பிரமணியம், ஆய்வறிஞர் எஸ். வையாபுரி, சி.கே. சுப்பிரமணியம், இசைத்தமிழ் வளர்த்த ஆர்.கே. சண்முகம், வட்டத்தொட்டி வைத்துத் தமிழ் வளர்த்த ரசிகமணி டி.கே.சி ஆகியோர் வழக்குரைஞர்களாகவும் நீதிபதிகளாகவும் இருந்தவர்கள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார், நல்ல வருமானம் வரக்கூடிய வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். ‘கற்பிப்பதில் கிடைக்கும் சுகமே தனி’ என்பார் அவர். அன்று, கல்லூரி ஆசிரியர்களுக்கு முப்பது ரூபாய் சம்பளம் (1888). மற்ற பாட ஆசிரியர்களை விடவும் தமிழாசிரியர்களுக்குச் சம்பளம் குறைவு என்பதையும் கவனிக்க வேண்டும்.

புதுமைப்பித்தன், ‘சாப விமோசனம்’ எழுதுவதற்குக் காரணமான ‘அகலிகை வெண்பா’ என்கிற நூலை எழுதிய வெள்ளக்கால் சுப்பிரமணியம் ஒரு கால்நடை மருத்துவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்ற வரிசையில் ஆய்வுபூர்வமாகக் கொண்டுவந்தவரும், ‘சங்கம் என்ற அமைப்பு இருந்ததில்லை’ என்ற கருத்தை எடுத்துரைத்தவருமான கே.என். சிவராஜன், காவல் துறையில் பணியாற்றியவர். பின்னர் ஆர்வத்துடன் தமிழ் கற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் முதல் தலைவராக விளங்கியுள்ளார்.

கோள்களின் அடிப்படையில் இலக்கிய நூல்களின் காலத்தைக் கணித்தவருமான எல்.டி. சாமிக்கண்ணுவும் சட்டப்படிப்பு முடித்தவர்; மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தவர்; தமிழ்நாடு சட்டசபையில் இன்று உள்ள பெரிய நூலகம் உருவாகக் காரணமாக இருந்தவர் இவரே.

இவர்களையெல்லாம் யோசிக்கும்போது அசந்தர்ப்பமாக, லட்சங்களில் ஊதியம் பெற்றுக்கொண்டு குறைந்தபட்சமான வேலைகளைக்கூடச் செய்யாத இன்றைய கல்லூரிப் பேராசிரியர்கள் நினைவுக்கு வந்து தொலைகிறார்களே, என்ன செய்ய? இலக்கிய வாசிப்பே இல்லாத கல்லூரி ஆசிரியர்கள் இருக்கும் பல்கலைக்கழகங்களிலோ இலக்கிய, இலக்கண ஆய்வுகளுக்கும் வழியில்லை. தமிழின் சோகம்!

***

CTRL

CTRL படம் பார்த்தேன். உண்மையில் மிக பீதியாகவே இருந்தது. பயன்படுத்துகிறோமோ, இல்லையோ; நம் அலைபேசியில் எத்தனை Appகளைத் தரவிறக்கி வைத்திருக்கிறோம்; Allen போல நமக்கு ஒரு துணை இல்லையே என்று படம் பார்க்கத் தொடங்கிய நேரத்தில் வருத்தப்பட்டேன்; ஆனால் தொழில்நுட்ப இருப்பின் இருண்ட பக்கத்தைக் கண்டபோது பயந்தே போனேன். டிஜிட்டல் வசதிகளுக்கு நாம் எவ்வளவு அதிகமாகச் சாய்கிறோமோ, அந்த அளவு அதிகமாக, நாம் நம் வாழ்வின் மீதும் உறவுகளின் மீதுமான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்பதை இப்படம் மீண்டுமொரு முறை நினைவூட்டியது. செயற்கை நுண்ணறிவின் காரணமாக, நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை இழக்கும் ஆபத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இப்படம். நம்முடைய வாழ்வைக் கண்ணுக்குத் தெரியாத நிறுவனங்கள் நிர்வகிப்பதை, கட்டுப்படுத்துவதை – நாம் அளவுக்கதிகமாகத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதை – பயனர்களாகிய நாமே பண்டமாகப் பயன்படுத்தப்படுவதை  CTRL வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

நெல்லாவின் இருப்பும் அவளுடைய ஆன்லைன் வாழ்வும் ஜோவுடனான உறவைச் சார்ந்தே இருந்தது. அதுவே அவளுடைய வருமானத்துக்கான ஆதாரமும். ஆனால், ஜோ நெல்லாவை ஏமாற்றிய பிறகு, அவள் தன் பழைய வாழ்வை மறக்கடிக்க ALLEN எனும் AIஇன் உதவியை நாடுகின்றாள். ஜோவின் படங்கள் பிக்சல் பிக்சலாக அழிக்கப்படுவதும் கடைசிப் படத்தின் கடைசி பிக்சல் அழியும்போது ஜோவே இல்லாமல் போவதும் காட்சிப்படிமம்.

தொழில்நுட்பத்தால் அடிமைப்பட்ட உலகில், நம்மைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிடியில் இருந்து நாம் தப்புவது கடினம். மந்த்ரா போன்ற பெருநிறுவனங்கள் AI மற்றும் தரவுக் கையாளுதலைப் பயன்படுத்தி மக்களை அடிபணியச் செய்கிறது. இறுதியில், டிஜிட்டல் யுகத்தில் மக்கள் முன்னெடுக்க முயன்று தோற்கும், பெரும் போராட்டங்களை நெல்லாவின் பின்வாங்குதல் அடையாளப்படுத்துகிறது. படத்தின் கடைசிக் காட்சியில் நெல்லா, ஜோவின் AI பதிப்பைத் தன் தோழமைக்காகத் தேர்ந்தெடுக்கின்றாள். தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் ஊடுருவுவது மட்டுமன்றி உணர்ச்சிகளையும் சுரண்டுகிறது என்பது மிகவும் மனச்சோர்வடைய வைக்கும் செய்தி. நம்மைச் சுரண்டும் அமைப்புகள் அளிக்கும் அற்ப மகிழ்ச்சியின் சாயலுக்கு ஈடாக நாம் நம் சுயத்தையும் சுதந்திரத்தையும் எப்படிக் கைவிடுகிறோம் என்பதை நெல்லா காட்டுகிறார். சர்வ வல்லமையுள்ள பெருநிறுவனங்களால் ஆளப்படும் இவ்வுலகில் மிச்சமிருக்கும் ஒரே வழி, எதிர்ப்பு, சாத்தியமற்றதென்று உணர்ந்து அதற்கு அடங்கி வாழ்தல் என்பதையே நெல்லாவின் வாழ்வு வலியுறுத்துகிறது.

நம் அலைபேசி, கணினி உள்ளிட்ட அனைத்தும் வலைப்பின்னலால் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னலுக்குள் சிலந்தியென அகப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து இன்னுமின்னும் ஆழச் செல்கிறோம் நாம். மீள நினைவூட்டியிருக்கிறது இந்தப் படம். சற்றே பதற்றம்தான். மீண்டும் பட்டன் போனுக்கே போய்விடலாமாவென்று தோன்றுகிறது. முடியுமா?

***

ம.பொ.சி

விஜயதசமியின் முன்மதியப் பொழுதொன்றில் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழிருந்து ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் வீட்டுக்குச் செல்வதற்கு ஓலா, ஊபர் போன்ற பயண Appகளில் ஆட்டோ, கார், இருசக்கர வண்டி ஆகிய எல்லா வாகன வகைமைகளிலும் முயன்று, ஒரு வண்டியும் கிடைக்காது சோர்ந்தேன். அங்கிருந்து எப்படியும் வீடு செல்ல வேண்டுமென்பதால் நடந்தே சேகர் எம்போரியம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.  

அங்கே, சற்று வயதான முதியவர் ஒருவரின் ஆட்டோ நின்றிருந்ததைப் பார்த்தேன். அவரிடம் கேட்கலாம், இல்லையென்றால் 12B பேருந்தில் செல்வோம் என்று நினைத்துக் கேட்டேன். 150 ரூபாய் கேட்டு, 130 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டார்.

வழியெல்லாம் விஜயதசமிக் கொண்டாட்டத்தில் வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன; போக்குவரத்து நெரிசல் கன்னாபின்னாவென்று இருந்தது. ஓட்டுநர் எப்படியெப்படியோ சுற்றிக்கொண்டு போனார்; நானோ, 150 ரூபாயே கொடுத்து விடுவோம், இவ்வளவு நெரிசலாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். வழியில் நீண்ட வரிசை; புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் கலைஞர் பூங்காவைப் பார்க்க, அந்த மட்ட மதியத்தின் ஊமை வெயிலில் இவ்வளவு பெரிய வரிசையா என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அப்படியே, எங்கள் சிறிய சந்துக்கருகில் வரும்போது ஆட்டோ ஓட்டுநர், “இது ம.பொ.சி வீட்டு சந்தாச்சே, இங்குதான் அவர் வாழ்ந்தார்”, என்றார். எனக்கு ஆனந்த அதிர்ச்சியும் மகிழ்ச்சியும். அவர், “ம.பொ.சி எவ்வளவு பெரிய ஆள், அந்தக் காலத்துப் பெரிய தலைவர், எம்.ஜி.ஆர் கருணாநிதி இருவருமே அவரை மதித்தார்கள்”, என்றெல்லாம் சொல்லவும், “நான் அவருடைய பெயர்த்திதான்” என்று சொல்லியபடியே வீட்டருகில் ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன்.

அவருக்கு ம.பொ.சியின் பெயர்த்தியிடம் பேசியதிலும் 150 ரூபாய் கொடுத்ததிலும் மகிழ்ச்சி; எனக்கோ, தாத்தாவை ஒருவர் நினைவுகூர்ந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

தொடரும்…

படைப்பாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார்.