வீட்டின் தலைச்சன் பிள்ளை என்றாலும், அப்பாவுடனான பைக் பயணத்தில் எப்போதும் எனக்கு வாய்த்தது பின்னாலுள்ள பில்லியன் சவாரிதான். அவரின் அம்மா – என் பாட்டி வீட்டுக்குச் சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு சின்ன குஷனை அம்மா எனக்குத் தருவார். கம்பிகள் கொண்ட பில்லியனில் சுமார் 3-4 மணி நேரம் உடல் வலி இல்லாமல் பயணிக்க எனக்குத் தரப்படும் சிறு ஆசுவாசம் அந்த மெல்லிய குஷன்.
தம்பிகள் இரண்டு பேரும் பெட்ரோல் டாங்கில், அம்மாவும் அப்பாவும் சீட்டில். 1990களின் நாங்குநேரி – விக்கிரமசிங்கபுரம் பயணம் திகிலானது. பெரும்பாலும் பின்மாலை தொடங்கும் பயணத்தின் முடிவில் வீடடைவதற்குள், மூச்சு முட்டிவிடும். களக்காடு காப்புக் காட்டுக்குள் மாலை மங்கும் நேரம் பைக்கில் செல்வது, பெரும் அச்சமூட்டும் அனுபவம்.
மேலே வானத்தில் நிலா. எப்போதாவது சாலையின் ஓரம் மினுக்கும் ஒற்றை டியூப் லைட் வெளிச்சம். அவ்வளவே ஒளி. வலது பக்கம் வளைத்து எங்கோ வெறித்துப் பார்க்கும் கண்களை, வீடு சென்று சேரும்வரை இடது பக்கம் திருப்பி, வண்டிக்குப் பின்னால் இருளின்புறம் திருப்புவதே கிடையாது. எப்போதாவது கடந்து செல்லும் நாய்களைத் திரும்பிப் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒளிரும் அவற்றின் கண்களைக் கண்டு அச்சத்தில் கண்களை இறுக்க மூடிக்கொள்வது உண்டு.
வீட்டின் வெளிப்பக்கம் இருக்கும் கழிவறைக்கு நான் செல்லும் போதெல்லாம், வீட்டுக்குள்ளிருந்தே மின் விளக்கை அணைத்து தம்பிகள் விளையாடி என்னை அலறவிடுவது வாடிக்கை. செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என வாரத்தின் இரு நாள்களில் இரவு எட்டு மணிக்குமேல் நடன வகுப்பை முடித்துக் கொண்டு, பைக்குள் போட்ட சலங்கை ‘ஜல், ஜல்’ என ஓசை எழுப்ப தனியே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வீடு திரும்புவேன். பல முறை அந்த ஜல் ஜல் ஒலிக்கு, தெருநாய்கள் துரத்தியது உண்டு; அவையா நானா என அவற்றுடன் ஓட்டப் பந்தயம் நடத்தியது உண்டு; யார் வீட்டு காம்பவுண்டு சுவருக்குள்ளாவது ஓடி ஒளிந்து தப்பிய அனுபவங்களும் உண்டு.
அதிகாலை ஆறு மணிக்கே இருள் பிரியாத அதிகாலை நேரத்தில், மற்ற வீட்டுப் பெண்கள் வாசலில் கோலம் போடும்போது, குளித்துமுடித்து கூந்தல் ஈரம் சொட்டச் சொட்ட, சைக்கிள் பெடல் மிதித்து, வேகு வேகென்று அதன் விளக்கொளியில் ஹிந்தி டியூஷனுக்கு எதிர்காற்றில் பறந்த நாள்கள் உண்டு. அப்போதும் நாய்களால் துரத்தப்பட்டது உண்டு. இருள், நாய் – இந்த இரண்டுமே சிறு வயதில் எனக்கு அச்சமூட்டினாலும், அவற்றுடன் வாழப் பழக்கப்படுத்தப்பட்டே இருந்தேன். ரேஷன் அரிசி சாப்பிட்டு வளர்ந்த எளிய சிறுபிராய வாழ்க்கையில், படிப்பு ஒன்றே அந்த இருளை அகற்றி எனக்கு ஒளி தரும் என்பதைத் திடமாக என் குடும்ப சூழல் நம்பவைத்திருந்தது. இருட்டை வெல்லவேண்டும் என்பது எனக்கு பாலபாடமாக சொல்லித் தரப்பட்டது. துணிச்சலை வளர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற இடத்துக்குத் தள்ளப்பட்டுத்தான், வேறு வழியின்றி, இரவை அரவணைத்துக் கொண்டேன். அல்லது இரவு என்னை அரவணைத்துக் கொண்டது.
1995 என்று நினைவு. விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன் கோயில் ஸ்டாப்பில் ஒரு நாள் மாலை 6 மணிக்கு அம்மா என்னை சென்னைக்கு பஸ் ஏற்றிவிட்டார். மறுநாள் காலை 8 மணிக்கு திருவள்ளுவர் பேருந்து பாரிமுனையை அடையும். வழக்கமான தனிப் பயணம்தான். இரவு 2 மணி இருக்கும். துவரங்குறிச்சிக்கு சற்று முன்பாக, பேருந்து பழுதடைந்து நின்றுபோனது. நடுக் காடு. சுற்றிலும் கும்மிருட்டு. கையில் தோள் பை மட்டும். அடுத்த பேருந்து வந்து ஏற்றிச்செல்வதற்குக் காத்திருக்கவேண்டும். பேருந்தில் இருந்த பெரும்பாலானோர் ஆண்கள். ஒன்றிரண்டு பெண்களும் ‘குடும்பப் பெண்கள்’. நான் மட்டுமே தனியள். போய்க்கொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி குடும்பம் குடும்பமாக மக்களை ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். என்னையும் யாருடனாவது சேர்த்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்து, தோற்றுப் போனேன். கடைசியாக சாலையில் பழுதான பேருந்துடன் நான், ஓட்டுநர், நடத்துநர், இன்னும் இரண்டு ஆண்கள்.
கை, கால் உதறல் எடுக்க சாலையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஓட்டுநர் சற்றே முதியவர். பெரிய மீசையுடன் சுடலை போல. அவரையே அச்சத்துடன் பார்த்துக்கொண்டு நின்றேன். அதுவரை அங்கு இருந்த யாருக்கும் என்னை அவர்களுடன் சேர்த்து வண்டியில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. பெண்களுக்குக்கூட. எல்லோருக்கும் மறுநாள் அலுவலகம் போகும் அவசரம். அவரவர் வாழ்க்கைச் சூழல். ஒரு வழியாக கடைசியாக வந்த பேருந்தில் என்னையும், எஞ்சிய அனைவரையும் ஏற்றிவிட்டார்கள். “சின்னப் புள்ளையா இருக்கு. பார்த்து கூட்டிட்டுப் போங்க” என்று அந்த கிடா மீசை ஓட்டுநர், இந்தப் பேருந்தின் நடத்துனரிடம் என்னை சுட்டிக்காட்டி சொல்லிவிட்டு, கீழே இறங்கினார். பேருந்து கடந்து செல்லும்வரை மங்கும் வெளிச்சத்தில் அவரைப் பார்த்துக் கொண்டே நின்றேன். அப்போது எனக்கு வயது 15. இப்படியான மனிதர்கள் எங்காவது வாழ்க்கையில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கான வெளிச்சத்தைத் தந்துகொண்டே இருக்கிறார்கள்.
இரவின் மீதான என் கடைசி சிறு அச்சத்தையும் துடைத்துப் போட்டது ரயில்வேப் பணி. வாரம் இரண்டு நாள்கள் கட்டாயம் இரவுப் பணி பார்த்தேயாகவேண்டும். வரிசையாக வண்டிகள் இரு புறமும் செல்லும் பரபரப்பான ரயில் நிலையங்களில் இரவுப் பணி செய்வது என்பது இரவு எது, பகல் எது என உங்களை எப்போதும் குழப்பத்தில் வைத்திருக்கும். ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் தனியே பணியாற்றும் சூழல்களில், துணைக்கு வருவது பெரும்பாலும் புத்தகங்கள். வாசிப்பு. மின்சாரம் இல்லாத இரவுகளில் காடா விளக்கொளியில் வாசிப்பு. படிப்பு. ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆண், பெண் பிணங்கள் என் அலுவலக ஜன்னலின் வழியே, என் மேற்பார்வையில் சில நாள்கள் இரவு முழுக்கக் கிடந்தது உண்டு. அவற்றை நாய்களிடம் இருந்து காப்பாற்ற அவ்வப்போது போராடிய சம்பவங்களும் உண்டு.
இரவு என்பது அச்சமூட்டுவதாக இருந்த காலம் போய், இரவு என்பது நான் சகித்துக் கொள்ள வேண்டியதாக, கடக்க வேண்டிய கட்டாயமாக, உழைத்தேயாக வேண்டிய நேரமாக நான் விரும்பாமலே என்மேல் சுமத்தப்பட்டது. ஏற்கனவே சொன்னதுபோல, பிணங்களுடன் பணியாற்றும் அளவுக்கு துணிச்சல் வந்தது; ‘எந்த அதிகாரி வந்தாலும் சரி, இரவு அலுவலகக் கதவைத் திறக்க முடியாது’ என்று தகராறு செய்யும் அளவுக்கு பெரிய ‘பஜாரி’ என்ற பெயரை எனக்கு இரவு பரிசளித்தது. எனக்கு அது பிடிக்கவும் செய்தது.
ஆனால் என்னுடன் பயணிக்கும் பலருக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்க பெண்களுக்கு, இரவு அச்சமூட்டுவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்ததை உணர்ந்தே வந்திருக்கிறேன். அதைத் தகர்க்கவேண்டும் என்ற எண்ணம் நெடுநாள்களாய் உண்டு.
அதற்கு சரியான வழிகாட்டியவர் தோழர் கீதா இளங்கோவன். கடந்த மாதம் ஒரு நாள் சென்னையின் இரவை, இருளில் இயங்கும் பெண்களின் உலகைப் பார்க்கவேண்டும், பதிவு செய்யவேண்டும்; வர இயலுமா என ஒரு பயணத்துக்கு அழைப்பு விடுத்தார். முழு இரவுதானே? நமக்குப் பழக்கமானதுதானே? சரியென்று கிளம்பியாகிவிட்டது. பிருந்தா தோழர் காரை வளைத்து வளைத்து ஓட்ட, இரவு முழுவதும் பெசன்ட் நகர், கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், மெரினா லூப் ரோடு, காசிமேடு மீன் மார்க்கெட், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பூ மார்க்கெட் என பெண்கள் கூடும் இடங்களை சுற்றி வளைத்து, படங்கள் எடுத்தோம். மறக்க இயலாத இரவாக இருந்தது அது. அந்த இரவு அனுபவத்தை எழுத, படங்கள் பகிர, பலரும் ‘நாங்களும் வருகிறோம்’ எனச் சொல்லத் தொடங்கினர். இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தானே காத்திருந்தோம்?
பெண்கள் மட்டுமே முழு இரவுப் பயணம் போவது என்று முடிவானதும், கீதா தோழரிடம்தான் முதலில் பேசினேன்.
“தோழர்… ‘நைட் லேடீஸ் எல்லாம் எங்க சுத்துறீங்க?’ அப்டின்னு பிரச்னை வராதா? காவல்துறை அனுமதி வாங்கவேண்டுமா? வேறு யாரிடமாவது அனுமதி வேண்டுமா?” என்று கேட்க, அவரோ, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல தோழர். பகல்ல அப்படி வேன்ல போக யார்ட்டயாவது அனுமதி கேக்குறோமா? அப்படித்தானே நைட்டும்? அப்படியே யாராவது நிறுத்தினாலும், இளங்கோ தோழர் இருக்கார், பார்த்துக்கலாம்”, என்று துணிவூட்டினார்.
அடுத்த டெஸ்ட் நமக்குத் தந்தவர்கள் வேன் உரிமையாளர்கள்.
“நைட்டு முழுக்கவா?”
“சிட்டிக்குள்ள மட்டுமா?”
“லேடீஸ் மட்டுமா?”
என்று பலவாறாகக் கேள்விகள். பயணிக்க வண்டி வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்புங்கள் என்றார்கள், இன்னும் என்னவெல்லாமோ கேட்டார்கள். வண்டி கிடைக்குமா என பயம் லேசாக எட்டிப் பார்த்தது. பயணம் திட்டமிட்டுள்ளோம் என்று வாட்ஸப் குழுவில் தெரிவித்ததுமே, மக்கள் நான், நீ என்று பெயர் கொடுக்கத் தொடங்கி அந்த எண்ணிக்கை 30 தாண்டியது. கட்டாயம் வேன் பத்தாது; அது கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. வள்ளி தோழரோ, ஏசி பேருந்து கேட்கலாம் என்றார். இதுவரை பேருந்து நிறைய மக்களை அழைத்துக்கொண்டு டூர் சென்ற அனுபவமும் எனக்கு இல்லை.வேனில் போயிருக்கிறோம்தான். ஆனால் இது பெரியது. கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது. வள்ளி தோழரும் “நான் வரமுடியாது, பெண்கள் டூர் என்பதால் நீயே பார்த்துக் கொள்” என்று ஒதுங்கிக் கொண்டார்.
பயண நாளுக்கு இரு நாள்களுக்கு முன்பாகதான் ஒரு வழியாக ஒரு டிராவல்ஸ் எங்களுக்கு ஏசி பஸ் தர முன்வந்தது. ஏற்கனவே கீதா தோழர் டீமுடன் சென்ற அதே பாதையில் பயணம் என்று திட்டமிட்டாலும், போகும் சாலைகள் பெரியனவா, அங்கே பேருந்துகள் செல்லுமா என்றெல்லாம் பல கேள்விகள் மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்தன. ஆனாலும், வருவது வரட்டும் ஒருகை பார்க்கலாம் என துணிவுடன் புறப்பட்டோம் உலா. 34 பெண்கள் + நான் + ஓட்டுநர் + நடத்துநர். பெசன்ட் நகரில் இரவு பத்து மணிக்கு சந்திப்பது என்று திட்டம். ‘ஸ்பேசஸ்’ அரங்குக்கு எதிரே என்று நான் அடையாளம் சொல்லி, கூகுள் மேப் பின் அனுப்பினாலும், பத்து நிமிடத்துக்கு ஒருவர் என்னை அழைத்து, “தோழர் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எங்கே வரவேண்டும்?” என்று கேட்டார்கள்.
ஒழுங்காக பெசன்ட் நகர் கடற்கரை சாலையின் அந்த ஓரத்தில் இருந்து இந்த முனை வரை தெரியும் திண்டுக்கல் தலைப்பாக்கட்டி ஓட்டலை அடையாளம் சொல்லி இருக்கலாம்! நமக்கு சோறுதானே எல்லாமும்? அதை அடையாளமாக சொல்ல, எல்லோரும் சரியாக வந்து சேர்ந்தனர். வழக்கம்போல் 10.30 ஆன பிறகும், மக்கள் தாமதமாக ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களை தோழர் ரோடா ஏற்பாடு செய்து பஸ்ஸில் கொண்டு ஏற்றினார். இருப்பவர்களை அழைத்துக்கொண்டு ஊரூர் – ஆல்காட் குப்பத்தை ஒட்டிய மணற்பரப்பில் கால்கள் புதையப் புதைய நடந்து அலைகளைத் தொட்டோம். தேவி தோழரின் பிறந்தநாள் என்பதால் கேக் ஏற்பாடு செய்து கொண்டு வரப்பட்டிருக்க, அதை வெட்டி குதூகலத்துடன் பகிர்ந்து உண்டு கலகலத்தோம். இத்தனைக்கும் பலர் புதிதாக ஒருவரை ஒருவர் அன்றுதான் சந்தித்தனர்! சசிகலா தோழர் என் குட்டி மைக் மற்றும் ஸ்பீக்கரைக் கொண்டு வந்திருந்தார். அதை மாட்டிக்கொண்டு, வழக்கமான docent பணியைத் தொடங்கினேன்.
ஏன் இந்த பயணம் என இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு, “இந்த பீச் பற்றிய கதை, வரலாறு சொல்லவா, அல்லது கிளம்புவோமா?” என்று கேட்க, மக்கள் ஆர்வத்துடன், “சொல்லுங்க, சொல்லுங்க” என்றனர். அவ்வளவுதான். காலக் கடிகாரத்தை பின்னோக்கி ஓர் நூற்றாண்டு திருப்பிவிட்டு காஜ் ஷ்மிட் கதையை சொல்லத் தொடங்கினேன்.
டிசம்பர் 30, 1930. அன்று பெசன்ட் நகர் கடற்கரைக்கு குளிக்க வந்தார் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த காஜ் எரிக் கொல்ஸ்டாத் ஷ்மிட் (Kaj Erik Gjolstad Schmidt). டென்மார்க்கின் கிழக்கு ஆசியக் கம்பெனி (East Asiatic Company) நிறுவனத்தின் ஊழியரான ஷ்மிட், அவருடன் பணியாற்றிய நான்கு பணியாளர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, மூன்று ஆங்கிலேயர்கள் கடல் நீரில் தத்தளிப்பதைக் கண்டார். அவரும், நண்பர் வெர்னர் நீல்சன் (Werner Nielsen) மற்றும் இன்னும் இரண்டு பேரும் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, ஆங்கிலேயர்களைக் காப்பாற்றினர். ஏழு பேரும் கரையேறத் திணறியபோது, ஏ. கிரா (A Kragh) என்ற கிழக்காசிய நிறுவன ஊழியர் அங்கிருந்த மீனவர்கள் துணையுடன், நீண்ட கயிறு ஒன்றைக் கொண்டு அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அனைவரும் கரையேறி தப்பினர்; கடலுக்குள் அவர்களைக் காப்பாற்ற முதலில் இறங்கிய ஷ்மிட்டைத் தவிர. ஷ்மிட் கடலுக்குள் மாய்ந்துபோனார். அவரது உடலை மீனவர்கள் பின்னர் கண்டுபிடித்து மீட்டனர்.
ஷ்மிட்டின் நண்பரான வெர்னர் பின்னாளில் கிழக்காசிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியானார். ஆங்கிலேயர்களைக் காப்பாற்ற தன்னுயிர் ஈந்த டேனிஷ் ஊழியரான ஷ்மிட்டின் நினைவாக பெசன்ட் நகர் கடற்கரையிலேயே நினைவகம் ஒன்றை எழுப்ப, அப்போதைய மதராஸின் ஆளுநரான லெஃப்டினன்ட் கர்னல் சர் ஜார்ஜ் ஃப்ரெடரிக் ஸ்டான்லி உத்தரவிட்டார். 29 நவம்பர் 1931 அன்று நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. ‘பிறர் உயிரைக் காப்பாற்ற இதே இடத்தில் டிசம்பர் 30 – 1930 அன்று மூழ்கிய காஜ் ஷ்மிட்டின் துணிவைப் போற்ற’ என்ற வாசகத்துடன் கல்வெட்டு ஒன்றும் இந்த ‘ஷ்மிட் மெமோரியல்’ நினைவிடத்தில் உண்டு.
மூத்த ஆண் ஆய்வாளர்கள் சிலர், டிசம்பர் 30 அன்று ஷ்மிட் இப்படி இன்னுயிர் ஈந்து காப்பாற்றிய பெண் ஒருவர், மறுநாள் இரவே ஆங்கிலேய அரசு நடத்திய ‘பால் நடனம்’ ஒன்றில் எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இன்றி கலந்துகொண்டார் என்றும், அதைக் கண்டு எரிச்சலுற்ற ஆளுநர் ஸ்டான்லி, ஷ்மிட்டுக்கு நினைவிடம் அமைக்க உடனே உத்தரவிட்டதாகவும் கதை சொல்வார்கள். இதற்கு ஆதாரம் இதுவரை நான் கண்டது இல்லை. மரணத்தின் பிடியில் இருந்து தப்பினாலும், பெண் மகிழ்வாக இருப்பதை ஆணாதிக்க சமூகம் விரும்பாது என்பதையும், காலம் காலமாக இந்தக் கதையை வரலாறாக திரித்து சொல்கிறார்கள் என்பதையும் தோழர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.
அடுத்த கதை, மதராஸின் மிகப்பெரிய காதல் கதை, என்று சொன்னதும் மக்கள் உற்சாகமானார்கள். பெசன்ட் நகர் கடற்கரைக்கு ‘எலியட்ஸ் பீச்’ என ஆங்கிலேயர் காலத்தில் பெயரிடப்பட்டது. 1814 முதல் 1820 வரை சென்னையின் ஆளுநராக இருந்தவர் ஹியூ எலியட் (Hugh Elliot). இவரின் மகன் எட்வர்ட் ஃபிரான்சிஸ் எலியட். அவரின் பெயரே இந்த கடற்கரைக்கு வழங்கி வருகிறது எனச் சொல்கிறார் வரலாற்றாளர் ஹெச்.டி. லவ். ஆனால் இந்தப் பெயர் எப்போது வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த எட்வர்ட் எலியட்டுக்கு ஒரு சுவாரசியமான காதல் கதையுண்டு.
1838ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று, மதராஸின் அன்றைய தூய ஜார்ஜ் பேராலயத்தின் அருகே வசித்த கர்னல் ஜான்ஸ்டன் நேப்பியர் அவர்களின் இணையரான திருமதி இசபெல்லா நேப்பியர், தன் ஏழு வயதுப் பெண் குழந்தையான ஃபிரான்செஸ் ஐதொம் நேப்பியரைத் (Frances Aytum Napier) தூக்கிக் கொண்டு, ஆயா ஒருவருடனும், வண்டிக்காரர் வீராசாமியுடனும் தன் வீட்டைவிட்டு வெளியேறினார். அடையாற்றின் கரையில் மதராஸின் தலைமை நீதிபதியும் காவல்துறைக் கண்காணிப்பாளருமான எட்வர்ட் ஃபிரான்சிஸ் எலியட் வசித்த மாளிகைக்கு கோச் வண்டியை விடச்சொல்லி, வீராசாமிக்கு உத்தரவு பிறப்பித்தார் இசபெல்லா. சந்தித்த இரண்டே மாதங்களில் எலியட்டின்மேல் பெரும் காதல் கொண்டுவிட்ட இசபெல்லா, 17 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த ஜான்ஸ்டனைத் துறந்து, தன் மூன்று பிள்ளைகளையும் கைவிட்டு, எலியட்டுடன் வாழத் தலைப்பட்டார்.
மதராஸில் பெரும் சலசலப்பை இந்தக் காதல் உண்டுபண்ணியது. விவகாரம் ஆங்கிலேய பாராளுமன்றம் வரை சென்றது. பிறன்மனை விழைந்ததற்காக இசபெல்லா மீது குற்றம் சாட்டி, விவாகரத்து கோரினார் ஜான்ஸ்டன் நேப்பியர். பாராளுமன்ற ஒப்புதலின்பேரில் இந்த விவாகரத்துக்கென தனி சட்டம் இயற்றப்பட்டது (Act to dissolve the marriage of Lieutenant Colonel Johnstone Napier of Madras, and his wife Isabella (née Hardie), 1839). எட்வர்டை மட்டுமல்ல, வேறு எந்த ஆணையும் அவர் மறுமணம் செய்யக்கூடாது என்ற தடையுத்தரவையும் வாங்கினார் நேப்பியர். ஆனால் எட்வர்டு எலியட்டோ, அவர் தந்தை ஹியூவோ சாதாரண நபர்கள் அல்லவே? தடையை நீக்கி, ஆகஸ்ட் 7, 1839 அன்று எலியட் – இசபெல்லா இணை மதராஸிலேயே மறுமணம் செய்துகொண்டது.
எட்வர்டுடன் காதல் வாழ்க்கையைத் தொடர்ந்தார் இசபெல்லா. நன்றாக வாழ்ந்த குடும்பத்தைக் கலைத்தார் என்று எட்வர்டின் மேல் மக்கள் பழிபோட்டனர். அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை! இசபெல்லா – எட்வர்ட் எலியட் ஜோடியின் மகளாகவே வளர்க்கப்பட்ட ஃபிரான்செஸ், ஃபிரான்செஸ் எலியட் என தன் பெயரை மாற்றிக்கொண்டார். எலியட்டின்மேல் எவ்வளவு குற்றச்சாட்டு இருந்தபோதும், எலியட்ஸ் கடற்கரையின் பெயர் மாற்றப்படவில்லை. காதல் மன்னனின் பெயரை மாற்ற யாருக்கு மனம் வரும்?
ஷ்மிட் நினைவகத்தையும், இந்த கடற்கரையையும் குப்பையின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் போராடும் 96 வயது காமாட்சி சுப்பிரமணியன் பாட்டியைப் பற்றியும் தகவல் பகிர்ந்துகொண்டேன். எப்படி அவர் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியின் தூய்மையைப் பேண உதவுகிறார்; மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்பதையும் சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ‘என் சென்னை யங் சென்னை’ விருது பற்றியும் சொன்னேன். அந்த விருதுக்கான வீடியோவை எடுக்க ஆட்டோவில் போன கேமராமேனை அவர் கலாய்த்து, காரில் வந்தால் மட்டுமே ஷூட்டிங் என்று சொல்லி திருப்பியனுப்பினார் என்ற கதையை நான் சொல்ல, கடற்கரையில் பெரும் சிரிப்பொலி!
இதே எலியட் கடற்கரை ஒரு காலத்தில் ஐரோப்பியரின் ‘ஹாலிடே ரிசார்ட்’டாக இருந்துள்ளது; அதில் குடில்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகள் பரபரப்பாக இருந்தன; ஏராளமான வெள்ளைக்காரர்கள் குளிக்கவும், கொண்டாடவும் வந்தனர் என பக்கத்தில் வசிக்கும் ஊரூர் – ஆல்காட் குப்பத்தின் முதியவர்கள் தகவல் தந்துள்ளனர். ஒரு காலத்தில் குப்பத்தின் எல்லைச் சாமியான எல்லையம்மன் கோயிலைத் தாண்டி எலியட் கடற்கரைப் பகுதிக்கு வர அம்மக்கள் தயங்கியதையும், பெரும் இருள்சூழ்ந்த தாழங்காடு எலியட் கடற்கரையை ஒட்டியிருந்தது என்றும் அவர்கள் என்னிடம் பகிர்ந்த வாய்மொழி வரலாறை, தோழர்களிடம் தெரிவித்தேன்.
பேசிச் சிரித்துக்கொண்டே பேருந்து நின்றிருந்த நான்காவது நிழற்சாலை வரை நடந்தோம். பேருந்து ஓட்டுனரை சாலைக்குள் வந்து பார்க் செய்ய சொல்லிவிட்டு, எல்லோரும் ஏறும்வரை காத்திருந்தேன். பேருந்தின் அளவைப் பார்த்ததும் திகில் ஏறியது. ‘எத்தாம் பெரிய பஸ். எவ்வளவு பெண்கள்? இவர்கள் அனைவரின் பாதுகாப்பும் இந்த முழு இரவும் என் கையில்…’ வியர்க்கத் தொடங்கியது. சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்த இந்துமதி தோழர் பஸ்ஸில் எப்படி ஏறுவார்? ஏற முடியாமல் போனால் என்ன செய்ய என்று தயங்கி நின்றேன். அவரோ அசால்ட்டாக ஏறி உட்கார்ந்தார். கொஞ்சம் நிம்மதியானேன். பேருந்தில் பாட்டு போடும் ஆக்ஸ் பொறுப்பை லெய்னா தோழர் ஏற்றுக் கொண்டார்.
ஓட்டுநரிடம் திரும்பி, “தம்பி, நேரா மெரினா லூப் ரோடுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே திரும்புவதற்குள் பாடல் அதிர ஆரம்பித்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் ஓரிருவர் தவிர மொத்த பஸ்ஸும் நடுவே உள்ள பாதையை அடைத்துக் கொண்டு நடனமாடத் தொடங்கியது. தோழர்கள் புதிதாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட உற்சாகம் பெருக்கெடுக்க, ஆட்டம் பின்னியெடுத்தார்கள். ஆடிக் கொண்டிருந்த நானும் சற்று சாலையை கவனிக்காமல் விட்டுவிட்டேன். வெளியே பார்வையை ஓட்டினால், பேருந்து போர் நினைவிடத்தை நெருங்கிவிட்டிருந்தது.
“ஐயோ… நான் உங்களை லூப் ரோடுல இல்ல போகச் சொன்னேன்? எங்கே போறீங்க?” என்றேன் ஓட்டுநரிடம் பதைபதைப்பாக. மணி இரவு 11.15.
தொடரும்…
படைப்பாளர்
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்.
With the descriptions mentioned above about the author of this article, I would like to add this one too _ ‘A compelling narrator ‘.
Eagerly waiting for the next part.
Thank you for the compliment! Means a lot.