ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறந்து வளரும் போது அது தன்னிச்சையாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. ஆனால் வளரும்போது எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். ஆசிரியரின் கடமை வெறும் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுத்துப் போவது இல்லை. அதையும் தாண்டி ஒரு குழந்தையிடம் நெருங்கிப் பழகப் பெற்றோருக்கு அடுத்தபடியாக அவர்களால் மட்டுமே இயலும். எல்லாக் குழந்தைகளிடமும் அவர்கள் பார்த்து வளர்ந்த ஓர் ஆசிரியரின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அதனால் மாணவர்களிடம் பழகும் போது பொறுப்புடன் நடந்து கொள்வது ஆசிரியர்களுக்குக் கட்டாயமானது.

ஒரு மாணவி அல்லது மாணவன் எதிர்காலத்தில் என்னவாக மாறப்போகிறார் என்பதை வடிவமைக்கும் பணி ஆசிரியருக்கு முக்கியமானது. அவர் மாணாக்கர்களைப் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும், அதை அடையும் முயற்சிகளைச் செய்யவும் தூண்டுதல் வேண்டும். நமது கலாச்சாரங்களை அப்படியே கடைப்பிடிக்க வற்புறுத்தாமல் காலத்திற்கேற்ப மாறுதல்களைச் செய்து அதன் விழுமியங்களை உணர்த்துதல் வேண்டும். முக்கியமாகப் பாலினத் தடைகளைத் தகர்த்தெறியவும், பாலினப் பேதத்தை நீக்கி சமத்துவத்தை ஏற்படுத்தவும் ஆசிரியர் முனைய வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகவும், அடுத்த தலைமுறைகளுக்கு அதை எடுத்துச் சொல்பவராகவும் ஓர் ஆசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும். நல்ல வழிகாட்டிகளாகவும் தடுமாறும் போது சிறந்த திசை காட்டிகளாகவும் ஆசிரியர்கள் விளங்க வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை மட்டும் பயிற்றுவிப்பவராக இருத்தல் கூடாது. அதையும் தாண்டி இந்த உலகத்தைக் கற்பிப்பவராக இருத்தல் நலம். காலத்துக்கேற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு பழம்பஞ்சாங்கப் பெருமை பேசுபவராக இருத்தல் கூடாது. 

ஆசிரியர்கள் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில். பாடப்புத்தகங்கள், கற்பிக்கும் பொருட்கள், விளையாட்டுச் சாதனங்கள், உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் நிறைய பள்ளிகளில் இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நிறைய மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அரசு விரைந்து இக்குறைகளைக் களைய  வேண்டும். ஒரு கிராமப்புற ஆசிரியருக்கும், நகர்ப்புற ஆசிரியருக்கும் உள்ள பணியிட சவால்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் ஆளுக்காள் மாறுபடுகிறது. ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் ஒன்று போல் அமைவதில்லை. பாடத்தைப் புத்தகத்தில் உள்ளது போல் அப்படியே நடத்தாமல், சமூகத்தில் அது தொடர்பான நிகழ்வுகளை எடுத்துக் கூறி நடத்தும் விதமாக ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். வளரிளம் பருவ மாணவர்களைக் கையாளும் விதம் குறித்து ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும்.  

உலக ஆசிரியர் தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி 1994ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. நமது இந்தியாவில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று கல்வி நிலையங்களில் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் பாராட்டு நிகழ்ச்சிகளும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிகழ்வுகளின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இன்னும் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்பிக்க வேண்டும் என்கிற ஆவல் தூண்டப்படும். யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. அவர்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிய உதவ மட்டுமே முடியும். சராசரி ஆசிரியர் சிக்கலான பாடங்களை விளக்க மட்டுமே செய்கிறார். ஆனால் சிறந்த ஆசிரியரோ அதை எளிமையாகப் புரிய வைக்கிறார். 

உலகை மாற்றிய உன்னத ஆசிரியர்கள் என்று தேடும்போது கன்பூஃசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், சாணக்கியர், ஆரிய பட்டா, சுஸ்ருதா என்று ஆண்களின் பெயர்கள்தான் வரிசை கட்டி நிற்கின்றன. இத்தனை நூற்றாண்டுகளில் பெண்கள் யாருமே கல்வி கற்பிக்க வரவில்லையா என்கிற கேள்வி எழுகிறது. நிச்சயமாகப் பெண்கள் கற்காமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் பெயர் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்குத்தான் வர முடிகிறது. மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட அவர்களைக் கண்டறிந்து, அவர்களது சேவைகளை உலகுக்கு அறிவிக்க வேண்டியது அவசியமானதாகும்.

தாய்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆசிரியர். அவளிடமிருந்தே குழந்தை ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொள்கிறது. ஆனாலும் தொழில் முறையில் பெண்கள் ஆசிரியர் பணி செய்ய மிகுந்த தடைகள் இருந்தன. அவற்றையெல்லாம் தாண்டி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாவித்திரிபாய் புலே பணியாற்றினார். இவர் சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் நைகோன் என்கிற கிராமத்தில் 1831, ஜனவரி 3 ஆம் தேதி சாவித்திரி பிறந்தார். அன்றைய வழக்கப்படி சாவித்திரி பாய்க்கு 9 வயதில் திருமணம் நடைபெற்றது. 13 வயதான அவரது கணவர் ஜோதிராவ் புலே சமூக சீர்திருத்தவாதியாகப் பின்னாளில் உருவெடுத்தார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் நொந்திருந்த ஜோதிராவ் புலே தனது மனைவிக்குக் கல்வி கற்றுக் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்கான பள்ளியை இவர்கள் 1847இல் ஆரம்பித்தனர். அடுத்த ஆண்டே பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை புனே நகரில் உள்ள பீடே வாடு என்கிற பகுதியில் தொடங்கினார்கள். 9 பெண் குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு சாவித்திரி பாய் புலே பொறுப்பேற்று கல்வி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ஆசிரியராக அவர் அழைக்கப்பட்டார். அவருக்கு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி அவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கினார். வரலாற்றில் பெண்களுக்கு இருண்ட காலமான அன்றைய காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய சாதனை.

பார்வையற்ற, கேட்கும் சக்தியற்ற ஹெலன் கெல்லரின் ஆசிரியரான ஆன் சல்லிவனும் பார்வைக் குறைவு உடையவராக இருந்தார். எட்டு வயதாக இருந்தபோது கண்நோயால் பறிபோன பார்வை இருபது வயதுவரை தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகளால் மீண்டது. அதற்குள் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்த ஆன் பட்டம் பெற்றிருந்தார். ஹெலன் கெல்லர் ஏழு வயதாக இருக்கும் போது அவரது ஆசிரியராகப் பணியமர்ந்த ஆன் சல்லிவன் அதன்பின் கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் ஹெலனுடனே தன்னுடைய வாழ்நாளைக் கழித்தார். பார்வையற்ற ஹெலனுக்கு நல்ல நண்பராகவும், சிறந்த ஆசிரியராகவும் இருந்து வந்தார். ஹெலனின் வாழ்க்கையை மாற்றியமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. ஒரு சிறந்த ஆசிரியரால் மிகச் சிறந்த மாணவரை உருவாக்க முடியும் என்பதற்கு ஆன் சல்லிவன் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

சாவித்திரி பாய் புலேவின் தோழியான பாத்திமா ஷேக் முதல் முஸ்லீம் சமூகத்துப் பெண் ஆசிரியர். சாவித்திரிபாய் உடன் இணைந்து கல்விப் பணி

யாற்றியவர். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பே பாத்திமா ஷேக் என்ம் பெண்ணியவாதி பழங்குடி இனப் பெண்களுக்கான நூலகம் ஒன்றை உருவாக்கினார். ஜோதி ராவ் புலேயின் ஐந்து பள்ளிகளில் தன்னலமின்றிப் பெண் கல்விக்காகப் பாடுபட்டார். பாத்திமா ஆசிரியராக மட்டும் செயல்படவில்லை. பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக வாதிடுபவராகவும்  இருந்தார். சாவித்திரி பாய் புலேவுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று பெண்களைக் கல்வி கற்க அழைத்தார். அதனால் பலத்த எதிர்ப்பையும் பெருத்த அவமானங்களையும் இவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

நான் படித்த பள்ளியில் ஓர் ஆசிரியர் மரம் வளர்ப்பதன் அவசியத்தை எப்போதும் கூறுவார். அது மட்டுமன்றி பள்ளியில் நிறைய மரங்களையும் நட்டுப் பராமரித்து வந்தார். இன்றும் மரம் நடும்போது நான் அவரை நினைப்பது வழக்கம். சமீபத்தில் வெளியான ‘கமலி.. ஃப்ரம் நடுக்காவேரி’ படத்தில் காதல் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருக்கும் நாயகியை அவரது ஆசிரியர் அறிவுரை எதுவும் சொல்லாமல் மிகச் சிறப்பாக வழிநடத்துவார். அத்தகைய ஆசிரியர்கள் பெருக வேண்டும். நமது கல்விமுறையிலும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கல்வி என்பது வியாபாரமாக மாறிவிட்ட இந்தச் சூழலில் உடனடியான நல்ல மாற்றங்கள் அவசியம். சமீபத்தில் வெளியான  ‘தலைவெட்டியான் பாளையம்’ வெப் தொடரில் ரவுடித்தனம் செய்யும் நான்கு இளைஞர்களை அவர்களது தலைமை ஆசிரியை ஒரே அறையில் அடக்குகிறார். சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுவதாக இந்தக் காட்சி அமைந்திருக்கிறது. 

ஆசிரியர்களுக்கான கல்வித்திறன் தவிர தனிப்பட்ட திறன்களையும் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சூழ்நிலையை சிறப்பாகவும், எளிதாகவும், இலகுவாகவும் கையாளத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கற்பனைத் திறன், சிறந்த ஆளுமைத் திறன், சுய கட்டுப்பாடு போன்றவை ஆசிரியரின் இதர குணங்களாக அமைய வேண்டும். சமூகத்தின் மீதான நேர்மறையான கண்ணோட்டம், சுய ஒழுக்கம், நேர்மை,  தலைமைப் பண்பு, தேடல் போன்றவை சிறந்த ஆசிரியருக்கு அவசியமானவை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரும், நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்களே. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிச்சயம் ஏதாவது ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

ஆசிரியர்களை மதித்து நடக்க மாணவர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். திரைப்படங்களைப் பார்த்து அதில் வருவதுபோல் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களைக் கேலி செய்வது மிகவும் தவறான ஒன்று. தன்னைவிட ஒருவர் வாழ்வில் உயர்கிறாரென்றால் அதை நினைத்துப் பெருமைப்படுபவர்தான் மிகச் சிறந்த ஆசிரியர். கல்வி என்னும் உளியால் மாணவர்கள் என்னும் சிற்பங்களை நேர்த்தியாகச் செதுக்கும் சிற்பிகள்தான் ஆசிரியர்கள். ஆசிரியர் பணி என்பது அறப்பணி. அதனை முழு அர்ப்பணிப்புடன் செய்ய ஒவ்வோர் ஆசிரியரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த குரு புத்தகத்தைத் தாண்டியும் கற்றுத் தர வேண்டும். ஆசிரியர் – மாணாக்கர் உறவு நட்புடன் அமைந்திருத்தல் நலம். மாணாக்கர்களை உயரத்தில் ஏற்றிவிட்டு அங்கேயே நின்று விடும் ஏணியான அவர்களது தியாகத்தை நாம் புரிந்து கொண்டு,  அவர்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் எப்பொழுதும் தர வேண்டும். 

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.