பூங்கோதை
1996-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் அறிவொளி திருவிழா நடந்துகொண்டிருந்தது. அங்குதான் கணித விஞ்ஞானி ராமானுஜம் பூங்கோதையை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பூங்கோதையின் சொந்த ஊர் துறையூருக்கு அருகில் உள்ள கீரம்பூர் கிராமம். அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்துவந்தனர். 10-ம் வகுப்பு முடித்தார் பூங்கோதை. மேற்படிப்புக்கு அங்கே வசதி இல்லை. அவரின் மாமா மூலம் வேதாரண்யத்தில் ஐடிஐ-யில் படித்தார். விடுதியில் சுந்தரி, மூர்த்திபானு இருவரும் பூங்கோதையின் தோழிகள். இவர்களின் ஆசிரியராக இருந்தவர் உதயன்.
கோர்ஸ் முடிந்தது. ஆனால், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன செய்யலாம் என்று தோழிகள் யோசித்துக்கொண்டிருந்த போது, சென்னைக்கு வந்தால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார் உதயன். இவர்களை அழைத்துக்கொண்டு அவரும் வேலைக்காகச் சென்னை வந்துவிட்டார்.
மயிலாப்பூரில் தங்கிக்கொண்டு தோழிகள் வேலை தேடி அலைந்தார்கள். பூங்கோதைக்கு 28-வது கம்பெனியில் 300 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
திடீரென்று ஒருநாள் ரயில்வே அலுவலகத்தில் வேலைக்கு வரச் சொல்லி கடிதம் வந்தது. ஆனால், அந்த வேலையில் அவரால் சேர முடியவில்லை.
1993… தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது. தன்னார்வலராக இணைந்தார் பூங்கோதை. ”ஒரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதைவிட, அறிவொளியில் மக்களுக்காக வேலை செய்வது சிறந்ததாகத் தோன்றியது. அதனால் மகிழ்ச்சியோடு மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பித்தேன். அறிவொளி இயக்கம் மூலம் அறிவியல் இயக்கத்தின் அறிமுகமும் கிடைத்தது. நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்” என்கிறார் பூங்கோதை.
1996-ல் அறிவொளியில் முழு நேரப் பணியாளர் ஆனார் பூங்கோதை. கடற்கரையில் உள்ள மீனவப் பெண்களுக்கு அறிவொளி வகுப்பு எடுக்க ராமானுஜம் வருவார். நானும் பேராசிரியர் அருணந்தியும் அந்த அறிவொளி வகுப்பைக் காணச் சென்றோம். அங்குதான் பூங்கோதை வகுப்பு எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
உதயன் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். திருமணம் செய்துகொள்வதற்காக நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். தொடர்புகொண்ட பெண்களை நேரில் சென்று சந்தித்தார் பூங்கோதை. உதயனின் கொள்கைக்கு அவர்கள் சரிவரவில்லை.
1998… சடங்குகள் இன்றி எளிமையாகத் திருமணம் நடைபெற்றது. ராகுகாலத்தில் திருமணம். உதயனின் பாட்டியும் பூங்கோதையின் அம்மாவும் மாலை எடுத்துக் கொடுத்தனர். உதயனும் பூங்கோதையும் பேண்ட் ஷர்ட்டில் மாலை மாற்றிக்கொண்டார்கள். அறிவொளி, அறிவியல் இயக்க நண்பர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி விழாவைச் சிறப்பித்தனர். திருமணம் நடந்த அடுத்த நாளே உதயனும் பூங்கோதையும் அவரவர் வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
“வழக்கமாகப் பெண்களின் அடையாளமாகக் காட்டப்படுகிற விஷயங்களில் எனக்கு விருப்பம் இல்லை. பொட்டு வைக்க மாட்டேன். பூ வைக்க மாட்டேன். நகை அணிய மாட்டேன். புடவை கட்ட மாட்டேன். என்னை முதல் முறை பார்ப்பவர்கள், ஏன் நகை அணிவதில்லை என்று கேட்பார்கள். நகையைப் பற்றி யோசிக்காதீர்கள். எங்கள் வீட்டில் ஆண்-பெண் சமத்துவம் இருக்கிறது. நாங்கள் ஒருவர் மீது இன்னொருவர் மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறோம். சுதந்திரமாகச் செயல்படுகிறோம். நீங்களும் வீட்டில் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் உருவாக்க முயற்சி செய்யுங்கள்” என்று சொல்வேன் என்கிறார் பூங்கோதை.
திருமணத்துக்குப் பிறகு பூங்கோதை எம்.ஏ. படித்தார். 63 சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்தார். அறிவொளி, அறிவியல் இயக்கம், ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட வேலை செய்தார். தன்னுடைய இரு தம்பிகளுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தார்.
”இயக்கப் பணிகளுக்கிடையே ஒரு பெண் குழந்தையும் எங்களுக்குப் பிறந்தது. ஆனால், இரண்டே மாதங்களில் எங்களை விட்டுச் சென்றுவிட்டது. அந்தத் துயரத்தை மறக்க வந்திருக்கிறாள் எங்களின் செல்ல மகள் செந்தமிழ். உதயன் மத்திய அரசு நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கிறார். அதனால் கேந்திரிய வித்யாலயாவில் மகளைப் படிக்க வைக்க முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை. சென்னை மாநகராட்சி பள்ளியில் தமிழ் வழியில்தான் படிக்க வைக்கிறோம்” என்று வியப்பூட்டுகிறார் பூங்கோதை.
தற்போது அறிவியல் இயக்கத்தின் ’ஆரோக்கியம்’ அமைப்பில் செயல்படுகிறார் பூங்கோதை. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகச் சென்னை மாநகராட்சியின் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
“நான் மக்கள் பணி செய்வதால் எனக்கும் உதவுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். எங்கள் குழந்தையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதனால் கொரோனா பரிசோதனை பணியை மேற்கொண்டேன். கொரோனா குறித்து விழிப்புணர்வு கொடுத்தேன். ஒவ்வொரு நாளும் 150 வீடுகளில் கணக்கெடுப்பு செய்தேன். இந்தக் காலகட்டத்தில் உணவுக்குக் கஷ்டப்படுகிறவர்களுக்கு நன்கொடை மூலம் உணவுப் பொருட்களை வழங்கினேன். இதோ கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகிவிட்டது. சென்னை மாநகராட்சி என்னை அழைத்தது. மீண்டும் என் வேலையை ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் பூங்கோதை.
முகங்களில் மோகனாவைச் சந்தியுங்கள்!
கட்டுரையாளர்:
மோகனா சோமசுந்தரம்
ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.