மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கணவர் தொலைபேசியை எடுக்காததால் கோபம் பொத்துக் கொண்டு வந்தது சிவகாமிக்கு,
‘மாப்பிள்ள வீட்டுக்குகாரங்க நேரமா வந்து தொலச்சா என்னப் பண்றது? நானும் என் பசங்களும் ஓடியாடி ஊழியம் பண்ணுற தைரியத்துல காலைலயே போய் வேலைய பாக்கப் போயிட்டாரு. இதுல மழ வேற!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டே நிச்சயதார்த்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் சிவகாமி.
“மூத்தார் பொண்ணு கல்யாணத்துக்கு இப்படி எந்தப் பொம்பளயும் ஓடியாடி வேல செஞ்சு நான் பாத்ததில்லடியம்மா. அந்த மவராசி பொட்டப்புள்ளய பெத்து போட்டுட்டு போய்ச் சேந்துட்டா. எங்கக்கா மட்டும் இல்லன்னா இந்தக் குடும்பம் விருத்தியாயிருக்குமா?” என்று கேட்டாள் சுந்தரி.
உண்மையில் சிவகாமிக்கு மீனா பேரில் பெரிதாக பாசமோ கரிசனமோ எப்போதுமே இருந்ததில்லை. தன்னைவிட நான்கைந்து வயது சின்னவளுக்கு சந்தர்ப்ப சூழலால் சித்தி ஆனதோ, தன்னைவிடப் பன்னிரண்டு வயது பெரிய மனுசனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டதோ அவளுக்குப் பிடித்தோ, அவளைக் கேட்டுக் கொண்டோ நடந்த காரியங்கள் இல்லை. கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்ததால் ஏற்பட்ட கதி.
கட்டிய கணவர் தன்னையும் தன் குடும்பத்தையும் இன்றுவரை நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார். ஜோடி போட்டுக் கொண்டு கணவனுடன் கைகோத்து ஊர் சுற்ற வேண்டும் என்கிற ஆசை அவளுக்கு இருந்தது. ஆனால் அமைந்ததோ பதினைந்து வயதில் பத்து வயது பெண்ணின் கைகயைப் பிடித்து நடக்க வேண்டிய சூழல்.
ஒரு பெரிய மனுசனுடன் எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அறியாத குழந்தையான அவளுக்கு , இன்னொரு பெண்ணுக்கு அம்மாவாக இருப்பது எப்படி?
தனக்கு நேர்ந்த அநீதிகளுக்கு எழுந்த கோபத்துக்கு வடிகாலாக அந்தப் பெண் இருந்தாள். அவள் ஆச்சி மட்டும் இல்லை என்றால் மீனாவின் கதி என்ன ஆகியிருக்கும்?
ஒருவேளை என்றாவது அவள் தன்னை எதிர்த்துப் பேசியிருந்தால்கூட மனம் ஆறியிருக்குமோ என்னவோ , தாயில்லாத பிள்ளை என்று இரக்கம் பிறந்திருக்குமோ என்னவோ.
ஆனால் அவள் அமைதியாக இவள் நிலையை ஒருவிதத்தில் புரிந்து கொண்டு நடப்பது ஏதோ தனக்கு கருணை காட்டுவதாகத் தோன்றி , ‘வந்துட்டா ! பெரிய இவ . அவதான் நல்லவ, நான் கெட்டவன்னு ஊருக்கு காட்டுராலாமா? ‘ என்று புழுங்கி புழுங்கிச் செத்தாள்.
அதற்கு நேர்மாறாக அவள் பெற்ற பிள்ளைகள் ரெண்டும் ‘மீனாக்கா மீனாக்கா’ என்று உயிரை விட்டுவிடும்.
அதுவும் தன் தம்பிக்கு அவளைப் பெண் கேட்ட போது, அந்த பெரிய மனுஷன் பேசிய பேச்சு… தராதரம் தெரியணுமாமே… எங்க போச்சு அந்த தராதரம் என்ன ரெண்டாம் தாரமா கட்டிக்கிட்டப்போ?
தாய்மாமன் மகனுக்கே அவளைப் பேசி முடித்துவிட்டார். ”இந்தத் தடவையாவது எதுவும் செஞ்சு என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துறாத, உன் கால்ல வேணா விழுறேன் செவகாமி” என்று அந்த மனுஷன் கதறிய போது ஏதோ ஒருவித நிம்மதி பிறந்தது அவளுக்கு.
“ஏ, பிள்ளைவளா, எல்லாம் சேந்து நின்னு மீன கூட போட்டோ எடுத்துக்கணும் என்ன? மாப்பிள்ளை வீட்டாளுகள கண்டதும் வீட்டப் பாத்து ஓடிரக் கூடாது. சாப்புட்டுட்டுதான் போவணும்” என்ற போது அவர்கள் சிரிப்பில் கலகலத்தது வீடு.
“ஏ, மீனா மேக்கப் சூப்பர். மாப்பிள்ள அப்படியே உன் அழகுல மயங்கிறப் போறாரு பாரு.”
மீனாவின் முகம் வெட்க்கத்தில் சிவந்தது.
“ஏய் மகேசு, எதுவுமே போடாட்டியும் அவ அழகுதான்.”
“ஆனா அப்படி அவள பாக்க மாப்பிள்ள பர்ஷ்ட் நைட் வரைக்கும் காத்திருக்கணுமே…” என்று ஒருத்தி இரட்டை அர்த்தத்தில் பேச, அந்த இடம் அதகளப்பட்டது.
“எங்கண்ணே பட்டுரும் போலயே, ராசாத்தி! அதுக்குள்ள கல்யாணக்கல வந்துருச்சுல்ல . சீவி சிங்காரிச்சதும் அப்படியே புனிதாவையே பாத்த மாதிரில்லா இருக்கு! அந்தப் புண்ணியவதிக்கு இதெல்லாம் பாக்க குடுத்துவக்கலயே…” என்று கிழவி புலம்பியதும் மீனாவின் முகம் சற்று சுருங்கியது.
அதற்குள் அவள் கணவர் அழகேசன், முன் வாசலில் வந்திருந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்பாடா என்றிருந்தது. அவரைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டுக் கிளம்ப அவள் அறைக்குப் போனாள்.
“அக்கா உங்க தங்கச்சி கூட சேர்ந்து நின்னு ஒரு போட்டோ எடுத்துக்கோங்க” என்று போட்டோகிராபர் சொன்னதும் வேகமாகத் தலையை ஒரு திருப்பு திருப்பி, “நான் ஒண்ணும் அவ அக்கா இல்ல”
என்று மறுத்தபோது மீனா, “அது எங்க அம்மா ண்ணா”
என்று ஒரு நொடிகூடத் தயங்காமல் சொன்னாள் .
“நம்பவே முடியலக்கா, உங்க அம்மா ரொம்ப யங்கா இருக்காங்க.”
“அண்ணியாரே இந்தாங்க நாங்க வாங்கிட்டு வந்த கேக்கையும் உங்க ஆளுக்கு ஊட்டுங்க” என்று மாப்பிள்ளையின் தம்பி கிண்டல் செய்யவும் வெட்கத்தில் சிவந்தவள் முகம் இத்தனை அழகாய் இந்தப் பதினாலு வருடங்களாக அவள் பார்த்த நியாபகமே இல்லை.
பின் அவன் ஒரு சிவப்பு ரோஜா பூங்கொத்தை அவளுக்குக் கொடுக்க, அதை அவன் முட்டிப் போட்டு படங்களில் வருவது போல்தான் குடுக்க வேண்டும் என்று இளம்பெண்களில் தைரியமான சிலர் சொல்லி வம்பிழுக்க, அதை அவன் செய்த போது பலத்த கரகோஷங்களோடும் குதூகலக் குரல்களோடும் பல செல்போன்களில் பதிவாகியிருந்தது.
ஒருபுறம் பெருசுகள், “இதென்ன கூத்தா இருக்கு. நம்ம காலத்துலல்லாம் கல்யாணத்து அன்னைக்குத்தான் மாப்பிள்ளையைப் பாத்தோம். அப்பவும் மூஞ்ச ஏறெட்டு பாக்கவே மாசக் கணக்காவும். இவளுவ போட்டோ புடிக்கிறதென்ன, சேந்து நிக்கிறதென்ன. கலி முத்திப் போச்சு” என்று அங்கலாய்க்க , மறு புறத்தில் மாப்பிள்ளை வெட்கம் கலந்த புன்னகையுடன் யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டு ஓரக்கண்ணால் மீனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
முன்னால் போட்டிருந்த சேரிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சிக்கிழவி, “எங்கண்ணே பட்டுரும் போலயே. எம்புள்ளவ ஜோடிப் பொருத்தத்தப் பாத்து . எம்சியாரும் சரோசா தேவியும் கணக்கால்லா இருக்குதுக” என்று நெட்டி முறித்தாள்.
எல்லாரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் தெரியாது. அவள் என்ன செய்திருந்தாள் என்று. எப்போதும் தெரியாது. ஆம் தெரியாத மாதிரி அவள் பார்த்துக் கொள்வாள் . அவர்கள் நினைப்பதை விட அவள் புத்திசாலி. அவளை அவர்கள் குறைத்து எடை போட்டுவிட்டார்கள் என்று நினைத்த போது அவளையும் மீறிக் கொண்ட ஒரு கேலிப் புன்னகை அவள் இதழ் ஓரங்களில் மிதந்தது.
கண்கள் ஒளியடைந்தன. இதுவரை அவள் முகத்தில் யாரும் கண்டிராத ஒரு பொலிவு.
அதே நேரத்தில் ரயில்வே கேட்டில், “அழகேசன் சார் போன் எடுக்க மாட்டேங்குறாரு சார்” என்று பதற்றத்துடன் சொன்னான் சந்திரன்.
இருவரும் தன் கைபேசியில் இருந்தும், சாட்டிலைட் போனிலிருந்தும் மாற்றி மாற்றித் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார்கள். ஸ்டேசன் மாஸ்டர் எண்ணும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது.
“மறுபடியும் டிரை பண்ணுங்க” என்ற சுகுமாரனிடம்,
“பொண்ணு நிச்சியதார்த்தத்துல பிசியா இருப்பாருன்னு நினைக்கிறேன் சார்” என்றார் இன்னொரு கேட் கீப்பரான சங்கர்.
இருவருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை. இந்த இடத்தில் மட்டுமே கொஞ்சமாவது செல்போன் டவர் எடுக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் சுத்தமாக சிக்னல் இல்லை. இப்போது என்ன செய்யவென்று தெரியாமல் மூவரும் விழித்தார்கள்.
நேரமும் செந்தூர் எக்ஸ்பிரஸும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டே இருந்தன.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.