பங்குனி மாதத்து உச்சி வெயிலில் அந்த கந்தகபூமி அனலாய் கொதித்துக் கிடந்தது. தார் ரோடு ஆங்காங்கே உருகி, நடப்பவர்களின் காலைப் பதம் பார்க்கும் அத்தனை அனலிலும் அசராமல் உழைத்துக்கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த பூமி அது.
“மூணு நாளா அம்மா ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போக சொல்லிட்டே இருக்கு. இன்னிக்காவது வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு ஒரு அரை மணி நேரம் முதலாளிட்ட பெர்மிஷன் கேட்டு வீட்டுக்குப்போகணும். ஆனா, இன்னிக்கு சனிக்கிழமை சம்பளநாள், லேட்டாயிடுதா என்னவோ தெரியல…”
பலதும் யோசித்தவாறே சைக்கிளில் வந்து கொண்டிருந்த அந்தப்பையனுக்கு பதினேழு பதினெட்டு வயதிருக்கும். திடீரென முகத்துக்கு நேரே ஏதோ பறந்தது போல இருக்க, ஒரு கணத்தில் நிலை தவறி…வண்டி ஒருபுறம் சாய்ந்தாலும், கீழே விழுந்துவிடாமல் காலை ஊன்றி நின்றான். அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க ஒரு கோழி இறக்கைகளைப் படபடத்துக்கொண்டே இவன் தலையைத் தாண்டிப் போய் விழுந்தது. கோழி அவ்வளவு உயரத்திற்கு பறக்க வாய்ப்பில்லை. யாரோ தூக்கி எறிந்திருக்க வேண்டும். வண்டி சாய்ந்ததில் பின்புற கேரியரில் கட்டியிருந்த தீப்பெட்டிக் கட்டுகள் கீழே விழ, கோபத்துடன் கோழி வந்த திசைநோக்கிப் பார்ப்பதற்குள்…
“ஏண்டா… டேய்… எவ்ளோ தைரியம் இருந்தா எங்கூர்ல வந்து இந்த ராக்கம்மாவோட கோழி மேல சைக்கிளை ஏத்தி நசுக்கியிருப்ப… கண்ணு என்ன பொடனியிலயா வைச்சிட்டு வந்த? சைக்கிளில் வந்தா பெரிய ஏரோப்பிளேன் ஓட்டறதா நெனைப்பா? மரியாதையா ஆயிரம் ரூபாயை எடுத்து வைச்சிட்டு எடத்தைக் காலி பண்ணு,” சைக்கிள் ஹேண்டில்பாரில் கைவைத்தபடி பெருங்குரலெடுத்து கத்தினாள் ராக்கம்மா.
ஓங்குதாங்கான உடல்வாகு. அதற்கேற்ற குரல். ‘சின்னப்பையன்களின் விளையாட்டாக இருக்கும்’ என திட்டுவதற்குத் தயாரானவன், இந்த எதிர்பாராத திடீர்த் தாக்குதலில் பயந்துபோய் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“இல்லக்கா. அது வந்து… நான் ஒண்ணும் செய்யல!”
“ஒண்ணும் செய்யலயா? மூஞ்சைப்பாரு… நான் ஆசையா கோழி வளர்ப்பேன். இவன் வந்து அது காலை ஒடைப்பான். நான் பார்த்துக்கிட்டு விரல் சூப்பிட்டு இருப்பனா..?”
“கோழியா? காலா? நான் உடைச்சனா..?” உளறினான்.
தூரத்தில் அவளால் ‘கோழி’ என்று சொல்லப்பட்ட ‘கோழிக்குஞ்சு’, சாவகாசமாய் மண்ணிலிருந்த புழுவைக் கொத்திக்கொண்டிருந்தது.
“முட்டைக் கோழியை இப்படி நசுக்கிட்டியே… மரியாதையா ஆயிரம் ரூவாயை வைச்சிட்டுப்போ”
“எங்கிட்ட காசு இல்லக்கா… நான் தீப்பெட்டி ஆபிஸ் போகணும், இன்னிக்கு சனிக்கிழமை, சாயங்காலமாத்தான் சம்பளம் போடுவாங்க”
“வாடி மாப்பிள்ளை, அப்ப சைக்கிளை இங்கன வைச்சிட்டுப்போ…சாயங்காலம் காசக் கொடுத்துட்டு சைக்கிளை எடுத்துக்கோ”
“ஆயிரம் ரூபாய் என்னால கொடுக்க முடியாது. நான் வேணும்னா வேற கோழி வாங்கிக் கொடுத்துடறேங்க்கா”
“எவளுக்கு வேணும் ஒன்னோட கோழி? நான் ஆசையா வளர்த்த கோழியை இப்படி ஒச்சமாக்கி விட்டியே?” தூரத்தில் நொண்டிக்கொண்டிருந்த மற்றொரு கோழியைக் காட்டினாள்.
இவளிடமிருந்து தப்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவன்,
“அக்கா மன்னிச்சுக்கிடுங்க… இந்தாங்க இதுதான் இருக்கு எங்கிட்ட” அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக முதலாளியிடம் அட்வான்ஸ் கேட்டு வாங்கி வைத்திருந்த ஐநூறு ரூபாயை சட்டைப்பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்.
“சரி… சரி… போய்த்தொலை, இனி இங்கிட்டு வந்த… பிச்சுப்புடுவேன் பிச்சு”, சொல்லிக்கொண்டே பணத்தைப்பிடுங்கி ஜாக்கெட்டுக்குள் செருகினாள். அதுதான் ராக்கம்மா.
டவுனிலிருந்து பிரிந்து அடுத்த கிராமத்துக்குச் செல்லும் வழியில், ரோட்டு மேல இருக்கும் ‘தக்கினியூண்டு’ ஊர் அது. மொத்தமே ஐம்பது, அறுபது குடும்பங்கள்தான் இருக்கும். ஊருக்குப் பின்னால தோட்டம் துறவு இருந்தாலும் விவசாயமெல்லாம் இல்லை. பக்கத்து டவுனிலிருக்கும் தீப்பெட்டி ஆபிசுக்கும் பட்டாசு ஆலைக்கும் ஆள் கூப்பிட கம்பெனி பஸ், வேன் ஊருக்குள் வரும். கருக்கலில் வேலைக்குப் போகும் சனங்கள், பொழுது ‘மசங்குனப்’ பிறகுதான் ஊருக்குள் வருவார்கள். பகல் முழுவதும் வயதான பெரியவர்கள் மட்டும் ஆங்காங்கே உலாத்திக்கொண்டும் சாவடியில் படுத்து பழங்கதை பேசிக்கொண்டும் இருப்பார்கள்.
ஊரை ஒட்டி ரோட்டு மேல அந்த தக்கினியூண்டு ஊருக்கு ஏற்றாற்போல ராக்கம்மாளின் ‘இத்தினியூண்டு’ பெட்டிக்கடை. அதுதான் அந்த ஊருக்கு ‘டிபார்ட்மென்டல் ஸ்டோர்’. மகள் பேச்சியம்மாள் பத்தாம் வகுப்பும் மகன் பிரபு ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள். கணவன் காளைப்பாண்டி வாய் பேசத் தெரியாத அம்மாஞ்சி. தினமும் தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்குப் போய் விடுவதால், கடையின் ஏகபோக உரிமையாளர் ராக்கமாள்தான்.
ராக்கம்மாள் கொஞ்சமல்ல நிறையவே துடுக்குக்காரி. யாரை ஏமாற்றி என்ன பறிக்கலாம், ஊரை ஏமாற்றி எப்படி உலையில போடலாம் என்பது மட்டும்தான் அவளது சிந்தனையும் செயலும். போவோர் வருவோரை ஏய்த்துப் பிழைப்பதும் கடன் கேட்பவர்களுக்கு ஒன்றுக்கு நாலாகக் கணக்கு எழுதி வைத்து பணம்பிடுங்குவதும் அவளது தொழிலாகிப்போனது. அவள் வாய்க்குப் பயந்து யாரும் அவளை எதிர்த்துப் பேசுவதில்லை.
“அவங்கப்பன் சம்பாதிக்கிற காசு டாஸ்மாக் போனது போக ‘ஒலக்கஞ்சி’ க்குக் கூட காணாது. அப்படி இப்படி நாலு காசு பார்த்தாத்தான பொட்டப்புள்ளைக்கு சேர்த்து வைக்க முடியும்?” என்று தனது அடாவடித் தனத்துக்கு, அவளுக்கு அவளே நியாயம் சொல்லிக்கொள்வாள். அதனால் எந்த பழி பாவத்துக்கும் அஞ்சுவதில்லை.
அம்மா வாயும் குணமும் பேச்சியம்மாளுக்கும் அப்படியே ஒட்டிக்கொண்டது. கூடப்படிக்கும் பிள்ளைகளை அரட்டி உருட்டி காசு பிடுங்கி வாங்கித் தின்பதும், யாருக்கும் பயப்படாமல் வாய்ச்சவடால் அடிப்பதும், சமயங்களில் ஆசிரியர்களின் கைப்பைகளில் கைவைப்பதும் அவளுக்கு இயல்பாகிவிட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்துவிட்டது. இவள் படிக்கும் பள்ளிதான் சுற்றுவட்டாரத்தில் பெரிய தேர்வு மையம். அதனால் பக்கத்து ஊர் அரசுப் பள்ளிகளில் இருந்தெல்லாம் பிள்ளைகள் தேர்வு எழுத வந்தார்கள். பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் என பள்ளி பரபரப்பாக இருந்தது. தேர்வு அலுவலக அறையாக மேற்கு மூலையில் இருந்த தனியறை மாற்றப்பட்டது. ‘அன்றன்றைக்கு வரும் கேள்வித்தாள்களை பத்திரப்படுத்துதல், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை சேகரித்து மாவட்ட தலைநகருக்கு அனுப்பிவைத்தல் போன்ற வேலைகள் நடைபெற்றதால் அந்த அறைப்பக்கம் மாணவர்களுக்கு அனுமதியில்லை’ என தலைமை ஆசிரியர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அன்றைக்கு கணிதத் தேர்வு. மிகக்கடினமாக இருந்தது. பேச்சியம்மாள் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாக எழுதிய பேப்பரைக் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தவளுக்குத் தான் தோல்வியடைந்து விடுவோம் என்பது உறுதியாகத் தெரிந்தது. என்ன செய்வது என யோசித்தாள். எல்லாப் பிள்ளைகளும் தேர்வு முடிந்தவுடன், கணித ஆசிரியர் திலீப் சாரைப் பார்க்கப் போய்விட்டார்கள். இவள் ஆசிரியர்களைப் பெரிதாக மதிப்பதில்லை என்பதால், தேர்வு எழுதியதும் வழக்கமாக வீட்டுக்குப் போய்விடுவாள். ஆனால் இன்று வீட்டுக்கும் போகாமல் தேர்வு அலுவலக அறையை நோட்டமிட்டவாறே அதற்கு நேர் எதிரே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அந்த அறையிலிருந்து அனைத்து ஆசிரியர்களும் வெளியே வர, பியூன் ஒரு பூட்டை எடுத்து பூட்டியதைக் கவனித்தாள். வெளியிலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள் அனைவரும் பணியாளர் அறைக்கு உணவருந்தச் சென்று விட்டார்கள்.
தூரத்தில் அருண் வந்து கொண்டிருந்தான். ஒரே வகுப்பில் படிக்கும் அருணுக்கு இவள் மீது கொஞ்சம் கிளர்ச்சி இருந்தது. காதலர் தினத்தன்று ஒரு வாழ்த்து அட்டையில் ‘ஐ லவ் யூ’ என எழுதி இவளது இடத்தில் வைத்திருந்தான். அதை எடுத்துப் பார்த்தவள் வெட்கத்துடன் தன் பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.
பேச்சிக்கு அவன்மீது பெரிதாய் நாட்டம் இல்லாவிட்டாலும், அவன் என்றைக்காவது பயன்படுவான் என்பது அவள் எண்ணம். ஏனெனில் வகுப்பில் முதல் ஐந்து ரேங்க்குக்குள் வந்து விடும் மாணவன் அவன். அதனால் அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்து வைப்பாள்.
அவனோ பேச்சி அவனை காதலிப்பதாகக் கற்பனை செய்து கொள்வான். ஆனால் பேச்சிக்கோ பணக்கார வீட்டுப்பையனான ஸ்டீபனைத் தான் ரொம்பப் பிடிக்கும். “ப்ளஸ் டூ முடிப்பதற்குள் அவனை கரெக்ட் பண்ணி பணக்கார வீட்டில் செட்டில் ஆகி விடுவேன் பார்” என தோழிகளிடம் சவால் விட்டிருக்கிறாள். “அதற்கு முதலில் டென்த் பாஸ் ஆக வேண்டுமே? அப்போதுதானே ஸ்டீபனுடன் அவன் எடுக்கும் குரூப் எடுத்து, ப்ளஸ் ஒன் சேர முடியும்?” யோசித்துக்கொண்டே அருணை நோக்கி கையசைக்க, அவனும் ஆர்வமாய் ஓடி வந்தான்.
அவனைப்பார்த்ததும் வலிய வரவழைத்துக்கொண்ட வெட்கத்துடன், “எக்ஸாம் எப்படி எழுதியிருக்க அருண்?” என்றாள்.
“நான் சூப்பரா எழுதியிருக்கேன்… கண்டிப்பா சென்ட்டம் வந்துடும், நீ எப்படி எழுதியிருக்க?”
“நேத்து முழுக்க எனக்கு காய்ச்சல். படிக்கவே முடியல, அதனால சரியாகவே எழுதல. ஃபெயிலாயிடுவேனோனு பயமா இருக்கு அருண்…”
“அய்யய்யோ அப்படியா… என்ன செய்யறது இப்ப..?”
“நான் ப்ளஸ் ஒன் உன்கூட படிக்கனும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? நான் ஃபெயிலாயிட்டா எங்க அம்மா படிக்கவே அனுப்பாது…” கொஞ்சலாகச் சொன்னாள்.
“நீ பக்கத்துல யாரிட்டயாவது கேட்டு எழுதியிருக்கலாம் இல்ல..?”
“எப்படிக் கேட்கறது? எங்க ஹாலுக்கு வந்த சூப்பர்வைசர்தான் அங்கிட்டு இங்கிட்டு திரும்ப விடலியே? நம்ம பேப்பர்லாம் இந்த ரூமுக்குள்ளதான் இருக்கு, போய் என் பேப்பரை எடுத்து ஒன் வேர்டு ஆன்சர் மட்டும் எழுதி வைச்சிடுவோமா? உனக்குத்தான் எல்லா ஆன்சரும் தெரியுமே?”
“அய்யோ… பயமா இருக்கே?”
“உன்னை நான் ரொம்ப தைரியசாலின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், நீ என்ன இப்படி பயந்தாங்கோளியா இருக்க..?”, எகத்தாளமாகக் கேட்டவள் அடுத்த கணம், “தலையில் என்னவோ தூசி இருக்கு பாரு” அக்கறையாய் அவன் தலையைத் தடவினாள். அருணுக்கு உடம்பெல்லாம் கூசியது.
“அட நான் ஒண்ணும் பயந்தாங்கோளி இல்ல… இப்ப என்ன உனக்கு அந்த ரூமுக்குள்ள போகனும் அவ்வளவுதான?”
“உனக்குப் பயமா இருந்தா… ஸ்டீபனைக் கூப்பிடுவோமா?” ஓரக்கண்ணால் பார்த்தபடி மெதுவாக ஏற்றி விட்டாள்.
“அதெல்லாம் வேணாம், நானே பேப்பரை எடுத்துடுவேன் பார்” சொல்லிக்கொண்டே வேகமாக நடந்தான்.
அந்த அறைக்கதவில் பெயருக்கு ஒரு நோஞ்சான் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் யாரும் இல்லை. ஒரு கல்லை எடுத்து பூட்டின் மீது ஒரு போடு போட, ‘டபக்’ கென வாய் பிளந்து கொண்டது. மீண்டும் ஒருமுறை அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே உள்ளே போனான். உடன் பேச்சியும்…
அருணுக்கு வியர்த்தது. ரொம்ப பயமாகவும் இருந்தது. அவன் பயப்படுவதைப் பார்த்த பேச்சியம்மாள் தைரியமூட்டுவதற்காக அவன் கையைப் பிடித்து அழுத்தினாள். பேச்சியின் கைபட்டதும் அருணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. உடம்பெல்லாம் பரபரத்தது.
“நெசம்மா நீ என்னை லவ் பண்றியா அருண்..?” மெல்லிய குரலில் காதுக்குள் கேட்டாள்.
“ஆமா, நீ..?”
“நானும் தான். எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்”
அந்தத் தனிமை என்னவோ செய்தது. வந்தவேலை மறந்து இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டார்கள். ஐந்து நிமிடமானது. திடீரென கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு இருவரும் பயந்து விலகினர். உள்ளே வந்த திலீப் சார் அதிர்ந்து போனார். பேச்சி விலகியிருந்த உடைகளை அவசரமாகச் சரிசெய்தாள்.
“ச்சீய் நாய்களா… இங்க என்ன பண்றீங்க? பூட்டியிருந்த கதவு எப்படி திறந்துச்சு?”
“ஒண்ணுமில்ல சார்… கணக்குல டவுட் கேட்டுட்டு இருந்தேன்” உளறினாள் பேச்சி.
“டவுட்டா… கணக்கு எக்ஸாம் முடிஞ்சு போச்சுல்லா?”
“அது வந்து… அது வந்து…”
“ரெண்டு பேரும் ஹெச் எம் ரூமுக்குப் போங்க… நாளைக்கு வீட்லயிருந்து பேரன்ட்ஸைக் கூட்டிட்டு வந்தால்தான் சயன்ஸ் எக்ஸாம் எழுத முடியும். நான் இப்பவே போய் ஹெச்.எம்.கிட்ட சொல்றேன்”
“சார் ப்ளீஸ் சார்… வேணாம் சார்…”
திலீப் சார் இருவரையும் வெளியே அனுப்பினார். கதவை நன்றாகப்பூட்டி, பியூனை அழைத்து வாசலில் நிற்கவைத்து விட்டு தலைமை ஆசிரியர் அறை நோக்கி நடந்தார். திலீப் சார் பாடம் நடத்துவதில் கெட்டி. அரசுப் பள்ளியில் தொடர்ந்து நூறு சதம் தேர்ச்சி கொடுப்பதால், உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர். ‘கல்லைக்கூட கணக்குப்போட வைத்து விடுவார்’ என்பதால் டியூசன் சென்டர்கள் இவருக்காக தவம் கிடந்தாலும், ‘அரசுப்பணியில் இருக்கும் வரை டியூசன் எடுக்கமாட்டேன்’ எனும் அறத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாளர். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.
முப்பது ஆண்டுகளாக மாணவர்களைக் கையாண்ட அனுபவம் இருப்பதால், அவருக்கு இந்த விஷயத்தை பெரிதுபடுத்துவதில் விருப்பமில்லை. சும்மா பயமுறுத்துவதற்காக அப்படிச் சொன்னாரே தவிர, இருவருக்கும் தனித்தனியே ஆலோசனை கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார். அதனால் ஒருவரிடமும் இதைப்பற்றி பேசாமல் சாப்பிடப்போய் விட்டார்.
அருண் முகம் வெளுத்துப் போயிருந்தது.
“அய்யோ எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்ருவாங்க. என்னை சயன்ஸ் பரிட்சை எழுத விடாட்டி நான் செத்துப் போயிடுவேன்” பயத்தில் அழத் தொடங்கினான்.
சற்று நேரத்துக்குமுன் குழைந்து கொண்டிருந்த பேச்சியா இது? அருணுக்கு வியப்பாக இருந்தது.
“இல்ல பேச்சி, எனக்குப் பயமா இருக்கு… நான் போறேன். எங்க அம்மாட்ட உண்மையைச் சொல்லி இப்பவே கூட்டிவந்து சார்ட்ட மன்னிப்பு கேட்கப்போறேன்.”
“ஓடிப்போடா பயந்தாங்கோளி… நான் பார்த்துக்கறேன் பிரச்சினையை! இந்த ஆளை சும்மாவிட மாட்டேன். ஹெச்.எம்.ட்ட சொல்லுவானாமா? பேரன்ட்ஸை கூட்டிட்டு வரச் சொல்லுவானாமா?”ஆத்திரமாக வந்தது. அம்மா செய்யும் அடாவடித்தனங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. அதில் எதை இங்கு பயன்படுத்தலாம் என யோசித்தாள். ஒருமுறை ரேசன் கடையில் ராக்கம்மாள் அதிகப்படியாகக் கேட்ட பொருளைத் தரமறுத்த கடை ஊழியர் மீது ‘கையைப் பிடித்து இழுத்ததாகப்’ போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகக்கூறி ஆர்ப்பாட்டம்செய்து அவனிடம் பத்தாயிரம் ரூபாய் வாங்கியது நினைவுக்கு வந்தது. பேச்சியம்மாள் தனக்குள் சிரித்துக்கொண்டாள். திட்டம் ரெடி.
திலீப் சார் மீதான கோபத்துடன் மைதானத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளுக்கு அங்கு கிடந்த ஒரு டப்பாவைப் பார்த்ததும் யோசனை வந்தது. எடுத்து நுகர்ந்து பார்த்தாள். யாரோ எப்பவோ விவசாயத்துக்கு பயன்படுத்தி தூக்கியெறிந்த பழைய பூச்சி மருந்து டப்பா. பூச்சிமருந்தின் வாசனை இன்னும் மிச்சம் இருந்தது. வாட்டர்பாட்டிலில் இருந்த தண்ணீரை டப்பாவில் ஊற்றி நன்கு குலுக்கினாள். பின்னர் அந்தத் தண்ணீரை தன் முகமெங்கும் தெளித்துக்கொண்டாள். சுடிதாரிலும் ஆங்காங்கே தெளித்தாள். தூரத்தில் அறிவியல் தேர்வுக்காக பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்த மரத்தடிக்கு தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தாள்.
மகேசு தான் முதலில் கவனித்தாள் – “என்னடி..என்ன ஆச்சு?”
“நான்… நா…ன் மருந்தைக் குடிச்சிட்டேன்”
கண்கள் செருக, வார்த்தை வார்த்தையாய்ச் சொன்னாள்.
அவள் பதறி, “டீச்சர்…” என அலறிய அலறலில், மொத்த வகுப்பும் திரும்பிப் பார்க்க, வித்யா டீச்சர் ஓடி வந்தார்.
“டீச்சர்… திலீப் சார்… திலீப் சார் என்னை அந்த பரிட்சை ரூமுக்குக் கூட்டிப்போய் என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தார். அதனால நான் பூச்சி மருந்தைக் குடிச்சிட்டேன்…”சொன்னவள் மயங்கி விழுவதைப்போல கீழே சரிந்தாள்.
“டேய்…போய் ஹெச் எம் சாரை வரச்சொல்லு” டீச்சர் பதறினார். அதற்குள் பக்கத்து வகுப்பறைகளிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் கூடிவிட்டனர்.
என்னவோ ஏதோவென ஓடிவந்த தலைமை ஆசிரியர், தன்னுடைய காரில் பேச்சியையும் துணைக்கு வித்யா டீச்சரையும் பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். பெற்றோர்களுக்கு தகவல் சொல்லிவிட, ராக்கம்மாள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்.
மருத்துவர், பரிசோதனைகளுக்குப்பிறகு, “பூச்சிமருந்து உடலுக்குள் போகவில்லை என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” எனக்கூறிவிட்டு போய் விட்டார். ஆனாலும் ராக்கம்மாள் விடுவதாக இல்லை. “எவன் அவன்…எம்பிள்ளையை பூச்சி மருந்து குடிக்க வைச்சவன்? அவனை சும்மா விட மாட்டேன்” அமைதியாக இருந்த மருத்துவமனை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தாள். பேச்சியையும் இழுத்துக்கொண்டு காவல் நிலையம் போய், திலீப் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் கொடுத்தாள்.
காவலர்கள் முறையான விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே, அனைத்து செய்திச் சேனல்களும் திலீப் சார் மீது குற்றம் சாட்டி நடக்காததை நடந்தது போலவே ஒளிபரப்பி பரபரப்பு ஏற்படுத்தின. ஒரு சேனலில் இதுகுறித்த விவாதம்கூட நடந்தது. கலந்து கொண்ட அனைவரும் ‘திலீப் சாரை கழுவிலேற்ற வேண்டும்’ என்பது வரை பேசித் தீர்த்தனர். கல்வித்துறை அதிகாரிகள் எந்த விசாரணையுமின்றி திலீப் சாரை இடைநீக்கம் செய்தனர். திலீப் சார் கூனிக் குறுகிப் போனார். அந்த நேரத்திலும்கூட அறைக்குள் நடந்ததை அவர் வெளியே சொல்லவில்லை.
கடைசி மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் புரியும் வரை அசராமல் பாடம் சொல்லிக் கொடுக்கும் திலீப், காவலர்கள் முன் ஒரு வார்த்தை பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றார். ஈவ்னிங் ஸ்டடி, மார்னிங் ஸ்டடி, விடுமுறை நாட்கள் என எப்போதும் பள்ளியே கதியென்று கிடப்பவர், பள்ளிக்குள் நுழையவே அச்சப்பட்டு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தார்.
அருண் தன் அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி அழ, அருணும் அவன் அம்மாவும் தலைமை ஆசிரியரிடம் வந்து மன்னிப்புக் கேட்டனர். கல்வித்துறையும் காவல்துறையும் தொடர்ந்த விசாரணையில், மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் திலீப் சாருக்கு பக்கபலமாய் நின்றார்கள்; சாட்சி சொன்னார்கள். அவர் பக்கம் தவறு இல்லை என்பதை புரிந்து கொண்டதால், துணைக் கண்காணிப்பாளர் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ராக்கமாளிடம் கூறினார். அவளும் இதற்காகத்தானே காத்திருந்தாள்..?
“ரெண்டு லட்சம் கொடுக்கச் சொல்லுங்க… நான் வழக்கை வாபஸ் வாங்கிக்கறேன். வாத்தியாருங்கதான் பெட்டி பெட்டியாய் சம்பளம் வாங்குறாங்க இல்ல..?”
‘இரண்டு லட்சமா? நான் என்ன தவறு செய்தேன்?’அதிர்ந்துபோனார் திலீப்.
“ஆமா ரெண்டு லட்சம் கொடுத்தா… இத்தோட விட்டுடறேன். இல்ல, இப்பவே எஸ்பி ஆபிஸ்ல போய் புகார் கொடுப்பேன், நாளைக்கு ரெண்டு டிவில இன்டர்வியூ கேட்ருக்காங்க, நான் அங்க பேசிக்கறேன்”, தெனாவட்டாகப் பேசினாள்.
இப்போது பேச்சிக்கே திலீப் சாரை பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் மௌனமாக இருந்தாள். துணைக் கண்காணிப்பாளர் திலீப் சாரைப் பார்க்க, அவர் தலைகுனிந்தார். அவரது முப்பது ஆண்டு ஆசிரியப் பணி இப்படி கேவலமாய் முடிந்திருப்பதை நினைத்து மறுகினார். மறுநாள் யார் யாரிடமோ கடன் வாங்கி இரண்டு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்து விட்டார். ராக்கம்மாள் பூரிப்புடன் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டாள். கல்வித்துறை திலீப் சாரை மீண்டும் பணியில் தொடர ஆணையிட்டது.
பேச்சியின் அம்மா, திலீப் சாரிடம் மகளையே பகடைக்காயாக வைத்து இரண்டு லட்ச ரூபாய் மிரட்டி வாங்கியது பள்ளியிலும் ஊரிலும் அனைவருக்கும் தெரிந்து போனது.
‘பெத்த புள்ளை மானத்தை இப்படி ஊர்முழுக்க சந்தி சிரிக்க வைச்சு அப்படி ஒரு பொழைப்பு பொழைக்கணுமா?’ என காறித் துப்பினார்கள். ஊர்க்கட்டுப்பாடு என்று கூறி மொத்தக் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தார்கள். எதற்கும் அசரவில்லை ராக்கம்மாள்.
பேச்சியம்மாள் பத்தாம் வகுப்பில் எப்படியோ தேர்வாகிவிட்டாள். அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். வகுப்பில் எந்தப் பிள்ளைகளும் இவளுடன் பேசுவதுமில்லை, பக்கத்தில் உட்காருவதுமில்லை. இவளாக வலியப்போய் பேச முயற்சித்தாலும், ஒதுங்கிப் போனார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதுகூட இவள் இருக்கும் பக்கம் திரும்புவதைத் தவிர்த்தார்கள். இவள் பார்வைக்காக ஏங்கிய அருண்கூட அவளைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆரவாரமாய் வளைய வந்த பள்ளியில் தான் குப்பையென ஒதுக்கப்படுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தாள்.
இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வதென அவளுக்குத் தெரியவில்லை. ராக்கம்மாவோ வழக்கம்போல கடையில் உட்கார்ந்து போவோர் வருவோரிடம் தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க பேச்சிக்கு கோபமாக வந்தது. ‘நான் தப்பு செய்தால் அம்மா தானே திருத்த வேண்டும்? நான் தெரியாமல் சின்னத்தப்பு செய்தேன், பணத்துக்கு ஆசைப்பட்டு அவள்தானே பிரச்சினையை பெரிசாக்கினாள்?’ அம்மாவைப் பார்க்கவும் பிடிக்கவில்லை; பேசவும் பிடிக்கவில்லை. அப்பா வழக்கம்போல மௌனச்சாமியார்தான்.
வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பேச்சி சீக்கிரம் பள்ளிக்கு வந்து விடுவாள். மைதானத்தில் பேசிச் சிரித்து விளையாடும் மாணவிகளை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். தனிமையில் இருக்கும் போதெல்லாம் அழுகை மட்டுமே அவளுக்குத் துணையானது. காவல் நிலையத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்த திலீப் சாரின் நினைவு வந்து தூங்கவிடாமல் செய்தது. கொஞ்ச நாளில் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானாள். அவளுக்கு வீடும் பிடிக்கவில்லை, பள்ளியும் பிடிக்கவில்லை.
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.
பேச்சியம்மாவைப் போன்றவர்கள் உண்மையில் தானே உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள். இயல்பான கதைக்களம். அருமை.