“என்ன நிலா, வீட்ல யாரும் இல்ல?”
வாசலில் ஏகாந்தமாக நின்று தம்மடித்துக் கொண்டிருந்த நிலாவிடம் பக்கத்து வீட்டு ஆண்ட்டி பேச்சுக் கொடுத்தார்.
“ஆமாம் ஆண்ட்டி. இல்லாட்டி இப்படி நிம்மதியா தம்மடிக்க முடியுமா? வருணும் குழந்தைகளும் ஊருக்குப் போயிருக்காங்க.”
“ஓ… தீபாவளில்ல? நீ போகல?”
“எல்லாரும் ஒண்ணாதான் போலாம்னு இருந்தோம். அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியல, தம்பி வேற பொண்டாட்டி அமெரிக்கா போயிருக்கறதால இந்த வாட்டி தீபாவளிக்கு ஊருக்கு வரேன்னு சொல்லி இருந்தான். நிறைய வேலை இருக்கு, வருணை அனுப்புன்னு அப்பா ஒரே புலம்பல். அதான் ரெண்டு நாள் முன்னாடியே இவங்களை மட்டும் அனுப்பி வெச்சிட்டேன்.” வசீகரமாகச் சிரித்தாள் நிலா.
“நீ எப்போ போற?”
“போகணும் ஆண்டி. தீபாவளின்னா ஊருக்குப் போய் அப்பா கையால சாப்டாதான் திருப்தி. என்ன பண்றது? ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு. தீபாவளி அன்னிக்குக் காலைலதான் போக முடியும்.”
“வருணுக்கு ஆபிஸ்ல எப்படி லீவ் கொடுத்தாங்க?”
“அவனுக்கும் வொர்க் இருக்கு. ஜெண்ட்ஸுக்கு என்ன, அவன் பாஸ் இரக்கப்பட்டு வொர்க் ஃப்ரம் ஹோம் குடுத்துட்டாங்க. இவன் அங்கே போய் ஓபிதான் அடிப்பான், வேலை பார்க்க மாட்டான்… ஹா ஹா ஹா!”
“ஹா… ஹா… குட்டீஸ்?”
“அவங்களுக்கு லீவ் விட்டாச்சு. ப்பா தொல்லை தாங்கலை. மூணு பேரையும் அனுப்பிட்டுத்தான் நிம்மதியா இருக்கேன்.”
“ஓ, அப்போ நைட் பிரெண்ட்ஸ் பார்ட்டி உண்டுன்னு சொல்லு.” ஆண்ட்டி பரவசமானார்.
“கண்டிப்பா, நீங்களும் ஜாயின் பண்ணிக்கோங்க ஆண்டி!”
“தாங்க்ஸ். முடிஞ்சா வரேன். ஆனா, நீ ரெண்டு நாள் ஜாலியா பேச்சலரெட் லைஃப் எஞ்சாய் பண்ணு. இங்கே பாரு, உங்க அங்கிளை… எங்கேயும் போகாம என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கு. மூட்டு வலி, முதுகு வலின்னு ஆயிரம் இருக்கு. யாரு சாப்பிடப் போறா, பேசாம விடுன்னா கேட்காம உட்கார்ந்து பலகாரம் பண்ணிக்கிட்டு இருக்கு. அப்புறம் கை வலிக்குது, உடம்பு வலிக்குது, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போன்னு என் உயிரை எடுக்கும்.”
அப்போது பார்த்து அங்கே வந்தார் அங்கிள். பயந்த மாதிரி நடித்த ஆண்ட்டி, “சொல்லிடாதே” என்று நிலாவிடம் சைகை காட்டினார்.
“என்ன நடிக்கிறீங்க, எல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். ஆண்ட்டி சொல்றத நம்பாதே நிலா. இவங்க எப்பவுமே இப்படித்தான். இந்தத் தடவை என்னால் முடியல. கடைல வாங்கிக்கலாம்னு சொன்னா, ‘உன் கையால பண்ணி சாப்டா தாண்டா தீபாவளியே கொண்டாடின மாதிரி இருக்கும்’னு ஐஸ் வெச்சு என்னை வேலை வாங்கிட்டு உங்க கிட்ட மாத்திப் பேசுறாங்க.”
அங்கிளுக்குப் பேசும் போதே மூச்சிறைத்தது. காலை முதல் அடுப்படியில் நின்றதால் களைத்து வியர்த்து சோர்ந்து போயிருந்தார். ஆனாலும் முகமலர்ச்சியுடன், “இந்தாங்க, இப்பதான் சூடா அதிரசம் பண்ணேன். டேஸ்ட் பாருங்க” என்று நிலாவிடமும் மனைவியிடமும் நீட்டினார் அங்கிள்.
“வாவ்! சூப்பர் டேஸ்ட் அங்கிள். நிஜமாவே அதிரசம் பண்ண உங்களை அடிச்சிக்க ஆளே இல்ல. ப்ளீஸ் வருணுக்குச் சொல்லிக் கொடுங்களேன்… ஒரு எழவும் தெரியல அவனுக்கு.” அதிரசத்தை ருசி பார்த்த நிலா அலுத்துக் கொண்டாள்.
அந்தப் பாராட்டைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிளின் சோர்வெலாம் போனது போல் முகம் மேலும் மலர்ந்தது. அதில் மண்ணைப் போடுவது போல், “இவன் மட்டும் என்ன? கல்யாணம் ஆன புதுசுல ஒரு டீ கூட ஒழுங்காப் போடத் தெரியாது. எல்லாம் எங்கப்பா குடுத்த ட்ரெய்னிங், சொல்லுடா” என்று ஆண்ட்டி பெருமை பீற்றினார்.
அங்கிள் கழுத்தை நொடித்தார். “ஒண்ணும் கிடையாது, இது எங்கப்பாவோட ரெசிப்பி. அவர்கிட்டதான் கத்துக்கிட்டு வந்தேன். நல்லா இருக்கா நிலா? கொஞ்சம் கொடுத்து விடறேன் ஆண்ட்டிகிட்ட.”
“டேய், நேத்து முறுக்கு பிழிஞ்சியே. அதையும் கொண்டா. நிலா தனியா இருக்காள்ள? நான் அவளுக்கு ஈவினிங் கம்பெனி குடுக்கலாம்னு இருக்கேன்.”
“ம்கும். நீங்க எதுக்குப் போறீங்கன்னு நல்லாத் தெரியும். நிலா, ஆண்ட்டிக்கு பிபி இருக்கும்மா. அதிகம் குடிக்காம பார்த்துக்கோ!.” அங்கிள் ஆண்ட்டியின் காதைச் செல்லமாகத் திருகினார்.
“ஹா… ஹா… ஓகே அங்கிள்.”
அங்கிள் சொன்னதைக் கேட்டு நிலாவும் ஆண்ட்டியும் பெரிய ஜோக் மாதிரி சிரித்தார்கள். அங்கிள் பூரிப்புடன் தன் வீட்டுக்குள்ளே சென்றார்.
அங்கிள் சென்றதும் நிலாவும் ஆண்ட்டியும் அவரை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அங்கிள் சோ ஸ்வீட்ல ஆண்ட்டி!”
”ஆமாம்மா. ரொம்ப இன்னசெண்ட். அவனுக்கு நான்தான் உலகமே. நான் மட்டும்தான்!” என்று நாத்தழுதழுத்தார் ஆண்ட்டி.
“சரி, இன்னிக்குப் பார்ட்டில அன்னிக்குப் பாதில விட்ட உங்க லவ்ஸ்டோரிய சொல்லணும். சரியா?” பேச்சை மாற்றினாள் நிலா.
“ஓ, வித் ப்லெஷர்” என்று தனது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பழைய காதலனின் பெயரைத் தடவிப் பார்த்துக்கொண்டார் ஆண்ட்டி. மனம் எங்கோ யாரிடமோ லயித்திருந்தது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.