பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஆதிகாலத்திலிருந்து இன்று வரையிலும் பல இலக்கணங்களைப் புகுத்தி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.
கோயிலில் இருக்கும் பெண் தெய்வத்தை மட்டும் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பூஜித்து மரியாதை கொடுத்து கொண்டாடும் ஆணாதிக்க சமூகம், தங்கள் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மரியாதை என்ன, சக மனுஷியாகக்கூட நினைப்பது இல்லையே, ஏன்?
இன்று பல இடங்களில் பெண்கள் தங்களுடைய உரிமைக்காகவும் சுய மரியாதைக்காகவும் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்றாலும், கிராமப் புறங்களிலிருக்கும் பெரும்பான்மையான பெண்கள், அடிமையாகத்தான் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடாது. அவ்வீட்டு ஆண்களின் விருப்பங்கள் எதுவாகினும், அதற்கு ஒத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். தங்களின் விருப்பு வெறுப்புகளையெல்லாம் கூற, பெண்களுக்கு அனுமதி கிடையாது. காலங்கள் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெண்களுக்கான காலங்கள் மட்டும் இன்னும் மாறாமல் பழமைவாதிகளின் பிடியில்தான் இருக்கிறது.
நகர்ப்புறங்களில் வாழுபவர்களுக்குக் கிராமப் பெண்களின் நிலை குறித்த தகவல், “இன்னுமா அப்படியெல்லாம் நடக்கிறது?” என்று உங்களுக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். கிராமப்புறப் பெண்கள், தங்கள் உணர்வுகளை உரிமையுடன் சொல்வதற்கோ கருத்துகளைப் பகிர்வதற்கோ வாய்ப்புகள் அளிக்கப்படுவதே இல்லை.
படித்த சில பெண்களும், குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள் வந்ததும், கடமைகள் என்கிற பெயரில் அடிமை வாழ்க்கையின் பிடியில் சிக்கிக் கொண்டு, தன்னுடைய வலிகளையெல்லாம் மறைத்தும், சங்கடங்களைச் சகித்தும், தன் தலைமுறைகளின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து தேவையற்ற அச்சுறுத்தலின் பெயரில், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
பெண் குழந்தைகளை மட்டும் குழந்தைப் பருவத்திலிருந்தே பலவிதக் கட்டுப்பாடுகளோடு வளர்க்க வேண்டும் என்று விதிமுறைகளைக் கூறும் இந்தச் சமூகம், ஆண்பிள்ளைகளிடம் பாரபட்சம் பார்ப்பது ஏன்?
இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் உணர்வுகள் ஒன்று தானே! அப்படியிருக்க பெண்களுக்கு மட்டும் இத்தனை கட்டுபாடுகளும் தடைகளும் தேவையற்ற இலக்கணங்களையும் புகுத்துவது ஏன்?
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால், அவள் தன்னுடைய கணவரின் முன், தன் குரலை உயர்த்தி பேசக் கூடாது. வீட்டிலிருக்கும் ஆண்கள் எடுக்கும் முடிவே சரியானது, அவர்கள் கூறும் கருத்து, சரியோ தவறோ அதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், அவர்களின் கருத்துக்கு எந்தவித மறுப்பும் கூறாமல், அனைத்திற்கும் “ஆமாம் சாமி” போட வேண்டும். அவர்களை எதிர்த்து கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது.
இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும் பெண்கள் மட்டும்தான் அடக்க ஒடுக்கமானப் பெண் என்று இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிறது.
எந்தவொரு பெண், தன் சுயபுத்தியில் வாழாது, வீட்டிலிருப்பவர்களின் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு, தன்னால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், 24×7 என இயந்திரமாகச் சலிப்பில்லாமல் தொடர்ந்து வேலை செய்வதோடு, ஆண்களின் விருப்பு வெறுப்பிற்கு ஒத்துழைத்து, அவர்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து சேவகம் செய்து, தன் வாழ்நாளெல்லாம் அடிமையாக வாழ ஆயத்தமாக இருக்கிறாளோ, அப்படியான பெண்களுக்கு மட்டும்தான், இங்கு ‘குடும்ப பெண்’ என்கிற கிரீடத்தை வழங்குகிறது இந்த ஆணாதிக்க சமூகம்.
ஒவ்வொரு பெற்றோரும், தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் போது, அவளுடைய சொந்த வீட்டிலிருந்து வரும் முதல் அறிவுரை, “எதுவாக இருந்தாலும் அனுசரித்துப் போ… விட்டுக்கொடுத்துப் போ… பொறுத்துப் போ…” என்பது தாரக மந்திரமாக முதலில் ஒலிக்கும்.
இதைத் திருமணமாகிய ஆண்மகன்களுக்கு எந்தத் தாயாவாது கூறிக் கேட்டிருப்போமா? எவ்வளவு மோசமான மருமகனாக இருந்தாலும், “அவரிடம் பொறுத்து போ…” என்று தன் மகளிடம் பெற்றோர் கூறுவதற்கு மிக முக்கியக் காரணம், தன் மகள் அவனோடு வாதிட்டு வந்தால், அவள் எதிர்காலம் என்னவாகும்? உலகம் அவளை எப்படியெல்லாம் ஏசும்? அந்த வலிகளை எப்படி அவள் காலமெல்லாம் சுமப்பாள் என்று உலகத்தைக் குறித்த அச்சம்தான் முதலில் அவர்கள் சிந்தையில் வந்து நிற்கிறது. அவர்களை நொந்து ஒரு பிரயோசனமும் இல்லை. அப்படியொரு மாயையான பிம்பத்தை இந்தச் சமூகம் புகுத்தி வைத்திருக்கிறது.
தன் பாட்டி, தன் தாய் என அவளைச் சுற்றி வாழ்ந்து வந்த அனைத்துப் பெண்களும் ஆணாதிக்க சமூகத்திற்கு அடிபணிந்து வாழ்ந்து வந்ததைப் பார்த்து வளர்ந்த அவளுக்கும், தான் படித்திருந்தாலும் கூட சுயமாக முடிவெடுக்க முடியாது. திணறுவதற்கு மிக முக்கியமான காரணம், அவள் பார்த்து வளர்ந்து வந்த குடும்பச் சூழலும், இங்கு தனித்து வரப்பட்ட பெண்களுக்கு நிகழும் அநீதிகளும், பெண்களின் மீதான இந்தச் சமூகத்தின் பார்வையும் அத்தாக்கத்தின் விளைவால் உருவாகியிருக்கும் தேவையற்ற பயமும்தான் அவளைப் பீடித்திருக்கிறது.
இல்லறம் என்கிற நல்லறத்தில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெற்றால், சில நேரம் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அறியாமல் செய்யும் தவறைப் பெரிதுபடுத்தாமல், அதை அனுசரித்துப் போவதில் தவறில்லை. ஏனென்றால், கோபம் வரும் போது வார்த்தைகள் சில நேரம் எல்லை மீறுவது வழக்கம். அது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று.
உங்களிடம் வாதாடும் உறவு, உண்மையிலேயே உங்கள் மீது சரியான புரிதலும் அன்பும் வைத்திருந்தால், கோபம் தனிந்த பின்னர் பிரச்னையை மேலும் வளர்க்காமல் முற்றுப் புள்ளி வைத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்.
அதனால் குடும்ப உறவில் தேவையற்ற விரிசல், மனசங்கடங்கள் வருவதைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்கு நேர்மாறாக உங்களுடைய உணர்வைப் பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லாது இருக்கும் பட்சத்தில், பேதையவள் எத்தனை நாள்களுக்கு, எவ்வளவுதான் பொறுத்துப் போக முடியும்? எப்படியிருந்தாலும் தனக்கு ஆதரவாகப் பெற்றவர்கள்கூட நிற்கப் போவதில்லை என்பதை உணர்ந்து, ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்குக்கூட ஆளில்லாமல், நிற்கதியாக இருக்கும் பெண்கள் பலர், தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, தங்களையும் சேர்த்தே இவ்வுலகில் தொலைத்திருக்கின்றனர் என்பது எவ்வளவு வேதனை தரும் செய்தி.
பெண்களே சக பெண்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாத போது, ஆண்களை மட்டும் குறைசொல்வது எந்த விதத்தில் நியாயம்? அவர்களை மேலும் துக்க நிலைக்குத் தள்ளுவது, பெரும்பாலும் பெண்களே என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.
நம் நாட்டிற்கு மட்டும் கிடைத்த சுதந்திரம், இன்னும் பெரும்பாலான வீடுகளில் வாழும் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இன்று பல துறைகளில் உள்ள பெண்கள், தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகப் பதிவு செய்யும் அளவிற்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. ஆனால், யாருக்குத் தெரியும், இன்று சாதித்த பல பெண்மணிகள் இந்த இடத்தை அடைவதற்கு எத்தனை தடைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருப்பார்கள் என்று?
பூமியை பெண் சக்தியின் அடையாளம் என்றும், விக்ரம் லேண்டர் பதிந்த இடத்தை ‘சிவசக்தி’ என்றும், நீதிமன்றங்களில் நீதி தேவதையாகவும், நம் நாட்டை ‘பாரத மாதா’ என்றும், தாய் மொழி, தாய் நாடு என எல்லா இடங்களிலும் பெண்களை மையப்படுத்துவதோடு, அவர்களுடைய பெயரையும் கூறிப் பெருமையாகப் பேசித் திரியும் ஆணாதிக்க சமூகம், மணிப்பூரில் பெண்களை அடித்து நிர்வாணப்படுத்தி கொடூரமாகக் கொல்லும்போது மட்டும், ஏங்கே சென்றது?
ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லாத சூழலில் வாழ்ந்த பெண்கள், இன்று தனியாக கடல் தாண்டிச் சென்று படிப்பதும், வேலைக்குச் செல்வதும், விண்வெளியில் காலைப் பதிக்கும் அளவிற்கு எனப் பெண்கள் முன்னேறியிருந்தாலும், கிராமப்புறங்களில் உலகமே என்னவென்று தெரியாமல், பாவம் பல பெண்கள் காலங்காலமாக அடிமைத்தனமான வாழ்க்கையிலிருந்து மீள வழித் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் விழிப்புணர்வு எப்போது வரும்? எம் குலப்பெண்கள் தங்களுடைய எண்ணம் போல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப் போவது எப்போது?
முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது, இப்போது சில குடும்பங்களிலும், வேலைப் பார்க்கும் இடங்களிலும் உள்ள சில ஆண்கள் பெண்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருப்பது பெரும் மகிழ்ச்சி அளித்தாலும் கூட, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான சம உரிமை கிடைக்கப் போகும் நாள் எப்போது வருமோ? மாற்றம் வரும் நாள் என்றோ?
(தொடரும்)
படைப்பாளர்:
இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.
மிகவும் அருமை சகோதரி👏👏👏