இரவு லேசாகத் தலை சுற்றல் இருந்தது. ஆபிஸ் விட்டு வழக்கம் போல் தோழிகளுடன் பார், டீக்கடை என்று சுற்றாமல் வந்து படுத்துவிட்டாள்.

வருண் டாக்டரிடம் போகலாம் என்று அழைத்தும் நிலாவால் எழ முடியவில்லை என்பதால், வீட்டிலேயே தன்னால் இயன்றவரை நிவாரணம் செய்து கொண்டிருந்தான். மருந்து கொடுத்தும் தலைவலியும் உடல் அசதியும் குறையவில்லை. இரவு எதுவுமே சாப்பிட மறுத்தவளுக்குக் கொஞ்சம் ரசம் சோற்றை ஊட்டி விடுவதற்குள் வருணுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

காலையில் குழந்தைகளை அவசர அவசரமாகத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு (இன்னிக்கு பிரட் லஞ்ச்! ஹையா ஜாலி!) முதல் வேலையாக டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அழைத்துச் சென்றான்.

நிலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. குடிப்பழக்கம் இருக்கிறதா என்று கேட்ட டாக்டரிடம் நிலா எப்போதாவது என்றாள். வருண் முறைத்தான்.

“இல்ல டாக்டர், சொன்னாலும் கேட்கறதில்ல. அடிக்கடி குடிக்கறா” என்று உண்மையைப் போட்டு உடைத்தவுடன் டாக்டர் நிலாவைக் கடிந்துகொண்டே மருந்து எழுதித் தந்தார். ஆனாலும் வருணைத் தனியாக அழைத்து, “அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்காதீங்க. குடிக்கறதை ரொம்பச் சொல்லிக் காட்டாம திருத்த முயற்சி பண்ணுங்க. நைநைன்னு வீட்டுப் பிரச்னை எல்லாம் சொல்லித் தொந்தரவு கொடுக்காதீங்க. She needs peace of mind” என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

வீட்டுக்கு வந்து முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள் நிலா.

“நிலா, சாப்டு டேப்லட் போடறியா?” என்று கேட்ட வருணிடம் எரிந்து விழுந்தாள்.

“நான் குடிக்கிறேன்னு எல்லார் கிட்டையும் சொல்லணுமா? அந்த டாக்டர் அனுஷாவைப் பார்த்து ஏன் அப்படி வழியற? அவ உனக்குப் பாவம் பார்க்கணும். என்னை வில்லி மாதிரி பார்க்கணும். அதானே உன் ஆசை?”

“நிலா ஏன் இப்படி சில்லியா பிஹேவ் பண்ற? இப்ப அதுவா முக்கியம்? உன் ஹெல்த்….” என்கிற வருணை இடைமறித்தாள்.

“ஹும் ரொம்ப அக்கறைதான் உனக்கு. சீன் போடாதே.” எரிந்து விழுந்து விட்டுப் போய் டிவி முன் உட்கார்ந்து கொண்டாள் நிலா.

விஷயம் தெரிந்து நிலாவின் அப்பா பதறியடித்து ஓடிவந்து விட்டார்.

“என்ன தங்கம்? எப்படி பிபி வந்துச்சு உனக்கு?”

“என்னப்பா செய்றது? எல்லாம் டென்ஷன்தான்.”

“வேலை ஜாஸ்தி இல்ல?”

“ம்ம் ஆமாம்பா.”

”ஹும் வருணும் வேலைக்குப் போகுது. உன்னைச் சரியா கவனிச்சுக்க முடியல பாவம்… அது வீட்ல இருந்து நல்ல ஹெல்தியா சமைச்சா இதெல்லாம் வராது.”

நிலா எதுவும் பேசவில்லை. வருணும் வேலைக்குப் போவதால்தான் பொருளாதாரம் சீராக இருக்கிறது. அவன் வீட்டில் இருப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆனாலும் அப்பா சொல்வது நியாயம்தானோ? வருண் தனக்கெனச் சிரமம் எடுத்துத் தனியாக எதுவும் செய்வதில்லை. தோழிகள் ரூபி, ஜான்சி, இவர்களுக்கெல்லாம் வீட்டுக் கணவர்கள் இருந்ததால் மனைவியரை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதாக எண்ணிப் பொறுமுவாள் நிலா.

வருண் என்னடாவென்றால் ஆபிஸ் விட்டு வந்ததும் டயர்டா இருக்கு என்றபடியே ஏனோ தானோவென்று இரவு உணவைச் சமைக்கிறான். ஊரில் மற்ற ஆண்கள் செய்யாத என்ன வேலையைச் செய்துவிட்டான்?

அப்பாவும் பெண்ணும் தன் தலையைத் தின்று கொண்டிருப்பது தெரியாமல் எந்திரகதியில் வேலை செய்து கொண்டிருந்தான் வருண்.

“நிலா, மாமா, சாப்பிட வாங்க.”

“என்ன குழம்பு இவ்ளோ உப்பா இருக்கு?”

“இல்லியே மாமா, எப்பவும்விட குறைச்சுதான் போட்ருக்கேன்.”

“நிலாவுக்கு பிபி இருக்குன்னு தெரிஞ்சும் இவ்ளோ அலட்சியமா இருக்கலாமாப்பா?”

“இல்ல மாமா…”

“வருண்…” அதட்டலாக வந்தது நிலாவின் குரல்.

“சாரி மாமா, இனிமே கவனமா இருக்கேன்.”

மருமகன் மன்னிப்பு கேட்டதும் லேசாகக் குளிர்ந்த மாமனார் வருண் வைத்த கீரைக் கூட்டை ஏகமாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். நிலா சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துப் போகச் சொன்னார்.

மேலும், பிரஷரைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன கீரை, காய்கறிகள் சேர்க்க வேண்டும், அவற்றை எப்படிப் பக்குவமாகச் சமைக்க வேண்டும் என்று நீண்டதொரு லெக்சரைத் தொடங்கினார்.

வருணுக்குத் தலை வலிப்பதைப் போல் இருந்தது. காட்டிக் கொள்ளாமல், நிலா சாப்பிட்ட தட்டைக் கழுவாமல் அதிலேயே சோற்றைப் போட்டு விழுங்கத் தொடங்கினான்.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.