எதிர்மறை உணர்வுகளும் மன அழுத்தமும் மேலோங்கும் போது அதை இரண்டு விதமாகக் கையாளலாம். ஒன்று அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சில பல வழிகளைக் கையாண்டு அந்த நிலையிலும் நாம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்து கொள்வது. இதில் நாம் மேலே பேசிய வழிகளெல்லாம் அதில் அடங்கும். நாம் நமது உணர்வுகளை, காயங்களைக் கையாளாமல் நமது ஆற்றலை, நேரத்தை வேறிடத்தில் செலுத்துவதின் மூலம் உணர்வு கொந்தளிப்பை அமைதிப்படுத்துவது.

ஆனால், அது சிறிய தற்காலிகப் பிரச்னைகளுக்குச் சரியாக வரலாம், ஆழ்ந்த காயங்களுக்கும், கடந்த காலத்திலோ மிக சிறிய வயதிலோ ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மனதில் பதிந்த வலிகளுக்கோ, அதன் விளைவான எதிர்மறை உணர்வுகள், மன அழுத்தத்திற்குத் தீர்வாகாது. என்ன செய்தாலும் மனம் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பும்.

அப்போது நம் அடி மனதில் உள்ள காயங்களை ஆற்றுவதே ஒரே வழி. அதை எவ்வாறு செய்வது?

  1. சிறிது நாட்களுக்கு அனைத்தில் இருந்தும் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் மனம், உங்கள் வீடு, சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  1. உங்களோடு தனியாக நேரம் செலவழியுங்கள். நம் அடி மனதில் உள்ள காயத்தை உற்றுநோக்கி காரணத்தை அறிவது. அதற்கு காரணமானவர்களை, அவர்களைக் காயபடுத்த அனுமதித்த நமது இளைய பதிப்பை ( younger version of us ) மனதார நாம் மன்னிக்க வேண்டும். நமக்கிருக்கும் இன்றைய அறிவும் தெளிவும் அன்று நமக்கில்லாததால் அதில் நம் தவறு மன்னிக்கக் கூடியதே என்பதை உணர வேண்டும். நம்மைக் காயப்படுத்தியவர்களுக்கு அதற்கான தண்டனை காலம் தரும் என்றெண்ணி நம் கோபத்தைத் துறக்க முயற்சிக்க வேண்டும்.
  1. நமக்கு நம்பிக்கையான முதிர்ந்த மனநிலை உள்ளவர்களிடம் பேசுவது. இது போன்ற பகிர்வுகள் மன பாரத்தைக் குறைக்கும்.
  1. Hooponopono வழியை உபயோகப் படுத்தி நம் மனதைக் குணப்படுத்துவது.

காலையில் விழித்த உடன் அல்லது இரவில் படுக்குமுன் கண்ணாடியில் பார்த்து…

I love you (நான் உன்னை நேசிக்கிறேன்.)

I am sorry for all your pains ( உன்னுடைய எல்லாவிதமான வலிகளுக்கும் நான் வருந்துகிறேன்.)

Please forgive me (உனக்கு நான் குடுத்த வலிகளுக்கு மன்னிப்பை வேண்டுகிறேன்.)

Thank you (நீ தந்த, தருகின்ற ஆதரவுக்கு என் மனப்பூர்வமான நன்றி.)

என்று உணர்வுபூர்வமாகச் சொல்லுங்கள்.

இதை நித்தமும் செய்யும்போது மனம் தெளிவாகவும் அமைதியாகவும் ஆவதை உணர்வீர்கள். இது ஒரு பழமையான ஹவாய் மக்களின் மன வலியைத் தீர்க்கும் முறை. Dr Hew Len என்கிற மனநல மருத்துவரால் உபயோகிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறை.

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

  1. உங்களைச் சுற்றி நேர்மறையான ஆற்றல் உள்ள மக்கள், வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தேர்ந்தெடுங்கள். அது நீங்கள் குணமாவதை வேகப்படுத்தும்.
  2. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆழ்ந்த மூச்செடுத்து அமைதியாக இருங்கள். பல விடை தெரியாத வினாக்களுக்கு விடை கிடைக்கலாம், வினாவே இல்லாமல் போகலாம்.
  3. முடிந்தவரை பசுமையான இடங்களில், நீர் நிலைகளுக்கு அருகில் நேரம் செலவிடுவதும், அங்கே ஆழ்ந்த மூச்செடுத்து அமைதியாக அமர்ந்நிருப்பதும் மனதை அமைதிப்படுத்தும்.
  4. மனம்விட்டுச் சிரிப்பதும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளும்.
  5. ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்றும்போது அது சம்பந்தமாக உங்கள் உணர்வுகளும் மாற ஆரம்பிக்கும்.
  6. ஒரு வேளை எதுவுமே பலனளிக்காவிடில் உடலுக்கு நோய் வந்தால் எப்படி மருத்துவரை அணுகுவோமோ அதே போல் எந்தத் தயக்கமும் இன்றி மனநல மருத்துவரை அணுகுங்கள்.

எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும் உங்களைக் குணப்படுத்துவது சாத்தியமே. தேவை விடா முயற்சியும் நன்றாக ஆகிவிட வேண்டுமென்ற தீரா ஆசையும்தான்.

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

வாங்க, நாமும் சரித்திரம் படைக்கலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.