லஷ்மி விஜயம் 1948ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பொம்மன் டி. இராணி இயக்க, டி.வி.சாரி கதை, திரைக்கதை எழுத, ஜி.ராமநாதன் இசையமைக்க, மாடர்ன் தியேட்டர்Sகளால் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி பிலிம்ஸ் & கோ திரைப்படத்தைத் தயாரித்து உள்ளது.
ஆண் நடிகர்கள்
பி.எஸ்.கோவிந்தன் -விக்ரமன்
சி.வி.வி.பந்துலு -பராக்கிரமன்
வித்வான் சீனிவாசன் -பிரேமானந்தர்
G M பஷீர் -மேகநாதன்
E R சகாதேவன் -அவந்தி மன்னர்
K R மாசிலாமணி -ராஜகுரு
ராமானுஜம் -மகா விஷ்ணு
R தேவராஜு -அமைச்சர்
M R சாமிநாதன் -பாண்டியன்
M V ராஜு -சக்கம்மாவின் அப்பா
K K ராதா -காது கேளாத மாப்பிள்ளை
டி.ஆர்.சாமிநாதன் -காதுகேளாத மாப்பிள்ளையின் தந்தை
பாரிஜாதம் -நண்பன்
பெண் நடிகர்கள்
மாதுரி தேவி -அமுதா & குமுதா
M R சந்தானலட்சுமி -சசிரேகா
R பத்மா -காஞ்சனா
M M ராதா பாய் -அவந்தியின் ராணி
ராதாமணி -மகாலட்சுமி
K T சக்கு பாய் -சக்கம்மா
தோழிகள் -காந்திமதி, ரங்கநாயகி, குமாரி ரமணி
சிறப்புத் தோற்றம்
காளி ரத்தினம் -தொப்ளான்
M E.மாதவன் -சுழியன்
V M ஏழுமலை -அப்பாவி
ஸ்ரீராமுலு -புரோகிதர்
PS ஞானம் -நமுதா
நாயகி மாதுரிதேவி குறித்து இங்கு சொல்லியே ஆக வேண்டும். அழகிய கண்களுடன் மாறுபட்ட இரு பாத்திரங்களில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து இருக்கிறார். சென்னை ராயபுரத்தில் பிறந்த கிளாரா மேரிதான் பின்னர் திரைப்படங்களுக்காக மாதுரி தேவியாக மாறியுள்ளார். இந்தத் திரைப்படம்தான் பெண் ஒருவர் இரட்டை வேடம் தரித்து வெளியான முதல் படம். அவரது உருண்டைக் கண்களும் வசீகரத் தோற்றமும் குரலும்தான் முழுப்படத்தையும் தாங்கி நிற்கிறது என்றால் அது மிகையாகாது.
கதை என எடுத்துக் கொண்டால், மன்னர் ஒருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்க, அசரீரி ஒன்று கேட்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது என்றும் இரண்டில் ஒரு குழந்தைதான் நல்ல குணத்துடன் இருக்கும் என்றும் அது சொல்கிறது.
இதனால், குமுதா என்கிற பெயரில் ஒரு குழந்தை அரண்மனையிலும் அமுதா என்கிற பெயரில் ஒரு குழந்தை காட்டிலும் வாழ்கிறது. இளவரசர் விக்ரமன் இவர்களின் மாமா மகன். குமுதாவிற்கும் இவருக்கும் இளம் வயதிலேயே திருமணம் பேசி முடித்திருக்கிறார்கள். குமுதாவிற்கும் விருப்பம் உண்டு. ஆனால், விக்கிரமனுக்கு, அந்த ஏற்பாட்டில் விருப்பம் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் காட்டுக்குச் சென்ற விக்கிரமன் அமுதாவைக் காண, இருவரும் காதலிக்கிறார்கள். இதையறிந்த குமுதா, அமுதாவைச் சிறையில் வைக்கிறார். ஒரு காலகட்டத்தில் அமுதாவின் கண் பார்வையை அழித்துவிட்டு, வெளியே அனுப்பி விடுகிறார். கடவுளை வேண்டி அழும்போது, கண் பார்வையைக் கொடுத்ததுடன், இவரது பிறப்பு குறித்தும் சொல்கிறார்.
இதனால் அமுதா அரண்மனை செல்ல, அங்கு குமுதா விக்கிரமன் திருமண விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமுதா, வந்துவிட்டதால், அமுதாவுடன் திருமணம் நடக்கிறது. குமுதா இறக்கிறார்.
மிக வழக்கமான கதை என்றாலும், வழக்கமாக ஆண்கள்தாம் இப்படி இரட்டை வேடத்தில் வருவார்கள். இன்றைய பாகுபலி வரை வரும் இந்த அண்ணன், தம்பி ஒரே பெண்ணைக் காதலிப்பது என்றுதான் பெரும்பாலும் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், இப்படத்தில் பெண்ணுக்கு இரட்டை வேடம் கொடுத்திருப்பது என்பது வியத்தகு செயல்தான்.
திரைப்படத்தில், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரைத்தான் போடுகிறார்கள். பிறகுதான் நடிகர்கள் பெயர்கள் வருகின்றன.
பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வருகிறார்கள். பெண் அருகில் இருந்த கட்டிலில் வந்து அமர்கிறார். மாப்பிள்ளையின் அப்பா, பெண்ணை எழுந்து நிற்கச் சொல்லுங்கள், பையன் நன்றாகக் பார்க்கட்டும் எனச் சொல்ல, பெண், “நாகரிகம் தெரியாத நாட்டுப்புறங்களா” என்று மீண்டும் அந்தக் கட்டிலில் உட்காருகிறார்.
மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. என் விருப்பத்தைச் சொல்லிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு, பெண் உள்ளே போகிறார். பெண்ணின் அப்பா, “பெண்தான் மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டுவாள்; வீட்டு வேலைகள் அனைத்தையும் மாப்பிள்ளைதான் செய்ய வேண்டும்” என்கிறார்.
பையனின் அப்பா, “என் பெண்ணாக இருந்தால், கொன்று குழி தோண்டிப் புதைத்து இருப்பேன்” என்கிறார். உள்ளே இருந்து பாத்திரம், பெட்டி, கூடை எனப் பொருட்கள் பறந்து வந்து விழுகின்றன. பையன் வீட்டார், பெண்ணைக் காட்டுமிராண்டி எனச் சொல்ல, பெண் கொள்ளிக் கட்டையுடன் உள்ளிருந்து வருகிறார். பையனும் அப்பாவும் ஓடுகிறார்கள்.
அடுத்த காட்சி
பெண்ணின் அப்பா ஒரு வயல்வெளிக்குப் போகிறார். அங்கு ஒரு பையன் (M. R. Saminathan) வேலை செய்துவிட்டு, சாப்பிட உட்காருகிறார். அவர், உழைப்பால் உயர்ந்து கொண்டிருக்கிறவர். அவரிடம் பெண்ணின் அப்பா, தனது மகள் குறித்துச் சொல்ல, அவரும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார். மணப்பெண் பல நிபந்தனைகள் போடுவதாக ஒரு பாடல் வேறு வருகிறது.
பெண்
“சம்சாரம் வேணுமுன்னா
தாலி நான்தான் கட்டுவேன்
சம்மதிச்சி ஆகணும்”
ஆண்
“இன்னும் என்ன செய்ய வேணும்?
என்கிறத சொல்லுங்க கேட்போம்
எல்லாத்துக்கும் சம்மதம்தான்
இனிமே என் பொண்டாட்டி நீதான்
கல்யாணம் வேணுங்கோ
கழுத்துல கயித்த மாட்டுங்கோ
கட்டுப்பட்டேன் நானுங்கோ
சங்கதியைச் சொல்லுங்கோ”
பெண்
“கோழி கூப்பிட எந்திருக்கணும்
கூட்டியே வீட்டைச் சாணி போடணும்.
கொதிக்க அடுப்பில வெந்நிய வைக்கணும்
குளிச்சதும் சேலைய துவைத்துப் போடணும்
சோத்தையும் பொங்கணும்
சுகமாய் படைக்கணும்
சொன்னதெல்லாம் கேட்கணும்- நீ
சொகுசாய் கால் பிடிக்கணும்”
ஆண்
“காலையும் பிடிச்சிவிடுவேன்
கறந்த பாலைக் காச்சியே கொடுப்பேன்
கட்டிலே மெத்தையப் போட்டு,
கண்ணே உன்னைப் படுக்க வைப்பேன்
பாட்டுகள் பாடுவேன் பலே சோக்காய் ஆடுவேன்
பங்காவும் போடுவேன்”
இப்படிப் பாடல் வருகிறது. திருமணத்திற்குச் சம்மதித்த பெண் சிக்கனமாகத் திருமணம் வேண்டும் எனவும் சொல்கிறார். அவ்வாறே சிக்கனமாகத் திருமணம் நடைபெறுகிறது.
எல்லா வீட்டிலும் பெண்தான் பாலும் பழமும் கொண்டு போவார்கள். இது என்ன அக்கிரமமாக இருக்கிறது எனச் சொல்லிதான் மணமகன் போகிறார்.
“எங்க பாட்டன் செத்தப்ப இப்படித்தான் சோடித்து இருந்தாங்க, சீ மனுசப்பய உசுரோடவா இதுல படுப்பான்?” என, மணமகன் கட்டில் அலங்காரத்தைக் கேலி வேறு பேசுகிறார்.
வந்த புதுமாப்பிள்ளை, “புருசனுக்கு இல்லாத அதிகாரம் எங்க வந்ததுன்னு கேட்கிறேன்?”
மணப்பெண்ணோ, “தாலி கட்டுனவ நானு” என்கிறார்.
“அப்பிடின்னா ஆம்பள பொம்பள ஆகிட முடியுமா? அதுதான நடக்காது?”
“நான் புருஷன் நீ பொண்டாட்டி” என்கிறார் மணமகன்.
“மரியாதையா வெளில போகலேன்னா அடிவிழும்.”
இப்படியே கதை போகிறது.
சண்டை முற்றி இருவரும் ஒவ்வொரு மூலையில் படுத்திருப்பதாகக் காட்சி முடிகிறது.
இப்படி வேறுபாடாக இயக்குநர் சொல்ல முயன்று இருக்கிறார்.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.