உணவு உற்பத்தி, பெண்களுக்கும் தண்ணீருக்குமான உறவு, பழங்குடிப் பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள், ஆடை உற்பத்தியால் ஏற்படும் சூழல் பாதிப்பில் பெண்களின் பங்கு, பாலின இருமைக்கு அப்பாற்பட்டவர்கள் சந்திக்கும் சூழல்சார் பிரச்னைகள் எனப் பல்வேறு கோணங்களில் சூழலுக்கும் பெண்களுக்குமான உறவை இதுவரை விவாதித்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்தக் களங்களை ஆராய்ந்தால், சில ஒற்றுமைகள் புலப்படுகின்றன:

  • ஒரு சூழல் பாதிக்கப்படும்போதோ சூழல்சார் பேரிடர் ஏற்படும்போதோ அங்கு இருக்கும் ஆண்களைவிடப் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்கள் அடையும் பாதிப்புகள், சாதி, மதம், வர்க்கம் எனப் பிற படிநிலைகளைப் பொறுத்து வேறுபடலாம். ஆனால், ஒப்பீட்டளவில் ஆண்களைவிடப் பெண்கள் அடையும் பாதிப்புகள் அதிகம்.
  • சமூகத்தில் இப்போதும் நிலவும் பால்சார் ஏற்றத்தாழ்வு இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.
  • ஒரு சூழல் எப்படி இருக்க வேண்டும் என்கிற அதிகார முடிவுகளை எடுக்கும் தளங்களில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இருப்பதில்லை.
  • பெண்கள் தாங்களாகவே இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சிறு இயக்கங்கள் / குழுக்களைத் தொடங்கியுள்ளனர், சில இடங்களில் போராட்டங்களும் நடத்துகின்றனர். இவை பெரும்பாலும் அந்தப் பிரச்னைகளுக்கான உள்ளூர் அளவிலான தீர்வைத் தருகின்றன.
  • சூழலைப் பாதுகாப்பதில் பெண்களுக்கு இயற்கையாகவே அக்கறை இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால், பாதிக்கப்படும் இடத்தில் இருந்தாலும் தங்களது தளைகளை உடைத்துவிட்டு சமூகச் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சூழலுக்காகக் களத்தில் இறங்கிப் போராடும் பெண்களின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றனர். ஆண் சூழல் போராளிகளோடு ஒப்பிடும்போது பெண்கள் சந்திக்கும் எதிர்வினைகள் பாலினம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. காலநிலை சார்ந்த எச்சரிக்கை மணியை விடாமல் ஒலித்துவரும் க்ரெட்டா துன்பர்க்கின் செயல்பாடுகள் பல எண்ணெய் நிறுவனங்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகவே அவரது குரலை எப்படியாவது நசுக்கிவிட வேண்டும் என்று அவை விரும்புகின்றன. ஆண் போராளியாக இருந்தால் சும்மா மிரட்டும் நிறுவனங்கள், க்ரெட்டா துன்பர்க் என்று வரும்போது அவரை வன்புணர்வு செய்யப்போகிறோம் என்று மிரட்டல் விடுகின்றன.

பூச்சிக்கொல்லிகள் ஆபத்தானவை என்று விளக்கும் ஒரு நூலை ரேச்சல் கார்சன் வெளியிட்டபோது, “குழந்தையே இல்லாத, திருமணமாகாத ஒரு பெண் மரபணு பற்றியும் எதிர்காலத் தலைமுறை பற்றியும் ஏன் கவலைப்படுகிறார்?” என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. “ரேச்சல் ஒரு சூனியக்காரி” என்றுகூட ஒருவர் விமர்சித்திருக்கிறார். இதே ரேச்சல் ஓர் ஆணாக இருந்திருந்தால், “இந்த நூலில் இருப்பவை அறிவியல் உண்மைகள் அல்ல, இவர் பொய் சொல்கிறார்” என்பதான குற்றச்சாட்டுகளோடு விமர்சனம் முடிந்திருக்கும். பெண்ணாக இருந்துகொண்டு சூழல் செயல்பாட்டிலும் இருப்பதாலேயே இவர்கள் கூடுதலாகச் சில சிக்கல்களை எதிர்கொண்டனர்.

2018ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஸ்னோலின் என்கிற பெண் கொல்லப்பட்டார். இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக க்ரெட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட் தொடர்பாக 2021இல் காலநிலை செயற்பாட்டாளர் தீஷா ரவி கைது செய்யப்பட்டார். இவை சில தனிப்பட்ட உதாரணங்கள் மட்டுமே. போராட்டங்களின்போது நிகழும் வன்முறைகள், சூழல் சமூகநீதிக்காகப் பேசும் பெண்கள் சந்திக்கும் இணைய அச்சுறுத்தல்கள் / மிரட்டல்கள், சூழல் சார்பாகக் களத்தில் இறங்க விரும்புகிற பெண்களைத் தொடக்கத்திலேயே நிறுத்தும் செயல்பாடுகள் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஒரு தசாப்தத்தில் உலக அளவில் சராசரியாக 1700 சூழல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிறது க்ளோபல் விட்ன்ஸ் (Global Witness) அமைப்பின் 2022ஆம் ஆண்டின் ஆய்வறிக்கை ஒன்று. இது ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜனவரி 2022ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை 81 பெண் சூழல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஜூன் 2023இல் வந்த ஓர் ஆய்வுக்கட்டுரை. டலேனா ட்ரான், செனிஜா ஹனாசெக் ஆகிய இருவரும் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் கள நிலவரத்தோடு ஓப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றும் சில நேரங்களில் இந்தத் தரவுகள் வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகின்றன என்றும் இவர்கள் கூறுகின்றனர். 81 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, இந்த ஒன்றரை ஆண்டுகளில் சூழல்சார் பெண் செயற்பாட்டாளர்கள் மீது பலமுறை வன்முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை நிகழ்வுகளின் மொத்த எண்ணிக்கை 531 என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெரும்பாலும் கனிம வள சுரங்கம், விவசாயம், தொழிற்சாலை ஆகியவற்றை மையப்படுத்திய போராட்டங்களில்தாம் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உலக அளவில் லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொலை நடந்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகபட்சமாக 20 பெண் சூழல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். “ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகக் கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை, ஆனால் இவர்களின் படுகொலை ஒரு பாலினம்சார் வன்முறை (Gendered Violence) என்பதையே நாங்கள் மையப்படுத்த விரும்புகிறோம்” என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் சொல்கிறார்கள். பெண்களின் நிலை முன்பைவிட எவ்வளவோ மாறியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த மாற்றத்தின் பயன் எல்லாருக்கும் சம அளவில் கிடைப்பதில்லை. வசிக்கும் நாடு (மேலை நாடுகள்/மூன்றாம் உலக நாடுகள்), வசிக்கும் இடம் (கிராமம்/நகரம்), இனம், சாதி, வர்க்கம் போன்ற பல்வேறு அம்சங்களைப் பொறுத்து பெண்களின் நிலை மாறுபடுகிறது. நியூயார்க்கில் வசிக்கும் வெள்ளை இனப் பெண்ணுக்குக் கிடைக்கும் அதே சுதந்திரம் ஹரியானாவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணுக்குக் கிடைப்பதில்லை.

இன்னும் சொல்லப்போனால் பெண்களின் நிலை முன்னேறிவிட்டது என்று சொல்லி அந்தப் பயணம் முடிந்துவிட்டதாக அறிவிப்பதையே ஏற்க முடியாது. கி.மு 745 முதலே தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைக்க 1913ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இது நடக்கவே பல போராட்டங்களைப் பெண்கள் நடத்தவேண்டியிருந்தது. தேர்தல் நடத்துவது என்று முடிவான பின்னர் ஆண்கள் அனைவரும் இயல்பாகவே வாக்காளர் அந்தஸ்து பெற்றுவிட்டனர், தங்களுக்கு அந்த உரிமை உண்டு என்பதைப் பெண்கள் உரக்கச் சொல்ல வேண்டியிருந்தது. 1913இல் கிடைத்த உரிமைகூட நார்வே நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே வாய்த்தது. ஒவ்வொரு நாடாக இந்தப் போராட்டம் வெடிக்க, “உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு” என்கிற நிலை வருவதற்கு 1990ஆம் ஆண்டு ஆகிவிட்டது. ஆம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டு. அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்புதான் எல்லாப் பெண்களுக்கும் ஓட்டுரிமையே கிடைத்திருக்கிறது.

பல்வேறு சமூகவியல் அம்சங்களில் இன்னும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் இன்றும் உலக அளவில் நாளுக்கு 800 பெண்கள் குழந்தைப் பிறப்பு, பேறுகாலப் பிரச்னைகளால் இறக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை தடுத்திருக்ககூடியவை என்பதுதான் வேதனை. சகாராவுக்குத் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 70% பெண் குழந்தைகள் மட்டுமே மேல்நிலை/உயர்நிலை கல்விக்கு அனுப்படுகிறார்கள். இப்போது உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் 70 கோடிப் பெண்கள் 18 வயதாவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டவர்கள், இவர்களில் 25 கோடிப் பேருக்கு 15 வயதாவதற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதிய இடைவெளி இப்போதும் இருக்கிறது. உலக அளவில் அதே வேலை செய்யும் ஆண்களைவிட பெண்கள் சராசரியாக 24% குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். இன்னமும் முக்கியமான உயர்பதவிகளில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. உலக அளவில் 15 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிபர்களாகவோ பிரதமர்களாகவோ இருக்கிறார்கள். உலக அளவில் நில உடைமையில் பெண்களுக்குச் சம உரிமை இன்னமும் வரவில்லை. இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆகவே “எல்லாம் சமநிலைக்கு வந்துவிட்டது” என்று நாம் சொல்லவே முடியாது.

‘பெண்ணிய சூழல் பார்வை’ (Feminist Environmental Perspective) என்பதை எதிர்காலத்துக்கான தீர்வாகவும் செயல்திட்டமாகவும் முன்வைக்கிறார் ஆராய்ச்சியாளர் பீனா அகர்வால். பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

உலக அளவிலான சூழல் அறிக்கைகளில் பெண்கள் சந்திக்கும் பாதிப்புகள் தனியாகப் பேசப்படுகின்றன. சூழல் மாநாடுகளில் பெண்கள் பற்றிய முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இது நிச்சயம் வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தோடு நின்றுவிடாமல் அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களைவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சொல்லப்போனால் இந்த அமைப்புரீதியான ஏற்றத்தாழ்வுகள்தாம் பெண்கள் சந்திக்கும் சூழல்சார் பாதிப்புகளை அதிகப்படுத்துகின்றன. ஆகவே, சூழல் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டால் மட்டுமே பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறைந்துவிடும் என்று நினைக்க முடியாது. சூழல்சார்ந்த போராட்டம் என்பது சமூகநீதிக்கான போராட்டமாகவும் மாறினால் மட்டுமே உண்மையான தீர்வு கிடைக்கும். சமூக நீதியையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் இருந்தால் மட்டுமே அனைவருக்குமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேற முடியும்.

(நிறைந்தது)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!