சமீபத்தில் என் மகள் எழுதிய ஒரு பதிவை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ’ ‘உலகில் ஆண், பெண் என்று இரண்டு பாலினங்கள் தவிர மூன்றாம் பாலினம் என்று மூன்று வகை பாலினங்கள் உள்ளன. இந்த மூன்று பாலினங்களில் பெண் என்பவள் வீட்டுக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆண் என்பவன் தொழில் ஸ்தானத்தில் உயர்ந்து நின்று ஆளுமை திறன் உள்ளவனாக இருக்க வேண்டும் என்றும் எழுதப்படாத ஒரு விதி நடைமுறையில் உள்ளது. கற்காலம் தொட்டு இன்று வரை இதுவே நடைமுறை. இதில் மூன்றாம் பாலினம் எந்த ஒரு விஷயத்திலும் தலை தூக்க முடியாத கட்டமைப்பு. ஆக, இந்த நிலைகளை உருவாக்கியது யார்? நாம் எப்படிச் சரி நிகர் சமானம் என்னும் நிலையை எட்டப் போகிறோம் என்பதே அந்த பதிவு சொல்லும் சாராம்சம்.

இப்போது அந்தப் பதிவு முடியும் இடத்திலிருந்து நான் ஆரம்பிக்கிறேன். காலம் காலமாகப் பெண்கள் வீட்டிலும், ஆண்கள் வெளியிலும் என்பது எழுதப்படாத ஒரு விதியாக உள்ளது. இந்த நிலை மாறி சரிநிகர் சமானம் என்னும் நிலையை உருவாக்கப்போவது யார் என்பதே இப்போது நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. யார்? ஆண்களா, பெண்களா? எப்படி உருவாக்க வேண்டும்?

மாற்றம் என்பது ஒரு நாள், ஒரு பொழுதில் வந்துவிடப் போகிறதா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. புரையோடிப்போன பழமையான முறைகளைச் சரி செய்வது அவ்வளவு சுலபமும் அல்ல.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பரிமளிக்க வேண்டும் என்றால், அவள் தானாகத்தான் முயற்சி செய்ய வேண்டும். ஒரு சமுதாய மறுமலர்ச்சியில் அன்றிலிருந்து இன்றுவரை எல்லா விஷயத்திலும் உயர்ந்து நிற்கும் ஆண்கள் உதவுவார்கள் என்பதை மறந்து சுயமாக சிந்தித்து, உறுதியான முடிவு எடுத்து, தன்னைத் தானே உயர்த்திக்கொள்ளுதல் நலம்.

அதற்கு உதவப் போகும் பாதை எது? அது கல்வி. சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக அனைத்துத் துறைகளிலும் ஜொலிக்க வேண்டும் என்றால் அது, ‘கல்வி’ என்னும் அருமருந்தால் மட்டுமே சாத்தியம். கல்வி என்பது ஒரு பெண்ணிற்கு மூன்றாவது கண் போல. உடல் பலத்தால், பொருள் பலத்தால் சாதிப்பதைவிட அறிவு பலத்தால் சாதிப்பதே மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தரும். அந்த வெற்றி நிரந்தர வெற்றியாகவும் மாறும்.

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

கல்வி ஒன்றே அறிவுக்கண்ணைத் திறக்கிறது. அந்தக் கல்வியின் வாயிலாகக் கிடைக்கும் அறிவாற்றல் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. வேலை வாய்ப்பின் மூலம் கிடைக்கும் பொருளாதாரம் நடைமுறை வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. ஆரோக்கியமான கல்வி, அபிவிருத்தி செய்யப்பட்ட அறிவாற்றல், தொழில்துறை பங்களிப்பு ஆகியவையே மகளிர் உலகத்தை மதிப்புள்ள உலகமாக மாற்றும். இந்த விதியே மூன்றாம் பாலினத்தவருக்கும் பொருந்தும்.

இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம். மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கட்டமைப்பு என்பதே ஆடவர் வெளியில், மகளிர் வீட்டில் என்பது. இந்த விநாடி தொடங்கும் விழிப்புணர்வு சமுதாயத்தில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கும். அனைத்துத் துறைகளிலும் ஆண்கள் சரிநிகர் சமான நிலை உருவாகும்.

படைப்பாளர்:

ஜெ. அன்பரசு. ஈரோடு மாவட்டம் பவானிசாகரைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். விளையாட்டில் ஆர்வம் உண்டு. 4 ஆண்டுகளாகக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.