பொருள் 6
ஒரு முறை டியோடரஸ் சிகுலஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் எகிப்துக்குச் சென்றார். ஊர் ஊராகச் சென்று மக்களிடையே நிலவி வரும் இதிகாசக் கதைகளைச் சேகரித்துப் பதிவு செய்வது அவர் வழக்கம். எகிப்து மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களில் பலர் கண்கள் நிறைய கனவுகளுடன் தங்கள் மகாராணியைப் பற்றிய சில பழங்கதைகளை டியோடரஸிடம் பகிர்ந்துகொண்டனர். அதுவரை டியோடரஸ் கேள்விப்பட்ட எந்தக் கதைகளைப் போலவும் அவை இல்லை. உதாரணத்துக்கு… அந்த மகாராணி வகுத்து அளித்திருந்த சில சட்டங்களைக் கேட்டு அவர் திகைத்துப் போனார்.
‘இனி இங்கே அரசரை விட அரசிக்கே அதிகாரம் அதிகம் இருக்க வேண்டும். அரசனை விட அரசிக்கே கூடுதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அரசி மட்டுமல்ல… மற்ற பெண்களுக்கும் இது பொருந்தும். கணவனைவிட மனைவிக்கே அதிக அதிகாரம். கணவன் மனைவியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். ‘நான் என் மனைவிக்குக் கட்டுப்படுவேன்’ என்று திருமண ஒப்பந்தத்தில் ஒவ்வொரு கணவனும் கையெழுத்திட்டாக வேண்டும்…’
டியோடரஸ் எகிப்துக்குச் சென்றது ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் ஆகியோர் வாழ்ந்த பொயுமு (பொது யுகத்துக்கு முன்பு) 60 வாக்கில். அவருக்குத் தெரிந்த ரோமில் பெண் என்பவள் ஆணின் நிழல்… மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டவள்… அரசி என்பவர் அரசனைவிட ஒரு படி கீழே. எகிப்தில் மட்டும் எப்படி ஒரு மகாராணியால் தலைகீழான ஒரு சட்டத்தை வகுக்க முடிந்தது? அதை எப்படி எகிப்தியரால் ஏற்க முடிந்தது? அந்த அதிசய மகாராணி யார் என்று டியோடரஸ் விசாரித்தபோது, அவர்கள் சொன்ன பதில்: ‘ஐசிஸ்… அவர் மகாராணி மட்டுமல்ல… எங்கள் கடவுளும்கூட.’
தொடக்கத்தில் ஐசிஸ் ஒரு சிறிய கடவுளாகவே இருந்திருக்கிறார். அவருடைய கணவர் ஓசிரிஸ் எகிப்தின் முதல் அரசக் கடவுள். ஓசிரிஸின் கட்டளைப்படிதான் ஐசிஸ் தொடங்கி அனைத்து எகிப்தியரும் நடந்தாக வேண்டும். இந்த உலகத்துக்கு விவசாயத்தையும் சட்டத்தையும் அறிமுகம் செய்துவைத்தவர் ஓசிரிஸ். ஒரு நாள் பதவியாசை கொண்ட தன் தம்பியால் ஓசிரிஸ் கொல்லப்படுகிறார். ஓசிரிஸின் உடல் சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டு எகிப்து முழுக்கச் சிதறடிக்கப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஐசிஸ், எகிப்து முழுவதும் சுற்றியலைந்து தன் கணவரின் உடலை முழுமையாகச் சேகரித்து உயிரூட்டுகிறார்.
அதன் பிறகு, எளிய அரசியாக மட்டும் அதுவரை அறியப்பட்ட ஐசிஸ் பலமிக்கவராக மாறுகிறார். ஓசிரிஸ் சக்தி வாய்ந்த ஆண் கடவுள் என்றால், அந்தக் கடவுளையே மரணத்தில் இருந்து எழுப்பி கொண்டுவந்த ஐசிஸ் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் அல்லவா? இதை உணர்ந்த எகிப்து மக்கள் மற்ற கடவுள்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாழ்க்கை, மரணம் இரண்டையும் வென்ற ஐசிஸை வணங்கத் தொடங்கினார்கள்.
ஐசிஸின் போதனைகள் நடைமுறைச் சட்டங்களாகவும் மாறத் தொடங்கின. ஓர் ஆணின் துணை அல்லது ஆலோசனை இன்றி ஒரு பெண்ணால் தன் சொத்தை விற்க முடியும் என்றானது. அச்சமின்றி எந்த ஒரு குற்றத்தையும் அவள் தட்டிக் கேட்கலாம்… அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். ஆண் துணையின்றி சுதந்திரமாகத் தனியிடத்தில் வசிப்பதும் தனியாகவே இறுதிவரை வாழ்வதும் இனி சாத்தியம். சட்டம் ஒரு பெண்ணை ஆணைப் போலவே நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. நடைமுறையில் இந்தச் சட்டங்கள் எல்லாம் பின்பற்றப்பட்டனவா என்று தெரியாது.
இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்ததே கூட அப்போது ஒரு சாதனைதான் என்பதை உணரும்போது ஐசிஸின் அழுத்தமான தாக்கம் புரிய வரும்.
அலெக்சாண்டர் எகிப்தை ஆக்கிரமித்தபோது ஐசிஸின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிரேக்கர்கள் அவரைத் தங்களுடைய உயர்ந்த கடவுள்களான டெமெட்டர், அஃப்ரோடைட் ஆகியோருடன் இணைத்து வழிபடத் தொடங்கினார்கள். ஐசிஸின் தோற்றத்தைத் தங்கள் விருப்பப்படி சற்றே மாற்றியும் வடிவமைத்துக் கொண்டார்கள். எகிப்தில் நிலவுவதைப் போன்ற சமத்துவம் நம் நாட்டிலும் வரவேண்டும், எகிப்தியப் பெண்கள் பெற்றிருக்கும் உரிமைகளை நாமும் பெற வேண்டும் என்பதே கிரேக்கப் பெண்களின் பெரும் விருப்பம்.
கிரேக்கத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்ஜியத்திலும் ஐசிஸ் புகழ்பெறத் தொடங்கினார். பெண்களுக்கு அடுத்தபடியாக அடிமைகளும் அடித்தட்டு மக்களும் ஐசிஸை அரவணைத்துக் கொண்டனர். இதையெல்லாம் கண்டு ஒரு கட்டத்தில் ரோமானிய ஆட்சியாளரான அகஸ்டஸ் எரிச்சல் கொள்ள ஆரம்பித்தார். இப்படியே போனால் ரோமக் கடவுள்கள் அனைவரும் செல்வாக்கு இழக்க நேரிடும். பெண்கள் ஓரணியில் திரண்டு ஐசிஸை நெருங்கிவிடுவார்கள்.
அடிமைகளும் ஏழைகளும்கூட புது நம்பிக்கை பெற்று ஒன்று சேர்ந்துவிடலாம். இவையெல்லாம் நடந்தால் ரோமின் எதிர்காலமும் ஆட்சியாளர்களின் எதிர்காலமும் என்னாவது? அழகிய பளிங்குச் சிலையாக மட்டுமே ஐசிஸ் இருந்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது. அவர் பெண் உரிமை, சமத்துவம், சமதர்மம் என்றெல்லாம் அல்லவா பேசியிருக்கிறார்?
‘ஐசிஸை வழிபடுவது சமூக ஒழுங்கைக் குலைக்கும் என்பதால் அந்த ஆபத்தான பெண்ணிடம் இருந்து விலகி யிருக்கவும்’ என்று ரோம செனட் சபை தம் மக்களை அறிவுறுத்தியது. ஐசிஸ் வழிபாடு எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் காவலர்கள் ஏவிவிடப்பட்டனர். அதற்குள் பலர் ஐசிஸுக்கு கோயில்கள் கட்டி முடித்திருந்தார்கள். அவையனைத்தையும் இடித்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. அப்படி இடிப்பதற்காக அனுப்பப்பட்டவர்களில் பலருமேகூட தனிப்பட்ட வாழ்வில் ஐசிஸ் ஆதரவாளர்களாக இருந்ததால், தங்கள் பணியிலிருந்து பின்வாங்கினார்கள்.
ஐசிஸின் கோயில் மட்டுமல்ல… அவர் நினைவேகூட ரோமில் இருக்கக்கூடாது என்று அகஸ்டஸ் நினைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஐசிஸ் ஒரு எகிப்திய சக்தி. அவருடைய எதிரியான மார்க் ஆண்டனி அப்போது எகிப்தில் நியமிக்கப்பட்டிருந்தார். எகிப்திய அரசியான கிளியோபாட்ரா மீது ஆண்டனி காதல் வயப்பட்டிருந்தார். இந்த கிளியோபாட்ரா தன்னை ஐசிஸின் மறுபிறவி என்று பிரகடனம் செய்துகொண்டவர்.
ஆக, ஐசிஸ் வழிபாடு ரோமில் பரவினால் அது கிளியோ பாட்ராவுக்கும் ஆண்டனிக்கும்தான் சாதகமாக முடியும் என்று அஞ்சினார் அகஸ்டஸ். ஆனால், எத்தனை கடுமையாக முயன்றும், எவ்வளவோ ஒடுக்கு முறையை ஏவிவிட்ட பிறகும், ரோம மக்கள் – குறிப்பாக பெண்கள் ஐசிஸைக் கைவிடத் தயாராக இல்லை. ஒரு கடவுளாக மட்டுமல்ல… ஒரு தோழியாகவும் ஐசிஸை அவர்கள் தங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய சொந்த மகளே ஐசிஸை ரகசியமாக வழிபட்டு வரும் செய்தி காதில் விழுந்ததும் வெறுத்துப்போய்விட்டார் அகஸ்டஸ்.
அவரால் மட்டுமல்ல… அவருக்குப் பிறகு வந்தவர்களாலும் ஐசிஸை நெருங்கக்கூட முடியவில்லை. அமெரிக்காவின் முதல் பெண்ணிய சிந்தனையாளர் என்று அறியப்படும் மார்கரெட் ஃபுல்லர் ஐசிஸை உயிருக்கு உயிராக நேசித்தவர். ‘ஆண்களின் அதிகாரத்தை நிலைநாட்டும், ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் கடவுள்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன எனக்கு ஐசிஸ் ஓர் இளந்தென்றலாகக் காட்சியளித்தார்’ என்கிறார் ஃபுல்லர்.
ஐசிஸ் தன் குழந்தை ஹோரசை மார்போடு சேர்த்து அணைத்துப் பாலூட்டும் படம் உலக மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. ஐசிஸால் கவரப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தக் காட்சியின் கம்பீரத்தில் மயங்கி அதை அப்படியே தமதாக்கிக் கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. ஐசிஸ் இடத்தில் அவர்கள் மேரி மாதாவைப் பொருத்தினார்கள். ஹோரஸ் இருந்த இடத்தில் இயேசு!
வரலாறு புதிதாகும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.
Glad to read your articles. sir. As you said Isis is Mother Mary in Christianity as they adapted many aspects from Pagan and Egyptian theology.Thr cross itself is Isis Ankh ..as a union of Yin and Yang. Looking forward to know more..🙏