உலகத்தில் எந்த விஷயமும் எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. ஆண்களுக்கு எளிதாகச் சாத்தியப்பட்ட விஷயங்கள்கூடப் பெண்களுக்கு மிகப் பெரும் போராட்டத்துக்குப் பிறகே கிடைத்திருக்கிறது. ஆண்களுக்கு இணையான கல்வி, வாக்குரிமை, சொத்தில் பங்கு போன்ற பல விஷயங்கள் இன்றும்கூடச் சில நாடுகளில் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துவிடவில்லை. 18-19-ம் நூற்றாண்டுகளில் உலகம் பெண்களுக்கு எதிரான பிற்போக்கான கருத்துகளைக் கொண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கு ஒரு சில பெண்கள் தங்கள் எதிர்ப்புணர்வைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால், பெரிய அளவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தது 19-ம் நூற்றாண்டில்தான். பெண்கள் வாக்குரிமை கேட்டுப் போராடியவர்களில் மிகவும் முக்கியமானவர் எம்மிலின் பாங்குர்ஸ்ட்.

1858இல் பிரிட்டனில் அடிமைத்தனத்துக்கு எதிராகப் போராடிய அப்பாவுக்கும் பெண்ணுரிமைக்குப் போராடிய அம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் எம்மிலின். அதீத புத்திசாலியாகவும் துடிப்பு மிக்கவராகவும் இருந்தார். மூன்று வயதிலேயே ஒடிசியைப் படிக்க ஆரம்பித்துவிட்டார். ஒன்பது வயதில் பிரெஞ்சுப் புரட்சி வரலாற்றின் பல தொகுதிகளைப் படித்துவிட்டார். மகளின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அவர் அப்பா, “இவ்வளவு புத்திசாலியான குழந்தை ஒரு பையனாகப் பிறக்கவில்லையே!’ என்று கூறியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் ஆண்களுக்கு ஒருவகையான கல்வியும் பெண்களுக்கு ஒருவகையான கல்வியும் அளிக்கப்பட்டது. 14 வயது எம்மிலின் ஒருநாள் பள்ளியை விட்டு வீட்டுக்குத் திரும்பு வழியில் அந்தக் காட்சியைக் கண்டார். பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு நடைபெற்ற கூட்டம் அது. பெண்கள் வாக்குரிமைப் போராட்டம் பத்திரிகையின் ஆசிரியர் லிடியா பெக்கர் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். எம்மிலினின் அம்மாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். எம்மிலின் நின்று பேச்சைக் கேட்டார். அவருக்குள் பல கேள்விகள்.. மாற்றங்கள்.. பெண்கள் உரிமைப் போராட்டத்தின் மேல் அவருக்கு அதிக அளவில் ஈடுபாடும் மரியாதையும் ஏற்பட்டது. சாதாரண எம்மிலின் ஒரு போராட்டக்காரராக மாறியது அந்த நேரத்தில்தான்!

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இயக்கங்கள், போராட்டங்கள் பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தார். அத்துடன் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். ஒரு பிரெஞ்சு மனிதர் எம்மிலினைத் திருமணம் செய்ய விரும்பினார். வரதட்சணை கொடுக்க முடியாது என்று எம்மிலினின் அப்பா சொன்னவுடன், அந்தத் திருமணம் நின்று போனது.

எம்மிலினுக்கு 20 வயதான போது ரிச்சர்ட் பாங்குர்ஷ்ட் அறிமுகம் கிடைத்தது. பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞராக இருந்த ரிச்சர்ட், பெண்கள் வாக்குரிமைப் போராட்டம், கல்வி மறுமலர்ச்சி போன்ற பல விஷயங்களுக்காகப் போராடிக்கொண்டிருந்தார். 44 வயது ரிச்சர்ட் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொள்ளாமலிருந்தார். எம்மிலினும் ரிச்சர்ட்டும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். 24 வயது மூத்தவரைத் திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்மிலின் உறுதியாக நின்று, திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு பத்து ஆண்டுகளில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். குடும்பம், குழந்தைகள் கவனிப்பு போன்றவை எம்மிலினின் போராட்ட வேகத்தைக் குறைத்தன.

ஒருநாள், ‘நீ ஒன்றும் வீட்டு வேலை செய்யும் இயந்திரமில்லை. குடும்பம், குழந்தைகளுக்காக உன்னுடைய போராட்டம், லட்சியத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. நீ நீயாக இரு’ என்றார் ரிச்சர்ட்.

எம்மிலின் சந்தோஷமாக தன் லட்சியத்தை நோக்கி மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார். அப்போது பெண்கள் போராட்டக் குழுக்களில் பல குழப்பங்கள். திருமணம் ஆன பெண்களுக்கு ஓட்டு, திருமணம் ஆகாத பெண்களுக்கு ஓட்டு, விதவைகளுக்கு ஓட்டு என்று.. எதற்காகப் போராடுவது? ரிச்சர்ட்டும் எம்மிலினும் சேர்ந்து விவாதித்து, அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை கேட்டு போராடுவது என்று முடிவெடுத்தனர். பல விதமான பெண்கள் அமைப்புகள் தோன்றின. ஒவ்வொன்றிலும் சில பிரச்னைகள் இருந்ததால் போராட்டக்காரர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எம்மிலின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து பெண்கள் போராட்டத்துக்கு வலு சேர்த்தார்.

1886. ஒரு தீப்பெட்டி தொழிற்சாலைக்குச் சென்றார். அங்கு வறுமையில் இருந்த 1400 பெண்கள் 14 மணி நேரம், வாரத்துக்கு 5 ஷில்லிங் பணத்துக்காக கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். சரியான உணவு, ஆரோக்கியம், உழைப்புக்கு ஏற்ற சம்பளம் எதுவும் அளிக்கப்படவில்லை. அந்தப் பெண்களை ஒன்றிணைத்து அன்னி பெசண்ட் போராட்டம் நடத்தினார். எம்மிலினும் அதில் பங்கேற்றார். அப்போதுதான் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தார். அந்தக் காலகட்டத்தில் அன்னிபெசண்ட், வில்லியம் மோரிஸ், கெர் ஹார்டீ, எலியனார் மார்க்ஸ் போன்றவர்கள் எம்மிலினின் நெருங்கிய நண்பர்களானார்கள்.

1893இல் எம்மிலின் இண்டிபெண்டண்ட் லேபர் பார்ட்டியில் சேர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். 1895இல் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட எம்மிலின் தோல்வியைச் சந்தித்தார்.

1894இல் ஒர்க் ஹவுஸ் என்று அழைக்கப்படும் நிறுவனங்களை நேரில் சந்தித்தார். அங்கு பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அதிர்ச்சியடைந்த எம்மிலின், பெண்கள் போராட்டத்தை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். போராட்டமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்று நம்பினார்.

எம்மிலின் பெண்கள் உரிமை கேட்டு கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். சட்டத்துக்குப் புறம்பானது என்று சொல்லி அரசாங்கம் போராட்டக்காரர்களைச் சிறையில் அடைத்தது. 1896இல், 50,000 மக்களை ஒன்று சேர்த்துப் பெரிய கூட்டத்தை நடத்தினார் எம்மிலின். கூட்டங்கள் வெற்றி பெறாவிட்டாலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

போராட்டத்திலும் வாழ்க்கையிலும் உறுதுணையாக இருந்த ரிச்சர்ட் கடுமையான வயிற்று வலியால் 1898இல் இறந்து போனார். ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம் குடும்பத்தை நடத்த பொருளாதாரம் எனச் சிக்கலுக்கு ஆளானார் எம்மிலின். தன்னுடைய பெரிய வீட்டை விற்று, சிறிய வீட்டுக்குக் குடிபோனார். இப்போது எம்மிலினின் மூன்று பெண்கள் கிறிஸ்டபெல், சில்வியா, அடெல்லாவும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் சேர்ந்து வுமன்ஸ் சோசியல் அண்ட் பொலிட்டிகல் யூனியன் (WSPU) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.

Sufferagette Emily Pankhurst addressing a meeting in London’s Trafalgar Square, 1908.

1905இல் பத்திரிகைகள் பெண்கள் வாக்குரிமை போராட்டத்துக்கு ஆர்வம் காட்டாததைக் கவனித்த எம்மிலின், போராட்டத்தின் வடிவத்தை மாற்றினார். ‘பெண்களுக்கான வாக்குரிமை வார்த்தைகளில் வேண்டாம்; அரசாணையில் வேண்டும்’ என்ற முழக்கத்தோடு களத்தில் குதித்தார். பாராளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த எம்மிலினின் மகள்களும் பலப் போராட்டக்காரர்களும் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர். பெண் உரிமை போராட்டக்காரர்களைச் சட்டத்தை உடைப்பவர்கள் என்று செய்திகளைப் பரப்பியது அரசாங்கம்.

’நாங்கள் சட்டத்தை உடைப்பவர்கள் அல்ல; புதிதாகச் சட்டத்தை எழுதுபவர்கள்’ என்று பதில் அளித்தார் எம்மிலின். அவரும் பல முறை சிறை சென்றார்.

1908ஆம் ஆண்டு 5 லட்சம் போராட்டக்காரர்களைத் திரட்டி, பெண்ணுரிமை முழக்கங்களோடு ஊர்வலம் சென்றார். காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தனர். இதைக் கண்ட சில போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டு ஜன்னல் மீது கற்களை வீசினர். அவர்களுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது. ’சிவில் உரிமை கேட்டு, கற்களை வீசி போராடிய ஆண்களை பிரிட்டன் வரலாறு ஹீரோவாக சித்தரிக்கிறது. அதையே பெண்கள் செய்தால் கலகக்காரர்களாகப் பார்க்கிறது’ என்று சாடினார் எம்மிலின். சில பத்திரிகைகள் எம்மிலினின் போராட்டத்தை ஆதரித்தன, சில கடுமையாக எதிர்த்தன. எதிர்த்த பத்திரிகைகள் பெண்கள் போராட்டத்தை ஆண்-பெண் போராட்டமாகத் திசை திருப்பினர்.

சிறையில் இருந்த போராட்டக்காரர்கள் உண்ணா விரதத்தை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கட்டாயப்படுத்தி உணவு கொடுக்கும் சித்திரவதை அரங்கேறியது. இதற்காக பூனையும் எலியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி அவர்களைத் தற்காலிகமாக வெளியே கொண்டு வந்து, போராட்டத்தை உடைத்தனர்.

தன் வீட்டை விற்ற பணத்தைக் கொண்டு பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாகப் பயணம் செய்து, பெண் போராட்டக்காரர்களை ஊக்குவித்தார் எம்மிலின்.

1914இல் முதல் உலகப் போர் ஆரம்பித்தது. எம்மிலினும் கிறிஸ்டபெலும் பெண்கள் வாக்குரிமையைவிட நாட்டுக்கான போராட்டத்தை முக்கியமாகக் கருதினர். பிரிட்டனுக்காக ஆதரவு அளித்து அறிக்கைகள் வெளியிட்டனர். பெண் போராட்டக்காரர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், எம்மிலினின் மற்ற இரண்டு மகள்கள் சில்வியாவும் அடெல்லாவும் அம்மாவின் நிலைப்பாட்டைக் கடுமையாக எதிர்த்தனர். “போருக்கு ஒருபோதும் பெண்கள் அமைப்புகள் ஆதரவு அளிக்கக்கூடாது. போரில் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி ஏழை எளிய ஆண்களும்தான். மனித சமூகம் எப்போதும் எந்த நிலையிலும் போரை ஆதரிக்கக் கூடாது” என்று வாதிட்டார்கள்.

மகள்களின் நிலைப்பாட்டைக் கண்டு எம்மிலின் வருத்தமடைந்தார். அடெல்லா ஆஸ்திரேலியா சென்று போருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். எம்மிலின் கூட்டங்களில் பங்கேற்பது, போராடுவது, ஊர்வலம் நடத்துவது என்று தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். கணவர் இன்றி தனியாக இருக்கும் பெண்களின் குழந்தைகளின் நலனுக்காக இல்லங்களை ஆரம்பித்தார். அவர் நான்கு குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொண்டார்.

‘சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆண்களைப் போல் 21 வயது பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு போராடினார் எம்மிலின்.

தொடர்ச்சியான போராட்டங்களால் எம்மிலினின் உள்ளம் உறுதியாக இருந்தாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. 1928, ஜூன் 14 அன்று 69 வயதான அந்த ஓயாத போராளி, பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு ஓய்வெடுத்துக்கொண்டார். ஜூலை 2 அன்று 21 வயது பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.