கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். தி.சு. சதாசிவத்தின் அழகான மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்தது. ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் தொடராக வெளிவர இருக்கிறது.

நாவல் என்பது சுவாரசியமான ஒரு கதையைச் சொல்லி வாசகர்களை மகிழ்விக்கும் ஒரு பொழுது போக்குச் சாதனமல்ல. சமுதாயப் பொறுப்புணர்வுமிக்க ஒரு கலைஞனுடைய உள் உணர்ச்சிகளின் எழுத்து வடிவமே, நாவல். சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து, தாம் வாழும் சமூகத்தைக் கூர்ந்து நோக்கி, அந்தச் சமூகத்திலிருந்து தம் பார்வை அப்பி எடுத்த விஷயங்களை, ஓர் ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அதே விஷயங்களில் தேவையானவற்றை மட்டும் கலைத் தன்மையோடு திருப்பிச் சொல்கிறோம், நாவலில். ஆனால் இந்த திருப்பிச் சொல்லுதலில் கலைஞனுடைய சொந்தப் பார்வையில் நிழற் பதிவு மிக அவசியமாகும். பார்வையின் நிழற் பதிவு என்பது, படைப்பில். பக்கத்திற்குப் பக்கம் பதிய வேண்டுமென்பது அல்ல. அப்படியான பதிவு ஒரு நல்ல படைப்பின் சிறப்பு அம்சமாகாது. நாவல் முழுவதும் வாசித்து முடித்தபின் அந்த நாவல் முச்சூடும்
படைப்பாளியின் சொந்தப் பார்வையின் நிழல் விழுந்திருப்பதை வாசகனால் ஊகித்து அறியும் அளவிற்குப் படைப்பில் பார்வை உள்ளடங்கி இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் ‘ சந்திரகிரி ஆற்றங்கரையில் ‘ நாவலை அணுக வேண்டும். இந்நாவல் முஸ்லீம்களிடையே எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்சனையைத்தான் சொல்கிறது. வாசிப்பில், மிகச் சாதாரணக் கதையாகவே தோன்றும். எந்தவித அலங்கார அணிகலன்கள் இன்றி நேரிடையாகக் கதை சொல்லப்படுகிறது. கதை மிகச் சாதாரணமானதாக இருந்த போதிலும், ஆசிரியை இந்தக் கதை வாயிலாகச் சொல்லும் விஷயம், ஆழ்ந்து சிந்திப்போமேயானால் ரொம்பவும் கனமானது என்று உணர முடியும். கனமான ஒரு விஷயத்தை அடிப் பிறழாமல் ஒரு சாதாரணக் கதை மூலம் சாதாரண வாசகர் மனங்களிலும்கூடப் பதியும்படி எழுதியிருப்பது தான், இந்நாவலின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.


அறிவு விரிந்த இன்றைய சமூதாய அமைப்பில், முஸ்லீம் பெண்களைப் பொருத்த வரையில் முந்தைய சமுதாய அமைப்பிலிருந்து முன்னேற்றமாக, சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை இன்று அவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. காரணம், அவர்களது வாழ்க்கைப் பாதை ஓரங்களில் ஆபத்து எப்போதும் பதுங்கிக்கொண்டே இருக்கிறது. இன்று இந்தியாவில் தேசிய கவனம் ஈர்த்த இரு முக்கிய சமூகப் பிரச்னைகள், முஸ்லீம் பெண்களைச் சார்ந்தவை.-1. ‘ மதாஅ ‘ என்று அரபியில் சொல்லப்படும் ஜீவனாம்சம், 2. ஒரே இருப்பில் ஒரே நேரத்தில் சொல்லப்படும் மூன்று ‘ தலாக் ‘ (மண முறிவு) மூலம் விவாகரத்து செய்தல். இவை இரண்டு மட்டும் தான் வெளி உலகத்திற்குத் தற்போது தெரியவந்துள்ள முஸ்லீம்களின் உள்விவகாரங்கள். இதைத் தவிர, பிறர் கவனத்திற்கு வராத, முஸ்லீம் சமுதாயத்திற்குள், குறிப்பாக முஸ்லீம் பெண்களை வலுவாக பாதிக்கிற பிரச்னைகள் இன்னும் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றைத்தான் ஆசிரியை இந்தக் குறுநாவல் மூலம் சொல்கிறார். ஆசிரியை அதைத் தன் சுய கருத்தாக எங்குமே கூறாமல், ஓர் அனுபவ வெளிப்பாடு போல் இயல்பாகச் சொல்கிறார். இப்படி ஆசிரியைச் சொல்லாமல் சொல்லும் ஒரு பிரச்னையின் ஆழத்திற்குள் வாசகனை இழுத்துச் செல்லும் எழுத்து நுட்பம், நம் சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.

தலாக், ஜீவனாம்சம், மறுமணம் முதலியவை பற்றி குரான் மிகத் தெளிவாகவும் விரிவாகவும், சந்தேகமற்ற முறையில் விளக்குகிறது. பெண்களுக்கு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கின்ற வகையில் திருமறைக் கூற்றுகள் அமைந்துள்ளன என்பது, இறை அச்சத்தோடு ஒரு முறை வாசிக்கும் யாருக்கும் எளிதில் புரியும்.

அப்படியிருக்க ஏன் இந்தச் சிக்கல்கள்? சமுதாயத்தில் மேலோங்கிக் காணப்படும் ஆண் ஆதிக்கச் சக்திகள், தங்கள் வசதிக்கேற்றாற்போல் குரான் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்க, கலீபாக்கள் காலத்தில் நிகழ்ந்த சில விதிவிலக்குகளை முன் உதாரணங்களாகச் சுட்டிக் காட்டி, திருமறை வரையரை செய்த சட்டங்களை மீறினர். மீறப்பட்ட சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்கள், நாளடைவில் பாமர மக்களிடையே சட்டமாகவே அறியப்பட்டன. கறுப்பு அங்கி மாட்டிய இந்தப் பழக்க வழக்கங்கள், காலப்போக்கில் பெண்கள் வாழ்க்கையில் நெருப்பைக் கொட்டின.

இதற்குச் சில புரோகிதர்களுடைய ஒத்துழைப்பும் உறுதுணையும் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை . இந்த நடைமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் எழுப்பினால், முன் காலங்களில் நடந்த சில ஒற்றைப்பட்ட நிகழ்ச்சிகளை, அவற்றின் மீதான விதிகளைப் பொதுமைப்படுத்தி, அவற்றை எடுத்துக் காட்டாகக் காட்டி, சில புரோகிதர்கள் எதிர்ப்பாளர்களின் வாயை மூடி. வருகின்றனர்.


இப்படி, சில வசதிகளுக்காக இஸ்லாமியச் சட்டங்களில் கை நுழைத்துக் காலம் காலமாக முஸ்லீம் பெண் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிப்பதில், ஆண்களோடு சில புரோகிதர்களும் கைகோர்த்து நின்ற ஒரு நெடிய வரலாறு, இச்சமுதாயத்திற்கு உண்டு என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

இக்குறுநாவலில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் இப்போதும் வாழ்கின்றவர்கள். இவர்களில் நாதிரா-மஹமத் கான் என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக்கித்தான் கதை சொல்லப்படுகிறது. பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் முகத்தோற்றத்தோடு நாதிராவும், பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண் ஆதிக்கச் சக்தியின் அம்மைத் தழும்பு உள்ள முகத்தோற்றத் தோடு மஹமத்கானும், இந்நாவலில் வாழ்கின்றனர். நாவல் ஆசிரியை எதைச் சொல்ல நினைக்கின்றாரோ அதை இவ்விரு கதாபாத்திரங்கள் வாயிலாகச் சொல்லிவிடுகின்றார். இக்கதையிலும், இப்பாத்திரப் படைப்பிலும் என்ன புதுமையிருக்கிறது என்ற ஒரு கேள்வி எழலாம். முஸ்லீம் சமுதாயத்தின் உள்வட்டங்களை நெருக்கமாகத் தெரியும்

ஒவ்வொருவருக்கும், இதில் உள்ளடங்கி உள்ள புதுமையும் புரட்சியும் புரியும். இந்த நாவலைப் பொருத்தவரையில் கதையல்ல, முக்கியம். இது வாயிலாகச் சொல்லவந்த விஷயமே முக்கியம்.

அடுத்த புதன் முதல் சந்திரகிரி ஆற்றங்கரையில் நாதிரா உங்களுகுக்காகக் காத்திருப்பாள்.

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.