முதல் மனிதன் கிழங்குகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் முதல் மாமிசம் வரை அனைத்தையும் சமைக்காமல் அப்படியே உண்டான், நெருப்பில் வெந்த விலங்கை உண்ண வாய்ப்பு கிடைத்த போது, அதன் சுவை, அனைத்தையும் சமைத்து உண்ண அவனைத் தூண்டியது. சமையலும் பிறந்தது. இன்று சமைத்த உணவே உலகின் மிக பெரிய வணிகப் பொருளாக மாறியும் உள்ளது.
இன்று உணவு என்பது, மனிதன் தனக்கு வேண்டிய ஆற்றலைப் பெற மட்டும் என்று இல்லாமல், அவனின் உணர்வுகளுடன் கலந்தும் விட்டது. நல்ல மனநிலையில், மகிழ்ச்சியான தருணங்களில் இனிப்பு உண்பது, இனிப்பு வகை திண்பண்டங்களை பிறருக்கு கொடுத்து பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, கோபத்தில் இருந்தால் உணவை மறுப்பது, ஆழ்ந்த சோகத்தில் உணவை வெருப்பது, மனஅழுத்தம் அல்லது மனஉலைச்சலில் இருந்தால் உணவை தவிர்ப்பது, இல்லை அளவுக்கு அதிகமாக உண்பது என்று, உணவு இன்று மனிதனின் மனதோடு மிகவும் நெருங்கி விட்டது.
நாம் உண்ணும் உணவு நமக்கு ஆற்றலை மட்டும் தருவது அல்ல, உணவு நமக்கு தற்காப்பு மருந்தாகவும் செயல்படுகின்றது. உணவு நோய் வரும் முன் நம்மை காக்கும் மருந்தாகும். ஆனால் நாம் எப்படிப்பட்ட உணவை உட்கொள்கின்றோம் என்பதில் உள்ளது, நமது உடல் நலம்.
எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை உணவு. காட்டு விலங்குகளின் உணவு பழக்க வழக்கங்களில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. மனிதனுடன் நெருங்கி வாழும் விலங்குகளிடம் சற்று மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் மனிதனின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஏன் இந்த மாற்றம்?
உலகம் இன்று சுருங்கிவிட்டது; அவரவர் கைகளில் தொழில்நுட்பம் விளையாடுகிறது. அதில் நாம் காணும் அனைத்து உணவுகளும் தோற்றத்தைக் கொண்டு நம்மைக் கவர்ந்து மூளையை வசியப்படுத்துகின்றன. உடனே அந்த திண்பண்டத்தை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் னமக்கு மேலோங்குகின்றது. குழந்தைகள் இதற்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர். இனிப்பு பண்டங்களையும், மாவு சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் எற்படும் அபாயங்களில் ஒன்று உடல் பருமன்.
இன்று மருத்துவ உலகின் மிக பெரிய சவால் உடல் பருமன், அதிலும் குழந்தைகளின் உடல் பருமன். ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் குழந்தைகள் இன்று நடக்கவும் முடியாமல் அடி மீது அடி வைத்து ஊர்ந்து செல்கின்றனர்.
அறுசுவைகளில் இனிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு இவை நான்கை மட்டுமே அதிகப்படியாக நாம் உணவில் சேர்த்துக் கொள்கின்றோம். ஆனால் கசப்பு, துவர்ப்பு என்ற இந்த இரண்டு சுவையை நாம் மறந்தே விட்டோம். நாம் மறந்த இந்த இரண்டும்தான் இன்று மருந்து.
மழையை ரசித்தபடி ஒரு கோப்பை தேனீர், வெப்பத்தின் தாக்கம் தணிக்க ஓர் நீர்மோர். இரண்டுக்கும் அத்தனை வித்தியாசம் உண்டு. ஆனால் மனித மனம் இரண்டையும் ரசித்து ருசிப்பது உண்டு. குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் உணவை கண்டால் முதலில் உண்ண வேண்டும் என்ற எண்ணம் வரும். ‘போதும்’ என்ற சொல்லை, மனிதனின் வயிறு மட்டுமே சொல்கின்றது. ஆனால் இந்த உணவு இன்று எப்படி மனிதனை ஆட்டி வைக்கின்றது? காலத்தின் மாற்றம் இன்று உணவையும் மாற்றி விட்டது, மனிதனையும் அழிக்கத் தொடங்கிவிட்டது.
அறுசுவையைத் தேடி, உணவகங்களில் சமைத்த உணவை வீட்டுக்கே வரவழைத்து சாப்பிடுவது, அதில் மீதியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாள் உண்பது. வீட்டில் சமைத்த உணவாக இருந்தாலும், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது அல்ல. ‘முன்னால் சமைத்த உணவு அமிழ்தே ஆனாலும் இன்னாள் உண்ணேன்’ என்பது திருமூலர் வாக்கு.
நமது வீட்டில் உள்ள சமையல் அறையில் நாம் தினமும் பயன்படுத்தும் எல்லா பொருள்களிலும் மருத்துவ குணம் உண்டு. குறிப்பாக கடுகில் உள்ள ஐசோத்தயோ சயனேட், கருஞ்சீரகம் மற்றும் சீரகத்தில் உள்ள தைமோக்யூநோன், மிளகில் உள்ள பைபரின், மஞ்சளில் உள்ள குர்க்குமின், மாமிச உணவுகளில் உள்ள டாரின் போன்ற மூலக்கூறுகள் புற்றுநோய் வராமல் தடுக்கவும், வந்தால் மருந்தாகவும் பயன்படுகின்றது.
ஆனால் நாம் இன்று இவைகளை ஒழுங்காக பயன்படுத்தாமல், ஆயத்த உணவு (Readymade food) பழக்கங்களுக்கு அடிமையாகிக் கொண்டு உள்ளோம். இந்த வகை உணவுகளில் புற்றுநோயை ஏற்ப்படுத்தும் காரணிகளான ரசாயனங்களும், நிறமிகளுமே நிறைந்து உள்ளது.
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’ என்ற திருக்குறளில் வள்ளுவர், நாம் உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு உண்டால் உடலுக்கு வேறு மருந்து தேவையில்லை என்ரு கூறுகின்றார். ஆனால் இன்று நாம் வாழும் சூழலில், நேரம் பார்த்து உண்பதற்கும், பசித்து, ருசித்து, இடைவெளி விட்டு உண்பதற்கும் வாய்ப்பே இல்லை. கிடைக்கும் நேரத்தில் எது கிடைத்தாலும் உண்ணும் பழக்கம் இன்று வழக்கமாகிவிட்டது.
வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் இவர்களுக்கு காலை உணவு என்பது அவசர சிற்றுண்டியாக மாறிவிட்டது. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலை உணவே எட்டாக்கனியாக மாறிவிட்டது. மதிய உணவு, அலுவலகத்தில் வழங்கப்படும் அரை மணி நேரத்தில் உணவை விழுங்க வேண்டும் என்ற கட்டாயம். இதில் எப்படி நன்கு மென்று, உமிழ்நீருடன் கலந்து உணவு உள்ளே செல்வது? பள்ளி குழந்தைகளுக்காவது உணவு இடைவேளையை ஒரு மணி நேரமாக மாற்றினால் என்ன? இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வலிமையான, ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் எதிர்காலம்.
அடுத்து இரவு உணவு, தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு அமர்ந்து கொண்டு, கையில் அலைபேசியுடன் வீட்டில் இருக்கும் மிச்சமான அனைத்து உணவையும் சேர்த்து உண்பது, அதிலும் பெண்களுக்கு எல்லோரும் உண்ட பிறகு மீதம் இருக்கும் மிச்சம். வறுமையில் மிச்சத்தை உண்டு மெலியும் பெண்கள் ஒரு பக்கம், மீதியை உண்டே உடல் பெருத்து அவதியுரும் பெண்கள் மறுபுறம்.
இன்றைய இளைய தலைமுறையின் உணவு பழக்கங்களை என்னவென்று சொல்வது? இவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது உண்ணும் சிற்றுண்டிகளைப் பார்த்தால், உலகில் உள்ள அனைத்து வியாதிகளையும் விருப்பப்பட்டு வரவைப்பதுபோல் தோன்றும் நமக்கு.
வடநாட்டில் இருந்து தென்மாநிலங்களை அதிகம் கவர்ந்த சமோசா, பானிபூரி, வெளிநாடுகளில் இருந்து உள்ளே வந்த பீட்சா, பர்கர், நூடுல்ஸ், குளிர்பானங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டன. இன்றும் வடமாநிலங்களில் முளைகட்டிய தானியங்களில் வருத்த வேர்கடலை, பொரி, அவல் அதனுடன் சேர்த்து வெங்காயம், வெள்ளேரி, தக்காளி, எலுமிச்சை, கருப்பு உப்பு, புதினா இவைகளை சேர்த்து கலந்த உணவே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றது. இதுவே இவர்கள் உண்ணும் சிற்றுண்டி. ஆனால் நாம் சமோசாவுக்கு மாறிவிட்டோம்.
பிரியாணி – இதனை உணவு என்பதை விட வணிகம் என்று சொல்வதே சரி. பிரியாணி என்பது இன்று எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு. பிரியாணி உண்பது தவறு அல்ல, ஆனால் அதை இரவு ஒரு மணிக்கு உண்பது தவறு. பிரியாணியில் சேர்க்கப்படும் அனைத்துப் பொருள்களும் மருத்துவ குணம் உடையவை. ஆனால் இரவில் பிரியாணியுடன் சேர்த்து குளிர்பானமும் குடித்தால் எப்படி?
அசைவ உணவுகளை உண்பது அவரவர் விருப்பம், அதில் சாதியை, மதத்தை இணைக்காமல் இருப்பதே மனித மாண்பு. மாட்டின் இறைச்சியில் நமக்கு தேவையான எல்லா சத்துகளும் நிறைந்து உள்ளது, விலையும் குறைவு. ஏழை மக்கள் இந்த இறைச்சியை வாங்கி உண்பதால் அவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் குறைந்த விலையில் எல்லா சத்துகளும் கிடைக்கும். மாட்டு இறைச்சியைத் தடை செய்வதை விட்டு, அதை எளிய முறையில் அனைவருக்கும் கிடைக்க அரசு வழி செய்யவேண்டும்.
மச்ச அவதாரமான மீனை உண்ணலாம், வராக அவதாரமான பன்றியை உண்ணலாம், கூர்ம அவதாரமான ஆமையை கூட உண்ணலாம். ஆனால் மாட்டின் இறைச்சியை மட்டும் உண்ணக் கூடாதா? ஏன் இந்தத் தடை? ஏழை மக்களை ஊட்டச்சத்து குறைப்பாட்டில் தள்ளி பலி இடவா? ஆண்டு ஒன்றுக்கு, ஐந்து வயதுக்குட்பட்ட 69% குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனைத் தடுக்கவே அரசு முயற்சி செய்ய வேண்டும். அதனை தவிர்த்து மதத்தை உணவில் திணிப்பதா? விரும்பிய உணவை உண்ணும் சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது தானே?
இந்தியாவில் மட்டும்தான் இத்தனை வகையான உணவு வகைகள் கிடைக்கும். உணவை ரசித்து உண்ணும் வழக்கமும் உண்டு. உலகிலேயே இங்குதான் உணவு அதிகப்படியாக குப்பைத் தொட்டிக்கும் செல்கிறது. இங்கு ஒரு வேளை உணவுக்காக ஏங்கும் மக்களும் உண்டு, உணவின் மதிப்பு தெரியாமல் குப்பையில் கொட்டும் மக்களும் உண்டு.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். முடிந்தால் பசித்த வயிற்றுக்கு உணவு பரிமாறுங்கள், மனம் இல்லை என்றால் உணவை குப்பைத்தொட்டியில் கொட்டுவதை நிறுத்துங்கள். உணவு பொருள்களை ஒழுங்காக பயன்படுத்தினாலே பஞ்சம் பறந்து போகும்.
காலை உணவில் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது உணவில் நமக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளனவா என்பதை அறிந்து உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், மாவுச்சத்து, புரதச்சத்து என்று சரிவிகித உணவை உண்ணவேண்டும். இந்த முறையில் உணவு பழக்கங்களை மாற்றினால், நாம் உண்ணும் உணவே நமக்கு மருந்து.
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்ற திருகுறளை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி எழுத வேண்டும் என்றால்,
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் உடல்லிழுக்குப் பட்டு’ என்றே எழுத வேண்டும்.
நாவின் சுவையை அடக்க வேண்டும், இல்லை என்றால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதையும் சேர்த்தே வள்ளுவர் சொல்லி இருப்பார் என்று இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கையில், நினைக்கத் தோன்றுகின்றது.
சுவையான உணவைக் காட்டிலும், நமது உடலை பேணிக் காப்பதே உணவு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
படைப்பாளர்:
எம்.கே. வனிதா
உயிர்வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பட்டிமன்றங்களிலும் பேசி வருகிறார். ஹெர் ஸ்டோரிஸ் எழுத்தாளர்.