அமைதிக்கான நோபல் பரிசைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ஆல்ஃபிரெட் நோபலைப் பற்றிப் பார்ப்போம். வேதியியலாளரும் தொழிலதிபருமான நோபல் ஏன் அமைதிக்காகத் தனியாக ஒரு நோபல் விருதை வழங்க வேண்டும்?
இமானுவேல் நோபல் குடும்பத்தில் ஆல்ஃபிரெட் நோபல்தான் மூன்றாவது குழந்தை. இவர் பிறந்த பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இவர் தந்தை இமானுவேல் ரஷ்யாவுக்கு இடம்பெயர்ந்து ஒரு தொழிலை ஆரம்பித்தார். ரஷ்ய ராணுவப் படைக்கு ஆயுதங்கள் வழங்கும் இயந்திரப் பட்டறைதான் அவர் ஆரம்பித்த தொழில். தொழிலில் முன்னேற்றம் அடைந்த பிறகு ஸ்டாக்ஹோமில் இருந்த தன் குடும்பத்தையும் ரஷ்யாவிற்குக் குடிப்பெயர்த்து விட்டார்.
நோபலை ஓர் ரசாயனப் பொறியியலாளராக்க வேண்டுமென்று அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் தந்தை இமானுவேல் நோபல். இதனைத் தொடர்ந்து நோபல், பாரிஸில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் சேர்ந்தார். அப்போது ஓர் இத்தாலிய வேதியலாளரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தான் மூன்று வருடங்களுக்கு முன்னால் நைட்ரோக்லிசரின் (nitroglycerin) என்னும் வெடிக்கும் இயல்புடைய ஒரு திரவத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை நோபல் தெரிந்து கொண்டார். அதன் பிறகு நோபலுக்கு நைட்ரோக்லிசரின் மீது ஆர்வம் வந்தது. ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து நைட்ரோக்லிசரினை ஒரு வெடிப்பொருளாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். கிரீமியன் போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக நோபல் குடும்பத்தினர் மீண்டும் ஸ்வீடனுக்கே சென்றனர்.
ஸ்வீடனிலும் நோபலின் ஆராய்ச்சி தொடர்ந்தது. ஆராய்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தால் நோபலின் தம்பி இமில் உள்பட பலர் உயிரிழந்தனர். அதனால் அரசு இந்த ஆய்வை ஸ்டாக்ஹோமில் நடத்தத் தடைசெய்தது. ஆனாலும், நோபல் தன் ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. மலாரன் ஏரியில் உள்ள ஒரு படகில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1864இல் பெரிய அளவில் நைட்ரோக்லிசரினை உற்பத்தி செய்யத் தொடங்கினார். தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு 1966இல் டைனமைட் என்னும் வெடிப்பொருளைக் கண்டுப்பிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றார். அதன் பிறகு 20 நாடுகளில் 90 இடங்களில் தனது தொழிற்சாலையை நிறுவினார். அவர் இறப்பின் போது 355 காப்புரிமைகள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ஃபிரட் நோபல், ஒரு நாள் தனக்கு ஒரு செயலாளர் தேவை என்று விளம்பரம் தந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பெர்தா வான் சட்னர் என்னும் ஆஸ்திரிய பெண்மணியைச் சந்தித்தார். அவர் ஓர் அமைதி விரும்பி. அவர் எழுதிய ’Lay down your arms’ என்னும் நாவல் நோபலின் சிந்தனையில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் தன் கண்டுபிடிப்புகளை ஆயுதத்திற்காகவும் போருக்காகவும் செலவழித்தவர், தன் கடைசி காலத்தில் உலக அமைதியை நோக்கிச் சிந்தனையைத் திருப்பினார். இதன் விளைவாக 1895இல் அவர் எழுதிய உயிலில் அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயில் உள்ள ஐவர் குழு தீர்மானித்து உலக அமைதிக்காகப் போராடும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கும் குடும்பத்திலிருந்து வந்து, போரில் பயன்படுத்தக் கூடிய சக்திவாய்ந்த வெடிப்பொருள்களைக் கண்டுபிடித்தவர் அமைதிக்கான நோபல் பரிசை உயிலில் குறிப்பிட்டிருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நோபலின் இந்த மாற்றத்திற்குப் பெர்தா வான் சட்னரின் பங்கு மிக முக்கியமானது.
ஐரோப்பாவில் உலக அமைதிக்காக ஓர் இயக்கத்தைத் நிறுவி அயராது உழைத்த பெர்தா வான் சட்னருக்கு 1905ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசைப் பெறும் முதல் பெண்மணி என்கிற பெருமையும் அவரையே சாரும். அவரைத் தொடர்ந்து மொத்தம் 19 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளன. 1901லிருந்து தற்போது வரை மொத்தம் 105 நோபல் அமைதி விருதுகள், 142 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 17 வயதில் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவரும் ஒரு பெண்தான்.
மலாலா யூசஃப்சாய் பாகிஸ்தானில் பிறந்தவர். பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களை எரித்துப் பெண் கல்வியைத் தடைசெய்த தாலிபன்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். உயிரைக் கொடுத்துப் போராடுவோம் என்கிற சொற்றொடரை நிஜமாக்கிய மலாலாவின் தலையில் தாலிபான்களின் துப்பாக்கிக் குண்டு இறங்கியது. அதிலிருந்துப் பிழைத்து மீண்டும் முன்பைவிடச் சத்தமாகப் பெண்கல்விக்காகக் குரல் கொடுத்து நோபல் அமைதி விருதைத் தன் 17வது வயதில் பெற்றவர்.
அமைதிக்கான நோபல் பரிசைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அன்னை தெரசாதான். ஆதாரவற்றவர்களுக்கான இல்லம், தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை, குணப்படுத்த முடியாத நோய்கள் மற்றும் வாழ்வின் கடைசித் தருவாயில் இருப்பவர்களுக்கான இருப்பிடங்கள் போன்றவற்றை நிறுவி மக்கள் சேவைக்காக மொத்த வாழ்வையும் அர்ப்பணித்த அன்னை தெரசாவுக்கு 1979ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருது வழங்கப்பட்டது.
அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த லாரட் ஆல்வா மிர்டல் 1982ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெற்றார். கண்ணிவெடிகளின் பயன்பாட்டிற்கு எதிராக சர்வதேச கண்ணிவெடிகள் தடைப் பிரச்சாரத்தைத் (International Campaign to ban landmines) தொடங்கி 60 நாடுகளில் 1000 நிறுவனங்களை நிறுவியவர், ஜோடி வில்லியம்ஸ். இவரது அயராத உழைப்பால் கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்காக 1997இல் ஒட்டாவா உடன்படுக்கை நிறைவேற்றப்பட்டது. இன்று வரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உடன்படுக்கையை ஏற்றுள்ளன. இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த உடன்படுக்கையைச் சில தனிப்பட்ட ராணுவப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்காக ஜோடி வில்லியம்ஸின் முன்னெடுப்பை அங்கீகரித்து 1997ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது.
நோபல் அமைதிப் பரிசைப் பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்கிற அடையாளத்தைப் பெற்றார் வங்காரி மாத்தாய். கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி, கென்யாவின் முதல் பேராசிரியை என்கிற அங்கீகாரமும் இவருக்கு உண்டு. கென்யாவில் ஜனநாயகத்திற்காக டேனியல் அரப் மோயின் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர். 1977இல் புல்-வேர் (grass-root movement) இயக்கத்தைத் தொடங்கி காடழிப்புக்கு எதிராக ஆப்பிரிக்கப் பெண்கள் தங்களைச் சுற்றியுள்ள வெளியில் மரம் நடுவதை வலியுறுத்தினார். இதன் விளைவு பசுமைப் பட்டை இயக்கம் (Green belt movement) மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவி கிட்டத்தட்ட 3 கோடி மரங்கள் நடப்பட்டன. பெண்களின் மேம்பாட்டுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும், சர்வதேச ஒற்றுமைக்காகவும் பாடுப்பட்டார்.
“அவர் உலகளவில் சிந்திக்கிறார், உள்நாட்டில் செயல்படுகிறார்” என்று அவரது சேவையைப் பாராட்டி, நோபல் குழு 2004ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை இவருக்கு வழங்கியது.
அமைதிக்காகப் போராடுபவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அளவில்லை என்பதற்கு நர்கஸ் முகமதிதான் உதாரணம். மனித உரிமைச் செயற்பாட்டாளர், மரண தண்டனைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர், பெண் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவர். ஷிரின் எபாடி (நோபல் அமைதி பரிசு – 2003) துணை நிறுவுனராக இருக்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மையத்தில் (Defenders of Human Rights centre) இணைந்து இரானில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார் நர்கஸ். அவரது தொடர் போராட்டங்களால் ஈரான் அரசின் இன்னல்களுக்கு ஆளானார். 13 முறை சிறையில் அடைக்கப்பட்டார். 31 ஆண்டுகள் சிறையும் 154 கசையடிகளும் வழங்கப்பட்டன. 2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்ட போது இவர் எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தலைமுடியை முழுமையாக மூடாத காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கொல்லப்பட்ட குர்திஷ் இளம் பெண்ணிற்காக 2022இல் நடந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு மனித உரிமைக்காவும் பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கும் அரசின் தொடர் வன்முறைக்கும் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி அமைதிக்காகப் போராடிய நர்கஸ் முகமதிக்கு, 2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற போது அவர் அளித்த பேட்டியில், “ஜனநாயகம், சுதந்திரம், மற்றும் சமத்துவத்திற்காகப் போராடுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். இந்த நோபல் விருது என்னை மேலும் அதிக மீள்தன்மையுடனும், உறுதியுடனும், நம்பிக்கயுடனும், உற்சாகத்துடனும் போராட வைக்கும்” என்றார். போராட்டமென்று வந்தால் அதிக உறுதியுடனும் வலிமையுடனும் விடாமுயற்சியுடனும் போராடும் பெண்களுக்கு இவர்களே உதாரணம்.
படைப்பாளர்
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.