“ஓகே நண்பர்களே, நாம் கம்போடியாவில் சந்திப்போம்” என்று கூறி அந்தக் கூட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தார் எங்கள் அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கமலாகாந்த் திரிபாதி. டில்லிக் குளிரில் வெடவெடத்தபடி அமர்ந்திருந்த எனக்கு அந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. உலகக் கல்வி அமைப்பின் சார்பில் ஆசியா பசுபிக் நாடுகளின் கல்வி மாநாடு கம்போடியாவில் நடக்கவுள்ளது என்றும் மகளிர் வலையமைப்பின் பிரதிநிதியாக நான் கலந்துகொள்ளலாம் எனவும் அறிவித்தவுடன்தான் இந்த ஓடல… ஓடல… கேள்விப்படும் நாடுகளின் பெயர்களை எல்லாம் ட்ராவல் பக்கெட் லிஸ்ட்ல போட்டு வைப்பதே மெயின் ஹாபியாக இருக்கும் என்னிடம், “கண்ணு லட்டு திங்க ஆசையா?” என்று கேட்டால், மாட்டேன் என்றா சொல்வேன்? இந்த விஷயத்தில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று சொல்லும் சத்குருவே என் குரு.

எப்போதும் அலுவலக வேலையாக அயல்நாடுகளுக்குச் செல்லும்போது தனியாகச் செல்வதுதான் வழக்கம். இந்த முறை மகனையும் மகளையும் அழைத்துச் சென்றால் என்ன? ‘ஃபேமிலி’ ட்ரிப் ப்ளஸ் கருத்தரங்கு என ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் கோக்குமாக்கான யோசனை பிறக்க, பொறுக்க மாட்டாமல் உடனே அலைபேசியில் அழைத்தேன். மகள் எப்போதும் அம்மாவுக்குத் தப்பாத ஊர்சுற்றிப் பறவைதான். சொன்னவுடன், “எப்போ போறோம் எத்தனை நாள் ட்ரிப்? எத்தனை ட்ரெஸ் எடுத்து வைக்கணும்? அதுக்கு ஒரு பர்ச்சேஸ் போகணுமே? அங்கு என்ன ஷாப்பிங் பண்ணலாம்?” என்று கேள்விகளாக அடுக்கினாள் என் கேள்வியின் நாயகி. மகன் அக்ஷய், “அப்படியா, போறீங்களா, உங்களுக்குத் துணைக்கு வேணா வர்றேன்” எனப் பெரிய மனம் பண்ணுவதாக அலட்டிக்கொள்ள, “நோ தேங்க்ஸ் கண்ணா… நீ உன் வேலையைப் பாரு” என நான் எண்ட் கார்டு போடப் போக, “இல்ல இல்ல நானும் வர்றேன், கம்போடியன் ஆர்க்கிடெக்சர் பார்க்கணும்” என்றான் அவசரமாக.

நாம் மூன்று பேர் மட்டும் போனால் போர் அடிக்குமே என்ன செய்யலாம் என அடுத்த கோக்குமாக்கு (யோசனை) வர எப்போது, எங்கே ட்ரிப் என்றாலும், சொல்லி முடிக்குமுன் சூட்கேஸைத் தூக்க தயாராக இருக்கும் ‘டூர்மேட்ஸ்’ லட்சுமி அக்காவும் மல்லிகா அக்காவும் சொன்ன நிமிஷத்தில் பெட்டியை அடுக்கத் துவங்கிவிட்டார்கள். எழுத்தாளரும் கதைசொல்லியுமான சரிதா ஜோ, “அக்கா நானும்…” என சின்னக்குழந்தையாக அடம்பிடிக்க அப்படி இப்படி என 10 பேர் கொண்ட குழுவாகத் தயாராகியாச்சு. போற வழியில் பக்கத்தில இருக்கிற வியட்நாமையும் ஓர் எட்டு எட்டிப் பார்த்திட்டுப் போகலாம்னு ரெண்டாவது லட்டு(!) திங்க ப்ளான் பண்ணி பயணத்திட்டம் ஏறக்குறைய ரெடியாகியது.

‘கொரோனாவுக்குத் தப்பி உயிர் பிழைக்கிறோமோ இல்லியோ, நமக்கு இனி தேவைப்படாது’ என நினைத்து பீரோவுக்குள் வீசி எறிந்திருந்த பாஸ்போர்ட்டைத் தூசுதட்டி எடுக்கும்போதுதான் தெரிந்தது மகளின் பாஸ்போர்ட் காலாவதியான விஷயம், புதுப்பிக்கணும். “ஒருவேளை, எனக்கு புது பாஸ்போர்ட் கிடைக்காமல் போய், என்னால டூருக்கு வரமுடியலைனா, அண்ணனும் டூருக்குப் போகக் கூடாது”ன்னு மணல்கயிறு எஸ்.வி. சேகர் போல, பூஷிதா விநோதமான கண்டிஷன் கொண்டுவந்தாள். அதனால், பாசமலர்களுக்கு டிக்கெட் போடாமல் நிறுத்தி வைத்து மற்றவர்களுக்குத் திருச்சியிலிருந்து வியட்நாம் டிக்கெட் புக் பண்ணியாச்சு. பயணத்திற்கு பதினைந்து நாள் இருக்கும்போது மகளின் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்க்கு வந்திருப்பதாகக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது.

இரண்டு நாளில் பாஸ்போர்ட் கைக்கு வந்தது. ஃப்ளைட் ரேட் பார்த்தால் திருச்சியில் எகிறியிருக்க, கோயம்புத்தூரிலிருந்து (ஓரு மாதத்திற்கு முன்னால் எங்களுக்கு எடுத்ததைவிட) மிகக் குறைவாக இருந்தது. ‘அடடா, தப்புப் பண்ணிட்டியே கொமாரு’ என என்னையே திட்டிக்கொண்டு அவர்கள் இருவருக்கும் கோயம்புத்தூரிலிருந்து நாங்கள் கிளம்புவதற்கு முதல்நாள் (அந்த தேதியில்தான் டிக்கட் ரேட் குறைவு என்பதால்) டிக்கெட் புக் பண்ணியாச்சு.

பிறகென்ன வழக்கம்போல துறை அனுமதி அரசு வராந்தாக்களில் நடை பழகி காத்திருந்து காத்திருந்து காலங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அரசு அலுவலகங்களில் எத்தனை நவீனத்துவத்தைக் கொண்டு வந்தாலும், என்னிக்கோ, யாரோ வடிவமைத்த NOC வாங்கும் நடைமுறையை இன்னும் ஏன் தமிழ்நாட்டு அரசுத் துறைகள் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றன என்பது, துறைகளின் ஃபைல்களுக்குள் புதைந்து கிடக்கும் புதிர்களுள் ஒன்று. கடந்த மே மாதத்தில் ஸ்ரீலங்கா போக விண்ணப்பித்த நண்பனுக்கு, “கோடை விடுமுறையில் அரசு ஊழியர்கள் வெளிநாடு போகலாமா?” என பேப்பர் திரும்பி வந்தது கண்டு அரண்டு போய் காய்ச்சலில் விழுந்த நண்பன் இன்னும் எழுந்திருக்கவில்லை.

வியட்நாம், கம்போடியா விசாக்களுக்கு மற்ற நாடுகளைப்போல எம்பஸியில் தேவுடு காக்கத் தேவையில்லை. திருநெல்வேலி அல்வா போல உட்கார்ந்த இடத்திலிருந்தே இ விசா கிடைக்கிறது. அந்நியப் பணத்திற்கும் ஆரோக்கிய உத்தரவாதத்திற்கும் (மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ்), அறை முன்பதிவுக்கும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெடல். அவ்வளவுதான். பயணத்திற்கு நாங்க ரெடி.

ஆனால், லட்சுமி அக்காவின் பாஸ்போர்ட்டில் இடியாப்பத்தையும் நூடுல்ஸையும் சேர்த்துப் பிசைந்தாற்போல சிக்கல் பின்னிப்பிணைந்து கிடந்தது. பாஸ்போர்ட் புதுப்பிக்கப் போன இடத்தில் வழக்கம்போல ஜாதகத்தைத் தோண்டி துருவ, வைத்திருந்த மூன்று அடையாள அட்டைகளிலும் மூன்று வெவ்வேறு முகவரிகள். ‘தீவிரவாதிதான் வெரிஃபைட்’ என முத்திரை குத்தாத குறையாகத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். முகவரிகளைச் சரிசெய்ய, தினமும் காலையில் எழுந்து பல்துலக்கி, குளித்து, சாப்பிட்டும் சாப்பிடாமலும் கிளம்பினால் மாலைவரை இ சேவா மையம், நாற்பது வருடத்திற்கு முன் SSLCபடித்த பள்ளி, காவல்நிலையம், வக்கீல் அலுவலகம், SBI பேங்க் என அவரது அன்றாட வாழ்க்கைமுறை ஐம்பத்தைந்து வயதில் புத்தம் புதிதாய் (!) மலர்ந்திருந்தது. இ சேவா மையத்திற்கு வருபவர்கள், இவரை ஊழியராகவே எண்ணி “என்னிக்கு ரெஜிஸ்டர் பண்ணினதுமா, இன்னும் என் ரேஷன் கார்டு வரல, என்னா வேலை பார்க்கறீங்க?” என எகிற, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அக்யூஸ்ட்கள், “என்னக்கா இன்னிக்கு என்ன குழம்பு?” என்பது வரை பழகியிருக்க, பெண் காவலர்கள், “சேலை நல்லாயிருக்கே, என்ன விலை?” என விசாரித்துக்கொண்டிருந்தனர். அவர் சாத்தூருக்குள் சுற்றிய சுற்றுக்கு முருகனைப்போல சுற்றியிருந்தால் உலகத்தையே வலம்வந்து முடித்திருப்பார். நெடிய மாரத்தான் சுற்றலுக்குப்பின் ஒருநாள் இரவு 11 மணிக்கு போன் செய்து, “நான் என் மனசிலிருந்து கம்போடியா என்கிற பெயரை அழித்துவிட்டேன் ரமா” என சிவாஜியாக சோகத்தைப் பிழிய, “இல்லக்கா எப்படியும் கிடைத்துவிடும், நீங்க இல்லாம நான் எப்படிப் போவேன்?” என பதிலுக்கு பஞ்ச் அடித்தாலும், மனசுக்குள் கிலிதான். திடீரெனெ ஓர் இனிய மாலைப்பொழுதில் திருத்தப்பட்ட ஆதார்கார்டும், ரேஷன் கார்டும் பேங்க் பாஸ்புக்கும் கையில் கிடைக்க, பாரதிராஜா பட தேவதைகள் போல விலகிப்போன கம்போடியா மீண்டும் ரிவர்ஸில் வந்து ஒட்டிக்கொண்டது. அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்தால், ‘ஒன்றிய அரசு வாக்குக்கொடுத்தபடி 15 லட்ச ரூபாயை கொடுத்திருந்தால்கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் போல’ என நினைத்துக்கொண்டேன். பாஸ்போர்ட் அலுவலகம் சென்றார், வென்றார். மீண்டும் அதே போலீஸ், அதே என்கொயரி. பாஸ்போர்ட் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இணையமே ஹேங்க் ஆகி உலகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் அளவுக்கு வியட்நாமையும் கம்போடியாவையும் பத்துப் பேரும் அலசிப் பிரிச்சுப் பார்த்தாச்சு. வியட்நாமின் தலைநகரம் ஹனோய் என்றாலும், நாங்கள் வியட்நாமின் மிகப் பெரிய நகரமான ஹோ சி மின் சிட்டியையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் மட்டும் பார்த்துவிட்டு சாலை வழியாக கம்போடியா செல்வதாகத் திட்டம்.

யூ ட்யூப் பார்த்த வரை வியட்நாமில் ஸ்ட்ரீட் ஃபுட் ரொம்ப பிரபலம் என்றாலும், அங்கு சல்லிசா கிடைக்கும் நாய்க்கறியும் பாம்புக்கறியும் ருசி பார்க்கும் அளவுக்கு யாருக்கும் மனதிடம் இல்ல. அதனால் அரிசி, பருப்பு, கொஞ்சம் காய்கறிகள், ஆச்சி மசாலாவிலும் சக்திமசாலாவிலும் போட்டிருக்கும் அத்தனை மிக்ஸ் வகைகள், ஊறுகாய் வகைகள், ரெடிமேட் தோசை, இட்லி மாவு வகைகள், மசாலா பொருள்கள், ரவை, முந்திரி, நெய் என ஒரு ரோலர் சூட்கேஸ் நிறைய தி க்ரேட் இந்தியன் கிச்சனை நிரப்பிக்கொண்டோம். அதோடு சேர்த்து விருதுநகர் பொறிச்ச பரோட்டாவும் ரெடிமேட் சப்பாத்தியும், பனீர் குழம்பும், ஆளுக்கொரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கருமாக வழக்கமான அக்மார்க் இந்தியப் பெண்களாக பேக் பண்ணிக்கொண்டோம். இதில் தின்பண்டங்கள் சேர்த்தி இல்லை, அது தனி சூட்கேஸ்!

முதல்நாள் சிங்கப்பூர் வழியாக மகனும் மகளும் வியட்நாம் போய் இறங்கி புக் பண்ணியிருந்த காட்டேஜில் செட்டிலாகி விட்டார்கள். நாங்கள் திருச்சியிலிருந்து மலேசியா வழியாகச் செல்கிறோம். எல்லோரும் திருச்சி ஏர்போர்ட்டில் சொன்ன நேரத்துக்கு ஆஜர். இந்தியாவுக்குள் பல குழு சுற்றுலாக்களை, விமன்ஸ் ஒன்லி சுற்றுலாக்களை ஒருங்கிணைத்து சுற்றியிருந்தாலும், குழுவாக வெளிநாட்டு சுற்றுலா என்பது இதுதான் முதல்முறை. ஆண்கள் யாரும் இல்லாததால் ‘இனியெல்லாம் சுகமே’ னு சிரிப்பும் பேச்சுமாக செக் இன் பண்ணி, செக்யூரிட்டி செக்கிங் முடித்து இமிக்ரேசன் க்யூ.

பெரிதாகவெல்லாம் கூட்டம் இல்லை. ஆனாலும் இமிக்ரேஷனில் இருந்த அலுவலர் சிரிக்கத் தெரியாத பிரதமர்னு ஒருத்தர் பெயர் வாங்கினாரே அவரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். சரிதாவை முன்னால் தள்ளிவிட்டேன். அந்த மனுசன் கேஸ் விலை ஏறிய கோவத்துல இருந்தாரோ, தக்காளி விலை ஏறிய சோகத்தில் இருந்தாரோ தெரியல… “இப்ப எதுக்கு வியட்நாம், அங்க அலவ்ட் கிடையாது தெரியுமா… சண்டை நடந்திட்டு இருக்கு, போயிட்டு எப்படி வரப்போறீங்களோ தெரியல” என்றார். என்னிடம் பாஸ்போர்ட்டை வாங்கியவர், விக்கெட் கீப்பரை முறைத்துக்கொண்டே பந்து வீசும் பௌலர் போல கடுகடுப்புடன் சீல் வைத்துத் தள்ளினார்.

நடுநிசியில் வாயில் வைக்க முடியாத உணவை, சிரித்துக்கொண்டே தந்த ஏர்ஹோஸ்டஸைப் பரிதாபமாகப் பார்த்தேன். “இந்த உணவையும் வாங்கிச் சாப்பிடுதே, ஐயோ பாவம், யார் பெத்த பிள்ளையோ” என அவரும் பதிலுக்கு என்னைப் பாவமாகப் பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்தார். ‘எல்லா ஏர்லைன்ஸிலும் என்னைவிட மோசமாகச் சமைக்கும் ஆட்களை மட்டும் வேலைக்கு எடுத்திருக்கும் ரகசியம்தான் என்ன?’ என யோசித்தவாறே தூங்கிவிட்டேன்.

மலேசியா ஏர்போர்ட்டில் ட்ரான்சிட். ப்ளைட் மாறுவதற்காக டிக்கெட் ப்ளஸ் விசா செக்கிங் இடத்தில் கெக்கேபிக்கேவென சிரித்துக்கொண்டே வரிசையில் நிற்க, மல்லிகா அக்கா அவரது மகள் ஆனந்தி இரண்டுபேரை மட்டும் தனியாக தள்ளிக்கொண்டு போனார்கள். காரணம் கேட்டு பின்னாடியே ஓடினேன். “உங்கள் இருவருடைய விசாவிலும் சென்றடையும் இடம் ஹோ சி மின் சிட்டி, சீ போர்ட் ( Ho Chi Min City, Seaport) என்று இருக்கிறது. அதாவது நீங்கள் கடல் மார்க்கமாகச் செல்வதற்குத்தான் விசா எடுத்திருக்கிறீர்கள். ஆகாய மார்க்கமாக நீங்கள் செல்ல முடியாது, உங்களுக்கு விசா எடுத்துக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட்டைத் தொடர்பு கொள்ளுங்கள்.” அந்த மலேசிய ஊழியர் அழகுத் தமிழில் திருத்தமாகச் சொல்லி முடிக்கும்போது இந்திய நேரப்படி சரியாக நள்ளிரவு 2.30.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.