பண்டைக்கால ரோமானியர்களின் சுதந்திர சின்னமாகக் கருதப்படுவது லிபர்ட்டஸ் என்னும் பெண் கடவுள். அதையொட்டி அமைக்கப்பட்ட சிலைதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை. இந்தியாவிலும் பாரத மாதா, நீதி தேவதை என்று எல்லா பாரங்களையும் பெண் உருவங்களே தூக்கிச் சுமக்கின்றன. நாடு, நதி, கடவுள் என்று இப்படி அனைத்துப் புனிதங்களையும் தாங்கி நிற்பவர்களாகப் பெண்கள் உருவகப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது, ஆஹா இந்த நாட்டில் பெண்ணாகப் பிறந்ததற்காக உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதா?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சார்பான குற்றங்களில் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. பெண்களுக்கான பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா 133வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வோர் இருபது நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்.
எங்கள் காலத்தில் எல்லாம் அப்படி இல்லை, இப்போதுதான் இத்தகைய குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர். பரவலாகி இருக்கும் சமூக ஊடகங்களே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பெண்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றும் அங்கலாய்க்கின்றனர். ஆனால் உண்மையிலேயே பரவலாக்கப்பட்ட கல்வியறிவும், விழிப்புணர்வும் பெண்கள் இத்தகைய குற்றங்களைப் புகார் செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறது. எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறும் விகிதம் இந்தியாவில் வெறும் 26%தான். கனடாவில் இது 42%, இங்கிலாந்தில் 63% ஆக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான 74 சதவீதத்தினர் பண பலத்தாலும், அரசியல் பின்புலத்தாலும் தண்டிக்கப்படாமல் தப்பிவிடுகின்றனர்.
இன்றைய தேதியில் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோரின் முதன்மையான பயம் தன் பெண்ணுக்கு யாராலும் பாலியல் துன்புறுத்தல் நேர்ந்து விடக் கூடாது என்பதுதான். இந்த பயம் பெண் குழந்தைகளைத் தனியாக இந்த உலகை எதிர்கொள்வதற்குத் தயார் செய்வதற்குத் தடையாக அமைகிறது. சமூகத்தைப் பற்றி இத்தகைய பயத்துடனே வளரும் பெண்கள் அடுத்த சந்ததிக்கும் அதைக் கடத்துகின்றனர். கல்வி, வேலை, ஆராய்ச்சி போன்ற காரணங்களுக்காகப் பெண்கள் பயணம் செய்யும்போதும், இட மாற்றங்களின்போதும், தனியாக வசிக்க நேரும்போதும் குடும்பத்தினரின் பயம், அறிவுரை அனைத்தும் அந்தப் பெண் பாலியல் ரீதியாக எந்தத் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதைச் சார்ந்தே இருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யாரும் பெண்களைக் கண்ணியத்துடன் நடத்துவது பற்றி ஆண் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதில்லை.
பெண்கள் தெய்வமாக ஆராதிக்கப்படும் நாட்டில், பெண்கள் மீதான குற்றங்கள் இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் என்ன? இது உண்மையிலேயே புனிதம்தானா? அல்லது புனிதம் என்கிற பெயரில் கட்டமைக்கப்பட்ட பெண்ணடிமைத்தனமா? எல்லாப் புனித பிம்பங்களையும் கட்டிக் காப்பாற்றுவது பெண்கள்தான். அப்படிக் காப்பாற்றும் கடமை தங்களுக்கே இருப்பதாகப் பெண்கள் நினைத்துக்கொள்வதுதான் மிகவும் அபாயகரமானது. காலம் காலமாக இவைதான் புனிதம் என்று சில விஷயங்கள் நம்மைச் சுற்றி சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதன் அடி ஆழத்தை ஆராய்ந்து பார்த்தால் அது பெண்களை முடக்கிப் போடும் ஒரு தந்திரம் என்று புரியவரும்.
எது புனிதமானது என்று கேட்டுப் பாருங்கள், தவறாமல் எல்லோரும் சொல்வது தாய்மை என்பதே. அது எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமா? எல்லாப் பெண்களும் தாய்மை என்பது புனிதமானது என்று நம்புகிறார்களா அல்லது நம்ப வைக்கப்படுகிறார்களா? தாய்மை என்னும் புனிதர் பட்டத்தை அடைந்தே ஆக வேண்டும் என்று பெண்களைப் பந்தயக் குதிரையைப் போல் இறக்கி விடுவது எந்த வகையில் நியாயம்? மருத்துவரீதியில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத பெண்களும், குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லாத பெண்களும், இந்தப் பந்தயத்தில் கேள்வியே கேட்காமல் கலந்து கொள்வது சமுதாயத்தின் நிர்பந்தத்தினால் மட்டுமே. தான் அடையவே விரும்பாத ஒரு லட்சியத்திற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெண்களின் உண்மையான லட்சியம் என்ன என்கிற கேள்விகள் எப்போதும் எழுவதில்லை. நீ தேடிச் செல்லும் அடையாளம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நீ முதலில் தாயாகிவிட்டு உன் வேலையைப் பார் என்பதே நம் சமூகம் பெண்களுக்கு வலிந்து சொல்லும் பாடம்.
இதில் சம பங்காற்றும் ஆண்களைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் கழற்றி விடுவது ஆண் மைய சமுதாயத்தின் சாமர்த்தியம். இது புரியாமல் மொத்த பொறுப்பையும் தலையில் சுமந்துகொண்டு இல்லாத புனிதத்தன்மைக்காகத் தன் உடல் ஆரோக்கியம், வாழ்க்கை லட்சியங்கள் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு ஓடுவது தன் கண் முன்னால் தொங்கும் கேரட்டை அடைய குதிரை ஓடுவது போலத்தான்.
இந்தப் பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல, பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதர்களும் இனப்பெருக்கம் செய்கின்றனர். ஆனால் எந்த ஓர் உயிரினமும் தன்னுடைய இளம் உயிரி தானாக உணவு தேடும் நிலையை அடைந்தவுடன் தன்னுடைய ஆதரவைக் குறைத்துக் கொள்கிறது. மனிதர்களின் தாய் பாசத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல யானைகள் தன் குட்டிகளின் மீது செலுத்தும் கவனம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் மனித இனத்தில் மட்டும்தான் தன் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தாய் தன் வாழ்நாள் முழுவதும் செலவிட நேருகிறது.
இந்தியப் பெண்கள் தாயானபின் வெறும் அம்மாவாக மட்டுமே அறியப்படுகின்றனர். அதற்குப்பின் அவர்கள் எல்லா விதமான தியாகங்களுக்கும் தயாராக இருக்கின்றனர். தாய்மை என்னும் கட்டமைக்கப்பட்ட புனித பிம்பத்தின் பின்னால் தன் வாழ்வைத் தொலைத்துவிட்டு அம்மாவாகவே இறந்து போகின்றனர். அவர்கள் உண்ண விரும்பிய உணவு வகைகள் எத்தனையோ? செல்ல நினைத்த பயணங்கள் எத்தனையோ? பேச விரும்பிய தோழமைகள் எவ்வளவோ? இவை அனைத்தையும் தாய்மை என்னும் ஒற்றை வார்த்தைக்குள் கட்டிப்போட்டு விட்ட சமுதாயமும் கேள்வி கேட்காமல் அதை ஏற்றுக் கொண்ட பெண்களின் மனநிலையும்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.
இவர்கள் புனிதம் என்று போற்றிப் பாதுகாக்கும் எதுவும் உடைத்துப் பார்த்தால், அதில் ஒன்றும் இல்லை, கீழே போட்டு விடுங்கள் வகையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும்.
கடவுளின் அருகில் இருப்பவர்கள் அனைவரும் புனிதமானவர்கள் என்று நம்பப்படுகிறது. எனவே அந்தப் புனிதத் தன்மையை அடைய, கடவுளின் அருகில் இருக்கும் அனுபவத்தைப் பெற அனைத்து மனிதர்களுமே போட்டியிடுகின்றனர். இந்தப் போட்டியிலிருந்து முற்றிலும் புறந்தள்ளிவிட்ட ஒரு வகையினர் பெண்கள் எனலாம். ஆம், பெண் கடவுள்கள்கூட, பெண்கள் பூஜை செய்வதை ஏற்றுக் கொள்வதில்லை. என்ன ஒரு முரண்பாடு? பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களைக் காரணம் காட்டி தூய்மை அற்றவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இருந்தாலும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டி பெண்கள் வாழ்க்கை முழுவதும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பண்டிகையின் போதும் வீட்டைச் சுத்தம் செய்தல், சமையல், பூஜை என்று எல்லா வகையிலும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
இவற்றிலிருந்து விடுபட்ட பெண்களின் வாழ்க்கை முறையைச் சற்றே உற்று நோக்குங்கள். இத்தகைய பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளவும், தனக்கான தருணங்களை மகிழ்வுடன் அனுபவிக்கவும் நேரம் கிடைக்கிறது. எந்த அழுத்தமும் இல்லாமல் உறவுகளுடன் பழக முடிகிறது. பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழவும், வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் பயணங்களை மேற்கொள்வதும் சாத்தியமாகி இருக்கிறது.
உங்கள் கரங்களால் நீங்கள் நிகழ்த்த வேண்டிய அற்புதத் தருணங்கள் எத்தனையோ காத்திருக்கும் வேளையில், பெண்களை உடல் சார்ந்து தூய்மை அற்றவர்களாகவும், சமூகப் படிநிலையில் கீழானவர்களாகவும் கருதும் மத அமைப்புகளின் போலி புனித பிம்பங்களில் மாட்டிக் கொண்டு வாழ்நாளைத் தொலைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
தரங்கிணி
எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.