பொதுவாக அனைவருமே விரும்பும் விஷயம் வெளிநாட்டு பயணம். புதுப்புது இடங்களை ரசிக்கலாம். புதிய மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்களை சந்திக்கலாம்.

புதிய கலாசாரங்கள் மற்றும் புதிய பொருள்களை பார்க்கலாம். வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்கமுடியாத தருணங்களாக வெளிநாட்டு பயணங்கள் இருக்கும். ஆனால் அதற்கு முறையான திட்டமிடல் அவசியம்.

சரியான முன் ஏற்பாட்டோடு பயணித்தால் பல சங்கடங்களை தவிர்க்கலாம். வெளிநாடு போகிறவர்கள் கவனித்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உண்டு.

பாஸ்போர்ட் மற்றும் விசா, வெளிநாட்டு பயணத்திற்கான மூல முதல்வர்கள் இவர்கள்தான். வெளிநாடு சென்று, சொந்த நாடு திரும்பும் வரை இவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லையேல் நாடு திரும்புவது கடினமாகிவிடும். எனவே இவற்றை யாரிடமும் ஒப்படைக்கக்கூடாது. நமது கண்காணிப்பிலே இருக்க வேண்டும். நீங்கள் தனியாக பயணம் மேற்கொண்டாலும் வெளிநாடுகளில் கழிப்பறைகளில் கூட கொக்கி இருக்கும் ( பைகள் மாட்டுவதற்கான இடம்). அங்கு உங்களது பையை மாட்டிக்கொள்ளலாம். வரும் போது ஞாபகமாக பையினை எடுத்துக்கொண்டு வரவேண்டும். வெளிநபர்களிடம் ஒப்படைத்துவிட்டு கழிவறை செல்ல வேண்டியது இல்லை. இல்லையெனில் பாஸ்போர்ட் வைக்க வசதியாக இருக்கும் பெல்ட்டை பயன்படுத்தலாம்.

அடுத்தது மணி டிரான்ஸ்பர், நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ அந்த நாட்டு பணத்தை இங்கேயே மாற்றிச்செல்லலாம். ஆனால் அதற்குரிய ரசீதுகளை நீங்கள் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் அந்த பணம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படலாம். அங்கு சென்றவுடன் விமானநிலையத்திலே மாற்றிக்கொள்ளவும் வசதி உண்டு. எங்கே மாற்றினாலும் ரசீது அவசியம். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினர்கள் தாங்கள் பணத்தை தருவதாகக் கூறினாலும், அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரையிலாவது கொஞ்சமாவது உங்களிடம் அந்த நாட்டு பணம் கையிருப்பில் இருக்க வேண்டும்.

அடுத்த முக்கியமான விஷயம் நீங்கள் எடுத்துச்செல்லும் பைகளின் எடை. டிக்கெட் எடுத்த உடனே இருப்பதை எல்லாம் அள்ளி பையில் திணிக்காதீர்கள். அந்த டிக்கெட்டில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துச்செல்லும் எடையின் அளவு என்ன என்பதை பொறுத்துப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். சில நிறுவனங்கள் 20 கிலோவுக்கு அனுமதி அளிக்கலாம். சில நிறுவனங்கள் வெறும் ஏழு கிலோவுக்குக் கூட அனுமதி அளிக்கலாம். அவற்றைப் பார்த்துக்கொள்வது நல்லது. அதிலும் ஒருவருக்கு ஏழு கிலோ அனுமதி எனும் போது நீங்கள் நான்கு பேர் என்றால் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தான் ஏழு கிலோ எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒரே பையில் 20 கிலோ இன்னொரு பையில் 8 கிலோ என எடுத்துச் செல்லக் கூடாது. அதுமட்டுமின்றி கேபின் லக்கேஜில் கத்திரிக்கோல், சேவிங்செட் மருந்துகள், கிரீம்கள் போன்ற ஒரு சில பொருள்கள் தடை செய்யப்பட்டிருக்கும். அவற்றை  லக்கேஜ் பையில் எடுத்துச்செல்வது சிறந்தது. பொதுவாகவே தேவையில்லாமல் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது பயணத்தை கடினமாக்கும். அதனால் முக்கியமான பொருட்களை தேவையான அளவில் எடுத்துச்செல்வது நல்லது.

அடுத்தது நகைகள் ஆடம்பரமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். போகும் இடத்தில் அவை தொலைந்து போனாலோ, களவு போனாலோ அவற்றை தேடிக்கொண்டிருக்கவோ காவல்துறை புகார் கொடுத்து அலையவோ நமக்கு நேரம் இருக்காது. வீண் செலவும் ஆகும். அடிப்படையாக தேவையான நகைகள் அல்லது குறைந்த பட்ச நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பானது.

வெளிநாடு செல்லும் போது புதிதாக எதையாவது முயற்சிக்கிறேன் என்று வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாததை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்ளாதீர்கள். சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், வெளியில் சுற்றுவதற்கு பதிலாக மருத்துவமனையைத் தேடி அலைய வேண்டி இருக்கும். வெளிநாட்டுப் பயணி என்றால் மருத்துவமனை பில் பல மடங்கு கட்ட வேண்டி வரும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். உடன் வந்தவர்களுக்கும் தொல்லை. நாமும் வெளியே செல்ல முடியாது. அவர்களுக்கும் நம்மை விட்டுச்செல்ல சங்கடமாய் இருககும்.

நீங்கள் பேக்கேஜ் டூர் போகிறீர்கள் என்றால் எந்த எந்த இடம் கூட்டிச்செல்வது என்பது அவர்கள் பொறுப்பு. ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் செல்கிறீர்கள் என்றால் எங்கெங்கே போவது? எப்படி போவது? என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும். அங்கு சென்று யோசித்துக் கொண்டிருந்தால் நமது பொன்னான நேரம் வீணாகும். அங்கு தெரிந்தவர்கள் இருந்தால், இங்கிருந்தே அவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கூகுள். அதில் அலசி ஆராய்ந்து ஓரளவு விஷய ஞானத்தோடு செல்வது நல்லது.

சில இடங்களை பார்ப்பதற்கு என்று குறிப்பிட்ட சில நேரங்கள், அல்லது சில தினங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதை தெரிந்து கொள்வது உத்தமம். சில இடங்களைப் பார்ப்பதற்கு வலைதளப் பதிவு இருக்கிறதென்றால் அங்கு போய் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்காமல் பதிவு செய்து கொள்வது நலம். (உதாரணத்திற்கு துபாய் புர்ஜ் கலீபா) அதிலும் சில நேரம் முக்கியமானதாக இருக்கும். அதை கவனித்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நாலு மணியிலிருந்து ஆறு மணி வரை தான் சிறந்த நேரம் என்றால், அந்த நேரத்தைப் பதிவு செய்து அதற்கேற்றாற் போல் பயணிக்கலாம்.

போன இடத்தில் தொலைக்காட்சி பார்க்கிறேன் பேர்வழி என்று இரவில் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டால், மறுநாள் தாமதமாக புறப்பட வேண்டி இருக்கும். எங்கு சென்றாலும் காலையில் செல்வது பலவகையில் சிறந்தது. கூட்டம் இருக்காது. வெயில் தெரியாது. காலையில் கிளம்பினால் அன்று நிறைய இடங்களை பார்க்கலாம் இலட்சங்களில் பணத்தை செலவழித்துச்செல்வதால், நாம் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் காசுதான் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

பட்டியல் போட்டு பொருட்களை எடுத்துச்செல்வது போல, ஒவ்வொரு ஹோட்டல் அறைகளை விட்டு புறப்படும் போது அந்த பட்டியலை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். புதிதாக வாங்கிய பொருள்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புதிதாக பார்த்த ஆர்வத்தில் பார்க்கும் பொருள்களை எல்லாம் வாங்க தோன்றலாம். வாங்குவது பெரிய விஷயமல்ல. அவற்றின் தரத்தை கவனித்து வாங்க வேண்டும். அத்துடன் அவற்றை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க முறையான பேக்கிங் அவசியம். இல்லையென்றால் அங்கு வாங்கிய பொருள்கள் இங்கு வந்து சேர்வதற்குள் பல்லிளித்து விடும்.

எப்படி நீங்கள் வாங்கி வரும் சில பொருள்களுக்கு வரி விதிப்பார்களோ அது போல நீங்கள் வாங்கும் சில பொருள்களுக்கு பிடிக்கப்படும் வரியில் குறிப்பிட்ட சதவிகித வரிப்பணத்தை உரிய ரசீது மற்றும் அதற்கான விண்ணப்பத்தைக் காட்டி விமான நிலையத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதையும் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தினசரி என்னென்ன செலவு செய்தோம் என்பதை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்வது நல்லது. அசதியாக இருக்கிறது மறுநாள் எழுதிக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் நிறைய விஷயங்கள் மறந்து போகலாம். எவ்வளவு செலவு செய்தோம் என்று எழுத வைத்தால் எதெல்லாம் வீண் செலவு எதையெல்லாம் அடுத்த முறை தவிர்க்கலாம் என்றும் தெரிந்து விடும்.

நமது நேரத்தை வீணடித்து தாமதப்படுத்துபவர்களோடு பயணம் மேற்கொள்ளாதிருப்பது நல்லது.

மாதவிடாய் காலத்திற்குத் தேவையான பேடுகளை கைவசம் எப்போதும் வைத்திருங்கள். பயண களைப்பில் முன்னே பின்னே வரலாம். அல்லது உடன் வரும் பெண்களுக்கு பயன்படலாம். சிலநேரங்களில் நேரத்திற்கு சாப்பிட முடியாது. அந்த நேரத்திற்கு தேவையான கைக்கு அடக்கமான, வயிற்றைக் கெடுக்காமல் பசியைக் குறைக்கக்கூடிய பர்பி, கப் கேக், பிரெட்,  போன்ற சில நொறுக்குகளை வைத்துகொள்ளுங்கள். உங்களுக்குth தோதான உடைகளை அணிந்து கொள்ளுங்கள். அடுத்தவர் என்ன சொல்வார் என்ற கவலை வேண்டாம். குளிர் பிரதேசம் என்றால் பையில் ஓவர்கோட் வைத்துக்கொள்ளுங்கள். வெயிலில் அலையும் போது சன்ஸ்கீரீன் அவசியம். கடலில் குளிக்கிறீர்கள் என்றால் முகம் கை, கால்கள் கறுத்துப்போகும். அதனால் அதற்குரிய க்ரீம்களை அணிந்துகொள்ளுங்கள். அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சுத்தமாக, துப்புறவாக இருத்தல் மிக அவசியம். அது உங்கள் ஆளுமையை வெளிக்காட்டும்.

பெண்கள் வெளியுலகைக் காணவேண்டியது மிக அவசியம். நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு நாம் வாழ்வை சுலபமாக்க பயணங்கள் உதவும்.

உரிய திட்டம், சரியான முன்னேற்பாடு, கவனம் இவை உங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்கும். வெளிநாட்டு பயணத்தை வெற்றியோடு முடிக்க இவை கட்டாயம் அவசியம்.

படைப்பாளர்

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெண் படைப்பாளிகளைச் சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.