குழந்தைப் பெறுதல் இயற்கை என்றாலும் எண்ணிலடங்கா இன்னல்களை பெண்கள் சுமப்பதும் அதைப் புனிதம், தியாகம் என்ற வரையறைக்குள் பொருத்தி பெண்ணின் அனுமதியின்றி அவளை குழந்தை பெறும் இயந்திரமாக மாற்றியதும் பல நூற்றாண்டு வரலாறு என்றாலும் மருத்துவம் வளர்ந்த பின் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை பெண்களுக்குப் பெரும் விடுதலை தருவதாக அமைந்தது. அதோடு வலிகளையும் பெண்கள்தான் சுமக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக, ஆணுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அறிமுகம் ஆன பின்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்களுக்கான கருத்தடையான வாசக்டமி மிக மிக குறைந்த எண்ணிக்கையில்தான் நடக்கிறது. கடந்த 2019 வரையிலான பதினோரு ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற கிட்டதட்ட ஐந்தரை கோடி கருத்தடைகளில் வாசக்டமி வெறும் 3 சதம்தான் என ஓர் ஆய்வு கூறுகிறது. குடும்பச் சுமையைத் தாங்கள்தான் சுமப்பதாகப் பெருமை பீற்றும் ஆண்களும் முற்போக்காளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆண்கள் பலரும்கூட இது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
இதற்கு முக்கியக் காரணமாகப் பலரிடம் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை குறித்துப் பல தவறான தகவல்கள் பரவியுள்ளன. படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பாரபட்சமின்றி பலரும் இந்தத் தவறான தகவல்களை நம்பி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதில்லை.
அதில் முதலாவது வாசக்டமி அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாங்கள் ஆண்மை இழந்துவிடுவோம் என்ற பயம், இரண்டாவது தாங்கள் மிகவும் பலகீனமாகி விடுவோம், அதன் பின் தங்களால் முன்பு போல கடினமான வேலைகளைச் செய்ய முடியாது என நினைக்கின்றனர். இதனையே கணவரை மட்டுமே வாழ்வாதாரத்திற்காக நம்பி இருக்கும் சில பெண்களும் நினைப்பதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கணவர் வேலைக்குச் செல்ல முடியாமல், குடும்ப வருமானம் நின்று விடுமோ என அஞ்சுகின்றனர்.
விளைவு அவர்களே செய்துகொள்கின்றனர். அதிலும் பெண்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்போதே அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிசேரியன் முறையில் குழந்தை என்றால் பிரசவத்தின் போதே மருத்துவரிடம் அப்படியே ஃபேமிலி ப்ளானிங்கும் செய்துவிடுங்கள் என்று கூறப்படும். காரணம் அதற்கென தனியாக ஓய்வு எடுக்கத் தேவையில்லை. பிரசவ கால ஓய்விலேயே அதையும் முடித்துவிடலாம். சிசேரியன் இல்லாத நார்மல் டெலிவரி பெண்களுக்கும் அதே பரிந்துரைதான். காரணம், குழந்தைப்பேறு காரணமாகக் கிடைக்கும் ஓய்வை உபயோகித்துக் கொள்ளலாம் என்கிற தாராள மனசுதான்.
ஓரளவு ஆரோக்கியமான பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னான வாழ்க்கை அவ்வளவு கடினமாக இருப்பதில்லை என்றாலும், கண்டிப்பாக அறுவை சிகிச்சைக்கும் பின் சில மாதங்களாவது ஓய்வு தேவை. ஓய்விற்குப் பின்னரும் சிலருக்கு கனமான பொருட்களைத் தூக்க முடியாமை, முதுகு வலி ஆகியவை தொடர வாய்ப்புகள் உண்டு.
ஆனால், ஆண்களுக்கான வாசக்டமிக்குப் பெரிதாக ஓய்வு தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் வீடு திரும்பலாம். தற்போதைய நவீன சிகிச்சை ஆண்களுக்கான வாசக்டமியை மேலும் எளிதாக்கியுள்ளது.
அரசும் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்குப் பல சலுகைகளை அளித்து வருகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை பெண்களைவிட ஆண்களுக்கு மிகவும் எளிமையானது என்பதை மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதுடன், கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன. மேலும் பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைவிட ஆண்களுக்கு அதிகமாக வழங்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வரும் ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயுடன், தங்கத் தந்தை விருதும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதன் மூலமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும் என அரசு எதிர்ப்பார்த்தது. ஆனால், ஆண்கள் அப்போதும் இதனைச் செய்துகொள்ள முன்வரவில்லை.
பழைய முறையில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையில் உடனடியாக வீடு திரும்பினாலும் 48 மணி நேரம் ஒய்வு தேவை எனப் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போதைய நவீன சிகிச்சையான No Scalpel Vasectomy சிகிச்சை என்பது மயக்க மருந்து இல்லாமல், வலியே இல்லாமல், கத்தி இல்லாமல், ரத்தம் இல்லாமல் ஊசி மூலமாகச் செய்யப்படுகிறது. ஆனால், இதைச் செய்துகொள்ளக்கூட ஆண்கள் முன்வருவதில்லை.
சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.
அதே போல தெரிந்து செய்கிறார்களா இல்லை நம் மக்களின் மனநிலை அவ்வளவு தானா என்று தெரியவில்லை. பிரசவத்திற்குப் பிறகு குடும்பமாகட்டும், மருத்துவமனைகளாகட்டும் பெண்களுக்குத் தான் கருத்தடை முறைகளைக் குறித்த ஆலோசனைகளை வழங்குகின்றன. சம்மந்தப்பட்ட ஆண்களை அழைத்துப் பெண்ணின் கருத்தடை சிகிச்சை குறித்தும், அடுத்த குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட மேற்கொள்ள வேண்டிய கருத்தடை வழிமுறைகள் குறித்தும், ஆண் கருத்தடை சிகிச்சை குறித்தும் விளக்குவார்களா என்பது சந்தேகமே. ஆக மருத்துவமனைகளிலேயே பெரும்பாலும் இது குறித்து ஆண்களுக்குத் தெரிவிப்பதில்லை என்பதோடு, பெண்களிடமும் ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை தாம்பத்திய வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆண் பலகீனமாகமாட்டான் என்ற மூடநம்பிக்கைகளைக் களைய முற்படுவதில்லை.
இதற்கெல்லாம் மூலக் காரணம் என்னவென்று பார்த்தால் ஆணாதிக்க, ஆண் மைய சமூக அமைப்புதான். நம் நாட்டில் கரு உருவாகுதல் முழுக்க முழுக்கப் பெண்ணுக்கான விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒரு பெண் திருமணமாகி சில மாதங்களில் கருத்தரிக்கவில்லை என்றால் முதல் பரிசோதனை அந்தப் பெண்ணுக்குதான் நடக்கும். ஆண்களும் காரணமாக இருக்ககூடும் என்பதே இப்போதுதான் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆணுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது. திருமணமாகி குழந்தை இல்லையா உடனே ஆணுக்கு மறுதிருமணம் என்ற நிலை இன்றளவும் நீடிக்கிறது.
குழந்தையின்மைக்குக் கிட்டத்தட்ட அறுபத சதவீதத்துக்கு மேல் ஆண்கள் காரணம் என்றாலும், அதற்கான பரிசோதனை ஆணுக்கு மிக எளிமையானது என்றாலும், முதலில் பரிசோதனைக்கு உட்படுவது பெரும்பாலும் பெண்கள்தாம். இதேபோல செயற்கை கருத்தரிப்பு IVF சிகிச்சைகள் மூலம் குழந்தை பிறப்பு என அறிவியலும் தொழில்நுட்பமும் மருத்துவமும் வளர்ந்து குழந்தை இல்லாதவர்களுக்கு மிக்கபெரும் ஆசுவாசம் தருகிறது. ஆனால், அத்தகைய கருத்தரிப்பு பெண்களுக்கு எத்தனை வலி மிகுந்தது என்பது பலருக்குத் தெரிவதில்லை.
சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு புகைப்படம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பிறந்த குழந்தை, அதனைச் சுற்றி இதயவடிவில் ஊசி சிரிஞ்சுகள். நான்கு வருடம், ஏழு முறை செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி, அதில் மூன்று கருச்சிதைவு பின்னர்தான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அத்தனையும் எதிர்கொண்ட அந்தப் பெண் எவ்வளவு ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள், மன வலிகள், உடல் வலிகளைக் கடந்து வந்திருப்பாள் என்று ஒரு கணம் சிந்தித்தாலே போதும்.
எத்தனை ஊசிகள், எவ்வளவு மருந்துகள் அத்தனை இருந்தும் கருத்தரிக்க முடியாமல் போகக் கூடிய சூழல் ஏற்படலாம். அப்போது கணவன் மனைவிக்கு இடையான புரிதலும் அன்பும் பரிவும் காதலும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஆதரவு மட்டும்தான் அவர்கள் வாழ்க்கை பயணத்தைக் கடக்க உதவும்.
காதலுக்காக தாஜ்மகால் கட்டுவேன், உயிரைக் கொடுப்பேன் என வித விதமாக காதல் வீர வசனம் பேசும் ஆண்கள்கூடக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொன்னால் காதலே வேண்டாம் எனக் காத தூரம் ஓடக்கூடும்.
இனி வரும் காலங்களில் பெண்கள் காதல் வாக்குறுதியாகக் கருத்தடை அறுவை சிகிச்சையை ஆண்கள் செய்துகொள்ளத் தயாரா என்ற கேள்வியை முன்வைக்கலாம்.
(தொடரும்)
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.