ஆராய்ச்சி மாநாடுகள் என்பவை ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பதற்கான தளங்கள் மட்டுமல்ல. தான் ஆராய்ச்சி செய்யும் அதே தலைப்பில் வேறு ஒரு கோணத்திலோ வேறு ஓர் ஊரிலோ ஆய்வு செய்பவர்களைச் சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது, ஆய்வில் உள்ள பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் கலந்துரையாடலின் வழியே தீர்வைக் கண்டறிவது, ஆய்வுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆய்வுக்குழுவில் இணைவது, வேலைவாய்ப்பு சார்ந்த சந்திப்புகள் எனப் பலவிதமான விஷயங்கள் நடக்கும் இடம் இது. சில நேரத்தில், ’முதற்கட்ட ஆய்வு’ என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னணியில் நிகழும் உரையாடல்கள் அடுத்தடுத்து நிகழும் ஆய்வுப் பணிகளைச் செழுமைப்படுத்தும், ஏற்கெனவே இத்துறையில் இருப்பவர்கள் சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் தருவார்கள். நமது ஆய்வில் நம் கண்ணுக்கே தெரியாமல் நழுவிச் செல்லும் சின்னஞ்சிறு தர்க்கப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுவார்கள். சொல்லப்போனால், ஓர் ஆய்வாளர் சரியான பாதையில் பயணிக்க இதுபோன்ற மாநாடுகள் அத்தியாவசியமானவை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் பெண்களின் பங்களிப்பும் அவர்களுக்கான அங்கீகாரமும் எப்படி இருக்கிறது? முன்பைவிட முன்னேறியிருக்கிறது என்றாலும் நிலைமை இன்னும் மோசமானதாகத்தான் இருக்கிறது.
ஆய்வு மாநாடுகளில், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களைத் தவிர சிறப்பு அழைப்பாளர்கள் வருவார்கள். இவர்கள் நீண்ட உரைகளை நிகழ்த்துவார்கள். அது, சம்பந்தப்பட்ட ஆய்வுத்துறையில் ஏற்பட்டிருக்கும் மிகச் சமீபத்திய மாற்றங்களை மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் அணுகுவதாக அமையும். இந்தச் சிறப்பு அழைப்பாளர்கள், நேரடியாக மாநாட்டு நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்படுவார்கள், அதாவது அவர்கள் மாநாட்டுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தச் சிறப்பு அழைப்பார்கள் பட்டியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கிறது என்பதைத் தனியாக சொல்லவேண்டுமா என்ன?
’Tokenism’ என்று ஒரு சொல் உண்டு. ஒரு பணியிடத்திலோ நிகழ்விலோ சமத்துவம் இல்லை என்கிற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எல்லாத் தரப்பிலிருந்தும் ஒவ்வொருவரைப் பெயரளவில் சேர்ப்பதை இப்படி அழைப்பார்கள். ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு பட்டியலைத் தயாரித்தபிறகு, ’அடடா! இதில் பெண்களே இல்லையே’, ’இதில் ஒடுக்கப்பட்டவர்களே இல்லையே’ என்பதுபோல பிறக்கும் திடீர் ஞானோதயத்தால், ’சரி, இவர் பெயரைச் சேர்க்கலாம்’ என்று முடிவெடுப்பார்கள். பட்டியலைப் பார்த்துவிட்டு யாருமே, ’பெண்களைச் சேர்க்கவில்லை, ஒடுக்கப்பட்டவர்களைச் சேர்க்கவில்லை’ என்று குறைசொல்ல முடியாது. ஆனால், அதே நேரம் பட்டியலில் உள்ள எட்டுப் பேச்சாளர்களில் ஒருவர் மட்டுமே அப்படி இருப்பார், அவர் பெண் என்பதாலேயே/ஒடுக்கப்பட்டவர் என்பதாலேயே பட்டியலில் சேர்க்கப்பட்டவராகவும் இருப்பார். இதுவும் ஸ்டெம் மாநாடுகளில் நிறைய நடக்கிறது. இன்னொரு கொடுமை தெரியுமா? இவ்வாறு அழைக்கப்படும் பெரும்பாலான பெண் அறிவியலாளர்களை அந்தத் துறையில் இருக்கும் பாலினச் சமத்துவம் மற்றும் பாலினச் சிக்கல்களைப் பற்றிப் பேசவைப்பார்கள்! அதாவது அங்கே அவரது அறிவியல் புலமையைவிட, பெண் என்கிற அடையாளம்தான் முன்னிறுத்தப்படுகிறது. இதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது தொடர்பாக என் அனுபவத்திலிருந்தே ஒரு நிகழ்வைப் பகிர்கிறேன். அது கடல்சார் அறிவியல் துறைக்கான ஒரு மாநாடு. முதல் நாளில் அந்த ஆண்டுக்கான சிறப்பு ஆய்வு விருதுகளை அறிவித்தார்கள். விருதாளர்கள் அனைவரும் ஆண்கள். முந்தைய 8 ஆண்டுகளில் ஒவ்வொரு பிரிவிலும் விருது பெற்றவர்களைப் பற்றிய காணொளியையும் காட்டினார்கள். அவர்களும் ஆண்கள், மொத்தம் 45 ஆண்கள் விருது பெற்றிருந்தார்கள். விருது பெறுவதற்கு ஒரு பெண் அறிவியலாளருக்குக் கூடவா தகுதி இல்லை என்கிற எண்ணம் வந்தது. வாழ்நாள் சாதனையாளர் விருது தொடங்கி வளர்ந்துவரும் அறிவியலாளர் வரை எந்தப் பிரிவிலும் பெண்களுக்கு இடம் இருக்கவில்லை.
மறுநாள் ’கடல் சார் அறிவியலில் பெண்கள்’ என்கிற தலைப்பில் சிறப்புக் கலந்துரையாடல். கலந்துரையாடலுக்கான நேரம் 90 நிமிடங்கள். முதற்கட்டமாக மாநாட்டின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆண்களைப் பேச வைத்தார்கள். ’பல பெண்கள் அறிவியலில் உயர் பதவிகளுக்கு வரவேண்டும்’ என்பது போல ஒரு விஞ்ஞானி வலியுறுத்தினார். பெண் அறிவியலாளர்களுக்குச் சில அறிவுரைகளைக் கொடுத்தார். மற்றவரும் பேசினர். எல்லாமாகச் சேர்ந்து 50 நிமிடங்கள் கடந்தன.
’அடுத்தகட்டமாக முக்கிய நிகழ்வாகப் பெண் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் தொடங்கும்’ என்று அறிவித்தார்கள். விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்தி ஒவ்வொருவராக மேடையேற்றினார்கள். ஏழு பெண் விஞ்ஞானிகள் வந்து அமர்ந்தனர். கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பாளர், ’நிகழ்வை முதல் கேள்வியுடன் தொடங்குகிறேன். ஒரு பெண்ணாக இத்துறையில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்ன?’ என்று கேட்டார். ஏழு பேரும் பதில் சொன்னார்கள்.

வெரா ரூபின்
ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு துண்டு சீட்டு கொண்டு வந்து தரப்பட்டது. ’நிகழ்வின் நேரம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள், நன்றி வணக்கம்’ என்று அவர் எழுந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்தது.
மீண்டும் தலைவர் மேடையேறினார். ’இந்த நிகழ்வின் நீட்சியாக, அடுத்த ஆண்டுமுதல் சிறந்த பெண் கடல்சார் அறிவியலாளருக்கான விருதைத் தரப்போகிறோம்’ என்று அறிவித்தார். கைதட்டல் எழுந்தது. பெண்களுக்கான மிகச்சிறப்பான அங்கீகாரம் என்பதாக இந்த விருதை அவர் புகழத் தொடங்கினார். ஒவ்வோர் ஆண்டும் ’கடல்சார் அறிவியலாளர்களுக்கான’ ஐந்து சிறப்பு விருதுகள் தரப்படுகின்றன. இந்த ஐந்திலும் 9 ஆண்டுகளாகப் பெண்களை அங்கீகரிக்காமல் இருந்துவிட்டு, தனியாகப் பெண்களுக்கான ஒரு விருது என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
’பெண்களுக்கு மட்டுமேயான சிறப்புப் பரிசுகளை அறிவிக்காதீர்கள். பெண்களால் ஆண்களோடு போட்டிபோட முடியாது என்கிற கருத்தையே இது வலியுறுத்துகிறது’ என்று ஆன் லிங்கன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.
’மாநாட்டு நிர்வாகத்தினர் இங்கு இருக்கும் பெண்களுக்கெல்லாம் ஒரு சிறப்பான பரிசைத் தரப்போகிறார்கள்’ என்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் அரங்கில் இருந்த ஒவ்வொரு பெண் ஆராய்ச்சியாளருக்கும் ஒரு ரோஜாப்பூ தரப்பட்டது. அங்கீகாரம், உழைப்புக்கேற்ற ஊதியம், சம உரிமை, சமமான வாய்ப்புகள் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒரு ரோஜாப்பூவை அறிவியல் உலகம் நீட்டுவதாகத்தான் நான் இதைப் புரிந்துகொண்டேன். பெண்களுக்கான சிறப்பு அமர்வில்கூடப் பெண்களுக்குப் போதுமான நேரம் ஒதுக்கப்படாத ஓர் உலகில், அந்த ரோஜாப்பூ என்னைப் பார்த்துக் கேலி செய்வதுபோல இருந்தது. ’இதையெல்லாம் நல்ல நோக்கத்தோடு செய்திருப்பார்கள்’ என்கிற ஒரு வாதம் வருமானால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒன்பது ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மாநாட்டில் பெண்கள் அமர்வு இப்போதுதான் நிகழ்கிறது என்பதிலிருந்தே சமநிலை குலைந்துவிடுகிறது, அதன் பிறகு ஒவ்வொரு செயல்பாடும் மிகச்சரியானதாக இருந்திருக்க வேண்டும். மாநாட்டுக்குழு தலைவர்களாகப் பெண்கள் இல்லாதது இதற்கு ஒரு காரணமோ என்கிற எண்ணம் எழுந்தது.
அது சரிதான் என்கிறார்கள் ஸ்டெஃபனி சார்டெலிசும் ஜோஷுவா ட்ரூவும். நிர்வாகக் குழுவில் பெண்கள் இருக்கும்போது பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறதாம். பொதுவாகப் பல மாநாடுகளில், நிர்வாகக் குழுவில் பெண்களின் பங்களிப்பு குறைவு என்றும், ஆண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் மாநாடுகளில், 30% பங்கேற்பாளர்கள் மட்டுமே பெண்கள் என்றும் அவர்களது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 2020 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த எல்லா ஸ்டெம் மாநாடுகளையும் ஆராய்ந்த த்யானி லூயிஸ், இதில் 35% மட்டுமே பெண் பங்கேற்பாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
’பெண்களின் குறைவான பங்களிப்புக்கு மாநாட்டு நிர்வாகத்தை மட்டுமே குறை சொல்வீர்களா? வேறு சில நடைமுறைக் காரணங்களும் இருக்கலாம்தானே?’ என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மைதான். மாநாட்டு நிர்வாகத்தின் பாரபட்சம் ஒரு காரணம் என்றால், பிற நடைமுறை சிக்கல்களும் தடைகளாக மாறி வழிமறிக்கின்றன. ஸ்டெம் துறைகளில் பெண்களுக்கு இருக்கும் ஊதிய இடைவெளியைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ஒரு மாநாட்டில் நேரில் சென்று கலந்துகொள்வதற்குப் பணம் செலவாகும். ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் இருப்பவர்களால் அடிக்கடி மாநாடுகளுக்காகப் பயணிக்க முடியாது. குழந்தைகளையும் வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் பார்த்துக்கொள்வது பெண்களின் வேலை என்று சமூகம் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கும் ஒருவரால் ஓர் ஆய்வு மாநாட்டுக்காகப் பலநாள் வெளியூர் செல்ல முடியாது. ஒருவேளை குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தால், பல முக்கிய மாநாடுகளில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வசதி கிடையாது. இவையெல்லாமும் பிரச்னைகளாக இருக்கின்றன.
வெரா ரூபின் என்பவர் ஓர் அமெரிக்க வானியலாளர். தனது ஆராய்ச்சியைப் பல்கலைக்கழகத்தில் இவர் சமர்ப்பித்தபோது, வானியல் துறையின் தலைவரான வில்லியம் ஷா, ’இது கொஞ்சம் சுமாரான ஆய்வுதான், ஆனால் முடிவுகள் முக்கியமானவையாகத் தெரிகின்றன’ என்று மேலோட்டமாகச் சொன்னார். ஆனால், அமெரிக்க வானியல் கழகத்தின் கூட்டத்தில் வெராவின் ஆய்வைப் பற்றி, தான் பேசப் போவதாகவும் முடிவெடுத்தார். ’நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நானே பேசிவிடுகிறேன்’ என்பது அவர் சொன்ன காரணம். உடனடியாக அதை மறுத்தார் வெரா. ’நானே பேசிக்கொள்கிறேன், ஒன்றும் பிரச்னையில்லை’ என்று பதிலளித்தார். குழந்தை பிறந்து மூன்றே வாரங்களில் தனது கணவர் ராபர்ட்டையும் அழைத்துக்கொண்டு குழந்தையுடன் கூட்டத்தில் பங்குகொண்டார். தனது ஆய்வுகளைத் தானே சமர்ப்பித்தார். இது ஓர் உதாரணம் மட்டுமே, இதுபோன்ற பல உதாரணங்கள் ஸ்டெம் மாநாடுகளுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள சிக்கலான உறவைக் காட்டுகின்றன.

பெண்கள் தரப்பில் சில தயக்கங்கள் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. பொதுவாக ஆராய்ச்சி மாநாடுகளில் Poster, Talk என்று இரு பிரிவுகள் உண்டு. போஸ்டர் பிரிவில், ஆராய்ச்சியை ஒரு பதாகையாகத் தயாரித்து அதற்கான இடத்தில் ஒட்ட வேண்டும். பார்வையாளர்கள் வருவார்கள், அவர்களுடன் கலந்துரையாடலாம். இன்னொரு பிரிவில் நமது ஆராய்ச்சியைப் பற்றி மேடையில் பேச வேண்டும். பெரும்பாலும் பெண்கள் போஸ்டர் பிரிவையே தேர்ந்தெடுக்கிறார்கள் என தெரசா ஜோன்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
கலந்துரையாடலிலும் சில வேறுபாடுகள் தெரிகின்றன. மாநாடுகளில் ஒருவர் பேசி முடித்தபின்பு, பெண்களைவிட ஆண்களே அதிகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள் என்கிறது 2017இல் வெளியான ஹின்ஸ்லியின் ஆய்வுக்கட்டுரை. ஆனால், முதல் கேள்வியைக் கேட்பது பெண்ணாக இருந்தால் இந்தச் சதவீதம் மாறுகிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற தயக்கங்களைத் தாமாகவே உடைத்துக்கொண்டு ஸ்டெம் பெண்கள் வரவேண்டியது அவசியம் என மூத்த பெண் அறிவியலாளர்கள் தொடந்து வலியுறுத்துகிறார்கள்.
ஸ்டெம் மாநாடுகளில் இருக்கும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கப் பல ஆய்வாளர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறார்கள்:
- மாநாட்டு வளாகத்தில் குழந்தைகளுக்கான தனி இடங்கள், விளையாட்டுக் கூடங்கள் போன்றவை.
- பெண்களுக்கான சிறப்புப் பயண உதவித்தொகை.
- பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை மாநாட்டு வளாகத்தில் இருப்பதை உறுதி செய்வது.
- குழந்தைகள் உள்ள பெண் விஞ்ஞானிகளுக்குப் பொருந்தக்கூடிய மாநாட்டுக் கால அட்டவணை – இது Gender sensitive scheduling என்று அழைக்கப்படுகிறது.
- அதிக எண்ணிக்கையில் பெண் சிறப்பு அழைப்பாளர்கள்.
- அழைக்கப்படும் பெண் பேச்சாளர்கள், பாலினச் சமத்துவம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று குறுக்கிவிடாமல் இருப்பது.
- பெண்களால் எளிதில் வந்து போகக்கூடிய மாநாட்டு வளாகம்.
- மாநாட்டு வளாகத்தில் பாலினச் சமத்துவக் கழிப்பறைகள்.
- கலந்துரையாடல் மற்றும் அறிமுகங்களுக்கான Networking நிகழ்வுகளைப் பலமுறை நடத்துவது, அதில் பலதரப்பட்ட முக்கிய விஞ்ஞானிகளைப் பங்கெடுக்க வைப்பது.
- பெண்களுக்கான சிறப்பு அமர்வுகள் இருக்கும்பட்சத்தில் அதில் பேசப் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது.
இது ஒட்டுமொத்த ஸ்டெம் துறைக்கான ஒரு பட்டியல் மட்டுமே. தனித்தனியாகத் துறைசார் பெண்களிடம் பேசினால், ஒவ்வொருவரும் தனித்துவமான பரிந்துரைகளைத் தரலாம். பரிந்துரைகளின் அடிப்படை ஒன்றுதான் – ’சம உரிமை, சமமான வாய்ப்பு.’ பொதுவாக ஸ்டெம் மாநாடுகளில் பல மாற்றங்கள் தேவை என்று பல குரல்கள் எழுந்தபடி இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாற்றங்கள் வந்துகொண்டும் இருக்கின்றன. நேரிலும் இணையவழியிலும் நடகக்கூடிய Hybrid வகை கூட்டங்கள் தொடங்கிப் பல மாற்றங்களை மாநாட்டு நிர்வாகிகள் உடனடியாகச் செயல்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், மற்ற முன்னேற்றங்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கான சம உரிமையும் வாய்ப்பும் மிக மெதுவாகத்தான் நகர்கின்றன. முந்தைய காலக்கட்டங்களில் அறிவியல் மாநாடுகள், முக்கியக் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிவிக்கும் களங்களாகவும் இருந்திருக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளில் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறதா?
(தொடரும்)
படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!





அருமையான கட்டுரை நாராயணி. ஆண்மைய உலகு பெண்களை சமமாக நினைத்து போட்டி இடுவதிலிருந்து விலக்கி கொள்ள பெண்களுக்கான தனி விருது வசதியாக இருக்கும்.
குழந்தை வளர்ப்பில் ஆண்களும் சம பங்கு எடுக்காதவரை, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வராது. என்று ஆண்கள் குழந்தைகளை அரங்கிற்கு அழைத்து வருகிறார்களோ அன்று அனைத்து வசதிகளும் மாநாட்டு அரங்கத்தில் இருக்கும்.
பெண்களிடம் உள்ள தயக்கத்தை பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு மேல்தட்டு வர்க்க பள்ளியில் கூட, அறிவியல் கண்காட்சியில், உரத்து, explain பண்ணி பேச தயங்குகிறார்கள். LKG முதல் 10 / 12 ஆண்டுகள் பயின்ற பள்ளியிலேயே இப்படி தயங்கினால், வெளியில் சென்று எப்படி பேசுவார்கள்?
நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டும்.
ஆனால் அந்த ரோஜா பூ பரிசு எரிச்சலை தருகிறது.