ஹாய் தோழமைகளே, நலம் நலம்தானே?

இந்த அத்தியாயத்தில் நாம்  மூன்று விதமான குணாதிசயங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு குணமும் உறவாடலை எப்படி நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கிறதென்பதைப் பார்க்கப் போகிறோம். இந்தச் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பார்க்கப் போகிறோம்.

முதல் வகை, முரட்டுத்தனம் ( Aggressive ).

இந்த வகை மக்களுக்குத் தான் மட்டுமே முக்கியம் என்கிற எண்ணம் ஓங்கி இருக்கும். இவர்களுக்குத் தங்களின் தேவை மட்டும்தான் முக்கியமானதாக இருக்கும். இவர்களுடன் எந்த விதமான உறவில் இருந்தாலும் மற்றவருக்குச் சிரமம்தான். எப்போதும் தன் தேவையை எந்தச் சூழ்நிலையிலும் உரக்கச் சொல்வதும், மற்றவரின் நிலை அறியாது, அறிந்து கொண்டாலும் கவலைப்படாது இருக்கும் இவர்களைச் சமாளிப்பது மிகக் கடினம். இவர்களோடு உறவாடுபவருக்கு (அது எந்த வகை உறவாக இருந்தாலும்), தனக்கென்று ஒரு வாழ்வு இருப்பதே மறந்துவிடும் அளவிற்கு நொந்து போய் இருப்பர்.

இந்த வகை மக்களுக்கு “ No“ என்கிற வார்த்தையைக் கேட்பது பிடிக்காது, ஆனால் அவர்கள் அநாயசமாகச் சொல்வார்கள்.

நீண்ட கால மகிழ்ச்சியான உறவுக்கான சாத்தியம் இவர்களோடு மிக மிகக் குறைவு. அப்படியே தொடர்ந்தாலும் அது மற்றவர் வேறு வழி இல்லாமல் இவர்களோடு ஒட்டிக்கொண்டிருப்பதே தவிர, அது நிச்சயம் ஆரோக்கியமான உறவாக இருக்காது.

இரண்டாவது வகை அடிபணிபவர் ( Submissive ).

இவர்களுக்குத் தங்களது தேவையைப் பற்றிய எண்ணமே இருக்காது. எப்போதும் மற்றவரின் புன்னகையோ, தலையசைப்போ, அங்கீகாரமோ இவர்களுக்குப் போதும். இவர்களைச் சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக, நிறைவாக இருப்பர். இவர்தான் அனைவரின் தேவையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவாரே! ஆனால் இவருக்கும் தேவைகள், ஆசைகள், முன்னுரிமைகள் இருக்கும் என்பது மற்றவருக்கு நினைவில்கூட இருக்காது.  இவருக்கு நினைவிருந்தால்தானே அதை மற்றவர் நினைப்பார்கள்? இவர்களால் சுலபமாக “No” சொல்லவும் முடியாது. அப்படியே சொல்லி விட்டாலும் அதற்காகக் குற்ற உணர்ச்சி அதிகமிருக்கும்.

இவர்களின் வாழ்க்கை மிகவும் சுலபமாக இருப்பது போல் தோன்றும்.  ஏதோ ஒரு தருணத்தில் இவர் தனக்கென்று ஏதேனும் ஆசைப்படும்போதோ அல்லது யோசிக்கும் போதோ அதை மற்றவரிடம் வெளிப்படுத்தவே தயங்குவர். வெளிப்படுத்தினாலும் அதற்கு மற்றவர்கள் அவ்வளவு முன்னுரிமை தருவது சந்தேகமே. இவர்கள் அனைவரையும் அப்படித்தானே பழக்கி வைத்திருக்கிறார்களே. அப்போது தான் இழந்ததை எண்ணி வருந்த ஆரம்பிப்பார்கள்.

மூன்றாவது வகை உறுதியானவர் ( Assertive )

இவர்கள் முரட்டுத்தனமாகவும் இல்லாமல் அடிபணிந்தும் போகாமல் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவாகவும் நிதானமாகவும் எடுத்துரைக்கும் திறமை பெற்றவர்கள். “No“ எப்போது சொல்ல வேண்டுமோ அதை மற்றவரைக் காயப்படுத்தாமல் சொல்லத் தெரிந்தவர்கள்.

இந்த மூன்று வகையில் யாருக்கு மனம் அமைதியில் இருக்கும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.

இந்த நிலை மாற அவர்கள் போராடி இருக்க வேண்டும், அது அவர்களின் தவறுதான். அதை விட்டு விட்டு இன்றைய தலைமுறை பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதும், முடிந்த அளவு இடையூறு செய்வதும் அவர்களின் மனநிலைக்கு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. இதனால் கெடப்போவது மன நிம்மதி மட்டுமே.

ஆனால் அந்தத் தலைமுறை பெண்களின் வளர்ப்பு முறை, நம்பிக்கைகளை மனதில் வைத்து அவர்களை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். போனது போகட்டும் மீதம் இருக்கும் வாழ்வை உங்கள் விருப்பப்படி வாழுங்கள் என ஊக்கப்படுத்துவதின் மூலம் இன்றைய தலைமுறை பெண்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், முந்தைய தலைமுறையும் கொஞ்சம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.

அடுத்து முரட்டுத்தனமானவர். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும் கூட இருப்பவரின் மனதில் ஒருவித சலிப்பும் வெறுமையும் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. எந்த உறவானாலும் அது அன்போ, சேவையோ இருபக்கமும் கொடுத்தலும் பெறுதலும் இருந்தால்தான் அது இனிக்கும். எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்பவருக்கு ஒரு நாள் சலித்து போவது இயற்கைதானே?

அப்போது பிரிவு தவிர்க்க முடியாத விஷயமாகிறது. அத்தனை நாள் அனுபவித்த வசதிகளைத் திடீரென இழக்க நேரும் முரட்டுத்தனமான குணம் உள்ளவர்கள் திணறிப் போகிறார்கள். அவர்கூட இருந்தவரும் (இவர்கள் அநேகமாக அடிபணிந்து போகிறவராக இருக்க வாய்ப்புகள் அதிகம், இல்லாவிடில் எப்போதோ உறவு முறிந்திருக்கும்.) இத்தனை நாள் வாழ்வைத் தொலைத்த கசப்பில் இருப்பர். இரண்டுமே சமநிலையான ஆரோக்கிய மனதிற்குக் கேடுதான்.  பின் உணர்வுசார் நுண்ணறிவு எங்கிருந்து வேலை செய்யும்?

உறுதியான நிலைப்பாட்டில் கிடைக்கும். மன அமைதியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.