வீட்டில் ஒரே கொண்டாட்ட மனநிலை. சிறுசுகள் குதூகலமாய் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு அந்த வீடும் அங்குள்ள நபர்களும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வீட்டின் கடைக்குட்டி மோகனுக்கு கல்யாணம் என்பதால், அதை வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தனா். பரம்பரையாக எல்லா கல்யாணமும் இந்தப் பெரிய வீட்டில் நடத்துவதுதான் குடும்ப வழக்கம். மோகனின் கல்யாணத்தையும் அவ்வாறே நடத்த முடிவு செய்தனர். 

கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்புதான் கல்யாணப் பெண்ணுக்கு கூரைப்புடவை எடுப்பது வழக்கம். அதனால் அந்த ஏற்பாட்டில் ஆண்டாள் மும்முரமாக இருந்தார். தன் மகனின் கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்பதைவிட, கல்யாணத்திற்கு வரும் உறவுக்காரர்கள் தன் மகள் ராணியை எதுவும் பேசி விடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருந்தாள் ஆண்டாள்.

 காலை 11 மணி போல உறவுகாரர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். ஆனால் ராணிக்கோ முந்தைய இரவிலிருந்தே ஒரே குழப்பம்.  ‘கடைக்கு நான் போகலாமா? வேண்டாமா? நான்  போனால் யாராவது தப்பா நினைப்பாங்களா? இந்த மங்களகரமான நிகழ்வில் அபசகுனம் மாதிரி நான் போய் நிக்கணுமா?’ என்று பல கேள்விகள். ஆனால் மோகனோ காலை 8 மணிக்கே ராணியிடம் வந்து, ” இந்த பாரு ராணி சின்ன வயசுல இருந்து என்னுடைய எல்லா நல்லது கெட்டதுக்கும் முன்னாடி ஓடி வந்து நிப்பேல? அதுபோல எப்பவும் இருக்கணும். சும்மா ஏதாவது காரணம் சொல்லி ஒதுங்க நினைக்காதே. உன் நல்ல மனசு எனக்கு தெரியும். திரும்பத் திரும்ப சொல்ல வைக்காத..”,  எனக் கண்டிப்பாக கூறிச் சென்று விட்டான்.

ராணி மனதில் பெரிய குழப்பம். யோசனையாக இருந்தாலும் தன் தம்பிக்காக அவர்களுடன் சேர்ந்து கடைக்குச் செல்ல முடிவெடுத்தாள். ஆனால் மிகுந்த தயக்கத்துடன் தயாரானாள். ஊரிலேயே பெரிய துணிக்கடைக்கு ராணியும் அவளது அம்மாவும் அவர்களுடன் சில உறவினர்களும் சென்றனர். 

” கல்யாணப் பொண்ணுக்கு 30 லிருந்து 40க்குள்ள பட்டுப்புடவை எடுத்துக் காட்டுங்க!”, என்றாள் ராணியின் அம்மா. 

toptamilnews.com

அடுத்து உறவினர் ஒவ்வொருவருக்கும் புடவைகள் தேர்வாகின. பாட்டிக்கு, இரண்டு அத்தைகளுக்கு, பெரியம்மாவுக்கு, சித்திக்கு, அண்ணிக்கு எனப் புடவை பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. அடுத்ததாக வீட்டிலுள்ள குமரிப்பெண்களுக்கென தனியாக ஒரு பட்டியல். ஒவ்வொருவரும் தங்களுக்கான உடைகளையும், அதற்கேற்ற நகைகளையும் தேடித்தேடி எடுப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். ராணி அனைத்தையும் கவனித்துக் கொண்டு அருகில் அமைதியாக  நின்று  கொண்டிருந்தாள்.

” உனக்கு என்ன வேணுமோ எடுடி…”,  என்றார் அம்மா.

மிகவும் தயக்கத்துடன் ராணி புது டிசைனில் வந்த புடவையைக் காண்பித்து, “அம்மா…எனக்கு இது பிடித்திருக்கிறது”, என்றாள். உடனிருந்த ராணியின் அத்தை,

” ராணி இவ்வளவு படோபடமாலாம் நீ கட்டக்கூடாது தெரியாதா? எனக்காக சொல்லல ராணிம்மா… அத்தை உன்னை தப்பா நினைப்பேனா? இந்த பாழாப் போன ஊரு பேசும். அதோட உறவுக்காரங்களும் வித்தியாசமா பார்ப்பாங்க. அதான் ராணிம்மா சொல்றேன்…”

” ஆண்டாள் அவளுக்குத்தான் புரியாம கேட்கிறா… நீ என்ன அமைதியா இருக்க?”, என்றாள். 

கணவன் இழந்த பெண் என்பதால் இதுபோன்ற உடைகளை அணிய அனுமதி இல்லாத ராணி அழுகையை அடக்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியேறினாள்.

” ஆண்டாளு நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா நீயே சொல்லு..?”

ஆண்டாள் அமைதியாக இருந்தாள்.

” இப்ப உலகம் நாகரீகமா மாறி போச்சு. இதையெல்லாம் யாரு பாக்குறாந்னு ஊருக்குள்ள நிறைய சொல்லிட்டு திரியுறாங்க. ஆனா பொரணி பேசுறது குறைஞ்சு இருக்கா? இல்லைல?”

” மொத பக்கத்து வீட்ட பேசுனாங்க, இப்ப பக்கத்து ஊரு, பக்கத்து நாடுன்னு மாறியிருக்கு அவ்ளோதான்..கொஞ்ச நாள் முன்னாடி கூட டிக்டாக் சுமதி (உதயா) மறுமணம் பண்ணுனத எவ்ளோ தப்புத்தப்பா பேசுனாங்க… கல்யாணம் பண்ணுறது பொண்ணுங்களோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். இந்த வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் நிறைய பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே வைச்சுருக்காங்க?”

” இதுக வாயிலேலாம் போயி விழணுமா? அதுக்குதான் ஆண்டாளு சொன்னேன்..” எனப் பேசி முடித்து, ” ஏ தம்பி அந்த நயன்தாரா சேலை புது டிசைன் சொன்னேல அத எடுத்து போடு….”, என்று தனக்கான புடவை எடுக்கச் சென்றாள் ராணியின் அத்தை.

 படுக்கையின் மேல் பல யோசனைகளுடன் படுத்திருந்த ராணியிடம் அவளது அம்மா வந்து ஒரு பார்சலைக் கொடுத்தாள். யோசனையுடன் பிரித்துப் பார்த்த ராணிக்கு கண்களில் ஆச்சரியமும், மகிழ்வும்! அடுத்த நொடி கேள்வியுடன் தனது அம்மாவைப் பார்த்தாள்.

” இங்க பாரு ராணி ஊர் கிட்டயும் உறவு கிட்டயும் நாம போயி ஒவ்வொண்ணுக்கும் அனுமதி கேட்டு வாழமுடியாது. இது உன் வாழ்க்கை; உனக்குப் பிடிச்ச மாதிரி வாழு…”

” மத்தவங்க கிட்ட வாக்குவாதம் பண்ணி வாழ வேண்டிய அவசியமில்லை. உன்னோட உடையோ, உணவோ உனக்குப் பிடிச்சதைத் தேர்ந்தெடுத்து சந்தோசமா இரு. இதுக்கு போயி ஏன் கவலைப்படுற?”, என்றாள் ஆண்டாள்.

” இல்லம்மா மத்தவங்க என்ன சொல்லுவாங்க… அதான் யோசனை?” தயக்கத்துடன் ராணி சொன்னாள்.

” நீ கஷ்டப்படும்போது யாராவது கூட வந்து உன் கஷ்டத்த பகிர்ந்துகிட்டாங்களா? இல்ல ஆறுதலாய் இருந்தாங்களா? ஏன் நீ வேலைக்கு போனப்ப  கூட உன்ன தப்பா தானே பேசினாங்க? அவங்க பேசிக்கிட்டே தான் இருப்பாங்க… அவங்களுக்குப் பேச மட்டும்தான் தெரியும்.”

“அதை எல்லாம் யோசிக்காம நீ உன் வாழ்க்கையை வாழணும்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். இருக்கிற ஒரு வாழ்க்கையை உனக்கு பிடிச்ச மாதிரி மகிழ்ச்சியா மாத்திக்கோன்னு! சொல்லிக்கிட்டே தானே இருக்கேன்.

 ஆனா நீ ஏன்தான் அப்பப்ப இப்படி உடைஞ்சு உட்கார்ரியோ தெரியல?”, என்று ஆண்டாள் அலுத்துக் கொண்டாள்.

 ” நான் உடைஞ்சா நீ சரி பண்ணிருவேலம்மா! அதனாலதான்…”

” அடப் பக்கி! இப்ப வரைக்கும் நான் சொல்றது ஆலோசனை மட்டும்தான். நீதான் உன்னை சரி பண்ணணும். உன்னைத் தவிர யாராலயும் உன்னை சரி பண்ண முடியாது. இந்தா இதுல புது டிசைனில் வந்த டாப்சும் இருக்கு நாளைக்கு ஆபீஸ்க்கு இதை போட்டுட்டு போ….”

” சரிம்மா… தேங்க்ஸ்மா….”, என்றாள் ராணி. தடை அதை உடை எனும் பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

***

படைப்பு:

சத்யா தேவி பாஸ்கரன்

மதுரையைச் சேர்ந்தவர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். 7 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். சமூகம் சார்ந்த சிந்தனை உடையவர். சங்க இலக்கியமும் பெண் மொழியும், ஒடுக்கத்தின் ஊடாடும் பெண் -குரல் – அதிர்வு ஆகிய இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். பெண்ணியம் குறித்தும், பெண்கள் குறித்தும் பல தலைப்புகளில் தொடர்ந்து பேசி வருபவர். சிறுகதை தளத்தில் தற்போது மெதுவாகத் தடம் பதித்து வருகிறார்.