குழந்தைகளின் ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் ஒரு பயணம் செல்வது நம்மில் பலருக்கு வாடிக்கை. சில பயனுள்ள செயலிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
எங்கு பயணம் செய்தாலும் தங்குமிடத்தைத் தேர்வு செய்வதில்தான் பலருக்குச் சிக்கல் வருகிறது. அங்கே போய் பார்த்து தங்குமிடத்தை முடிவு செய்வது சில நேரம் சாத்தியமில்லாதது. கூட்டமான சீசன்களில் எந்த அறையும் கிடைக்கவில்லை எனில் குடும்பத்துடன் தெரியாத ஊரில் என்ன செய்வதெனப் புரியாமல் நிற்க வேண்டியிருக்கும். எனவேதான் பெரும்பாலானோர் கிளம்பும் முன்பே அறைகளைப் பதிவு செய்துவிட்டுக் கிளம்புகிறார்கள். இப்படிப் பதிவு செய்ய கோஐபிபோ, மேக்மைட்ரிப் எனப் பல செயலிகள் இருக்கின்றன. ஹோட்டல் அறைகள் மட்டுமின்றி வீடுகளின் சில அறைகளை பயன்படுத்தும் வாய்ப்பை ஏர்பிஎன்பி தளம் வழங்குகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் தங்களுடைய அறை வாடகையைச் சமாளிக்க ஏர் பெட் அண்ட் ப்ரேக்ஃபாஸ்ட் (air bed and breakfast) எனும் பெயரில் தாங்கள் தங்கும் இடத்தை விருந்தினர் பயன்படுத்த அனுமதித்தனர். காற்றுப் படுக்கை, காலைச் சிற்றுண்டி கொடுப்பார்கள். அவர்கள் வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓர் இரவு தூங்கிச் செல்ல சிறிய தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டார்கள். அதிகம் செலவழிக்க விரும்பாத பயணிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த ஸ்டார்ட்அப் யோசனை வெற்றிகரமான தொழிலாக மாறிவிட்டது.
வெளிநாடுகளில் இப்படி அறையைப் பகிர்ந்துகொள்ள வீட்டின் உரிமையாளர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் வாடகைக்கு வீடு கொடுக்கும்போது கூட வாடகைதாரர் என்ன மதத்தை பின்பற்ற வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும் என விதிகள் வகுப்போர் அதிகம். தங்குபவர்களும்கூட சில நேரம் பிரச்னைக்கு உரியவர்களாக இருப்பதுண்டு. திருட வந்த வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு, சரக்கடித்து தூங்கி மாட்டிக் கொள்ளும் செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. திருடும் கடைமையைக்கூட ஒழுங்காகச் செய்யாதவர்கள் நிறைந்த நாட்டில் விருந்தினராகச் சிலரை வீட்டின் உள்ளே அனுமதிப்பதில் பலருக்குத் தயக்கம் உள்ளது. பெரும்பாலும் தனி வீடுகளை உரிமையாளர்கள் இப்படி ஏர்பிஎன்பி தளத்தில் வாடகைக்கு விடுகிறார்கள். தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் அதிகம் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய தளங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. அந்த மக்களின் வாழ்க்கை முறை, வீட்டுச் சமையல், பண்பாடு இவற்றை அறிந்துகொள்ள இத்தகைய தங்குமிடங்கள் சிறந்த தேர்வு. வீடுகள் என்பதால் ஊரின் உள்ளே இருக்கலாம். அக்கம் பக்கம் பாதுகாப்பற்றதாக இருக்கலாம். அதைத் தவிர்க்க ஏற்கெனவே தங்கியவர்கள் அளித்துள்ள ரிவ்யூக்களைக் கவனமாகப் படித்துத் தங்குமிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். வெறும் அறைகளாக இல்லாமல் சமையலறைகளுடன் கூடிய வில்லாக்கள்கூட இப்படி ஏர்பிஎன்பியில் கிடைக்கும். ஓரிரு வேளை சமைத்துச் சாப்பிட முடிந்தால் செலவில் பொியளவு குறையும். எத்தனை பேர் தங்கலாம், எந்தப் பொருட்களைப் பயன்படுத்தலாம், எதைத் தொடக் கூடாது என உரிமையாளர் சொல்லும் விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
இந்தியாவில் ஹோம்ஸ்டே, ஹாஸ்டல்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் கொண்ட தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றின் ரிவ்யூக்களை நிதானமாகப் படித்துப் பார்த்தாலே இதை நடத்துபவர் பற்றிய தகவல்களையும் தரத்தையும் அறிந்துகொள்ள முடியும். புதிய அனுபவங்களைத் தேடி ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சில ஆயிரங்கள் அதிகம் செலவானால் பரவாயில்லை என்போர் இத்தகைய தங்குமிடங்களைத் தவிர்த்து வழக்கமான ஹோட்டல்களைத் தேர்வு செய்வதே நல்லது.
எத்தனை முறை பயணம் மேற்கொண்டாலும் எதையாவது மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்து அவஸ்த்தைப் படுபவர்கள் பலர். என்னென்ன பொருட்களை மூட்டை கட்ட வேண்டும் எனும் அடிப்படைப் பட்டியலைக் கொடுக்க ஒரு செயலி இருக்கிறது. பேக்பாய்ண்ட் (packpoint) எனும் இந்தச் செயலியில் எங்கு செல்கிறோம், அங்கு என்னென்ன செய்ய இருக்கிறோம் என்பதைச் சொன்னால் எதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் எனப் பட்டியல் கொடுத்துவிடும்.
எக்ஸ்பென்சிஃபை (expensify) எனும் செயலியில் பில்களை அப்படியே புகைப்படம் எடுத்துப் பதிவேற்றினால் போதும். அந்த பில்களைப் பகுத்து சரியாக கணக்கு வைத்துக்கொள்ளும். நாமே வேண்டுமானாலும் எது தனிப்பட்ட செலவு, எது பயணச் செலவு என உள்ளீடுகளைக் கொடுத்துத் திருத்திக்கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு எரிபொருளுக்கு எவ்வளவு மைலேஜ் என்பது போன்ற தகவல்களைக்கூட ட்ராக் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மைல்ஐக்யூ (mileiq) என்ற செயலியும் மைலேஜ் கணக்கிட உகந்த செயலி.
வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பணத்தை அந்த நாட்டுக் கரன்சியாக மாற்ற உதவும் தளம் எக்ஸ்ஈகன்வர்டர் (https://www.xe.com/). துல்லியமாகவும் மிகச் சமீபத்திய மதிப்பையும் காட்டும் இந்தத் தளம். விமானப் பயணங்களை திட்டமிட்டுத் தேடும் போது ஒரு விலையும், டிக்கெட்டைப் பதிவு செய்ய உள்நுழைந்தால் அதிக விலையும் காண்பிக்கிறது என்பது பலரின் புகார். இதைத் தவிர்க்க விமான சேவை, டிக்கெட் விவரங்கள் போன்றவற்றைத் தேடுவதை ஒரு கணினியிலும் புக் செய்வதை வேறொரு கணினியிலும் செய்யலாம். சொந்தக் கணினியில் தேடித் தேர்ந்தெடுத்துவிட்டு அலுவலகக் கணினியில் புக் செய்யலாம். ஹாப்பர் (hopper) எனும் செயலியைக் கொண்டு எந்தெந்த காலத்தில் கட்டணங்கள் குறைவாக இருக்கும் என்ற தகவல்களை ஆராய்ந்து அறிய முடியும்.
சமூகவலைத்தளக் குழுக்களில் இணைந்து கொண்டு உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்பது இன்னொரு எளிமையான வழி. பிரபலமான பல சுற்றுலாத் தலங்களின் பெயர்களை முகநூலில் இட்டுத் தேடினால் பல குழுக்கள் இருப்பதைப் பார்க்கலாம். இதில் உள்ளூர் தொழில் முனைவர்கள், தங்குமிடம் வைத்திருப்பவர்கள் எனப் பலர் இருப்பார்கள். என்னென்ன பார்க்கலாம், தங்குமிடச் செலவு எவ்வளவு ஆகும், என்ன மாதிரி உடைகள் வேண்டும், என்ன மாதிரியான அனுமதி பெற வேண்டும் போன்ற தகவல்களை இக்குழுக்களில் இருப்போர் தெரிவிப்பார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல இன்னர் பர்மிட் தேவை. காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ப்ரீபெய்ட் சிம் கார்ட்கள் வேலை செய்யாது. பாேஸ்ட் பெய்ட் மட்டுமே வேலை செய்யும். அதிக உயரம் உள்ள லடாக் போன்ற மலைப் பகுதிகளுக்கு நேராக விமானத்தில் வந்து இறங்கி உங்கள் பயணத்தைத் தொடர முடியாது. குறுகிய நேரத்தில் அதிக உயரத்தை அடைவதால் உங்கள் உடல் அந்த மாற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் தலை சுற்றல், வாந்தி உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தும். இதை நீங்கள் முன்பே அறிந்தால்தான் சற்று ஓய்வுக்குப் பிறகு ஊர் சுற்றிப் பார்க்கப் போகலாம். மருத்துவரிடம் ஆலோசித்து முன்னரே தேவையான மருந்துகளைக் கொண்டுவரலாம். இந்த உள்ளூர் சூழ்நிலைக்கான தகவல்களைத் தருவதில் சமூக வலைத்தளக் குழுக்கள் பெரும் உதவி புரிகின்றன. பாதுகாப்பு, ப்ரைவசி பற்றிய அச்சம் இருந்தால் இதற்கென்றே ஒரு புதிய ஐடி உருவாக்கியும் கேள்விகளை முன்வைக்கலாம். உள்பெட்டியில் தங்கள் சேவையைப் பயன்படுத்த கோருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய குழுக்கள் ஒட்டு மொத்தமாக அந்தச் சுற்றுலாத் தலத்தின் முகமாக இருப்பதால் பெரும்பாலும் நம்பிக்கைக்கு உரிய தகவல்களை இங்கே திரட்ட முடியும். மண்சரிவு, மழை உள்ளிட்ட காரணங்களால் உள்ளூர் போக்குவரத்தில் உள்ள மாற்றம் பற்றிய தகவல்கள்கூட இக்குழுக்களின் மூலம் அறியலாம்.
கூகுள் செயலிகளைப் பற்றிச் சொல்லாமல் கட்டுரையை முடிக்க முடியாது. கூகுள் ட்ராவல் மூலம் தங்குமிடம், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றை முடிவு செய்யலாம். கூகுள் மேப் மிக அத்தியாவசியமான செயலி. புதிய இடத்தில் உள்ள மொழி புரியாத அறிவிப்புகளை கூகுள் லென்ஸ் மூலம் உடனடியாக மொழி பெயர்த்து புரிந்து கொள்ளலாம். அதைப் போலவே கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை உபயோகித்து நாம் பேசும் மொழியில் இருந்து உள்ளூர் மொழிக்கு மாற்றி எதிரில் இருப்பவருக்குப் புரிய வைக்கலாம். அவர் பதில் சொல்லும் போது நமக்குத் தெரிந்த மொழிக்கு மாற்றிக் கொடுத்துவிடும். அவரவர் மொழியில் பேசினாலும் இந்தச் செயலி மூலம் பெரிய சிரமமின்றி உரையாட முடியும்.
பயணங்கள் மேற்கொள்வது எல்லாருக்குமானதல்ல. சிலருக்குப் புதிய பழக்கமில்லாத இடங்களில் தங்குவதே மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். சமூக ஊடகங்களில் எல்லாரும் பயணம் போவதைப் பார்த்து அதன் அழுத்தத்தினால் பயணம் செல்லும் முடிவை எடுக்கக் கூடாது. உண்மையிலேயே பயணிக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே திட்டமிட வேண்டும். ஒருவருக்கு மகிழ்ச்சி தரும் ஓர் இடம் மற்றவருக்கு நரகம் போன்று தோன்றலாம். சமூக அழுத்தத்திற்கு அடிபணியாமல் உங்கள் மனதுக்குப் பிடித்தது எது என்பதை உணர்ந்து அதன்படி உங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.
(தொடரும்)
படைப்பாளர்:
இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.