தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலத்தை உரையாசிரியர்களின் காலம் என்பர். வ.சுப. மாணிக்கம், ‘இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரை என்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்’ என்று குறிப்பிடுகிறார்.
உரையாசிரியர்கள் என்போர் அன்றைக்குச் செய்யுள் வடிவிலிருந்த இலக்கிய, இலக்கணங்களுக்குச் சொற்பொருள் அளித்ததோடு மட்டுமின்றி, தேவையான இடங்களில் விளக்கங்கள் கூறி, வாழையடி வாழையாய் தனக்குக் கற்பிக்கப்பட்டதையும், அவர்தம் சிந்தையில் உதித்ததையும் உரை வழங்கலினூடாகப் பின்னோர்க்குக் கடத்தி அரியதோர் பங்களிப்பு ஆற்றினர். அம்மரபின் நீட்சியாக இன்றைய திறனாய்வாளர்கள் உரைநடையில் அமைந்த இலக்கியப் படைப்புகளில் உள்ள கருத்தியல்களையும் குறியீடுகளையும் விளக்குவதும், படைப்புகளை மதிப்பீடு செய்வதுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காலம் கருத்து, இலக்கிய வடிவம் போன்றவைதான் மாறிவிட்டன. இவர்களின் பணிகளில் ஒருமையுள்ளது. அஃது என்னவெனில், படைப்புக்கும் வாசகனுக்கும் இடையே பாலமாகச் செயலாற்றுவதே.
தொடக்கத்தில், மூல நூலாசிரியரின் ஒருசாலை மாணாக்கராய் இருத்தல் வேண்டும், குருவாய் அல்லது சீடனாய் இருத்தல் வேண்டும் போன்ற தகுதிப்பாடுகள் உரையாசிரியர் ஆவதற்குச் சொல்லப்பட்டன. பின்னர், அப்படியான நிபந்தனைகள் களைந்தன. இல்லையென்றால் உரைகள் கண்டிருக்க முடியாது போயிருக்கும்.
1929இல் 500 பக்கங்களில் ‘திருக்குறள் தீபாலங்காரம்’ என்னும் தலைப்பில் திருக்குறளுக்கு உரையெழுதியுள்ளார், மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி. லெட்சுமி அம்மணி. இவர், பதிப்புத்துறையின் வேந்தரான உ.வே.சா வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். லெட்சுமி அம்மணியின் உரை நூலுக்கு உ.வே.சா, ந.மு.வேங்கடசாமி, திரு.வி.க உட்பட 29 அறிஞர்கள் வாழ்த்துரை மற்றும் அணிந்துரை அளித்துள்ளனர். ‘பொருட் செல்வத்தோடு கல்விச்செல்வமும் அவர்கள்பால் அமைந்திருப்பது யாவரும் பாராட்டத்தக்கது’ என உ.வே.சா தன்னுரையில் அம்மணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே பலரும் ஜமீன்தாரிணி ஒருவர் உரை எழுதியுள்ளார் என்பதறிந்து வியந்துப் பாராட்டியுள்ளனர்.
‘நல்ல காகிதத்தில் நல்ல எழுத்தில் பெரும் பொருட்செலவில் அச்சிடப்பட்டிருக்கின்றது’ என்று யாழ்ப்பாணம் த. கைலாச பிள்ளை கூறுவதிலிருந்து ஒரு செய்தி புலனாகிறது. அஃதாவது, இவர் ஜமீன்தாரிணி என்பதால் நூல் அச்சு கண்டுள்ளது. 500 பக்கங்கள் என்பது இன்றே மலைப்பை ஏற்படுத்தும்போது, அன்றைய சூழலை எண்ணிடுக.
’19ஆம் நூற்றாண்டின் ஒளவையார்’ எனத் திரு.வி.க. வினால் போற்றப்பட்ட அசலாம்பிகை அம்மாள், ‘ஆங்கிலப் பட்டதாரிகளாக வெளிவரும் ஆடவருடன் சமத்துவம் விரும்பிப் பட்டமும் பதவியும் வேட்டுப் பெண் மக்களும் வெளிவருவதே பெரு நாகரிகமாக மதிக்கப்படும் இந்நாளில் தாய்மொழியில் ஆர்வம் கூர்ந்து, ஒரு ஜமீன்தாரிணியாகிய பெண்ணரசு முன் வந்திருப்பதை எவ்வுரை கொண்டு போற்றவல்லேன்’ என வாழ்த்துரை தந்துள்ளார்.
ஆங்கில மோகம் மேலோங்கியிருந்த காலமது. ந.மு.வேங்கடசாமி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று திருமந்திரம், பட்டினத்தார் பாடல், தாயுமானவர் பாடல், நாலடியார் முதலிய வேறுபல நூல்களின் செய்யுட்களும் இடையிடையே பொருத்தப்பாடு கருதித் தந்துள்ளார், இவ்வுரையாசிரியர். புராணக்கதைகள், மேற்கோள்கள், உதாரணங்கள் கூறிக் குறளின் பொருளை விளக்கியுள்ளார். ‘மாதர்களாகிய எவரும் தமது நிறையினின்றும் வழுவாதிருக்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொள்ளல் வேண்டும். நல்லொழுக்கமே அரும்பெரும் பயனை அளிக்கும் ஆற்றலுடையதாகிறது. இவ்வாறிருக்கச் சிலர் தம்மனையாளுக்கு மதிற்காவலும், வாயிற்காவலும் வைத்து வாழக் கருதுகின்றனர். அந்தோ பாவம்! அவர்கள்,
‘சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை‘
என்ற வள்ளுவர் வாக்கையேனும் ஆழ்ந்துணர்வார்களாயின், அத்தகைய அறியாமையை மேற்கொள்ளுவார்களா? காவல் வேண்டற்பாலதே. எக்காவல்? பெண்ணின் கற்பே அவளைக் காக்குங் காவலென்க. கணவன் வலிந்து கோலுங் காவல் கண்ணியமானதாகாது’ என உரையளித்துள்ள பாங்கு, குறளையடுத்து உரை தரும் மரபிலிருந்து மாறுபட்டிருக்கிறது. அறம், பொருளுக்கு விளக்கமாகவும் இன்பத்துப் பாலுக்குச் சுருக்கமாகவும் என 114 அதிகாரங்களுக்கு மட்டுமே இவர் உரை வழங்கியுள்ளார். இவரைத் தவிர்த்துப் பெண் உரையாசிரியர்கள் பற்றிய செய்திகள் எதுவுமில்லாத நிலையில் இவரே ‘முதல் பெண் உரையாசிரியர்’ எனக் கருதப்படுகிறார்.
இவருக்குப் பின் 94 ஆண்டுகள் கழித்துத் திருக்குறளுக்குப் புதுமையான வழியில் உரையெழுதியுள்ளார், மற்றொரு பெண் உரையாசிரியர். தற்போது அமெரிக்காவில் வசிப்பவரான தமிழ்க்காரி எனும் புனைபெயர் கொண்ட சித்ரா மகேஷ், குறுங்கவிதை வடிவில் உரை சமைத்து ‘திருக்குறள் 3.0’ என அந்நூலுக்குப் பெயர் சூட்டி, 2023ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்டார். இந்நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருதையும் பெற்றார். ‘காதல் கதை சொல்லட்டுமா?’, ‘பூக்கள் பூத்த தருணம்’ என்னும் கவிதை நூல்களுக்கு அடுத்து திருக்குறளுக்குக் கவிதையால் உரை வழங்கும் எண்ணம் தோன்றவே, இன்பத்துப் பாலில் தொடங்கியுள்ளார். 1330 குறட்பாக்களுக்கும் மூன்று வரியில் குறுங்கவிதையும் அதைத் தொடர்ந்து குறளின் பொருளும், பதம் பிரிக்கப்பட்ட குறளும் தரப்பட்டிருக்கின்றன, தமிழ்க்காரியின் உரையில்,
‘தன் நெஞ்சமே
துணையாகாத போது
துன்பத்தில் யார் துணை’ (குறுங்கவிதை:1299)
‘மறைத்தாலும் சொல்லும்
மையுண்ட கண்கள்
கைமீறி ஒரு செய்தி’ (குறுங்கவிதை:1271)
இவ்வாறு எளிமையாக அனைவருக்கும் புரியும்படி திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் பொருட்டே இந்நூலை ஆக்கியுள்ளார். 1330 குறட்பாக்களையும் மனப்பாடமாகச் சொல்லிப் பரிசு வென்றவர் என்பதாலும், அவர்தம் முனைவர் பட்ட ஆய்வு ‘கவிதைகள்’ குறித்தானது என்பதாலும் சவாலான இப்பணி அவருக்குச் சுவையானதாகியிருக்கும் போலும்!
திருக்குறளுக்கு எளிமையான உரையும் விளக்கமும் வழங்கப் பேரவா கொண்டதோடு, அதைத் தனது எண்பதாம் அகவையில் நிகழ்த்தியும் காட்டியுள்ளார், மற்றொரு பெண் உரையாசிரியர். (7.09.2024) கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்கள், 1469 பக்கங்கள் கொண்ட திருக்குறள் உரை நூலை வெளியிட்டுள்ளார். நூலின் உள்ளே குறள், செய்யுட்பிரிப்பு, சொற்பொருளுரை, பொழிப்புரை, குறிப்புரை என்று 1330 குறட்பாக்களுக்கும் நேர்த்தியாக உரை தந்துள்ளார்.
54வது குறளில் வரும் கற்பு என்பதற்குக் ‘கற்றபடி ஒழுகல்’ என்றும், ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ (396) என்பதில் ‘கேணி என்பது நீர்நிலை. பரிமேலழகர் கேணி என்பதற்கு நீர் எனப்பொருள் கூறியுள்ளார். கேணியை அடையாகக் கொண்ட இடப்பெயர்கள் ஈழநாட்டில் உள்ளன’ என்றும் குறிப்புரையில் விளக்கம் அளித்துள்ளார்.
சொல்லப்பட்டுள்ள மூவருக்குமான ஒருமை யாதெனில் இம்மூன்று பெண் உரையாசிரியர்களும் திருக்குறளுக்கு உரை செய்தவர்களே. ஆனால், இவர்களின் காலம், வாழிடங்கள், உரைத்திறன் ஆகியவை முற்றிலும் மாறுபட்டன.
திருக்குறளுக்கு எத்தனையோ அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். அவ்வரிசையில் இப்பெண்மணிகள் மூவரும் தனித்துவமாய் மிளிரும் மும்மணிகள் எனலாம்.
படைப்பாளர்
கோதாமணி சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் பயின்றவர். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கியம் பயில்கிறார். கவிதை, திறனாய்வு கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். புத்தக வாசிப்பைப் பெரிதும் விரும்பும் இவர், மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த நூல்கள் வாசிப்பதில் ஆர்வங்காட்டுகிறார்.
ஆஹா! அருமை!