ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள். தேனி நகரம் வழக்கம்போல அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜூலை மாதம் தொடங்கி விட்டால் போதும், ஊரெங்கும் தோரணங்களும் விளம்பரப் பதாகைகளும் காமராஜரின் விதவிதமான புகைப்படங்களும் அலங்காரங்களுமாய் தேனியின் முகம் மாறத்தொடங்கிவிடும். (நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள்) இரண்டு கைகளிலும் குழந்தைகளின் விரல்களைப்பற்றி, (பள்ளிக்கு அழைத்துச்செல்லும்!) காமராஜரின் வெண்கலச்சிலை இருக்கும் ஃபாரஸ்ட் ரோடு பகுதியில், நடமாட முடியாத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை, இயல்பாய் மற்றொரு அவதாரம் எடுக்கும். விழிப்புணர்வு மாரத்தான், பிரமாண்ட அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, குருதிக்கொடை, கல்வி உபகரணங்கள் வழங்குதல், கலைநிகழ்ச்சிகள், விருந்து (அன்னதானம்) என மூன்று நாட்களுக்கு தேனிவாழ் மக்கள் காமராஜர் மீதான அன்பை விதவிதமாய் வெளிக்காட்டுவார்கள். எளிய மனிதரான காமராஜர் இதையெல்லாம் ரசிப்பாரா என்றுகூட சில சமயம் தோன்றுமளவுக்கு கல்வித்திருவிழா களைகட்டும். அது ஏன் தேனியில் காமராஜருக்கு அத்தனை முக்கியத்துவம்? இப்படிக் கொண்டாடித் தீர்ப்பவர்களின் வாழ்வியல் பின்புலம் என்ன எனக்காரணம் தேடிக்கிளம்பினேன்.

 மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம் என மூவகை நிலங்களால் சூழப்பட்ட ஒரு அழகான பள்ளத்தாக்கு நகரம்தான் தேனி. இன்றைக்கு நகரமாக விரிவடைந்திருந்தாலும் 150 ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு சிறிய கிராமம், கிராமம்கூட இல்லை, மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கூட்டுச்சாலை. ஆம், கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை மூன்றும் சந்திக்கும் முக்கூட்டுச்சாலை அவ்வளவு தான்.

இன்றைய தேனியை அடுத்துள்ள அல்லிநகரமே அன்றைக்கு முக்கிய நகரமாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1880) வெளியூர் வணிகர்கள் – குறிப்பாக சிவகாசி, விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி, நட்டாத்தி, உசிலம்பட்டி, எரிச்ச நத்தம், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ஊர்களைச் சேர்ந்த நாடார் சமுதாய வணிகர்கள், மாட்டு வண்டிகளில் பொருள்களைக் கொண்டு வந்து, முக்கூட்டுச் சாலையில் நின்று வியாபாரம் செய்தனர். வியாபாரிகள் தங்குவதற்கும் மாடுகளைக் கட்டுவதற்கும் ஏற்ற இடமாக, தேனி கொட்டக்குடி ஆற்றங்கரை இருந்தது. அத்தோடு மதுரை, பெரியகுளம், குமுளி போன்ற பகுதிகளிலிருந்து வரும் வண்டிகள் ஒன்று சேரும் இடமாக இவ்விடம் அமைந்து விட்டதால், அந்த இடத்திற்கு கூட்டுச்சாலை எனப்பெயரிட்டு, அவர்கள் மெல்ல மெல்ல தேனியில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டபோதுதான், அந்தப்பகுதியில் குடியேற்றம் தொடங்கி தேனி என்ற நகரம் உருவானது.

தேனியின் வளர்ச்சியும் நாடார் சமுதாய மக்களின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்திருக்க, இருவரும் ஒன்றாக வளர்ந்தனர். இன்றைக்கு தேனியில் வணிகத்தில் மட்டுமல்லாது, சமுதாயத்திற்கென 12 கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த 16 சகோதர நிறுவனங்கள் என 28 நிறுவனங்களை மிகச்சிறப்பாக நிர்வகித்து, வணிகத்திலும் அழுத்தமாய் கால்பதித்து, தேனியின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக்கூடிய நிலையில் நாடார் சமூக மக்கள் இருந்தாலும், அவர்கள் கடந்து வந்த பாதை அத்தனையொன்றும் உவப்பானதாக இல்லை. தேனி நகரின் வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பையும் வியர்வையையும் சிந்தியிருக்கும் இவர்களில் எவருக்கும் தேனி பூர்வீகபூமி இல்லை. பின் எங்கிருந்து வந்து இந்த பூமியை தங்கள் உழைப்பால் செழிக்கச் செய்து தாங்களும் செழித்து வளர்ந்திருக்கிறார்கள்? வரலாற்றில் அம்மக்கள் குறித்த செய்திகளையும், அவர்களது பூர்வீக நிலங்களையும் நூற்றாண்டுகளாக அவர்கள் கடந்து வந்த பாதையையும், அவர்கள் தேனி நோக்கி நகர்ந்து வந்த காரணங்களையும் தேடிச்சென்றால் சுவாரஸ்யமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன சான்றுகளுடன்.

நெல்லை மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரின் தென் கிழக்குப் பகுதியே நாடார்களின் தாய் பூமி என்கிறார் நாடார்கள் வரலாறு பற்றி ஆய்வு செய்து The Nadars of TamilNad – The political Culture of a Community in Change (1969) என்ற நூல் எழுதிய ராபர்ட் எல். ஹார்டுகிரேவ் (Robert L. Hardgrave). நாடார்களின் பூர்வீக பூமி சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை என்றும், நாயக்கர் ஆட்சியை ஏற்றுக்கொள்ள நாடார்கள் மறுத்ததாகவும், அதனால் நாயக்கர்கள் அதிக கட்டுப்பாடுகள் விதித்ததால், தங்கள் ஊர்களைவிட்டு வெளியேறித் தென்தமிழகத்தில் திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம், நாங்குநேரி போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாகவும் சு. செந்தமிழ்ச் செல்வன் எழுதிய ‘நாடார் சமுதாயத்தின் போராட்ட வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார்.

பாலை நிலத்திற்குச் சமமான இந்த தேரிப்பகுதிகளில்தான் நாடார் இன மக்களின் தொகை வளரத் தொடங்கியதாக 1850ஆம் ஆண்டு ‘திருநெல்வேலி சாணார்கள்’ (The Tinneveli shanars) நூலில் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடுகிறார். “அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக் காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும் விரும்பத்தகாததாகவும் காணப்பட்டது” என்கிறார் கால்டுவெல். (கால்டுவெல் எழுதிய 70 பக்க நூல்குறித்து மிகப்பெரிய விமர்சனங்களும் கண்டனங்களும்கூட உண்டு).

விவசாயத்திற்கு சிறிதுகூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்பட்ட செம்மண் பூமியைச் சுற்றிதான் வீடுகளை உருவாக்கி, நாடார்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த வறண்ட நிலப்பகுதி அவர்கள் விரும்பித் தேர்வு செய்ததல்ல, அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதால் வலியத் தேடிச்சென்றது. தேரிப்பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பனை ஏறி, ‘கள்’ இறக்கும் தொழிலைச் செய்யத்தொடங்கினர்.

தேனி மாவட்ட வர்த்தகசபையின் (President of Theni District Chamber of Commerce) தலைவரும் தீவிர வாசிப்பாளரும் எழுத்தாளருமான KSK நடேசன் அவர்களிடம் பேசும்போது, கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். “வணிகம், நிலக்குடிமை மற்றும் இராணுவ காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த நாடார் சமூகம் விஜயநகரப் பேரரசு (பொ.ஆ. 14 – 16 ஆம் நூற்றாண்டுகளில்) காலத்தில் சமூக ரீதியாக கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசியல் அதிகார மைய மாற்றம், சாதி கட்டமைப்பின் கடுமை அத்தோடு ஒரே தொழிலில் அடக்கப்பட்ட நிலை ஆகியவற்றால் துயருற்றனர். தொழிலை மாற்றுவது சமூக குற்றமாகப் கருதப்பட்டது (“The Vijayanagara system reinforced caste by fixing occupations to ensure agrarian surplus” – Burton Stein, 1980). சொத்து, கல்வி, அதிகாரம் ஆகியவற்றிலிருந்து விலக்கப்பட்டனர். நாளடைவில் (நாடார்களைக் குறிக்கும்) ‘சாணார்’* என்ற சொல் இழிச்சொல்லாக மாறியது. சமூக நினைவில் இருந்த பழைய உயர்நிலை அடையாளங்கள் மறைக்கப்பட்டன. 

விஜயநகரப் பேரரசின் கீழான அழுத்தத்தை சகிக்க முடியாத நாடார் சமூகத்தினர், தெற்கே திருவிதாங்கூர் வரை சென்றனர். அந்த சமயத்தில் மன்னன் மார்த்தாண்ட வர்மன் தனது சொத்துகளை பத்மநாதசுவாமி கோவிலுக்கு எழுதி வைத்து விட்டு கோவிலின் நிரந்தரத் தலைவராக பட்டம் சூட்டிக்கொண்டார். அங்கும் சமூக ஒடுக்குமுறை விஜயநகரப் பேரரசுக்குச் சற்றும் குறையாமல் இவர்களைத் துரத்தியது. அதுமட்டுமல்ல, கல்யாணவரி, மாட்டு வரி, வீட்டு வரி என கழுத்தை நெரித்தன கடுமையான வரிகள். கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கு ஆங்கிலேயர்கள் சில சமூகச் சலுகைகளைக் கொடுக்க, சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்க நாடார்கள் மொத்தமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறத்தொடங்கினர். அவ்வாறு மதம் மாறியவர்களுக்கு ‘குப்பாயம்’ என்னும் மேலாடை அணிய அனுமதி தரப்பட்டது. அதனால் கிறிஸ்தவ நாடார்களுக்கும் நம்பூதிரிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. தெருவில் குப்பாயம் அணிந்த நாடார் இனப் பெண்களைக்கண்டால் இரும்புக் கொக்கியைப்போட்டு இழுத்து மேலாடையைக் கிழிக்கும் கொடூரங்கள் எல்லாம் அரங்கேறின.

1822 முதல் 1857 வரை கடுமையான ஒடுக்குமுறைகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. ‘நாடார் பெண்களைத் தொட்டால் வெட்டு’ என சமூகப்பெரியவர்கள் அறிவித்ததாகப் பரவிய செய்தியால் ஊர் ஊருக்கு கலகம் தீயாய்ப் பரவியது. முடிவில் 1859ஆம் ஆண்டு பெண்கள் தோள்சீலை அணியலாம் என அரசு அறிவித்தது’ என திருவிதாங்கூர் கொடுமைகளைப் பட்டியலிடுகிறார் திரு. நடேசன் அவர்கள்.

1857 ல் கால்டுவெல் எழுதிய ‘Lectures on the Tinnevelly Mission‘ என்ற கட்டுரைத் தொகுப்பில் “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை; வெளியில் நின்றுதான் வழிபாடு செய்ய வேண்டும்; நீதிமன்றங்களில் கூட வெளியே நின்றுதான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும்” என்ற பதிவு காணப்படுகிறது.

சாமுவேல் மட்டீர் எனும் ஆங்கிலேயரும் தனது ‘The Land of Charity‘ என்னும் நூலில் நாடார்களின் நிலையை இப்படியாக விவரிக்கிறார் – “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும்போது 36 அடி தூரம் தள்ளி நின்றுதான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், பெண்கள் மேலாடை அணிதல், பெண்கள் தண்ணீர்க்குடம் இடுப்பில் எடுத்துச்செல்வது போன்றவை தடை செய்யப்பட்டது. வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக்கூடாது. நாடார் ஒருவர் பனையேறிக் கொண்டிருக்கும்போது கீழே பிராமணர் சென்றால், கை தட்டி, தான் இருப்பதை அறிவிக்க வேண்டும், ஏனெனில் நாடாரின் நிழல் பிராமணரின் மீது பட்டுவிடக்கூடாது”.

இத்தனை துயரங்கள் அனுபவித்தவர்களுக்கு கொஞ்சமேனும் துணை நின்றவர்கள் ஆங்கிலேய அரசு அதிகாரிகள்தான். கவர்னர் கர்னல் மன்றோவின் முயற்சியினால் நாடார், ஈழவர் போன்றவர்களும் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று அறிவிக்கப்பட்டது (இந்திய சரித்திரக்களஞ்சியம் 12 ஆம் பாகம் 1811 – 1820). அத்தோடு, 1859 ஜனவரி 27ஆம் நாள், “தோள்சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாதது” என்ற அரசாணையும் வெளியானது. ஆனால் தோள்சீலை அணிவது குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளும் உண்டு. 1859 லண்டன் மிஷனரியைச் சேர்ந்த ஆறுபேர் (LMS London Missionary of Society) “சான்றோர்(நாடார்) இன பெண்கள் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ சமயம் இந்த நாட்டில் அறிமுகமாவதற்கு பலகாலம் முன்பே, அதாவது அவர்கள் கிருஸ்துவத்தைத் தழுவுவதற்கு முன்பே தோள்சீலை அணிந்திருந்தனர், எங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பதிவு செய்திருக்கின்றனர் (அதற்கான சான்று சென்னை ஆவணக்காப்பகத்தில் உள்ளது).

“மூவேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் நாடார்களும் வீழ்ச்சியடைந்தனர். சாதாரண வீழ்ச்சியல்ல, நாஞ்சில் நாட்டின் அடர்ந்த கானகத்திற்குள் விரட்டப்படும் அளவிற்கு அவர்களது நிலை தலைகீழாய் மாறியது” போன்ற செய்திகள் வாசிக்கக் கிடைத்தபோது, மூவேந்தர் வீழ்ச்சிக்குப்பின் இத்தனை ஒடுக்குமுறைகளை அனுபவித்தனர் எனில், மூவேந்தர் காலகட்டங்களிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவ்வின மக்களின்வாழ்வியல்முறை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? என்ற கேள்வி பிறக்க, அதைத் தொடர்ந்து ஓடியபோது, அத்தோடு சேர்த்து, ‘சான்றோர் எப்படி நாடார் ஆயினர்?’ என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது தொல்லியல் சான்றுகளில்.

இன்னும் ஆராய்வோம்…

சான்றுகள்

Avators of Indian Research – comparative studies in society and History – Richard G.Fox (Jan 1970)

தமிழக நாடார்கள் – ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு – இராபர்ட் எல். ஹார்டுகிரேவ்

The Nadars of Tamilnad; The political culture of a community in change. – Hardgrave, Robert L.

Stein, Burton – Peasant State and society in Medieval South India, 1980

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.