சார்ஜால பிளைட்ட விட்டு இறங்கின நான் காலை நேர சூரிய வெளிச்சத்துல ஏர்போர்ட்ட ஒரு ரவுண்டு சுத்தி பார்த்தேன். நம்மூரு காந்திபுரம் பஸ் ஸ்டாப்பு மாதிரி வரிசை வரிசையா பிளைட்ட நிப்பாட்டி வெச்சிருக்காங்க. யம்மாடியோவ். இத்தனை பிளைட்ட இப்படி ஒரேடியா பாத்தவுடனே நியாயமா ஹேப்பியா தான் இருந்திருக்கணும். ஆனா எனக்கு “என்னடா இந்த ஊரு ரொம்ப காஸ்ட்லியான ஊரா இருக்கும் போல. கடலை முட்டாய் கம்மர்கட்டெல்லாம் கிடைக்காது. இனிமே பீட்சாவும் பர்கரும் சாப்பிட்டு பழகிக்க வேண்டியது தான்” போலன்னு கவலை வந்திருச்சு.

அங்கிருந்து ஏர்போர்ட்டுக்குள்ள போறதுக்கு ஒரு பஸ் வந்து கூட்டிட்டு போச்சு. ஏர்போர்ட் வந்ததும் இறங்கி இமிக்ரேசன் போனா மருதமலை முருகன் கோவில் மாதிரி அத்தாப்பெரிய கியூ. இமிக்ரேசன் கியூல எனக்கு இன்னோரு ஆச்சர்யம் கூட இருந்துச்சு.

“வளைகுடா நாட்டுல பொண்ணுங்க வெளிய வேலைக்கெல்லாம் வர மாட்டாங்க. ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க வெளிய வராங்க, படிக்குறாங்க, வேலைக்கு போறாங்க”ன்னு பெரும பீத்தலையன்கள் சொல்லுறத கேட்டுட்டு அப்படித்தான் இருக்கும்ன்னு கற்பனை பண்ணி வெச்சிருந்தேன்.

ஆனா அங்க இமிக்ரேசன் முழுக்க பெண்கள் தான் இருந்தாங்க. சொல்லப்போனா நம்ம ஊரு இமிக்ரேசன்ல தான் ஒரு பெண் ஆபீசர் கூட இல்லை. டீ சர்ட், ஜீன்ஸ் ன்னு மார்டனா டிர்ஸ் போடுறதுல எந்த பெண்ணியமும் இல்ல. அது வெறும் ஆடை சுதந்திரம் மட்டும் தான். பர்தா போட்டுட்டு அங்க கெத்தா உக்காந்திருந்த பெண்களை பார்த்தப்போ என் கற்பனை பிம்பம் பட் பட் பட்ன்னு உடைஞ்சிருச்சு. எனக்கு முன்னாலிருந்த அபீசரம்மா என்னை கூப்பிட்டாங்க. என்னோட பாஸ்போர்ட், விசா ரெண்டும் வாங்கி பார்த்துட்டு அங்க இருக்குற ஐரிஸ் (Iris) ஸ்கேனர்ல கண்ணை ஸ்கேன் பண்ணிட்டு யுஏஇ ஸ்டாம்பு அடிச்சு போலாம்ன்னு சொல்லிட்டாங்க.

அவ்வளவுதானா? ஒரு வார்த்தை கூட பேசல. எல்லாமே சைகை பாசை தான். நான் கூட மொழி பேச தெரியாம கஷ்டப்படுவோம்னெல்லாம் நினைச்சுட்டு வந்தேன். எதோ ஸ்மார்ட் கேட்டாமே இப்படிப்போய் அப்படி வந்தாச்சு. இந்த இடத்துல உங்களுக்கு டிஜிட்டல் இந்தியா ஞாபகம் வந்தா, அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.

லக்கேஜ் செக்சனுக்கு வந்தா இவங்க அமெரிக்கனுங்களாட்டம் பொட்டிய தொறக்கச் சொல்லி அராஜகம் எல்லாம் கிடையாது. மசாலாப்பொடியில இருந்து மாவடு வரைக்கும் என்ன வேணா கொண்டு வரலாம். என்ன வேணும்னாலும்ன்னுட்டு போதைப்பொருள எடுத்துட்டு வந்துராதீ்ங்க. அப்புறம் ஆயுசு முழுக்க ஜெயில் தான். ஒரு வழியா எல்லாத்தயும் முடிச்சுட்டு பொட்டிய தூக்கி டிராலில போட்டுட்டு வண்டிய தள்ளிட்டே வெளிய வந்துட்டேன். அந்த ஊரு காத்த அப்படியே கொஞ்சம் நிதானமா ரசிச்சுட்டு (டிசம்பர் மாசம்ங்க கொஞ்சம் இதமா தான் இருந்துச்சு) நடைபாதைய விட்டு இறங்கிப் பார்த்தா நண்பர்கள் ஒரு பூங்கொத்தோட வரவேற்க நின்னுட்டு இருந்தாங்க.

சின்னத்தம்பி படத்துல குஷ்பு மொத மொதலா மண்ணுல கால வெக்கும்போது ஒரு ஹம்மிங் வருமே, “நானானன நானானன நானானன”ன்னு… அதே ஹம்மிங்கோட என்னோட கால் துபாய் மண்ண மிதிச்சிருச்சு. நண்பர்கள் கூட கார்ல ஏறி துபாய் ரோடு, துபாய் வீடுன்னு வேடிக்கை பாத்துட்டே எங்க அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்.

பல நூற்றாண்டு கால வரலாறை பிண்ணணியாக கொண்ட பாரசீக வளைகுடாவின் தெற்கு பகுதில வாழ்ந்த இந்த மக்கள் கடலோடிகளாவும், முத்து வாணிபமும் செஞ்சுட்டு இருந்தாங்க. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்துலயே இஸ்லாம் மதத்தை தழுவ ஆரம்பிச்சுட்டாங்க.
குட்டி குட்டி நிலப்பரப்புகளா மன்னராட்சியில இருந்த இந்த வளைகுடா பகுதிகளுக்கு பதினெட்டாம் நூற்றாண்டுல இந்திய கப்பல் வாணிபத்துல கடற் கொள்ளையர்களால ஆபத்துகள் வர ஆரம்பிச்சது. அடுத்தவனுக்கு பிரச்னைன்னா உடனே ஆஜராகுற பிரிட்டன் சும்மா விடுமா, எல்லா மன்னர்களையும் கூப்பிட்டு ஒரு ஒப்பந்தத்த போட்டு “இவங்களோட யாரும் சண்டை செய்யக்கூடாது”ன்னு பாதுகாப்பு குடுத்துட்டு வந்துச்சு.

சுமார் பத்தொன்பதாம் நூற்றாண்டோட இறுதிப்பகுதிகள்ல (யாரும் சண்டைக்கு வர மாட்டாங்கன்னு நம்புறேன்) அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துச்சு. அதே நேரத்துல தான் இங்கு அதிக அளவில பூமிக்கு அடில எண்ணெய் இருக்குறதயும் கண்டு புடிச்சாங்க. உஷாரான ஷேக்குக எல்லாம் ஒண்ணு கூடி “இந்த விசயம் மட்டும் அமெரிக்காகாரனுக்கு தெரிஞ்சா நம்மள காலி பன்ணிருவான். நாம எல்லாம் கூட்டா சேர்ந்து சுயம்புவா நிக்கலாம்ன்னு”ன்னு முடிவு பண்ணி ஒரு சங்கத்தை அமைக்குறாங்க.

சங்கத்தோட பேச்சுவார்த்தையில குறு நில மன்னர்கள் எல்லாம் ஒண்ணு கூடி அவங்க நிலத்தையெல்லாம் ஒண்ணா சேர்த்து டிசம்பர் 2, 1971 ல “எல்லாரும் கேட்டுக்கோங்க நாங்களும் ஒரு நாடுதான். எங்ககிட்டயும் ராணுவம்லாம் இருக்கு”ன்னு ஒரு அறிவிப்ப போட்டு ஏகாதிபத்திய நாடுககிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க.

சரி நாடுன்னு சொல்லிட்டோமே, நாட்ட முன்னேத்தணும். தொழில பெருக்கணும். வேலை வாய்ப்பு பெருகணும்ல? ஸோ வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க. இங்க மொத்த மக்கள்தொகையே சுமார் ஒரு கோடி தான் இருக்கும். அதுல நம்மதான், அதாங்க இந்தியன்ஸ் முப்பது பர்சண்ட் இருக்கோம்.

வந்தேறிகள் தான் தொண்ணூறு சதத்துக்கும் மேல. கரன்ஸி “திர்ஹாம்”. கேப்பிட்டல் அபுதாபி. இதான் இந்த நாட்டோட எஸ் டி டி அதாங்க ஒரு குட்டி வரலாறு. ரைட் ஹேண்டுல வந்தேறியே வெளியேறுன்னு தமிழ் நாட்டுல கோசம் போட்டுட்டு, லெப்ட் ஹேண்ட்ல துபாய்க்கு ஒரு விசா அப்பிளிக்கேசனும் போடுவொம்ல நாம? சரி நமக்கெதுக்கு அரசியல், வாங்க நாம ஊர சுத்திப்பாக்கலாம்.

இந்த நாட்டுல மொத்தம் ஏழு எமிரேட்ஸ்(Emirates) இருக்கு. அதாங்க நம்மூரு ஸ்டேட்(State) மாதிரி. ஒரு வாடகை கார புடிச்சு ஊர சுத்தினோம்னா, ரெண்டே நாள்ல நாடு முழுக்க சுத்திடலாம். ரொம்ப சின்ன நாடு. இங்க ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ராஜா , மந்திரி, அமைச்சரவைன்னு மன்னர் ஆட்சி தான் நடக்குது. ஊரே பண்டிகைக்கு தொடச்சு வெச்ச வெள்ளி குத்துவிளக்கு மாதிரி பளிச்சுன்னு இருக்கு. சட்டதிட்டங்களும் கடுமையா இருக்கும்ன்னு நமக்கு பிரீ அட்வைஸ் எல்லாம் நிறைய கிடைச்சது. என்னோட அப்பார்ட்மெண்ட் ஒரு பெட்ரூம், கிச்சன் , ஹால், அப்புறம் குட்டியா ஒரு பால்கனி. என்னோட பால்கனியில இருந்து பார்த்தா, விளக்கொளியில ஜொலிக்கும் இரவு நேர நகரம் அழகோ அழகு.


இங்கு வந்த இரண்டொரு நாள்ல இந்த ஊரும் என் வீட்டு சமையல் கட்டும் கொஞ்சம் பழகியாச்சு. ஆமாம் சமைக்கத்தெரியாத எனக்கு கிச்சன் பக்கம் போறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. “என் சமயலறைத் துயரங்கள்”ன்னு ஒரு தனி எபிசோட்ல என் துயங்களை சொல்றேன்.

தினந்தோறும் என் பால்கனிக்கு விசிட் அடிக்குற புறாவோட சேர்ந்து காலை காபிய குடிச்சுட்டே ஒரு சின்ன அரட்டை, பால் பாக்கெட் வாங்கணும்னா கூட பக்கத்துல இருக்குற சூப்பர் மார்கெட்டுக்கு ஒரு நடைன்னு ஒரு பத்து நாள் “எல்லாம் சுகமே, இனி எல்லாம் சுகமே”ன்னு கழிஞ்சது. அதுக்கு அப்புறம் அட இவ்வளவுதானா வெளி நாட்டுவாழ்க்கைன்னு தோண ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு தான் பல நாள் தூங்காம கனவெல்லாம் கண்டோமான்னு நினைச்சு மனசு சுருண்டு போய் பெட்ல விழுந்து பொங்கிப்பொங்கி அழற நிலைக்கு தள்ளப்பட்டேன்.

துபாய்ல பறக்குற ரயிலு, பெரிய பெரிய மச்சு வீடு எல்லாம் இருக்கும்ன்னு நம்ம கோவை சரளா அக்கா மாதிரி நினைச்சுட்டு வந்தா இந்தாளு ஒண்ணுத்தையும் காட்ட மாட்டேங்குறாரேன்னு நினைச்சுட்டு இருந்த அந்த நொடி காதுல தேன் போல போன் வழியா ஒரு செய்தி வந்துச்சு. அது என்னன்னா இந்த வார விடுமுறைக்கு துபாய் போய் சுத்தி பாக்கலாம்ன்னு சொன்னார் என் கணவர். நான் இருக்குற இடத்துல இருந்து ஒரு முக்கா மணி நேரத்துல துபாய் போயிடலாம். வரப்போற விடுமுறைக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி

படைப்பு:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.