‘ஆமாஞ்சாமி’ என்கிற தலைப்பில் எழுத நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், பெரும் தயக்கம். மனிதன் உருவாக்கிய கடவுளை வைத்து எந்த விதமான கசப்புணர்வும் உருவாவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் இந்தக் கேள்விகள் மனதில் அவ்வப்போது எழுகின்றன.

எங்கள் ஊர் திருவிழாக்களில் கவனித்திருக்கிறேன். அடிக்கடி ஏன் இப்படி என்று யோசித்திருக்கிறேன். எங்கள் ஊரில் மாகாளி அம்மான் கோயில் சாட்டி விட்டால் போதும். பெண்களைக் கையில் பிடிக்க முடியாது. அதாவது மூச்சு முட்டும் அளவுக்குச் வேலைகள் இருக்கும். வீட்டை மொழுகுவதில் இருந்து, போர்வையைச் சுத்தம் செய்வது, உணவு பண்டங்கள் செய்வது, மாவிளக்கு தயார் செய்வது, பொங்கல் வைப்பது, பூக்கட்டுவது, கோயில் தூய்மை இப்படி அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். செய்தே ஆக வேண்டும்.

ஆண்கள் கோயிலில் நடக்கும் கூட்டத்துக்குச் செல்வது போன்று பெரிய முடிவுகளை எடுப்பார்கள். கோயிலில் சாமி கும்பிட நிற்கும் போது பெண்கள் எப்போதும் இடது பக்கத்தில் நிறுத்தப்படுவர். ஆண்கள் வலது பக்கத்தில் நிறுத்தபடுவர். பூசாரிகள் பிரசாதம் கொடுக்கும் போது முதலில் கொடுப்பது ஆண்களுக்குத்தான். அது மட்டுமின்றி ஏன் எப்போதும் பெண்கள் இடது பக்கத்தில் நிற்க வேண்டும்? வலது பக்கம் நின்றால் பூமி சம நிலை தவறி விடுமா?

எப்போது பெண்களுக்கு முதலில் கிடைக்கும் என்றால், மாவிளக்கு பூசையின் போது மட்டும். ஏனென்றால் அதில் இருப்பது அனைவரும் பெண்களே.

இன்னொரு ஊரில் விநாயகர் கோயில் முன்பு பெண்கள் மாவிளக்கை வைத்துப் பூசை செய்துவிட்டு, அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அந்த மாவிளக்கு எடுத்துச் சென்ற பெண்களில் நானும் ஒருத்தி. ஆண்கள் முழுக்க முந்தி அடித்துக்கொண்டு கோயிலுக்குள் நின்றனர். பெண்கள் மாவிளக்கை வெளிப்பந்தலில் வைத்துக் கொண்டு வெளியில் நின்றனர். அதில் நானும் ஒருத்தி.

எனக்கு இதெல்லாம் ஒவ்வொரு தடவையும் உறுத்துகிறது. கடவுளை முன் வரிசையில் நின்று தரிசிக்கக்கூட உரிமை இல்லையா? (என் உயரத்திற்கு எப்படி எட்டிப் பார்த்தாலும் நிச்சயம் கூட்டத்தில் இறை தரிசனம் கிடைக்காது.) ஆண்கள் முன் வரிசையில் நின்றால் அதைத் தாண்டி எந்தப் பெண்ணும் உள்ளே செல்ல மாட்டார்கள்.

பூப்படைவதற்கு முன்பு கடவுள் சன்னதிக்குள் அனுமதி உண்டு. பூப்படைந்து விட்டால் கடவுள் சன்னதிக்குள் அனுமதி மறுக்கப்படும். மூன்றெழுத்தில் தீட்டு என முடித்து விடுவார்கள். கோயிலில் சில இடங்களில் பெண் ஓதுவார்களைப் பார்க்க முடிகிறது.

பெண்களை சாமி, கடவுள் என்பவர்களே, திருநீறு கொடுப்பதில்கூட இரண்டாம்பட்சம்தான்.

இனி அடுத்த விஷயத்திற்கு வருவோம். திருவாதிரை நோன்பு. மாங்கல்ய நோன்பு. நாள் முழுக்கப் பெண்கள் கணவனின் நலன் வேண்டி பட்டினி கிடந்து கடவுளை வேண்ட வேண்டும். ஒரு கணவனாவது மனைவிக்காகப் பட்டினி கிடந்து இதுவரை பார்த்ததில்லை. இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், பெரும்பாலான விரதங்களை மேற்கொள்பவர்கள் பெண்களாத்தான் இருப்பார்கள். அதிலும் நம் தொலைக்காட்சி தொடர்களில் மண் தரையில் சாப்பிடுவது என்ன? தீக்குண்டத்தில் நடப்பது என்ன?

அடுத்த கேள்வி. ஜாதகம் என ஒன்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் ஜாதகம் எழுதப்படும். பெண் குழந்தைக்கு வெறும் குறிப்பு மட்டுமே. அது மட்டுமின்றி ஆணின் ஜாதகம்தான் செல்லும். பெண்களின் ஜாதகம் அவ்வளவாகப் பேசாது. இதிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

கோயிலுக்குள் கீழ் சாதிக்காரர்கள் நுழையலாம் என்று போராட்டம் நடத்தியவர்கள்கூட பெரும்பாலும் பெண்களுக்கு நடக்கும் இந்த விஷயங்களைக் கவனிப்பது இல்லை.

இவை எல்லாம் கேள்விகளே. இதற்காக நான் கோயிலில் சென்று சண்டை எல்லாம் போடப் போவது கிடையாது. எனக்கு அனைத்துக் கடவுளும் ஒன்றே. எனக்கு மனிதன் முதன் முதலில் தெய்வமாக வணங்கிய இயற்கையே கடவுள். இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன். என் குல தெய்வம் ஓர் ஆண் கடவுள். அப்படி என்றால் நான் ஆண் வழி சமூகத்தைச் சார்ந்தவள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் பெண் கடவுளையே தமிழ்நாட்டில் குல தெய்வமாகக் கொண்டிருப்பர். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு கடவுளை வழிபட முன்னுரிமை என்றாவது கொடுத்து இருக்கிறீர்களா?

எதற்கெடுத்தாலும் ஆமாஞ்சாமி போடாமல் பெண்களே, உங்களைச் சுற்றி இருக்கும் இந்தச் சிறிய சிறிய விஷயங்களை யோசித்து பாருங்கள். இந்த சிறிய விஷயங்களில் இருந்து மாறினால் மட்டுமே பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

பி.கு: இது யாருடைய மத, சாதி உணர்வைப் புண்படுத்த அல்ல. இந்தியத் திருநாட்டில் எந்தக் கடவுளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். கடவுளின் சன்னிதியில் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பது மட்டும்தான் என் கேள்வி.

(தொடரும்)

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.