இந்தக் கட்டுரை People’s Archive of Rural India (PARI) இணையதளத்திலிருந்து சிறப்பு அனுமதி பெற்று, Her Stories இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆக்கம்: PARI
“என்னுடைய வாழ்க்கைக் கதையை உங்களிடம் நம்பி சொல்லலாமா?”
நேரடியாக உங்களை தாக்கும் சவால் மிகுந்த கேள்வி இது. கேள்வி கேட்டவருக்கு கேள்விக்கான நியாயமான காரணங்கள் இருந்தன. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வார்த்தைகளில் சொல்வதெனில், “காசநோய் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.”
அவருக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. மகனுக்கு நான்கு மாதமாக இருந்தபோது காசநோய் தொற்றியது. “மே 2020ல் தொற்று வந்தது. அதற்கு முன் ஒரு மாதமாகவே அறிகுறிகள் (தீவிர இருமல் மற்றும் காய்ச்சல்) இருந்தன.” வழக்கமான பரிசோதனைகள் எல்லாமும் தோல்வியுற்றபின், மருத்துவர்கள் காசநோய்க்கான பரிசோதனை எடுக்கக் கூறினர். “காசநோய் உறுதியானதும் நான் உடைந்துவிட்டேன். எனக்கு தெரிந்த யாருக்கும் அது நடக்கவில்லை. எனக்கு தொற்று வருமென நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
27 வயது ஜனனியிடம் அதுவரை அன்பாக இருந்த கணவர், தனக்கும் பரவக்கூடிய நோயை பெற்றதற்காக அவருடன் தொடர்ந்து சண்டை போடத் தொடங்கினார். “என்னை வார்த்தையாலும் உடல்ரீதியாகவும் தாக்குவார். நாங்கள் மணம் முடித்துக் கொண்ட ஒரு வருடத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக அவரின் தாய் இறந்துவிட்டார். ஆனால் அவரின் மறைவுக்கும் நானே காரணம் என கணவர் சொல்லத் தொடங்கினார்.”
அச்சமயத்தில் தீவிர ஆபத்தில் இருந்த ஒரே நபர் யாரென்றால் ஜனனி மட்டும்தான்.
இந்தியாவின் தொற்றுநோய்களிலேயே காசநோய்தான் பெருமளவுக்கு மரணங்களை ஏற்படுத்தும் நோயாக இருக்கிறது.
கோவிட் 19 பிரதானப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு, உலக சுகாதார நிறுவனத்தின் தரவுப்படி 2019ம் ஆண்டில் காசநோய் 26 லட்சம் இந்தியர்களை பாதித்திருந்தது. நான்கரை லட்சம் பேரை பலி கொண்டிருந்தது. உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எண்ணிக்கையை இந்திய அரசு கடுமையாக ஆட்சேபித்து, அந்த வருடத்தில் காசநோயால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,000 -தான் என வாதிட்டது. கடந்த 15 மாதங்களில் கோவிட்-19 தொற்று 250000 பேரின் உயிரை குடித்திருக்கிறது.
2019ம் ஆண்டில் உலகம் முழுக்க இருந்த 1 கோடி காசநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையில் கால்பங்கு எண்ணிக்கையை இந்தியா கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது. “சர்வதேச அளவில் 1 கோடி பேர் 2019ம் ஆண்டில் காசநோய் பாதிப்புக்குள்ளாகினர். இந்த எண்ணிக்கை சமீப வருடங்களில் குறைந்து கொண்டு வருகிறது.” உலக அளவில் நிகழும் 14 லட்சம் காசநோய் மரணங்களிலும் கால் பங்கு இந்தியாவில் நேர்கிறது.
உலக சுகாதார நிறுவனம் காசநோயின் தன்மையை “பாக்டீரியாவால் (மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்) உருவாகும் நோய் வழக்கமாக நுரையீரலை பாதிக்கும். காசநோய் ஒருவரிடம் மற்றவருக்கு காற்றில் பரவும். காசநோய் பாதித்த நுரையீரல் கொண்டவர்கள் தும்மினாலோ இருமினாலோ துப்பினாலோ அவர்கள் காசநோய் கிருமிகளை காற்றில் பரப்புகிறார்கள். இக்கிருமிகளில் மிகக் குறைவானவற்றை சுவாசித்தாலே போதும். காசநோய் தொற்றிவிடும். உலக மக்கள்தொகையின் நான்கில் ஒரு பங்கு காசநோய் தொற்றை கொண்டிருக்கின்றனர். இதன் அர்த்தம் அவர்களை காசநோய் பாக்டீரியா தொற்றியிருந்தாலும் முழுமையாக நோய்க்குள்ளாகாமலும் நோயை பரப்பாத நிலையிலும் இருக்கிறார்கள் என்பதே,” எனக் குறிப்பிடுகிறது.
மேலும் “காசநோய் ஏழ்மை மற்றும் பொருளாதார துன்பத்தில் வரும் நோய்” என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. தொடர்ந்து, “காசநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக பாதிப்பையும் புறக்கணிப்பையும் களங்கத்தையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கிறார்கள்…” என்றும் குறிப்பிடுகிறது.
எந்தளவுக்கு அது உண்மை என ஜனனிக்கு தெரியும். அறிவியல் முதுகலை, ஆசிரியப்பணி இளங்கலை போன்ற அதிகமான கல்வித்தகுதிகள் கொண்டிருந்தவராக ஜனனி இருந்தபோதும் அவருக்கும் இத்தகைய பாதிப்பு, களங்கம், ஒடுக்குமுறை முதலானவை ஏற்படுத்தப்பட்டன. அவரின் தந்தை, கிடைக்கும் வேலையை செய்யும் ஒரு தொழிலாளி. தாய் வேலைக்கு செல்லவில்லை.
நோய் வந்த காலத்திலும் அதிலிருந்து குணமான பிறகும் “காசநோய் போராளி” மற்றும் ‘காசநோய் பெண் தலைவர்’ என்ற பெயர்களை அவர் பெற்றார். காசநோயை சுற்றியிருக்கும் களங்கத்தையும் பார்வைகளையும் தொடர்ந்து எதிர்கொண்டு கையாண்டார்.
காசநோய் தொற்றிய ஒரு மாதத்துக்குள் ஜூன் 2020ல் ஜனனி அவரின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். “என்னுடைய கணவரின் கொடுமைகளை அதற்கு மேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய நான்கு மாத குழந்தையையும் அவர் கொடுமைப்படுத்துகிறார். அவன் என்ன பாவம் செய்தான்?” சிறு கடை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கணவர் உடனே விவாகரத்து வழக்கு தொடுத்திருக்கிறார். ஜனனியின் பெற்றோர் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி” அடைந்ததாக கூறுகிறார் ஜனனி.
ஆனாலும் அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டார்கள். “ஒரு குழந்தையாக, இளம்பெண்ணாக அவர்கள் என்னை விவசாய வேலைக்கு அனுப்பவில்லை. எங்களில் உலகத்தில் இது வழக்கமானதுதான். அவர்களின் குழந்தைகள் அனைவரும் நன்றாக படிப்பதை உறுதிசெய்தார்கள்,” என்கிறார் அவர். ஒரு சகோதரனையும் சகோதரியையும் கொண்டவர் ஜனனி. இருவருமே முதுகலை பட்டதாரிகள். கணவரை பிரிந்தபிறகுதான் ஜனனி வேலைக்கு செல்லத் துவங்கினார்.
டிசம்பர் 2020ல் காசநோய் முழுவதுமாக குணமானது. அவருக்கு இருந்த கல்வித்தகுதிக்கு வேறு வேலைகள் எதற்கும் அவர் முயலவில்லை. அதற்கு பதிலாக இருபது ஆண்டுகளாக தமிழகத்தில் காசநோய் ஒழிக்க இயங்கிவரும் REACH என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். அப்போதிலிருந்து ஜனனி அவரின் கிராமத்திலும் சுற்றியிருக்கும் கிராமத்திலும் இருக்கும் மக்களை சந்தித்து காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தொடக்கத்திலேயே காசநோயை கண்டறியும் வழிகளையும் சொல்லிக் கொடுக்கிறார். “பல கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். மூன்று நோயாளிகளிடம் காசநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்திருக்கிறேன். காசநோய் இல்லை என பரிசோதனை முடிவு வந்தும் அறிகுறிகள் இருக்கும் 150 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.”
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி: “காசநோய் குணமாக்கப்படக் கூடிய, தடுக்கப்படக் கூடிய நோயாகும். காசநோய் பாதிப்பு கொண்ட மக்களில் 85% பேரை 6 மாத தொடர் மருந்துகளின் மூலம் வெற்றிகரமாக குணப்படுத்திவிடலாம். 2000த்திலிருந்து காசநோய் சிகிச்சையால் 6 கோடி மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சுகாதார வளையம் (UHC) இன்னும் முழுமையடையாததால் பலருக்கு உடனடி மருத்துவம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. கோடிக்கணக்கானோர் இன்னும் சிகிச்சையும் பராமரிப்பும் பெற முடியாத இடத்திலேயே இருக்கின்றனர்.”
”கோவிட்டும் ஊரடங்கும் இருக்கும் சூழலில் இது மிகப் பெரும் சவால்தான்” என்கிறார் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 36 வயது பி.தேவி. ஜனனியை போல இவரும் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ‘காசநோய் போராளி’யாக மாறியவர். “ஏழாம் வகுப்பு படித்தபோது எனக்கு காசநோய் வந்தது. அதற்கு முன் அந்த வார்த்தையை கூட நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.” போராட்டங்களை சமாளித்து 12ம் வகுப்பு வரை படித்து முடித்தார்.
அவருடைய பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவர் குணமாகவில்லை. “பிறகு நாங்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு எனக்கு பலவித பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இப்போது யோசித்து பார்த்தால், அந்த சிகிச்சையில் எதுவும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கவில்லை. அந்த அனுபவத்தை, நான் சந்திப்பவர்களிடம் மாற்ற வேண்டுமென விரும்பினேன்,” என்கிறார் தேவி.
தென்காசி மாவட்டத்தின் வீரக்கேரளம்புதூர் தாலுகாவை சேர்ந்தவர் தேவி. அவரின் பெற்றோர் விவசாயக்கூலிகளாக இருக்கின்றனர். வறுமையில் இருந்தாலும் அவர்களும் உறவினர்களும் காசநோய் வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறுகிறார். அவருக்கான சிகிச்சையை தொடர்ந்து கிடைக்க ஏதுவாக அவர்கள் இருந்தார்கள். “என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள்,” என்கிறார் அவர்.
தேவியின் கணவரும் உதவுபவராகவும் நம்பிக்கையூட்டுபவராகவும் இருந்திருக்கிறார். அவர்தான் தேவிக்கான வேலைக்கான வழியை யோசித்தவர். அவரும் ஜனனி போலவே அதே தொண்டு நிறுவனத்தில் காசநோய் எதிர்ப்பு பிரசாரத்தில் இணைந்து பயிற்சி பெற்று வேலை பார்க்கத் தொடங்கினார். செப்டம்பர் 2020லிருந்து தேவி 12 கூட்டங்களுக்கும் மேல் (சராசரியாக 20க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்ற கூட்டங்கள்) நடத்தி காசநோய் பற்றி பேசியிருக்கிறார்.
“பயிற்சி எடுத்தபோதுதான் நான் காச நோயாளிகளை கையாளப் போகிறேனென தெரிந்து கொண்டேன். உண்மையாக மிகவும் சந்தோஷமடைந்தேன். எனக்கு மறுக்கப்பட்ட நேர்மறையான விஷயத்தை நான் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது,” என்கிறார் அவர். தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி பொது மருத்துவமனையில் தேவி தற்போது 42 காச நோயாளிகளை கவனித்துக் கொள்கிறார். அவர்களில் ஒருவர் முழுவதுமாக குணமாகியிருக்கிறார். “நாங்கள் மனநல ஆலோசனை கொடுத்து நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கிறோம். ஒருவருக்கு காசநோய் தொற்று ஏற்பட்டால் அவரின் குடும்பத்தையும் பரிசோதிக்க முயலுவோம். தடுப்புமுறைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம்.”
தேவியும் ஜனனியும் தற்போது கோவிட் 19 தொற்று உருவாக்கியிருக்கும் சூழலுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலில் இயங்குவது அவர்களுக்கு அதிக ஆபத்தை உருவாக்கவல்லது. ஆனாலும் அவர்கள் செயல்படுகின்றனர். “கடினமாக இருக்கிறது. கோவிட் தொற்று ஏற்படுத்தியிருக்கும் அச்சத்தால் மருத்துவமனை ஊழியர்களே, நெஞ்சு சளி பரிசோதனைகள் எடுக்க வேண்டாம் என எங்களை கூறுகின்றனர். அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நாங்கள் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது,” என்கிறார் தேவி.
கோவிட் 19 தொற்றுநோய் கொண்டு வந்திருக்கும் புதிய ஆபத்துகள் அதிகம். இந்திய ஊடக அறக்கட்டளை குறிப்பிட்ட European Respiratory Journal-ன் ஆய்வின்படி, “கோவிட் 19 பெருந்தொற்றினால் ஏற்படும் சுகாதார இடையூறுகள், தாமத சிகிச்சை முதலியவற்றால் அடுத்த ஐந்து வருடங்களில் வழக்கமான காசநோய் மரணங்களை விட 95000 மரணங்கள் அதிகமாக நிகழும்.” மேலும் காசநோய் பாதிப்புகளை பற்றிய எண்ணிக்கையை குறைத்து பதிவிடுவதும் தொற்று தொடங்கியதிலிருந்து நடப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. நேரடியான தரவுகள் இல்லையெனினும், சில கோவிட் 19 மரணங்கள் காசநோயை இணைநோயாக கொண்டிருந்ததால் நேர்ந்தன என்பதை எவரும் மறுக்கவில்லை.
2020ம் ஆண்டுக்கான இந்திய காசநோய் அறிக்கை யின்படி, அதிக காசநோய் பாதிப்புகளை கொண்ட மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில், 2019ம் ஆண்டில் 110,845 காசநோயாளிகள் இருந்திருக்கின்றனர். 77,815 பேர் ஆண்கள். 33,905 பேர் பெண்கள். மாற்றுப்பாலினத்தவர் 125 பேர்.
ஆனாலும் காசநோய் அடையாளம் காணுவதில் 14ம் இடத்தில்தான் மாநிலம் இருக்கிறது. அதற்கான காரணங்கள் என்னவென கண்டறிய முடியவில்லை என்கிறார் காசநோயை கையாள்வதில் அனுபவம் பெற்ற மருத்துவ செயற்பாட்டாளர் ஒருவர்.
“பரவல் ஒருவேளை குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். கட்டமைப்பிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களிலும் தமிழ்நாடு நல்ல நிலையில் இருக்கிறது. அரசின் பல சுகாதார நடவடிக்கைகள் நல்லவிதமாகவே இருக்கின்றன. அதே நேரம், அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் காரணமாக புரிந்து கொள்ள முடியும். சில மருத்துவமனைகளில் மார்பு எக்ஸ்ரே எடுப்பதே பெரிய வேலை (கோவிட் 19 வந்த பிறகு சிக்கல் இன்னும் அதிகமாகி இருக்கிறது). காசநோய்க்கு தேவையான அடிப்படை பரிசோதனைகள் நாம் வழங்குவதில்லை. தற்போதை பரவலுக்கான ஆய்வு வெளியாகாமல், ஏன் காசநோய் பாதிப்புக்கான பதிவு குறைவாக இருக்கிறதென சொல்ல முடியாது.”
காசநோய் கொண்டவர்களுக்கு அந்நோயை பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் களங்கம் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. “ஆண்களை விட பெண்களுக்கு நோய் தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் களங்கம் பரப்பப்படும் விதம் மட்டும் முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆண்களும் களங்கப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு அது இன்னும் மோசமாக இருக்கிறது,” என்கிறார் REACH அமைப்பின் துணை இயக்குநரான அனுபமா ஸ்ரீநிவாசன்.
ஜனனியும் தேவியும் கூட ஒப்புக் கொள்வார்கள். இந்த வேலைக்கு அவர்கள் வந்ததற்கு அதுவே முக்கிய காரணமாகவும் இருக்கக் கூடும்.
அடுத்ததாக பூங்கோடி கோவிந்தராஜ் இருக்கிறார். பிரசாரத் தலைவராக இருக்கும் வேலூரை சேர்ந்த 30 வயது பெண்ணான அவர், மூன்று முறை காசநோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். “2014 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் காசநோயை பெரிதாக பொருட்படுத்தாமல் மாத்திரைகளை நிறுத்திவிட்டேன்,” என்கிறார் அவர். “2018ம் ஆண்டில் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது என் முதுகுத்தண்டை காசநோய் தாக்கியிருப்பதாக கூறினார்கள். இம்முறை நான் சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்.”
பூங்கொடி 12ம் வகுப்பு வெற்றிகரமாக முடித்து செவிலியர் இளங்கலை படித்துக் கொண்டிருந்தபோது கல்வியை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. “எனக்கு மூன்று குழந்தைகள் 2011, 12 மற்றும் 13ம் ஆண்டுகளில் பிறந்தன. ஆனால் மூன்றுமே பிறந்தவுடன் இறந்துவிட்டன,” என்கிறார் அவர். “உடல்நிலை குறைபாட்டால் செவிலியர் இளங்கல்வியை நிறுத்த வேண்டியிருந்தது.” அவரின் தாய் 2011ம் ஆண்டில் காசநோய் வந்து இறந்தார். அவரின் தந்தை தற்போது ஒரு சலூனில் வேலை பார்க்கிறார். தனியார் நிறுவனத்தில் ஒரு சிறு வேலையிலிருந்த பூங்கொடியின் கணவர், 2018ம் ஆண்டில் பூங்கொடிக்கு காசநோய் வந்ததும் விட்டுச் சென்றுவிட்டார். அப்போதிருந்து பூங்கொடி பெற்றோரின் வீட்டில்தான் வாழ்ந்துவருகிறார்.
குடும்பத்திடம் இருந்த சிறுதுண்டு நிலத்தை விற்று வந்த பணத்தில்தான் அவருக்கான சிகிச்சையையும் கணவர் விட்டுச் சென்ற பிறகான விவாகரத்து வழக்கையும் பார்த்துக் கொண்டதாக பூங்கொடி கூறுகிறார். “என்னுடைய தந்தை என்னை வழிநடத்தி, ஆதரவாக இருக்கிறார். காசநோய் விழிப்புணர்வு அளிப்பவராக நான் செய்யும் வேலை எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது,” என்கிறார் அவர். காசநோயால் பூங்கொடியின் எடை 35 கிலோ குறைந்திருக்கிறது.
“முன்பு 70 கிலோ எடை இருந்தேன். எது எப்படியோ இப்போது நான் காசநோய் எதிர்ப்பு பிரசாரத் தலைவராக இருக்கிறேன். கிட்டத்தட்ட 2500 பேருக்கு காசநோயை எப்படி கையாள வேண்டுமென ஆலோசனை வழங்கியிருக்கிறேன். 80 காசநோய் பாதிப்பு கொண்டோரை தொடர்ந்து கண்காணித்திருக்கிறேன். அதில் 20 பேர் குணமடைந்திருக்கின்றனர்.” இதற்கு முன்பு வேலை எதற்கும் செல்லாத பூங்கொடிக்கு ‘காசநோய் பெண் தலைவர்’ என்ற பெயர், “நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுக்கிறது. பெருமைக்குரிய விஷயத்தை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் கணவர் வாழும் ஊரிலேயே வாழ்ந்துகொண்டு இத்தகைய வேலையை நான் செய்வதை பெரும் சாதனையாக கருதுகிறேன்.”
’சாதிப்போம் வா பெண்ணே’ திட்டம் காசநோயை கண்டறிந்து உதவும் பெண்களை அடையாளம் காட்டுகிறது. REACH அமைப்பால் தொடங்கப்பட்ட திட்டம் வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நான்கு ஊர்கள் செயல்படுத்தப்படுகிறது.
இச்சமூகங்களில் இருக்கும் 400 பெண்கள், சுகாதாரத்துக்காக சென்று பலரை சந்திக்கும் நபர்களாக இத்திட்டத்தின் கீழ் தொலைபேசியின் வழி பயிற்றுவிக்கப்படுகின்றனர். 80 பேர் பூங்கொடியை போல் காசநோய் தலைவர்களாக பயிற்றுவிக்கப்பட்டு பொது சுகாதார மையங்களில் காசநோய் பரிசோதனைகளை நடத்துவார்கள் என்கிறார் அனுபமா ஸ்ரீநிவாசன்.
இருக்கும் சிக்கலின் அளவுடன் ஒப்பிடுகையில் அது குறைவான எண்ணிக்கை போல் தோன்றினாலும் ஜனனி, தேவி, பூங்கொடி போன்ற பெண்களுக்கு அது முக்கியமானது. அவர்கள் சந்திக்கும் ஆயிரக்கணக்கான காசநோயாளிகளுக்கும் முக்கியமானது. அதன் முக்கியத்துவம் மருத்துவத்தையும் கடந்து சமூக மற்றும் பொருளாதார சூழல்களையும் அடைகிறது. அது சென்றடைவோரிடம் உருவாக்கும் நம்பிக்கையும் அளவிட முடியாதது.
“இந்த இடம் மிகவும் ஆறுதலாக இருக்கிறது,” என்கிறார் ஜனனி அவரின் அன்றாட வேலையை குறிப்பிட்டு. REACH அமைப்புக்கு அவர் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு மாதங்கள் கழித்து கணவரும் கணவரின் குடும்பமும் திரும்ப அவரிடம் வந்துவிட்டனர். “தண்டமாக வீட்டில் இருப்பதாக சொல்லி திட்டுபவர் அவர். என் பணத்துக்காக மீண்டும் வந்தாரா என தெரியவில்லை. அல்லது தனிமையில் உழன்று எனது முக்கியத்துவத்தை புரிந்தும் வந்திருக்கலாம். விவாகரத்துக்கு பிறகு நாங்கள் இணைந்திருப்பதில் என் பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம்தான்.”
பெற்றோரின் சந்தோஷத்துக்காக இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் கணவரிடம் ஜனனி சென்றுவிட்டார். “இப்போது வரை அவர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். காசநோய் என் வாழ்க்கையை அழித்துவிட்டதாக நினைத்தேன். யதார்த்தத்தில் அது என் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கியிருக்கிறது. என்னை கொல்லும் அளவுக்கு கொண்டு சென்ற நோயை வென்று அதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வேலையை செய்கிறேன் என நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.”
கட்டுரையாளர்:
கவிதா முரளிதரன்
கவிதா முரளிதரன், பொது சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றிய செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளை வழங்கிய சுயாதீன பத்திரிகையாளர் மானியத்தின் கீழ் அளித்து வருபவர். இந்த கட்டுரையின் எப்பகுதியிலும் தாகூர் குடும்ப அறக்கட்டளை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.
தமிழில்: ராஜசங்கீதன்