அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்து ஹால் கடிகாரத்தில் மணி பார்த்தாள் ரேணுகா.11:15. அப்படியே கழுத்தை வாசற்புறம் திருப்பிப் பார்க்க, திண்ணையில் அமர்ந்து ராமாயிக் கிழவியுடன் தாயகரம் ஆடிக்கொண்டிருந்தாள் வள்ளியம்மாள். வாய் வெற்றிலையையும் ஊர் வம்பையும் மென்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு அவர்கள் அசைய வாய்ப்பே இல்லை. கரும்புக்காட்டில் மருந்தடிக்கும் வேலை நடக்கிறது. வேலுச்சாமியும் மதியம் மூன்று மணிபோல்தான் வருவான். இதுதான் சரியான நேரம். காலையிலேயே சமையல் வேலை முடிந்துவிட்டது. மதியத்திற்கும் அதேதான். மற்ற வேலைகளைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

பெஞ்சின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ஷீட்டுகள், தலையணைகளுக்குக் கீழே இருந்த பழைய ஜமுக்காளத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்புறத்தை ஒட்டியிருந்த அந்த ஸ்டோர் ரூம் போன்ற அறையை அடைந்தாள். மண்வெட்டி, கடப்பாரை, தோட்டத்துக்கு நீர் பாய்ச்சும் சுருட்டி வைக்கப்பட்ட ரப்பர் ட்யூப் என்று என்னென்னவோ கிடந்தன. விளக்குமாற்றை எடுத்து சுத்தமாகக் கூட்டி முடித்து, அறை நடுவில் ஜமுக்காளத்தை விரித்தாள். ஒரு நிமிடம் யோசித்தவள், மாட்டுக்கொட்டகையை நோக்கிச் சென்றாள். அசை போட்டபடி படுத்திருந்த பசுமாட்டின் முன் வைக்கோலையும் கம்பந்தட்டையும் அள்ளிப் போட்டுவிட்டு, சிமெண்ட் தொட்டியை எட்டிப் பார்த்தாள். கழுநீருடன் கலந்த நீர் இருந்தது. கண்மூடி உறக்கத்திலிருந்த கண்ணுக்குட்டியை செல்லமாகத் தடவிவிட்டு ஸ்டோர் ரூமுக்குத் திரும்பினாள்.

விரிப்பின் மீது நின்று கொண்டு கால்களைச் சற்று அகட்டி வைத்து, இரண்டு கைகளையும் தோள்களுக்கு இணையாகப் பக்கவாட்டில் விரித்து நீட்டி, பின் கைகளைத் தலைக்கு மேலே காதுகளை ஒட்டி உயர்த்தியபோது முதுகும் தோளும் வலித்தன.

“முதல்ல வலிக்கும். பழகப் பழக சரியாகிடும். அப்புறம் செய்யாம விட்டீங்கன்னாதான் வலிக்கும்.’’ சம்பந்தியம்மாவின் வார்த்தைகள் ஞாபகம் வந்தன. அவளைவிட நான்கு வயது மூத்தவர். லூசான பேண்ட்டும், நீளமான குர்த்தியும், மென்மையான ஷூவும் அணிந்து கொண்டு, மொட்டை மாடியில் என்ன அழகாக உடம்பை வளைத்து எக்சைஸ் பண்ணுகிறார். அத்தோடு நடைபயிற்சியும்கூட.

“பொதுவா பெண்களுக்கு நாற்பதைத் தாண்டிட்டா, பெரிமெனோபாஸ், அதாவது மாதவிலக்கு நிற்கிறதுக்கு முந்தைய கட்டத்துல உடம்புல பலவிதமான பிரச்னைகளைக் கொண்டு வந்து விட்ரும். அப்ப பெண்களின் உடம்புல ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பிக்கும். அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிலக்குன்னு படுத்தி எடுக்கும். மாதவிலக்கு நின்னதுக்கப்புறம் உடம்புல எக்கச்சக்கமாக வெயிட் போடும். கூடவே போனஸா மூட்டு வலி, மூட்டு எலும்பு தேஞ்சு போறது, இடுப்பு வலின்னு குறி வைச்சு தாக்கும். இந்தத் தொல்லையெல்லாம் ஆம்பளைங்களைவிட நமக்குத்தான் அதிகம். அதனால்தான் பெண்கள் உடற்பயிற்சி செய்யறது ரொம்ப அவசியம்னு சொல்றேன்’’ என்கிற அவரின் வார்த்தைகளைக் கேட்டதும் ‘கெதக்’கென்றது அவளுக்கு. கடந்த ஒரு வருடமாக அவளுக்குமே கண்ட நேரத்தில் தீட்டு வருவதும், இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றுமே இல்லாமல் இருப்பதுமாகத்தானே இருக்கிறது?

ஆனாலும் வெள்ளந்தியாக ‘நான்தான் நாள் பூரா வீட்டுக்கும் மாட்டுக் கொட்டிலுக்கும் அலையறேனே. அதுவே ஒரு உடற்பயிற்சிதானே?’ என்றதும் “அது பத்தாதுங்க ரேணுகா. குனிஞ்சு நிமிந்து நம்மளுடைய உடம்பில் இருக்கிற அத்தனை ஜாயிண்டுகளுக்கும் வேலை தரணும். அதுக்கு எக்சர்சைஸ்தான் ஒரே வழி’’ என்றார். ஒல்லியான உடல்வாகு கொண்டவள்தான். ஆனால், இப்போது ஒரு சுற்று கூடி விட்டாள் போல. ஆறு மாதம் முன்பு தைத்த ரவிக்கைகள்கூட டைட்டாக இருக்கின்றன. நிலைமை இன்னும் மோசமாவதற்குள் விழித்துக்கொள்ள வேண்டும் எனும் முடிவோடுதான் இன்றிலிருந்து ஆரம்பித்துவிட்டாள்.

பத்து நாட்களுக்கு முன் மகள் ப்ரியாவுக்கு காய்ச்சல் என்று ஈரோடு போய் அங்கே மூன்று நாட்கள் தங்கி இருந்தபோதுதான் உடற்பயிற்சி பற்றிய பாடம் கிடைத்தது. மகளிடம் பழைய சுடிதார் ஒன்றைத் தருமாறு கேட்க, அவளோ, ‘’பழசு எதுக்கும்மா? புதுசே வாங்கித் தரேன்’’ என, ஊருக்குக் கிளம்பி வரும்போது லூசான டாப், பட்டியாலா பேண்ட்டையும் ஒரு கவரில் வைத்துத் தந்தாள். யாருக்கும் தெரியாமல் அதை பீரோவில் பதுக்கி வைத்தாள். ‘இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டு குனிஞ்சு நிமிர்றது ரொம்பக் கஷ்டமா இருக்குது. முதல்ல இந்தக் கருமத்தைக் கழட்டி எறிஞ்சிட்டு மக தந்த உடுப்பைப் போட்டுக்கணும்.’

சற்றே தயக்கத்துடன் ‘தொள தொள’ வென்றிருந்த சுடிதார் டாப்பையும் சற்றே லூசான பட்டியாலா பேண்ட்டையும் அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கு வெட்கமாக இருந்தது. ‘’ஹை! இப்பப் பாக்க பிரியாவுக்கு அக்கா மாதிரியில்ல இருக்கேன்! மாநிறத்தில் லேசாக எட்டிப் பார்த்த நரைமுடி தவிர, முகத்தில் சுருக்கம் இன்னும் அவ்வளவாக வரவில்லை. உடம்பை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்துக்கொண்டாள். இதுவரை நைட்டிகூட அணிந்ததில்லை. வெயில்கால இரவுகளில் மூச்சு முட்ட அழுத்திப் பிடிக்கும் பிளவுஸுடனே தூங்கித் தொலைக்க வேண்டும். ‘இரவில் மட்டும் நைட்டி அணிந்து கொள்ளவா?’ எனக் கேட்டதற்கு வேலுச்சாமி அடிக்க வந்துவிட்டான். பத்தாததற்கு மாமியாரிடம் அவன் வத்தி வைத்துவிட, இரண்டு நாட்களுக்கு அவளைத் திட்டித் தீர்த்தார்.

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“நான் பாட்டியாகிவிட்டேன்தான். ஆனால், வயது என்னவோ நாப்பத்தியேழுதானே ஆகிறது? சம்மந்தி அம்மா நைட்டி போட்டா தப்பில்லை. ஏன்னா அவங்க படிச்சவங்க, நானும் எட்டாப்பு வரை படிச்சிட்டு அஞ்சாப்பு படிச்ச காட்டானுக்கு வாக்கப்பட்டு, இந்தப் பட்டிக்காட்டில வந்து அல்லாடறேன்’’ என மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

பொதுவாக மாமியாரிடம் வார்த்தைக்கு வார்த்தை வாயாடுவது ரேணுவின் வழக்கமில்லை. அது பயத்தினால் அல்ல, பக்குவத்தால் விளைந்த பழக்கம். அம்மா, மகன் இருவருமே முரட்டுப் பிடிவாதக்காரர்கள். தாங்கள் சொல்வதை எதிராளி ஆமோதிக்கும் வரை விடாமல் வார்த்தையை வளர்த்துபவர்கள். திருமணமான சில மாதங்களிலேயே அவளுக்கு இது புரிந்துவிட்டதால் பெரும்பாலும் மௌனத்தையே ஆயுதமாகக் கொண்டாள். ‘’ஆனாலும் ரொம்ப அழுத்தக்காரிடா உன் பொண்டாட்டி. வாயை இறுக்கி மூடிக்கிட்டு என்னமா சாதிக்கிறா பாரு?’’ என வள்ளியம்மாள் சொல்லும்போதெல்லாம் தனக்குள்ளே சிரித்துக்கொள்வாள் ரேணு.

இப்போது இந்த உடையில் தன்னைப் பார்த்தால், விறகுக்கட்டையைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவாள். வள்ளியம்மாள் தன் பருமனான உடலைத் தூக்கிக்கொண்டு அத்தனை சாதாரணமாக இருக்கும் இடம்விட்டு அசைபவளல்ல. அதிலும் ஊர்க்கதை பேச ராமாயி மாதிரி ஆள் கிடைத்தால், மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாள். பக்கத்திலேயே வெற்றிலைப் பெட்டி, எச்சில் துப்ப பித்தளைப் பணிக்கம், பேசிப்பேசி தொண்டை வறண்டு போனால் குடிக்கத் தண்ணீர் சொம்பு, அவ்வப்போது கடித்துக்கொள்ள எவர்சில்வர் டப்பாவில் முறுக்கோ ராகிப் பக்கோடாவோ கிடக்கும். திண்ணையை ஒட்டியே இடதுபுற சந்தில் இயற்கை உபாதையைத் தணித்துக்கொள்ள சிறிய பாத்ரூம் உண்டு. அவள் கொல்லைப்புறம் வருவதெல்லாம் அரிது. குளிக்க மட்டுமே அங்குள்ள வெந்நீர் அண்டா பதித்த பெரிய குளியலறைக்குச் செல்வாள். அதனால்தான் ரேணுகா பின்கட்டில் இருக்கிற ஸ்டோர் ரூமை உடற்பயிற்சி செய்யத் தேர்ந்தெடுத்தாள்.

சம்பந்தி சொல்லித் தந்திருந்த ஏழெட்டு வகை பயிற்சிகளை செய்து முடிக்க இருபது நிமிடங்கள் ஆனது. அதன் பின் உடை மாற்றிக்கொண்டு வீட்டு வேலைகளைத் தொடர்ந்தாள். ஏதோ சாதித்துவிட்ட உணர்வில் மனம் குதூகலித்தது. அன்று இரவு ப்ரியாவிடம் ரகசியக் குரலில் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டாள். “பாவம்மா நீ, என்னவோ தப்புப் பண்ணற மாதிரி திருட்டுத்தனமா எக்ஸசைஸ் பண்ண வேண்டியிருக்கு. அப்பாவும் பாட்டியும் எப்பத்தான் மாறப் போறாங்களோ?’’ என்று வருத்தப்பட்டவளிடம், “அவிங்க மாறாட்டிப் போறாங்க கண்ணு, நம்ம மாறிக்க வேண்டியதுதான்’’ என்றாள் இலகுவாக.

தினமும் பதினோரு மணி அளவில் தன் உடற்பயிற்சிகளை ரகசியமாகத் தொடர்ந்த ரேணு ஒரு வாரத்திற்குப் பிறகான ஒரு சனிக்கிழமையில் வசமாகக் கணவனிடம் மாட்டினாள். உரம் வாங்கக் கிளம்பியவன் பாதி வழியில் பணம் எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்து பைக்கைத் திருப்பிக் கொண்டு வந்து, பின்வாசலில் நிறுத்திவிட்டு திடுதிப்பென்று கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்தான்.

மல்லாக்கப் படுத்து உயரத் தூக்கிய கால்களைக் கீழே இறக்கிய போது, எதிரே அனல் கக்கும் பார்வையுடன் நின்றிருந்தான் வேலுச்சாமி. “என்னடி இது கோலம்? என்ன கூத்து பண்ணிக்கிட்டு இருக்க?’’ என்று வார்த்தைகளைத் துப்பினான்.

“எக்சைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.’’

“எக்சைஸ் பண்றியா? ஏன் சினிமால நடிக்கப் போறியா? டான்ஸ்க்காரி கணக்கா உடுப்பும் கையை காலத் தூக்கி எக்சைஸ் பண்ற லச்சணமும் சகிக்கல. குடும்பப் பொம்பளைக்கு அடுக்குமாடி இது?’’ என உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான். சத்தம் கேட்டு திண்ணையில் படுத்திருந்த வள்ளியம்மா மெல்ல நடந்து உள்ளறைக்கு வந்தாள்.

“இதப் பாருங்க, நான் ஒண்ணும் வேலை வெட்டியில்லாம இதைப் பண்ணல. பொம்பளைங்களுக்கு உடம்புல எத்தனையோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டிருக்க முடியுமா? உடற்பயிற்சி பண்றது பெண்களுக்கு ரொம்ப அவசியம். முதல்ல அதைப் புரிஞ்சுக்கோங்க. இல்லாட்டிப் போனா உடம்பு ஜாயிண்டுல அங்கங்க கழண்டு போயிடும். இதோ, அறுபது வயசு தாண்டினதும் அத்தை மாதிரி காலை அகட்டி, அகட்டி முட்டியப் புடிச்சுக்கிட்டு நடக்க வேண்டியதுதான். கடைசியில முட்டி தேஞ்சு போச்சுன்னு ஆப்ரேசன் பண்ணச் சொல்லுவாங்க’’ என மாமியாரைச் சுட்டிக்காட்டி சொல்ல, வாயடைத்துப் போனார் வள்ளியம்மாள். மருமகளின் புதிய உடைக் கோலத்தையே ஜீரணிக்க முடியாமல் நின்றிருந்தவரால், இதைக் கேட்டதும் பேச்சே எழும்பவில்லை.

“மக வீட்டுக்குப் போயிட்டு வந்ததில இருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்குற. உன்னை வந்து பேசிக்கறேன்’’ என்று கடுப்புடன் முணுமுணுத்துவிட்டுச் சென்றான் வேலு. ரேணு விருட்டென திரும்பி படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள். உடை மாற்றி வெளியே வந்தவள் மாமியாரின் வாயிலிருந்து கொட்டப் போகும் வசவு மழைக்கு காத்திருக்க, ஒரு சிறு தூறல்கூட எழும்பவில்லை என்பது நம்ப முடியாத ஆச்சரியம். ‘நேற்றிலிருந்து கிழவி எதையோ பறிகொடுத்தது போலத்தான் இருக்குது. ஒருவேளை வழக்கமாக வந்து வம்பளக்கும் தோழி ராமாயியைக் காணாத விசனமோ என்னமோ?’ என நினைத்துக்கொண்டாள். அடுத்து வந்த மூன்று நாட்களுமே கிழவி சுருண்டு சுருண்டு திண்ணையில் படுத்துக்கொண்டது. அன்று மாலை அரிசி உளுந்து கழுவிய கழுநீர்த் தண்ணியை வாளியில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்த பக்கத்துத் தெரு மல்லிகா மூலம்தான் தெரியவந்தது விஷயம். அவள் ராமாயியின் பக்கத்து வீட்டுக்காரி.

ராமாயியின் மருமகள் பத்மாவிற்குக் கர்ப்பப்பையை ஆபரேஷன் பண்ணி எடுத்துவிட்டார்களாம். இரண்டு வருடங்களாகவே அதீத ரத்தப்போக்கில் அவதிப்பட்டவள் கடைசியாகத் தாளவே முடியாமல் அறுவைக்கு ஒத்துக்கொண்டாளாம். ஒருமாதம் வரை குனிந்து நிமிர்ந்து எந்த வேலையும் செய்யக் கூடாது. முழு பெட் ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என டாக்டர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். ராமாயிக் கிழவி ஒற்றை ஆளாகப் படுக்கையில் கிடக்கும் மருமகளைக் கவனித்து, மகனுக்கும் பள்ளிக்குச் செல்லும் பேரனுக்கும் சோறாக்கி, தோட்டம், துறவு பார்த்து அல்லல்படுகிறாராம். பட்டிக்காட்டில் உதவிக்கெல்லாம் ஆள் கிடைக்காது. அதனால் ஏற்கெனவே கண்புரையில் பாதிப் பார்வை தெரிய, மூட்டு வலி இடுப்பு வலி தொந்தரவுகளும் சேர்ந்துகொள்ள, வீட்டு வேலை செய்து முடிப்பதற்குள் திண்டாடுகிறார் என்று விளக்கமாகச் சொல்லி முடித்தாள் மல்லிகா. போனஸாக ‘உன் மாமியார்கூட நாலு நாளைக்கு முன்ன ராமாயி வீட்டுக்கு வந்துருந்தது’’ என்றாள்.

என்றும் இல்லாத வழக்கமாக அன்று கொலைப்புற தொட்டியில் கிடந்த நாலைந்து பாத்திரங்களைத் துலக்கி வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்து, ‘வெங்காயம் தொளிச்சு, காயறிஞ்சு தாரேன்’ என வந்து நின்ற மாமியாரைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் ரேணு. மணமான புதிதில், “மருமகன்னு ஒருத்தி வீட்டுக்குள்ளார நுழைஞ்சுட்டா அவ கையில கரண்டியைக் கொடுத்துட்டு ஒதுங்கி இருக்கணும்’’ என்று அவளின் ஆரம்பகால வசனம் ஏனோ ஞாபகம் வந்தது.

மாலை நான்கு மணிக்கு டீயுடன் பதமாக வேக வைத்து, சின்ன வெங்காயம், சீரகம் போட்டுத் தாளித்த பாசிப்பயிரை இரண்டு தட்டுகளில் வைத்து கணவனுக்கும் மாமியாருக்கும் நீட்டிய ரேணு, “அத்த, உங்களுக்கு சுகர் இருக்குல்ல, அதனால வெள்ளைச் சோத்தைக் குறைச்சுக்கிட்டு காய்கறி, பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடணுமாம். அப்பதான் சுகர் கட்டுப்பாட்டில் இருக்குமாம். ஏங்க, நீங்களும்தான், அம்மாவுக்குச் சர்க்கரை இருந்தா மகனுக்கும் வரும்னு சொல்றாங்க. இப்பப் புடிச்சு சாப்பாட்டில் கண்ட்ரோலா இருந்து பழகுங்க’’ என்றதும் முறைத்தான் அவன்.

“அவ சொல்றது சரிதாண்டா வேலு. காலத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறிக்கறதுதான் சரி. அந்தக் காலம் மாதிரி இப்ப இல்ல. காய்கறி, அரிசின்னு எல்லாத்துலயும் மருந்து. சின்ன வயசுலயே எல்லா வியாதியும் வந்துடுது’’ என்றாள் வள்ளியம்மாள்.

காலி டீ டம்ளர்களுடன் உள்ளே சென்று கொண்டிருந்தவளின் காதுகளில், “டேய், அவ இஷ்டத்துக்கு பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு எக்ஸைசோ என்னவோ பண்ணிட்டுப் போறா. நீ ஒண்ணுஞ் சொல்லாதே. அப்புறம், டவுன் பக்கம் போனா ரேணுவுக்கு நாலு நைட்டி எடுத்தாந்து குடு. ஊர்க்காரவங்களுக்கு என்ன வேலை? எதையாவது பேசிக்கிட்டுத் திரிவாங்க. நோய், நொடின்னு வந்து படுத்துக்கிட்டா எல்லாருக்கும் சிரமம் தானே?’’ என்று கடைசி வரிகளில் தொனித்தது கனிவா அக்கறையா, எச்சரிக்கை உணர்வா, அல்லது பயமா? அவை தன்னைக் குறித்துச் சொல்லப்பட்டவையா அல்லது அவளைக் குறித்தா என்று தெரியவில்லை. ரேணுவிற்கு சிரிக்க வேண்டும் போலிருந்தது.

படைப்பாளர்:

விஜி ரவி.பத்தாண்டுகள் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். புத்தகங்களின் காதலி. இணைய இதழ்களில் பதினைந்து நூல் விமர்சனங்கள் எழுதியுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட குறுங்கட்டுரைகளும், முப்பது குறுங்கதைகளும் தினமலர் – பெண்கள் மலர், மங்கையர்மலர், கல்கி, தங்கமங்கை, குமுதம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். சில சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார்.