ஆண்டு: 1960, ஜூலை 20. மேற்கத்திய நாடுகள் எல்லாம் விழுந்து விழுந்து பெண்ணியம் பேசிக்கொண்டிருக்க, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் பிரதமர்’ என்ற பெருமையுடன், பெண் தலைமையை ஏற்றுக்கொண்டு சப்தமில்லாமல், உலகப் பெண்கள் வரலாற்றில் தங்கள் நாட்டின் பெயரைப் பதித்துக்கொண்டது அந்தக் குட்டி தேசம். இது ஒன்றும் இலங்கைப் பெண்களுக்குப் புதிதல்ல, ஏனெனில் இலங்கையின் வரலாறு நெடுக, அரசியலிலும் ஆயுத யுத்தங்களிலும் பெண்கள் பங்கு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. தங்கள் இருப்பை மிக அழுத்தமாக வீட்டிலும் சமூகத்திலும் பதிவுசெய்யத் தவறுவதில்லை ஒவ்வொரு சாமானியப் பெண்ணும்.

பெண்களுக்குச் சாதகமான நாடாகவே எப்போதும் இருந்திருக்கிறது இலங்கை. 1975இல் சர்வதேச பெண்கள் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் தசாப்தம்’ (United Nations decade for women from 1976 to 1985) ஓர் இயக்கமாக உலகெங்கும் உருவெடுத்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை, பெண்கள் உரிமைகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த பல்வேறு சட்டங்களும் கொள்கைகளும் இலங்கை அரசால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு போன்ற அசட்டுப் பிசட்டுக் கேள்விகள் எல்லாம் எப்போதும் கிடையாது. 92.6% ஆண்கள், 90% பெண்கள் என்று தெற்காசியாவில் கல்வியறிவு பெற்றோரில் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கையில் நான் பார்த்து வியந்த விஷயம் அநேகமாக எல்லாப் பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். அரசுவேலை, தனியார் வேலை, சொந்தத் தொழில் என எதையும் விட்டு வைப்பதில்லை. அதனால் கிடைத்த பொருளாதாரச் சுதந்திரம் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்கிறது. மன்னாரில் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் செல்லும்போது பரிமாறிக்கொண்டிருந்த பெண்மணி, கல்வித்துறையில் மாவட்ட இயக்குநராக இருந்து முதல் வாரம் தான் ஓய்வு பெற்ற அதிகாரி என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது.

பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை பாலின சமத்துவக் குறியீடுகளில் சிறந்த இடத்தில் இருப்பதை, உலக நிதி ஆணையம் (World Economic Forum) கொடுத்துள்ள தரவுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. பாலின சமத்துவத்தில் (gender equality) அண்டை நாடான இந்தியா 156 நாடுகளில் 140வது இடத்தில் தலை குனிந்து தள்ளாடிக்கொண்டிருக்க, 55வது இடத்தில் ஜம்மென்று தலை நிமிர்ந்து நிற்கிறது இலங்கை. தெற்காசிய நாடுகளில் பிரசவத்தின் போதான சிசு இறப்பு சராசரி ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 182 இருக்கும்போது இலங்கையில் 34 என்பதும் உலகே அதிசயிக்கும் செய்திதான். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் உருவாகியுள்ளது. 2005இல் கொண்டுவரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் பெண்கள் மேம்பாட்டு பாதைக்கான மற்றுமொரு மைல்கல்.

ஆனால், உலகெங்கிலும் ஆக்டோபஸ் கரங்களாக விரவிக்கிடக்கும் ஆணாதிக்கம் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. என்ன, அதன் அளவுகோலில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். இலங்கை ஆண்களின் அடிமனத்தில் இன்னும் கொஞ்சம் ஆணாதிக்கம் கெட்டிதட்டித்தான் போயிருக்கிறது. அதனால்தான் சமைத்தல், குழந்தைகளை வளர்த்தல், வீட்டுவேலைகள் போன்ற குடும்பப் பொறுப்புகள் பெண்களுக்கானவை என்ற எண்ணத்தில் பெண்களின் பக்கமே தள்ளிவிடப்படுகின்றன. அலுவலகம், வீடு என்ற இரட்டைச் சுமைகளுக்கு இலங்கைப் பெண்களும் தப்பவில்லை. வீட்டின் பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ரத்தத்தை உழைப்பாக வடித்து, டாலர்களாக மாற்றி அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் மொத்த தொழிலாளர்களில் 38 சதவீதம் பேர் பெண்களாக இருந்தாலும், உயர்பதவிக்குச் செல்பவர்கள் 8 சதவீதத்திற்கும் கீழேதான். உயர் பதவிகள் அனைத்தும் ஆண்களால் நிறைந்திருக்கின்றன. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமோ வெறும் 6 சதவீதம் மட்டுமே.

அரசியலைப் பொருத்தவரை பெண்களை வாக்குவங்கிகளாகப் பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுவது இயல்பாக இருக்கிறது. அதற்குத் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தையே உதாரணமாக வைக்கிறார் தோழி கவிஞர் லதா கந்தையா. அவரது வார்த்தைகளில், “யுத்தம் முடிஞ்ச பின்னால, ஒவ்வொரு ஆண்டும் இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடத்துவது வழமை. யுத்தத்தில் தங்கட மனுசனை, பிள்ளைகள இழந்த பெண்களும், யுத்தத்தால காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சொந்தங்களும் கலந்துகொள்வதும் அழுதுபுலம்புவதும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாகக் கதைப்பதுமாக இருக்கும். போர் முடிந்த மூன்றாம் ஆண்டு, வழமைபோல் நான் சுத்தியுள்ள எங்கட ஆட்களைக் கூட்டிக்கொண்டு போயினம். எண்ட கண்ணீர் இவங்கள விடுமே? எண்ட சாபம் இவங்கள விடுமே எண்டெல்லாம் சனம் அழுது தவித்தது. அங்கு வந்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஒருவர், எங்கட உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தன்னோட சுயநலத்துக்காக, அரசியல் பேசத் தொடங்க, அவரோட கோவமா கதைச்சி துரத்திவிட்டனன் நான். இந்தச் செய்தி ஊடகங்களில் வர, அதுக்குப் பிறகே முள்ளிவாய்க்காலில் ஆத்மாக்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்ற முறைமை ஒவ்வொரு வருடமும் பழக்கமாச்சு. அங்கால, எனக்கெனெ ஒரு வாக்குவங்கி உருவாக, ஊராட்சி தேர்தலில் பல அரசியல் கட்சிகளும் தேர்தலில் கேட்கச் (வேட்பாளராக நிற்க) சொல்லி வற்புறுத்தி வாய்ப்புக்கொடுக்க வந்தன. ஒரு அரசியல் கட்சியின் சார்பாக நின்று வெற்றியும் பெற்றனன். ஆனால், என்னிடமிருந்த வாக்குவங்கியை மட்டும் பறித்துக்கொண்ட அந்தத் தமிழ் கட்சி, ‘கட்சியின் முடிவு’ எண்டு கதைவிட்டுப் பதவியை ஆண்களுக்குக் கொடுத்தன. இதுதான் இங்கட நிலமை. வாக்கு விகிதத்தில் அதிகளவானோர் பெண்களே. அதனால்தான் அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகளுக்குள் ஊடுறுவி, தங்கட வாக்குவங்கிகளை நிரப்பிக்கொள்கின்றன. பெண் வேட்பாளர்களைப் பயன்படுத்தி, கட்சிகளுக்கு வாக்குகளைச் சேகரித்து, பின் அவர்களைக் கண்டுகொள்ளாது கட்சி முடிவெனச் சொல்லி ஆண்களைப் பதவியில் அமர்த்தும் யுத்திகாலம் காலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கு. அதனால்தான் பெண்களை பாராளுமன்றத்திலோ, மாகாண சபைகளிலோ மருந்துக்கும் காண ஏலாது. பெண்கள் பெருமளவில் அரசியலில் ஈடுபாட்டுடன் செயற்பட்டாலும், ஆண்களே கட்சி அதிகாரிகளாக இருப்பதால் ஆணாதிக்க புத்தி பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை. பெண்கள் தனிக்கட்சியை உருவாக்கினாலேயே இந்த ஏமாற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்” என்று ஒரே மூச்சில் பிரச்னையையும் தீர்வையும் கூறி முடிக்கிறார், பெண்ணிய செயற்பாட்டாளரான லதா கந்தையா.

எழுத்தாளர், கவிஞர், பெண்ணிய செயற்பாட்டாளர் லதா கந்தையா

திருமணத்தில் வரதட்சணைக்கு முக்கிய இடம் இருக்கிறது. இந்தியாவோடு ஒப்பிடுகையில் வரதட்சணை வாங்குவதில் இந்தியாவிற்கு அண்ணனாக இருக்கிறது இலங்கை. “திருமணம் பேசும்போதே வேண்டுமளவு சீர் பேசி வாங்கி விடுவினம்… திருமணத்திற்குப் பிறகு அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்ற கதையெல்லாம் கிடையாது. உங்கட பொடியனுக்கு நல்ல சீரோட வடிவான இலங்கைப் பொண் பாக்கட்டுமா?” என்று கண்ணடிக்கிறார் தோழி மெரினா. திருமணச் சீராகப் பெண்ணுக்கு வீடும் அளிக்கப்படுவதால், திருமணம் முடித்தபின் சீர் கொடுத்த வீட்டில் பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே வாழ்க்கையைத் தொடர மணமகன்களுக்கு எந்தவித மனத்தடையும் இல்லை. பெண்வீட்டாரும், தயக்கமின்றி என் மகள் வீடு என்று உரிமையுடன் வந்து செல்கிறார்கள். திருமணத்திற்குப் பின் வரதட்சணைக் கொடுமை, கொலை என்பதெல்லாம் கிடையாது.

திருமண முறைகள் எல்லாம் எப்படி என்று கேட்டதும் வெடித்தெழுகிறார் லதா. “இண்டைய குமரிப்பெண்களுக்கு ஒரே நோக்கம், வெளிநாட்டுப் பையன்களை மணம் முடிப்பது மட்டும் தான், வெளிநாட்டு மோகம் ஆட்டிப்படைக்குது, நல்லா படிக்குங்கள், கேம்பஸ் (Univerrsity) போகுங்கள், நல்ல வேலையும் பார்க்கினம், ஆனா, வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டிக்கிடணும், அவ்வளவுதான். எங்கட நாட்டில் நல்லா படிச்சிப்போட்டு, வெளிநாட்டுப் பையனுக்கு ஆசைப்பட்டு அங்கால போய் நாலு சுவத்துக்குள்ள வெறிச்சிப் பார்த்துக்கொண்டும், சாதாரண வீட்டு வேலைக்குப் போய்க்கொண்டும் தங்கட வாழ்க்கையைத் தொலைச்சிப் போடுவினம்… வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டா, படிச்சிருக்க வேணாம், வடிவாயிருக்க வேணாம், குணமாயிருக்க வேணாம், பணம் சம்பாதிச்சா போதுமெண்டு நினைக்கினம். அவங்களுக்கு எவ்வளவு சீதனம் கொடுக்கவும் பெத்தவைங்களும் தயாரா இருக்கினம். கலாச்சாரம், பண்பாடு எண்டு கதைக்கும் எங்கட தேசத்தில் இப்போது நடப்பதைப் பார்த்தால் வியப்பாத்தான் கெடக்கு, வெளிநாட்டு மோகத்துக்கு வேண்டி, வெளிநாட்டுக்காரனை (Foreigner) கலியாணம் கட்டி அங்கால போய் கொஞ்ச நாளில் டிவோர்ஸ் எடுத்துப்போட்டு, வெளிநாட்டில் இருக்கும் தனக்குப் பிடித்தவனைக் கலியாணம் கட்டிக்கொள்வதும், கிழவனோ, வயசுபோனவனோ, வெளிநாட்டில் இருந்தா போதுமெண்டு இலங்கைக்காரனை முடிச்சுப்போட்டு, கொஞ்சகாலத்தால, டிவோர்ஸ் எடுத்து அங்கேயே வேறு ஒருத்தனை கலியாணம் கட்டிக்கொள்வதும் எண்டெல்லாம், புதுப் புது உத்திகளைக் கண்டுபிடிக்கினம்” என்று கவலையுடன் அலுத்துக்கொள்கிறார்.

தற்போது இலங்கையிலும் மணமுறிவு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கல்வி அவர்களுக்குத் தன்னம்பிக்கையுடன் விழிப்புணர்வையும் கொடுத்திருக்கிறது. “மனுசன் (கணவன்) கொடுமைப்படுத்தினால், வீட்டைவிட்டுக் கலைச்சால், வேற பொம்பள பின்னால ஓடிக்கிடந்தால்… எந்த மனுசி (மனைவி) தான் தாங்குவாள்? ஏன் தாங்கிக்கொள்ளணும்? அவனை விட்டு வெளிவருவதில் தவறில்லைதானே?” நியாயமான கேள்வியாகத்தான் பட்டது. இந்தியாவில் போல, குழந்தைகளுக்காக எந்த உச்சபட்ச நிலை வரைக்கும் வாழ்வை சகித்துக்கொள்வது, புனித பிம்பத்தை கட்டிக்காக்கத் தன் வாழ்க்கையைப் பலி கொடுப்பது, பிரிந்திருந்தாலும் மணவிலக்கு பெறாமல், என்றாவது ஒருநாள் சேரும் வாய்ப்பிற்காகத் தவம் இருப்பது போன்ற மனநிலைகள் எல்லாம் பெண்களிடம் இல்லை. ஒத்துவராது எண்டு அறிந்தபின் என்ன காரணத்துக்காகச் சுமையைக் தூக்கிண்டு புலம்பித் தவிக்கணும்?

நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் 25 சதவீதமான வழக்குகள் மணமுறிவு குறித்தே வருகின்றன என்கிறார் சட்டத்தரணி நண்பர் மடுத்தீன். ஆனால், இந்தியாவில் போல மணமொத்த மணமுறிவு என்ற சட்டம் இல்லையாம், மலட்டுத்தன்மை, குடும்ப வன்முறை, பிற ஆண்கள் அல்லது பெண்களுடன் உறவு என்ற மூன்று காரணங்களை நிரூபித்து மட்டுமே மணவிலக்கு பெற முடியும். பெண்களின் மறுமணமும் இயல்பானதாக இருந்தாலும், மறுமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உலகில் எங்கு போர் நடந்தாலும் சிரியாவோ உக்ரைனோ ஈழமோ அந்த யுத்தத்திற்குச் சமபந்தமேயில்லாமல் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பதுதானே வரலாறு. இலங்கையில் நடந்த இனப் போரின் விளைவால், 24 சதவீதக் குடும்பங்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக இருக்கின்றன. வடக்கு கிழக்கில் மட்டும், 89,000 பெண்கள் தங்கள் கணவரை இழந்து ஒற்றைப் பெண்களாகக் குடும்பத்தைச் சுமக்கின்றனர். வடமாகாணத்தில் 80 % குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013 க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது. வடக்கில் தங்கள் குடும்பத்திற்கு உழைத்துத் தரக்கூடிய 20,000 ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சிறைக்கைதியாக இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்களா என்பது தெரியாமலே மனைவிமார்கள் நடைபிணமாய் அலைகிறார்கள். போருக்குப்பின் ராணுவத்திடம் சரணடைந்த, கைது செய்யப்பட்ட 40 வயதுக்குக் குறைவான ஆண்கள் தடயங்கள் ஏதுமின்றி காணாமல் போனார்கள். இல்லையில்லை காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதனால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளையும் முதியவர்களையும் பராமரிப்பதோடு, பணிக்குச் செல்லவும் வேண்டும் என்ற இரட்டைச் சுமை வாழ்க்கையில் தத்தளிக்கின்றனர் அவர்கள் வீட்டுப் பெண்கள்.

யுத்தம் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்தப் பெண்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான போர் இன்னும் ஓயவில்லை. இவர்களுள் அதிக சவால்களைச் சந்திப்பவர்கள் முன்னாள் போராளி பெண்கள். உடல் பாகங்களை இழந்து, மணமுடிக்க எவரும் முன்வராமல்… வன்முறையில் ஊறிய பெண் குடும்பத்துக்குச் சரி வரமாட்டாள் என்ற சமூகத்தின் கண்ணோட்டத்துடன் தன் உடம்பில் செல் துண்டுகளைச் சுமக்கும் பெண்கள் இவர்கள். உலகப் பெண்களின் சராசரி வாழ்விலிருந்து விலகி ஈழப்போரில் ஆண்களுக்குச் சரி நிகராக நின்ற பெண் போராளிகள் இவர்கள். ஈழப்போரில் இந்தப் பெண்கள் உழைத்த தருணங்களும் கொல்லப்பட்ட தருணங்களும் பிற நாட்டுப் பெண்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

உலகின் வேறெந்த யுத்தத்திலும் இவ்வளவு தொகையான குழந்தைகள், இளம்பெண்கள் காணாமல் போயிருப்பார்களா? பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டிருப்பார்களா… தெரியவில்லை. யுத்தத்தில் மட்டுமல்ல, யுத்தம் முடிந்தபின் அடைக்கப்பட்ட வேலிகளுக்குள்ளும் காணாமல் போயிருக்கிறார்கள். எத்தனை எத்தனை இசைப்பிரியாக்கள் வன்புணர்வுக்கு ஆட்பட்டார்கள் இறப்பதற்கு முன்னும் இறந்த பின்னும்கூட. ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹாரிஸன் – ‘இறந்தவர்களை இன்னமும் எண்ணிக்கொண்டுள்ளோம்’ என்னும் நூலில், “பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தபோது, இளம் பெண்களும் சிறுமிகளும் பிரிக்கப்பட்டு, பாதுகாப்புத் தேடல் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சானல் 4 வெளியிட்ட ஆவணப்படமான, ‘இலங்கையின் கொலைக்களம்’ காட்டிய காட்சிகள் இலங்கை அரசின் ஆயுதப் படையினரின் கொடூரத்தை உலகறியச் செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல அஞ்சியபோது மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த பிப்ரவரி 26, 2013 அன்று பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட 75 பெண்களின் வாக்குமூலத்தை வெளியிட உலகம் அதிர்ந்தது.

மருமகன் யுத்தத்தில் இறந்துவிட, மகளும் ஒரு பேரனும் அகதிகளாக பிரான்ஸ் போய்விட, மற்றொரு பேரனை எப்படியாவது மகளிடம் ஒப்படைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தாயை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தேன். இந்தியாவில் படித்தால் பிரான்ஸில் வேலை கிடைத்து விசா பெறுவது எளிதாக இருக்கும் என்ற ஒரே காரணத்துக்காக, தள்ளாத வயதிலும் பேரனை தமிழகக் கல்லூரியில் சேர்த்துவிட வந்திருந்தார். “அவன் தன்னோட அம்மாவ கண்ணால கண்டே 15 வருஷமாச்சு… எப்படியாவது நான் செத்துப்போகுமுன்ன, எண்ட பேரனை அவன் அம்மாட்ட ஒப்படைச்சுப்போட்டா நிம்மதியா செத்துப்போவேன்” என என் கைகளைப் பிடித்து கண்ணீர் உகுத்த அந்தத் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்வது?

போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், உடலளவில், பொருளாதார நிலையில், சமூக அளவில் பாதுகாப்பற்ற சூழல்தான் தமிழ்ப் பெண்களிடையே நிலவுகிறது. இதுவும்கூட, பெண்கள் வெளிநாட்டு வாழ்க்கையைத் தேட காரணமாக இருக்கும் என யூகிக்கிறேன். ஏனெனில், அவர்களுக்கான உளவியல் அழுத்தம் சொல்ல முடியாத அளவில் உள்ளது. யுத்த நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் காணாமல் போய்விட, “யாரிடம் புகார் கொடுக்க, எவரிடம் நீதி கேட்க?” மீண்டும் மீண்டும் அதே நினைவுகளுடன் வாழ்வை நகர்த்திச் செல்லும் அந்தப் பெண்மணி, தீபாவளி வெடிச் சத்தம் கேட்டால்கூட அலறித் துடிக்கிறார். பல வருடங்களாகத் தொடரும் மன அழுத்தம், நரம்புத்தளர்ச்சி நோயாக இன்று அவரது உயிரை அணுஅணுவாகச் சிதைத்துக்கொண்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் மனத்தை உடைய வைக்கும் ஒரு கதை இருக்கிறது. அவற்றுள் பல மறக்க முடியாத கதைகள். சில சொல்ல விரும்பாத கதைகள்…

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.